Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை - 16 (பெற்றோலியம் கண்டுபிடிக்கப்படல்):

-ஏ.எம். றியாஸ் அகமட்

ஓமானில் 5079 கிராமங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் தன்னிறைவுபாரம்பரிய இயற்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவையாயிருந்தன.

1964ல் பெற்றோலியம் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதானது அந் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தது. உணவுப் பொருட்களின் சுய தன்னிறைவு குறைவடைந்து, உணவுக்காக இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக 1980களின் ஆரம்பத்தில் பலர் தங்களது குடும்பங்களுடன் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த விவசாய கிராமங்களை விட்டு உயர் ஊதியம் பெறுகின்ற வேலைவாய்ப்புக்களை நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.

நவதாராளவாத பொருளாதாரம்:

அத்துடன் 2000ம் ஆண்டுகளில், அறிமுகப்படுத்தப்பட்ட நவதாராளவாத கைத்தொழிலை மையமாகக்கொண்ட பொருளாதாரமுறை காரணமாக உயர் ஊதியத்திற்காக கிராமப் புற இளைஞர்களும் தங்களது கிராமப் புறங்களைவிட்டு இடம்பெயர்ந்து நகரங்களின் தொழிற்படையுடன் இணைந்துகொண்டார்கள். நிலைபேறான, சுய தன்னிறைவு இயற்கை விவசாயப் பொருளாதார முறை வெற்றிகரமாக நிலவிய, தங்களுடைய தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடிந்த கிராமப் புறங்களிலிருந்து அவர்கள் குடும்பங்களுடன் இடம்பெயர்ந்தது அவர்கள் விரும்பித்தான் செய்தார்களா? அல்லது அவர்களுக்கு செய்ய வேண்டி ஏற்பட்டதா?

நவதாராளவாத பொருளாதாரமும், ஓமானின் பாரம்பரிய விவசாயமுறையும்:

முதலாளித்துவத்தின் அம்சமான தாராளவாதம், தனிமனித சுதந்திரம், வர்த்தகசுதந்திரம், போட்டி போன்றவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், முதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்டவும் வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஆட்சியுள்ள அல்லது சக்தி மிக்க சந்தை, சமூக சேவைகளுக்கு செலவு செய்வதைக் குறைத்தல், வர்த்தகத்திற்கான கட்டுப்பாடுகளை இல்லாதொழித்தல், தனியார்மயமாக்கல். பொதுநன்மை மற்றும் சமூகம் என்ற கோட்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்காதிருத்தல் போன்றவற்றை நவதாராளவாதத்தின் தாராள பண்புகளாகக் கொள்ளலாம்.


முதலாளித்துவத்தை
மையமாகக் கொண்ட ஓமான் அரசு, இந்த பாரம்பரிய விவசாய முறையை உலர்ந்த முறை (dry practice) என்று வகைப்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கைத்தொழில் மைய தொழில்நுட்பங்களையும், முறைமைகளையும் பாரம்பரிய விவசாய முறைகளில் நடைமுறைப்படுத்தினார்கள். இதன் காரணமாக இளைஞர்கள் விவசாயம் நோக்கி கவரப்படலாம் என்று அரசாங்கம் கருதியது.

மேற்கிலிருந்து வருவிக்கப்பட்ட இந்த இலாபத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்ட பொருளாதார முறையானது, பயிர்செய்யும் நிலங்களையும், மக்களின் வாழிடங்களையும் ஓமானின் கலாச்சார விழுமியங்களிலிருந்தும், பாரம்பரியங்களிலிமிருந்து வேறாக்கியது.

நவதாராளவாத பொருளாதாரமுறை இலாபத்தை மையமாகக் கொண்ட பொருளாதார அடைவுகளை மட்டும் இலக்காகக் கொண்டு விவசாயத்தை வரைவிலக்கணப்படுத்த முயற்சித்த வேளை, கிராமப்புறத்திலிருந்த இயற்கை விவசாயத்தை செய்துகொண்டிருந்த விவசாயிகள் விவசாயத்தை இருத்தல், அறிதல், முன்னெடுத்தல், தொடர்புறுதல், உறவுகளைப்பேணல் என்று வரைவிலக்கணப்படுத்தினார்கள்.

நவதாராளவாத சந்தையை மையப்படுத்திய பொருளாதார முறையில் இலாபமே முக்கியமானது. கூட்டு நன்மைகளைவிட தனிநபர் நலன்களே மிக முக்கியமானது. இங்கு மனித வெற்றியானது, பொருட்கள், சொத்துக்களை சேர்த்தலை வைத்தே கணிக்கப்படுகின்றது. காலனித்துவ, ஆண்மையவாத, கோப்பரேட், சுரண்டும், சுற்றுச்சூழலை எப்போதுமே அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கும் சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தில் மனிதனும், மற்றமைகளும் பெறுமதி குறைகப்பட்டும், உருத்திரிக்கப்பட்டும், பண்டமாக்கப்பட்டும் கொண்டேதான் வைக்கப்படுவார்கள்.

இதன் காரணமாக பாரம்பரிய விவசாய சமூகங்களிற்கும், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும் பிணக்குகள் ஏற்படத் தொடங்கும். விவசாய சமூகங்கள் முதலாளித்துவத்தின் கருத்தியல்களிலிருந்து விலகத் தொடங்குவார்கள். அவ்வாறாக விலகும் சமூகங்கள் நாகரிகமற்ற, பிற்போக்கான சமூகங்கள் என முதலாளித்துவத்தின் கூலிகளால் பிரகடனப்படுத்தப்படுவார்கள்.

மேற்கை மையப்படுத்திய முதலாளித்துவத்தை பின்பற்ற விரும்பாத, அதனை அடைந்துகொள்ள ஆற்றலில்லாத சமூகங்கள் முதலாளித்துவத்தினால் பிற்போக்குத்தனமானவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். முதலாளித்துவத்தின் கருத்தியல்களைப் பின்பற்றி வெற்றி அடைபவர்கள், நாகரிகத்தினதும், நவீனத்துவத்தினதும் உச்சம் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இவ்வாறாக 1980களின் ஆரம்பங்களிலிருந்து கிராமிய தன்னிறைவு விவசாய பொருளாதாரத்தை முதலாளித்தவம் மிகத் தந்திரமாக அடக்கிவந்தது.

ஓமானின் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜீடிபி), விவசாய துறை 2016ல் 1.5சதவீதமும், 1995ம் ஆண்டு 3.00 சதவீதமுமமாக பங்களிப்புச் செலுத்தியது. 1960களில், பெற்றோலியம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முதல், அந்த நேரத்தின் நாட்டின் சகல மக்களினதும் ஜீவனோபாயத்தினதும், பொருளாதாரத்தின் மூலமாக விவசாயத்துறையே இருந்துள்ளது. 1960களின் ஆரம்பம் வரை, மக்களின் செல்வந்த நிலை, எத்தனை ஆரோக்கியமான பேரீச்சம் தோட்டங்கள், நீர்ப்பாய்ச்சும், குடிநீர்க் கிணறுகளை வைத்திருக்கின்றார்கள் என்பதைக் கொண்டே கணிக்கப்பட்டு வந்தன. ஆனால் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர் நிலைமைகள் மாறத் தொடங்கின.

சிறிய தர பண்ணைகள் ஊடாக அவர்களுக்குத் தேவையான கோதுமை, பழங்கள், மரக்கறிகள், இறைச்சி, கோழி, முட்டைகளை உள்ளுரிலேயே உற்பத்தி செய்தார்கள். தற்போதும், ஒப்பீட்டுரீதியாக சில விவவசாயிகள் தங்களது வருமானத்திற்காகவும், ஜீவனோயபாயத்திற்காகவும் உள்ளுர் விவசாயத்திலேயே தங்கியிருக்கின்றார்கள்.

1980களின் இறுதிவரை, ஓமானின் சனத்தொகையில 70 சதவீதமானவர்கள் கிராமப் புறங்களிலேயே வாழ்ந்துவந்தனர். அப்போது ஓமானின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக பேரீச்சை, தோடை, மா, வாழை போன்றவை இருந்தன. பிரதானமாக அவை மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...