Monday, August 2, 2021

தொலைதலின் இனிமை – 35 (அறேபிய சிறுத்தைகள்):

ஏ.எம். றியாஸ் அகமட்

ஆங்கிலத்தில் அறேபியன் லெபர்ட் (Arabian leopard) எனப்படும், பென்தீராபார்டஸ் நிம்ர் என்ற விலங்கியற் பெயர் கொண்ட (சல்மாவின் கதைகளில் வரும் சிறுத்தை) அறேபிய சிறுத்தையை 1996ம் ஆண்டு ஐயுசிஎன் (IUCN) கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள (critically endangered) விலங்காக பிரகடனப்படுத்தியிருந்தது. 2006ம் ஆண்டு உலகிலேயே மொத்தம் 200 சிறுத்தைகள்தான் வாழ்வதாக கணிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓமானின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்ட இந்த அறேபிய சிறுத்தையானது, தற்போது ஓமானுக்கும், யெமனுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியிலேயே பெருமளவில் காணப்படுகின்றது. ஓமானின் டோபார் மலைத் தொடரிலும், ஜபல் சம்ஹான் பாதுகாக்கப்பட்ட இயற்கை சரணாலயத்திலும், தற்போது 44 தொடக்கம் 55 அறேபிய சிறுத்தைகள் வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது. எகிப்தில் 1990ம் ஆண்டுக்குப் பிறகு காணப்படாத இந்த சிறுத்தைகள் தற்போது இஸ்ரேலின் ஜுடாய் பாலைவனம், நெகெவ் மேட்டுநிலம் போன்றவைகளில் காணப்படுகின்றன.

ஆபிரிக்க சிறுத்தைகளுடன் நெருங்கிய பரம்பரை உறவைக் கொண்ட இந்தச் சிறுத்தையின் மூதாதையினர், சவூதி அறேபிய சிறுத்தைகளாகும் என பரம்பரையியல் மூலக்கூற்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஒரு காலத்தில் அறேபிய தீபகற்பம், எகிப்தின் சினாய் தீபகற்பம், பலஸ்தீன், இஸ்ரேல் பகுதிகளிலும் அங்குள்ள மலை நிலங்கள், மலை ஸ்ரெப்பி புல்நிலங்கள், பாலைவனங்கள், கரையோர தாழ்நிலங்கள் போன்றவைகளில்; காணப்பட்டிருக்கின்றன

அறேபியன் சிறுத்தைகளின் தோலின் நிறம் மங்கலான மஞ்சள் நித்திலிருந்துகடும் பொன்நிறம் வரை வேறுபடுகின்றன. தோலின் மேற்பரப்பில் சாம்பல்நிற றோசாவுருக்களும் காணப்படுகின்றன. ஆண் சிறுத்தை 30 கிலோகிராம் நிறையும், தலை-உடம்பு நீளம் 1.82 தொடக்கம் 2.03 மீற்றரும் கொண்டு காணப்பட, பெண் 20 கிலோகிராம் நிறையும், 1.6 தொடக்கம் 1.92 மீற்றர் நீளமும் கொண்டு காணப்படுகின்றன. பாரசீக, ஆபிரிக்க சிறுத்தைகளோடு ஒப்பிடும்போது அளவில் சிறியதான அறேபிய சிறுத்iயானது அறேபிய தீபகற்பத்தில் காணப்படம் மிகப் பெரிய பூனை இனமாகும்.

ஆண் அறேபியன் சிறுத்தைகளுக்கு வசிக்கும் வீச்சாக (Home range) 350 சதுர கிலோமீற்றர் பரப்பும், பெண்ணுக்கு 250 சதுர கிலோமீற்றரும் தேவைப்படுகின்றன. ஆபத்துக்களை உயரத்தில் இருந்து இலகுவாக அறிந்துகொள்ளும் பொருட்டு, கரடுமுரடான, உயர்ந்த மலைப் பகுதிகளையே இவை வாழிடங்களாக தெரிவு செய்கின்றன. இவை பெரும்பாலும் இரவு வாழ்க்கையுள்ளன. சில வேளை பகல் நேரங்களிலும் வெளியே வருகின்றன. பதின்மூன்று வார கற்ப காலத்திற்குப் பிறகு 2 தொடக்கம் 4 குட்டிகளை ஈனுகின்றன.

அறேபிய சிறுத்தைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

அபிவிருத்தி என்ற பெயரில் பல ஆண்டுகளாக வாழ்விடங்கள்இழக்கப்பட்டமையும், துண்டாடப்பட்டமையும், நகரமயமாக்கமும், அதீத புல்மேய்ச்சலும் இந்த அறேபிய சிறுத்தைகளின் அழிவிற்குப் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அத்துடன் தனிப்பட்ட சமூக திருப்தி, பெருமை, பாரம்பரிய மருத்துவம், தோல்கள் போன்றவைகளுக்காக வேட்டையாடுதலும் பங்களிப்புச் செய்துள்ளன. ஒட்டகங்கள், ஆடுகள், மற்றைய கால்நடைகள் தாவரங்களையும், புற்களையும் அதிகமாக மேய்ந்ததனால், அதனை நம்பியிருந்த தாவர உண்ணி விலங்குகள் குறைவடைந்தன. இதன் காரணமாக இவைகளை கொன்று உண்ணும் அறேபிய சிறுத்தைகள் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டன. இயற்கை வாழிடங்களில் உணவு இல்லாத போது, அவைகளின் பார்வை, மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளின் (ஆடுகள், கம்பளி ஆடுகள், கழுதைகள், இளம் ஒட்டகங்கள்) மீது திரும்பி, அவைகளை கொன்றுண்ணத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- சிறுத்தை முரண்பாடுகள் (Human-leopard conflict) ஏற்படத் தொடங்கின. கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க சிறுத்தைகளை கொல்லத் தொடங்கினர். அதேவேளை அறேபிய நரிகள், வரியுள்ள கழுதைப் புலிகளைக் கொல்ல கால்நடை வளர்ப்பாளர்களால் வைக்கப்பட்ட நஞ்சூட்டப்பட்ட உணவுகளை உண்டதாலும் மேலும் சில சிறுத்தைகள் கொல்லப்பட்டன.

ஓமானின் அறேபியன் சிறுத்தைகள் தற்போது புதிய பிரச்சினையை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில் அதிகமாக காணப்படும், சாம்பிராணி மரங்களிலிருந்து சாம்பிராணி பிசினை சேகரித்து, சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யவும், மணக்குச்சிகளும், மணப்பொருட்கள் தயாரிக்கவும், சட்டவிரோதமாக உள்நுழையும் பிரதேசவாசிகளால், அறேபியன் சிறுத்தைகள் சரணாலயத்தின் மையப்பகுதிகளிலிருந்து விளிம்புப் பகுதிக்கு, அதாவது மனித குடியிருப்புக்கு அருகில் பலவந்தமாக இடம்பெயரவைக்கப்படுகின்றன. இதன் காரணமாக அவைகள் உணவிற்காக அந்தப் பகுதியிலிருக்கும், ஒட்டகம் போன்ற காலநடைகளை கொன்றுண்ணத் தொடங்கியிருக்கின்றன. இது தற்போது புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது.

அறேபிய சிறுத்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

ஓமான் அரசாங்கம் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை,சமூகவலைத்தளங்கள் போன்ற ஊடகங்களினூடாக எடுத்துவந்த, எடுத்துவரும் ஆரோக்கியமான கல்வியூட்டல், விழிப்பூட்டல் நடவடிக்கைகள் காரணமாக, சிறுத்தைகள் தங்களது கால்நடைகளைக் கொன்றால், உடனே சிறுத்தைகளை தாக்காது, அரசாங்கத்தின் வனவிலங்கு அதிகாரிகளுக்குகு தகவல் அனுப்ப, அவர்கள் வந்து உடனே நிலைமையை கணிப்பிட்டு, கொல்லப்பட்ட கால்நடைகளுக்கு நட்டயீட்டை உடனடியாக வழங்குகிறார்கள். இதற்காக டோபார் பகுதியில் எண்பதிற்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். சூழற்றொகுதிக்கு அறேபிய சிறுத்தையின் முக்கியத்துவத்தை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

இந்தப் பிராந்தியங்களில் மற்றைய விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டிருப்பதனால், சிறுத்தைகள் கொன்று உண்ணும் அறேபியன் கெசல் ஆடுகள், நுபியன் இபிக்ஸ் போன்ற விலங்கினங்களும், அவைகளின் குடித்தொகையும் அதிகரித்துள்ளன. இதனை அதன் வாழிடங்களில் பொருத்தப்பட்டுள்ள தன்னிச்சை பொறிப் புகைப்படக் கருவிகள் (camera trap) எடுத்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதன் காரணமாக ஓமானில் அறேபிய சிறுத்தைகளின் குடித்தொகை பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதேவேளை யெமன், சவூதி அறேபியா, ஐக்கிய அறபு குடியரசு போன்ற மற்ற நாடுகளில் மக்களினால் அடிக்கடி அறேபியன் சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. சவூதி அறேபியாவில் தற்போது இதன் எண்ணிக்கை மிகமிக குறைவாகும். சிலவேளை அறவே இல்லை என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. யெமனின் உள்நாட்டு யுத்தம் இந்த சிறுத்தைகளின் நிலைமையில் பாரிய நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.

இதன் காரணமாக, நான்கு நாடுகளான ஓமான், சவூதி அறேபியா, ஐக்கிய அறபு குடியரசு, யெமன் இணைந்து 80 சிறுத்தைகளை உபயோகித்து கூடுகளில் அடைத்து செய்யப்படும் இனப்பெருக்கச் செயன்முறையூடாக புதிய சிறுத்தைகளை உருவாக்க தொடங்கியிருக்கிறார்கள். 1995ல் 'ஓமான் முலையூட்டிகள் இனப்பெருக்க நிலையத்தினாலும்', சர்ஜாவிலுள்ள 'ஆபத்துக்குள்ளான அறேபிய வனஜீவராசிகள் இனப்பெருக்க நிலையத்தினாலும்', இவை வெற்றி பெறத் தொடங்கியிருக்கின்றன. எவ்வளவுதான் உள்ளக, வெளியக காப்பு முறைகள் மூலமான இனப்பெருக்க செயன்முறைகள் வெற்றிபெற்றிருந்தாலும், அவை வாழுகின்ற இயற்கையான வாழிடங்கள் பாதுகாக்கப்படுதலே அழிவின் விழிம்பிலுள்ள இந்த விலங்கினங்களை பாதுகாப்பதில் மிக முக்கியமானதாகும்.

 
No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...