Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை – 21 (ஓமானின் பாரம்பரிய இசைகளும், நடனங்களும்):

 ஏ.எம் றியாஸ் அகமட்

ஓமானில் சுமார் 130க்கும் அதிகமான பாரம்பரிய இசை வகைகள்இருக்கின்றன. இவை அனைத்தும் வாய்மொழி மூலமாக சந்ததிக்கு சந்ததி பலநூற்றாண்டு காலமாக, இஸ்லாத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே கடத்தப்பட்டு வந்திருக்கின்றன. அத்துடன் ஒவ்வொரு பிரதேசமும் தமக்கேயுரிய தனித்துவமான இசை மரபையும் அல்லது மரபுகளையும், அத்துடன் பெரும்பாலான இசைமரபுகள் தமக்கேயுரிய நடனங்களையும், பாடல்களையும் கொண்டமைந்து காணப்படுகின்றன.

இந்த இசை மரபுகளில் அறேபிய, ஆபிரிக்க, இந்திய, மத்திய ஆசிய, ஐரோப்பிய தாக்கங்கள் காணப்படுகின்றன. இருந்தும் ஐக்கிய அரபு எமிரேட் குடியரசு, யெமன், சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளின் தாக்கங்கள் அதிகமாகவும், அதற்கடுத்த நிலையில் எகிப்து, தன்சானியா நாடுகளின் தாக்கங்களும் காணப்படுகின்றன எனலாம். பிறப்பு, பருவ வயதை அடைதல், விருத்தசேதனம், திருமணம், சமய விழாக்கள் போன்றவைகளில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இவர்களின் பாரம்பரிய இசைகளை, பாலைவன, கடல், பசுந்தரை (மலைகளின்) இசை என மூன்று வகையாக பிரிக்கின்றார்கள். இன்னொரு வகையில் இசையானது, கடல் கப்பல் பிரயாணம், கொண்டாட்டம், நாடோடி, மலைநில இசைகள் எனவும் பிரிக்கப்படுகின்றது. பாலைவன இசை ஒட்டகத்தின் வீரியத்தை பெரும்பாலும் புகழ்வதாகவே இருக்கும். நீண்ட பாலைவன, ஒட்டக சுமைகளுடனான பயணங்களில் கவிஞர்களும். பாடகர்களும், பாடலாசிரியர்களும் செல்வார்கள். அவர்களினால் ஆற்றுகை செய்யப்படும் இசைகளும், பாடல்களும் ஒட்டகத்தினதும், ஓட்டிகளதும் களைப்பையும், வீட்டு நினைவுகளையும் போக்கி புதுத்தெம்மைப் கொடுக்கும்.

இந்தப் பாலைவன இசைகளில் அல்-தக்றுத் என்ற இசை ஒட்டகங்களினதும்,ஓட்டிகளினதும் களைப்பைப் போக்குவதாகவும், அல்-தாரிக் என்ற இசை ஒட்டகங்களினதும், ஒட்டகங்களில் இருந்து செல்வோர்களினதும் சம்பந்தப்பட்ட நாடோடிப் பாடல்களைக் கொண்டதாகவும் காணப்படும். இந்த எல்லா இசைகளும், அல் குர்ஆனில் ஒட்டகத்ததைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விடயங்களை விதந்து பாடப்பட்டவைகளாக இருக்கும்.

கடல் இசைகள் கப்பல் அல்லது படகு புறப்படுதல், கடற் பிரயாணம் செய்தல், துறைமுகங்களை அடைதல் போன்ற மாலுமிகளின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டன. இந்த இசைகளிலும் பல வகைகள் இருக்கின்றன. ஸிலாத் அல்-ஹாமுல் என்ற வகை கப்பலில் சாமான்கள் ஏற்றும்போது, இறைவனிடம் பாதுகாப்புக்கோரியும், அல்-பொவ்றா கப்பலில் நங்கூரம் ஏற்றப்படும்போதும், யாறா மஷுமா, படகு செலுத்தப்படும்போதும், நாஷா அல்-ஷறாத் என்ற வகை கப்பல் செலுத்தும்போதும், அல்-ஹம்பல் என்ற வகை இந்த மாலுமிகள் அல்-றாஷா என்ற ஒரு வகை நடனமாடும்போதும் இசைக்கப்படுகின்றன.

பசுந்தரை (மலைவாழ்) பகுதிகளில் பல வகையான நடனங்கள் இசைகளுடன்நிகழ்த்தப்படுகின்றன. இரண்டு குழுவினருக்கிடையே கவிகளால் சமர்செய்யும் வாளேந்திய அல்-றசாஹ் என்ற நடனம் மிகவும் புகழ்வாய்ந்தது. சில பகுதிகளில் அல்-றுவா என்ற நாடோடி இசையும், பாட்டும், நடனமும் புகழ்பெற்றுக் காணப்படுகின்றது. இவை ஆற்றுகை செய்யப்படுகின்ற நேரத்திற்கேற்ப அது வெவ்வேறு பெயர்களை எடுக்கின்றது. அல்-ஷிறாஹ் (காலையில்), அல்-ஷதார் (காலையின் மத்தியில்), அல்-றவாஹ் (மதியத்தில்), அல்-ஸிரியா (மாலையில்) போன்றவை ஒரு நாளின் பல்வேறு நேரங்களில் ஆற்றுகை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் திருமணம், சமய திருவிழாக்கள், அரச விடுமுறை நாட்களில் இவைகளை அவதானிக்கலாம்.

இன்னும் சில பகுதிகளில் திருமண விழாக்களில் பெண்கள் வட்டமாக நின்று இசைத்து, நடனமாடும் வைலியா அந்-நிஷா என்ற வகையும் இருக்கின்றது.

இன்னும் சில பகுதிகளில் அல்-குர்அனை சிறுவர்கள் இலகுவாக மனனமிட்டு மனதில் பதிப்பதற்காக அல்-தைமினா என்ற இசை வடிவமும் காணப்படுகின்றது.

இன்னும் சில பகுதிகளில் இளைஞர்களால் ஆற்றுகைசெய்யப்படும் அல்-பார் என்ற வகையும் காணப்படுகின்றது. இங்கே இவர்களுக்கு உதவியாக இசையமைப்பாளர்களும், பாடகர்களும் பங்குபற்றுகின்றார்கள். அல்-மவ்லித் என்ற ஒரு வகை முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம், மற்றும் கிராமப் புறங்களில் நடைபெறும் திருமணங்கள், புதுமனை புகுவிழா, நோயாளிகளை குணப்படுத்தல் போன்ற நேரங்களில் ஆற்றுகை செய்யப்படுகின்றன. இதற்கு கலீபா, ஷாவுஸ், காரி என்ற மூன்று பேர் முக்கியமானவர்களாக இருப்பர். வெறுங்காலுடன் ஆற்றுகை செய்யப்படும் அல்-தான் என்ற வகை சில பிரதேசங்களில் ஆற்றுகை செய்யப்படுகின்றது. இன்னும் சில பிரதேசங்களில் தனியாக பெண்களினால் ஆற்றுகை செய்யப்படும் றக்ஸ் அல்-நிஷா என்ற வகையும் பிரபல்யமாக இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும். தனியான நாட்டிய வகைகள் காணப்படுகின்றன.

சில பிரதேசங்களில் திருமண நிகழ்வுகளின் போது ஷபாஹ் என்ற வடிவம் ஆற்றுகை செய்யப்படுகின்றது. அந்த ஆற்றுகையில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் சம்பந்தப்பட்ட ஷபாத் ஷபுஹ் அல்-மிறாஷ் என்ற ஆற்றுகையும், மணமகள் சம்பந்தப்பட்ட ஷபாத் அல்-அலாறூஸ் என்ற வடிவமும் அதில் காணப்படுகின்றன. புனித றமழான் மாதம் 15ம் நாள் சிறுவர்கள் வீட்டுக்குவீடு சென்று இனிப்பு பெறும் நிகழ்வோடு சம்பந்தப்பட்ட கறங்காஷோஹ் என்ற வடிவமும், இளைஞர்களுடன் ஆற்றுகை செய்யும் அல்-ஷார்ஹ் என்னும் வடிவமும் காணப்படுகின்றன. மேலும் அல்-அசி, எஸ்ஸி, அல்-றிஸா, யவ்லா போன்ற பல வடிவங்கள் காணப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு வடிவத்திற்கும் அதற்கேயுரிய நடனஅமைப்புக்கள், இசைக்கருவிகள், பாடல்கள், ஆண், பெண், சிறுவர் கலைஞர்கள் எண்ணிக்கை, அதற்கான ஆடைகள், அணிகலன்கள், பொருட்கள், ஆற்றுகை நேரம் போன்றவைகள் உள்ளன.

ஓமானின் கலையும், இலக்கியமும் ஆயிரக் கணக்கான வருடங்கள் பழமையும் செழுமையும் வாய்ந்தவை. பாரம்பரிய நடனமும், இசையும், பாடலும் ஓமானின் கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகும். அவை தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டவை. இசை ஓமானியர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது இவர்களின் இசை அதிக லயமுள்ளதாக இருப்பதும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் ஒரே இடத்தில் ஆற்றுகை செய்ய இயலுமாக இருப்பதும் இவர்களின் இசையின் இன்னுமொரு சிறப்பியல்பாகும். பன் அத்-தம்புரா அல்லது நுபான், கியுற், றபாபா, றபாபிற் அஷ்-ஷைர், டப், குல்கால், கஷ்ஷாபா, சுர்னாய், கசிர், றஹ்மானி போன்ற பலவகையான ஊதற், கொட்டல், நரம்பு இசைக் கருவிகள் பாவிக்கப்படுகின்றன.

இசையை வளர்க்க 1984ம் ஆண்டு, அரசரால் றோயல் ஓமானி சிம்பொனிஓர்கெஸ்ட்றா ஆரம்பிக்கப்பட்டதுடன், ஒரே தடவையில் 50000 பேர் கண்டுகளிக்கக்கூடிய மஸ்கட் றோயல் ஒபரா ஹவ்ஸ் உம் 2011இல் திறந்து வைக்கப்பட்டது. இருநூற்றி எழுபத்தொன்பதாவது உலகத் தரவரிசையிலுள்ள, சுல்தான் காபூஸ் பல்கலைக்கழகத்தில் இசை ஆய்வுகளுக்காக டிபார்ட்மன் ஒப் மியுசிகோலொஜி என்ற பகுதி சிறந்த பங்காற்றியும் வருகின்றது. அத்துடன் கல்வித் திட்டத்திலும் ஒரு பாடமாக பாடசாலைகளில் பயிலப்படுவதுடன், ஓமானில் வருடா வருடம் சர்வதேச பாரம்பரிய இசைத் திருவிழாக்களும் நடாத்தப்படுகின்றன.

ஓமானி கிராமத்தவர்கள் பாரம்பரிய விவசாயத்தையும், கலைகளையும் கைவிடவிரும்பாதவர்கள். அதன் காரணமாகத்தான் தங்களுக்கு பாரிய வசதியீனங்கள், அல்லல்கள், துன்பங்கள் வந்தபோதும் கிராமத்தைக் கைவிடாது பாரம்பரியங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடங்களை விட்டுச் செல்வதால் ஏற்படும் தொன்மங்கள் அறுக்கப்படுவதன் வலி மிகவும் கொடுரமானது.

 


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...