Tuesday, August 3, 2021

தொலைதலின் இனிமை – 41 (இனிமையின் இறுதி – 1):

ஏ.எம். றியாஸ் அகமட்

சல்மா பீடபூமியிலிருந்து 17ம் இலக்க குறாயத்-சுர்-மஸ்கட் பெருந்தெருவைஅடைவதற்கு இன்னும் சுமார் 20 கிலோமீற்றர்கள்தான் இருக்கும்போல தெரிகிறது. சல்மா பீடபூமி ஓரளவு சமனானது. அதனைத் தாண்டி ஏற்றங்கள், இறக்கங்கள், பள்ளங்கள், அதல பாதாளங்கள், யூ வளைவுகள், பாதுகாப்பில்லா செங்குத்து ஏற்ற இறக்கங்கள், மலைவிளிம்புகளுடனேயே ஒட்டிச் செல்லும் வயிற்றைக் கலக்கும் ஒடுக்கமான பாதைகள், நூற்றுக்கணக்கான வளைதல்கள், திரும்புதல்கள் போன்றவைகளைக் கடந்து இலக்கை அடைந்து கொள்ளலாம். அதற்கு ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது தேவைப்படும்.

கடல் மட்டத்திலிருந்து 1400 மிற்றர் உயரத்தில் இருந்த சல்மாவிலிருந்து இந்துமாகடல் தெரிகிறது. சல்மாவிலிருந்து எமது வாகனம் மெதுவாக இறங்க வேண்டும். வழிதவறிவிடவும் கூடாது. அல் ஜாரு வல் ஐசி கிராமத்தில் நாசர் அல் ஒவைசி வரைந்து தந்த வழித்தடங்களின் படங்கள் மடியின் மீது இருந்தது கொஞ்சம் மனதுக்கு தெம்பைத் தந்தது.

அதிகாலையில் வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ள வித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா அல்லது வஹிபா பாலைவனத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து மஸ்கட் மாகாணத்திலுள்ள பிம்மாவிலுள்ள ஹவியத் நஜீம் எரிநட்சத்திரத்தின் கிணற்றுக்கு செல்வதுதான் எங்கள் நோக்கமாகவிருந்தது. வித்தியாவிலிருந்து 23ம் இலக்க பெருந்தெருவால் கிழக்குப் பக்கம் சென்றால் அந்தப் பெருந்தெரு அலபற்றினா 17ம் இலக்க பெருந்தெருவுடன் சுர் என்னும் இடத்தில் இணையும். அங்கிருந்து அதே பெருந்தெருவில் ஹல்காத், ரிவி, பின்ஸ் ஊடாக பிம்மாவை இலகுவாக 184 கிலோமீற்றர் பயணம் செய்வதன் மூலம் அடைந்துகொள்ளவும் முடியும். இதற்கு இரண்டரை மணித்தியாலங்கள் பெரும்பாலும் எடுக்கும். இதுதான் வழமையான பாதையும் கூட. அந்த பாதையால் சிறிது தூரம் பயணத்தை தொடங்கி சென்றிருப்போம், பின்னாலிருந்த பிள்ளைகளிடத்திலிருந்து ஒரு ஆலோசனை. 'கூகிள்மெப் இதனை விட சிறிய குறுகிய ஒரு வழியைக் காட்டுகின்றது. எங்களுக்கு தூரமும், நேரமும் மிச்சம்' என்றனர். கூகிளை நம்பி அதன் வழியில் தொடர, பயணங்கள் இன்னும் முடியாமல் 6 மணித்தியாயலங்களுக்கு மேலாக தொடர்ந்து, அலைந்து கொண்டிருக்கின்றது. இதனால் கற்றறிந்த பாடம் குறுக்குவழிகளை நம்பக்கூடாது.

இஸ்மையா கிராமத்தின் கடைசிப் பெருந்தெருவின், கடைசிக் கோடியின்உயரமான பகுதியிலிருந்து சரளைக்கல் வழித்தடத்தில், கருங்கம்பள வரவேற்புடன் எங்கள் வாகனம் இறங்கத் தொடங்கி சிறிது நேரத்திற்கு பின் எழுநூறு கிலோமீற்றர் நீளமும், நூறு கிலோமீற்றர் அகலமும் கொண்ட, பள்ளத்தாக்குகள், கணவாய்கள், சமவெளிகள், உயர்ந்த மலைகள், சிகரங்கள், பாறைகள், வறண்டுபோன நதிப்படுக்கைகள், கருமை மேலோங்கிய பல வண்ண, பல வடிவ சிறு பாறைத்துண்டுகள், கற்கள், கூழான்கள், ஏற்றங்கள், இறக்கங்கள் கொண்ட அல்ஹாஜர் என்ற மலைத்தொடர் சமுத்திரத்தின், கடும் அபாயங்களையும், புதுமைகளையும், புதையல்களையும் பதுக்கியும், புதைத்தும் வைத்திருந்த அல்ஹாஜர் மத்திய பகுதியில், வாதி அல்ஹப்பா பள்ளத்தாக்கில் கறுத்த மலைகளால் சூழப்பட்ட கறுத்தப் பாலைக்குள் வாகனம் நுழைந்த போதே தொலைந்துவிட்டதை உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்தத் தொலைதலில் மிகுந்த ஆபத்துக்கள் இருந்தாலும், அந்தத் தொலைதல் எனக்குத் தேவையாய் இருந்தது. சந்தோசமாய் இருந்தது. எனெனில் தொலைதல் என்பது கற்றலாகும்.

இந்தத் தொலைதல் உண்மையிலேயே எனக்கு இனிமையாகவிருந்தது. இந்தத் தொலைதலில் நிறையக் கற்றிருக்கின்றேன். மாகாணங்களுக்கிடையேயுள்ள பயணப் பாதைகள், எழுநூறு கிலோமீற்றர் நீளமும், நூறு கிலோமீற்றர் அகலமும் கொண்ட அல் ஹாஜர் மலைத் தொடர்கள், அதன் உருவாக்கம், கிழக்கு ஹாஜர் பகுதிகள், ஓமானிய பெண் ஆழுமைகள், அதன் பெண் வலுவாக்கம், ஆற்றுப் பள்ளத்தாக்குகள், ஓமானிய எழுத்தறிவு, ஓமானிய வங்கிகள், கைத்தொழில்கள், உயிர்ச்சுவடுகள், பரிணாமம், காலநிலை, வானிலை, விபத்துக்கள், வெள்ளப்பெருக்குகள், மழைவீழ்ச்சி, மலைகளின் உருவாக்கம், காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சும் பெரோரைட்டு கொண்ட மலைகள், ஓமானிய வர்த்தகம், செல்வநிலைமை, நலன்புரி நிலைமைகள், வருமானம். இயற்கைச் சூழல்கள், மனிதர்கள், மரங்கள், விலங்குகள், கால்நடைகள், இயற்கை விவசாயம், மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையிலான உறவுகள், உயிர்வலைகள், மலையின் பகுதிகள், ஓமானியர்களின் விருந்தோம்பல், உபசரிப்பு, விலங்கு நடத்தைகள் (கழுதை, குதிரை, ஒட்டகம், ஆடு, பறவைகள்), சாம்பிராணி மரங்களும், அதன் உற்பத்தி முறைமைகளும், கிராமப் புறங்கள், கிராமப்புறங்களை கைவிடல், அதற்கான காரணங்கள், எகொகல்ச்சர், நவதாராளவாத பெற்றோலியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம், நகரங்களை நோக்கிய படையெடுப்பு, பாரம்பரியசூழல் அறிவு, பாரம்பரிய நடனங்கள், இசைகள், இலக்கியங்கள், வரலாறு, சமூகவியல், மானிடவியல், ஜின்கள். ஜின்குடிகொள் இடங்கள், ஜின் கதைகள், சல்மாபீடபூமி, சல்மாவின் தொல்கதைகள், தேன்கூட்டுக் கல்லறைகள், தொல்பொருளியல். சல்மா குகைகள், மஜ்லிஸ் அல் ஜின் குகை கண்டுபிடிப்பு, அறேபிய சிறுத்தைகள், கால்நடைகள், ஓமானின் ஆடுகள், அவைகளின் காலநிலை மாற்றத்திற்கெதிராகவும், உணவு, போசணைப் பாதுகாப்புக்காகவும் கொண்டுள்ள இயல்புகள், வரலாற்றெழுதியலில் மூலக்கூற்றுச் சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல் துறைகளை உபயோகித்தல் போன்றவைகளையும், இன்னும் அதிகமானவைகளையும் கற்றிருக்கின்றேன். இல்லை அவைகளுடன் வாழ்ந்திருக்கின்றேன் என்றே கூறலாம். வீட்டுக்குள் மாதக்கணக்காக அடங்கிக் கிடந்த அல்லது அடக்கப்பட்டு கிடந்த இந்த கொவிட் 19 காலம் இதற்கான அதிக சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது.

 





No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...