Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை – 24 (இரவுகள் அவைகளுக்கானவை, பகல்கள் எங்களுக்கானவை):

ஏ.எம் றியாஸ் அகமட்

ஜின்குடிகொள் காதைகள்:

2014ம் ஆண்டு நெஷனல் ஜியொக்கிரபிக் விஞ்ஞான சஞ்சிகையானது உலகின்மிக அச்சம் தரக்கூடிய பேய், பிசாசுகளை சந்திக்கக்கூடிய முதல் பத்து அமானுஷ்ய நகரங்களில், ஓமானின் பஹ்லா கிராமத்தை ஐந்தாவதாக பட்டியற்படுத்தியது. விஞ்ஞானம் பேய்கள், பிசாசுகள் இருப்பதற்கான ஆதாரங்களை நிறுவுவதில் இன்னும் இடர்களையே சந்தித்து வருகின்றவேளையில், ஓமானியர்கள் இந்த பேய். பிசாசுகளுக்கு கொடுத்துள்ள பெயர் ஜின். இந்த ஜின்கள் ஓமானுக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கு, ஆபிரிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு பொதுவானவை.

ஓமானில் பஹ்லாவைப் போன்று பல ஜின்குடிகொள் கிராமங்களும், நகரங்களும், இடங்களும் இருக்கின்றன என நம்பப்படுகின்றது. இங்கு பல இடங்கள் ஜின்கள் வாழும் இடங்களாக மக்களினால் அடையாளப்படுத்தப்பட்டு, இரு தரப்பினர்களும் பிரச்சினையில்லாமல் பல நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள். கறுத்த மலைகள், கைவிடப்பட்ட பழங் கோட்டைகள், அவைகளின் நிழல்கள், அவற்றின் சுவர்கள், மரங்கள், மலைக்காடுகள், கைவிடப்பட்ட கிராமங்கள், எல்லை வேலிகள், கோட்டைகள், பழங்கால தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கைவிடப்பட்ட பள்ளிவாசல்கள், கிராமங்கள், ஞானிகளின் கல்லறைகள் போன்ற பல இடங்கள் ஜின்கள் இருக்கும் இடங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

அவைகளில் சில இடங்களான பஹ்லா கோட்டை, பஹ்லாவின் பறக்கும்மலைக்காடு, பஹ்லாவின் பறக்கும் பள்ளிவாசல், பஹ்லா சந்தையின் துரதிருஷ்ட, சபிக்கப்பட்ட சாம்பிராணி மரம், தலைநகரின் மத்தியில் புஸ்த்தான் நகரிலுள்ள அழகான வீடு, சலாலாவின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த கோர் ரொரி பிரதேசம் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.

1) பஹ்லா கிராமம்

1.1) பஹ்லாக் கோட்டை:

பஹ்லா, ஓமானின் தலைநகர் மஸ்கட்டிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்-தக்லியா மாகாணத்திலுள்ள ஒரு கிராமமாகும். யுனஸ்கோ அமைப்பினால், 1987இல் மரபுரிமை இடமாக பிரகடனப்படுத்தப்பட்ட, ஓமானின் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்றான பஹ்லா கோட்டை இங்கு காணப்படுகின்றது. கிராமத்தின் நடுவில் காணப்படுகின்றத இந்தக் கோட்டையைச் சுற்றியுள்ள இடங்கள் ஜின்களின் நடவடிக்கைகளுக்கு பெயர்போன இடங்களாகும். இதற்கு அருகிலுள்ள மரங்கள். பாறைகள், நிழல்கள், காடுகள், ஞானிகளின் கல்லறைகள் என்பவற்றில் ஜின்கள் மறைந்து வாழுகின்றன என நம்பப்படுகின்றது.

இந்தக் கிராமத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள, 12 கிலோமீற்றர் நீளமானகோட்டைச் சுவரை ஒரு இரவுக்குள் ஜின்கள் கட்டியதாக ஒரு நம்பிக்கை இருக்கின்றது. அழிந்துபோன இந்த சுவர்களை மீளவும் திருத்தியமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. பகலில் கட்டப்பட்ட கற்களும், சீமெந்தும் மீண்டும் சரிந்துவிழுந்து பழைய இடங்களிலேயே கிடக்கத் தொடங்கிவிடும். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் பொறியியலாளர்கள் தங்கள் தலைகளைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அருகிலுள்ள இன்னொரு கோட்டை புனரமைக்கப்பட்டு, உல்லாசப் பிரயாணிகளின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. அந்தக் கோட்டையை திருத்தியமைக்கும்போது அதற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்த சுவருக்குத்தான் பிரச்சினைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

1.2) பறக்கும் மலைக்காடும், பள்ளிவாசலும்:

இது மூன்று ஞானிகளின் மலை எனவும் அறியப்படுகின்றது. கி.பி. 12ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரை, பஹ்லாவை தலைநகராகக் கொண்டு ஓமானை நபாஹினா வம்சத்தவர்கள் ஆண்ட போது, இபாதி இஸ்லாமிய பிரிவை மிகத் தீவிரமாக பின்பற்றிய மூன்று பழமைவாத சூபி ஞானிகள், கிராமத்திற்கு வெளியே, கோட்டைச் சுவர்களுக்கு அப்பாலுள்ள இந்த மலையிலேயே தங்கி வணக்க, வழிபாடுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த மலையில் இப்போதும் அவர்களின் கல்லறைகள், சிதிலமடைந்த பள்ளிவாசல் உருவில் காணப்படுகின்றன. நடுவிலுள்ள பள்ளிவாசல் கட்டடம்தான் றுஸ்தாக்கிலிருந்து முழு அமைப்பாக இங்கு பறந்து வந்ததாகவும், இப்போதும் இரவுகளில் பறந்துகொண்டிருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

1.3) துரதிருஷ்ட, சபிக்கப்பட்ட மரம்:

இங்குள்ள ஜின்களுக்கு, இந்தக் கிராமத்தில் மனிதர்கள் வாழ்வதில் பெரியஉடன்பாடு இருக்கவில்லை. இருந்தும், கிராமத்தவர்களை தவிர்த்து எவரும் புதிதாக வந்து குடியேறுவதை விரும்புவது இல்லை. இந்தக் குடியேற்றத்தை, பஹ்லாவின் மத்திய பகுதியில் உள்ள சந்தையின் நடுவில் உயரமாக வளர்ந்திருக்கும் சாம்பிராணி மரமே கட்டுப்படுத்துகின்றது என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது. இந்த மரம் 1400 வருடங்களுக்கு முன்னர் கல்லால் எறிந்துகொல்லப்பட்ட மந்திரவாதி இறந்த நேரத்தில் கூட இங்கு காணப்பட்டிருக்கின்றது. அத்துடன் சொலமன் ராஜா, பேரழகி பேரரசி கிளியோபாட்ரா போன்றவர்களின் மத நிகழ்வுகளுக்கான சாம்பிராணிச் சாறு இந்த மரத்திலிருந்தே வடித்து எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டதாக தொல்கதைகளும் இருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே, இந்த மரத்தை இந்தக் கிராமத்தைச் சேராத யாரும் தொட்டுவிட்டால் (அல்லது இன்னொரு குறிப்பில் இந்தக் கிராமத்தவரே) அந்த மரம் அவர்களுக்கு துரதிருஷ்டத்தையும், உடனடி துர்மரணத்தையும் கொடுக்கக்கூடியது என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.





No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...