- ஏ.எம். றியாஸ் அகமட்
ஜின் காதைகளும், தொட்டுணரமுடியா கலாச்சாரப் பாரம்பரியமும் (Intangible cultural heritage):
2) கோர் ரோரி
ஓமானின் டோபார் பிரதேசத்தின் சலாலாவுக்கு அருகிலுள்ள இந்தப் பகுதியையுனஸ்கோ நிறுவனம் உலக மரபுரிமை இடமாக 2000ம் ஆண்டில் பிரகடனம் செய்தது. கி.மு. 300 ம் ஆண்டுகளில் இங்கிருந்தே கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் போன்றவற்றில் மெசப்பத்தேமியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு சாம்பிராணி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. முகவர்கள், உல்லாசப் பிரயாணிகளை இங்கே கூட்டிச் செல்வதைத் தவிர்க்கின்றனர். இதனையும் மீறி கூட்டிச் சென்றால் வானத்தில் இருந்து சிறுகற்கள் அவர்களை நோக்கி பெய்யத் தொடங்குவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3) புஸ்தானிலுள்ள வீடு
தலைநகர் மஸ்கட்டின் மத்திய பகுதியில் றுஸ்த்தான் என்னும் கிராமத்தில் காணப்படும் அறேபியக் கடலைப் பார்த்தபடி இருக்கும் அழகிய வீடு விளக்க முடியாத, அவிழ்க்கப்படாத அமானுஷ்ய நடவடிக்கைகளுக்கு பெயர்போனது. இந்த வீட்டுக்கு நீண்ட ஒரு கதை இருக்கின்றது. இந்த அழகிய வீட்டிலுள்ள மர்மங்களை முடிச்சவிழ்க்க பல ஜின்னோட்டிகள் முயற்சித்தபோதும், அந்த வீட்டின், இரவுகளில் தோன்றும் ஒளிக் கீற்றுக்கள், நாய்கள், மற்றும் ஏனைய விலங்குகளின் ஓசைகளுக்கான காரணங்களின் முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே மர்மங்கள் தொடருகின்றன.
4) மஜ்லிஸ் அல்-ஜின்;
வீரப் பேரழகி சல்மாவின் கதையோடு தொடர்புபட்டது. இதுபற்றி பின்னர் பார்ப்போம்.
5) மலைப் பாலைப் பாதைகளின் கதைகள்
சல்மா பீடபூமியில் எங்கள் வாகனம் மெதுவாக ஊர்ந்தகொண்டிருக்கின்றது.இந்த மலைப் பாலைப் பாதைகளில்கூட எவ்வளவோ ஜின்கதைகள் உலாவருகின்றன. ஒரு நாள் வெளிநாட்டு தம்பதியர் இருவர், இந்தப் பாதைகளில் சென்றதாகவும், ஏதோவொரு தேவையின் நிமித்தம், அவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி, வெளியே வந்து, பின்னர் வாகனத்தில் ஏறும்போது, ஒரு ஜின்னும் கூடவே ஏறி, அந்தப் பெண்ணின் உடலுக்குள் சென்று, கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, பக்கத்தில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த கணவனுக்கு கோர முகத்தைக் காட்ட, அவர் திடிரென பீதிக்குள்ளாக, வாகனம் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்பட, வாகனம் விபத்துக்குள்ளாகிறது.
இன்னுமொரு கதையில், நண்பர்கள் ஒரு வாகனத்தில் இந்தப் பாதைகளால் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு வெள்ளைநிற உடையணிந்த அழகான பெண்ணொன்று அந்த மலைப் பாலையில் தன்னந்தனியே நின்று, வாகனத்தை நிறுத்தி, இடம் கேட்கிறாள்.
உலகத்திலே பயங்கரவாதம் பூச்சிய நிலையிலும், குற்றச் செயல்கள் மிகவும் குறைவாகமுள்ள மிக முதன்மையான நாடுகளில் ஓமானும் ஒன்றாகும். இதன் காரணமாக யாராவது வாகனத்தில் இடம் கேட்டால், அவர்களுக்கு இடம் கொடுப்பதும், செல்லும் வழிகளில் ஏற்றி, சொல்லுமிடங்களில் கொண்டு விடுவதும் வழக்கம். அத்துடன் இவ்வாறான வாகன வரத்துக் குறைந்த மலைப் பாலைப் பாதைகளில் வாகனத்தில் யாருக்காவது இடம் கொடுப்பது ஒரு கலாச்சார, மதக் கடமை போன்ற மரபாகிவிட்டிருக்கிறது.
நண்பர்களும் வாகனத்தை நிறுத்தி, ஆந்த அழகான பெண்ணுக்குவாகனத்தின் பின் இருக்கையில், இடத்தைக் கொடுக்கின்றனர். அந்தப் பெண் அவர்களுடன் கதைக்கவுமில்லை, சிரிக்கவுமில்லை. கலாச்சாரத்தின்படி நண்பர்களும் அவ்வாறு கதைப்பது நல்லதல்ல என்று வாகனத்தைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நிலையில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவர், தனக்கு முன்னாலிருந்த கண்ணாடிக்குள் பின்னால் பார்க்கிறார். அந்த வெள்ளைநிற உடை உடுத்து இருந்த, அழகுப் பெண்ணின் காலின் கீழ்ப் பகுதியிலிருந்த உடை சற்றுவிலக, அங்கே ஆடுகளின் கால் தெரிய, அவர் அலற, அந்த உருவம் கரைந்து, புகையாக மாறி வேகமாக வாகனத்தைவிட்டு வெளியேறிச் சென்றுவிடுகின்றது. முதியவர் ஒருவரை மூன்று இளைஞர்கள் ஏற்றிக் கொண்டவரும்போது கழுதைக் கால் தெரிந்த ஒரு கதையும் இருக்கிறது. தைரியமானவர்கள் வாகனத்தின் கதவைத் திறந்து அவைகளின் வழியே அவைகளைப் போகவிட்ட கதைகளும் இருக்கின்றன.
இந்த மலைப் பாலைப் பாதைகளில், நன்றாக பாதைகள் பற்றிய பரிச்சயமுள்ள, அனுபவமான சாரதிகள்கூட மிக இலகுவாக பாதைகளைத் தவறவிட்டிருக்கின்றார்கள். அவர்களே தவறவிடுகின்றார்கள் என்றால் புதிதாக வருபவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இதற்கும் பல கதைகள் இருக்கின்றன.
ஜின்களின் தேசம், அதன் கதைகளால் நிறைந்து கிடக்கின்றது. விஞ்ஞானம் அவதானிக்க முடியாததை ஆராய முடியாது என்கின்றது. இதன் காரணமாகவே விஞ்ஞானத்தின் வியாபகம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தக் கதைகளை பராநோர்மல் அல்லது மெற்றாபிசிக்ஸ் என்று கூறிவிட்டு விஞ்ஞானம் அதன் வேலைகளைப் பார்க்க போய்விடுகின்றது.
நவீன ஓமானில், இளைஞர்களிடம் இந்தக் கதைகள் பற்றிய நம்பிக்கைகளின் போக்கில் பல மாற்றங்களை அவதானிக்ககூடியதாகவுள்ளதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.
தொட்டுணரமுடியா கலாச்சாரப் பாரம்பரியம் (Intangible cultural heritage):
ஆடை, ஆபரணங்கள், பாவனைப் பொருட்கள், வழிபாட்டிடங்கள், வாழுகின்ற கட்டிடங்கள், பொதுவான கட்டிடங்கள், சிற்பங்கள், சித்திரங்களைக் தொட்டுணரக்கூடிய கலாசார பாரம்பரியம் அதே வேளை, நடனம், இசை, பாடல்கள், நாட்டார் இலக்கிய கதைகள், வைத்திய முறைகள், மொழி வழக்குகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், பழக்கவழக்கங்களை தொட்டுணரமுடியா கலாச்சாரப் பாரம்பரியம் எனலாம்.
இந்த ஜின் கதைகள், அவை குடிகொள்ளும் இடங்கள், அவை மனிதர்களை பீடித்தல், அவைகளை ஓட்டப் பயன்படும் இசைக் கருவிகள், அல்-கஸ்ஸாலி பெரிய கிரந்தங்கள், பாராயணங்கள், மத வழிபாடுகள், சம்பிரதாயங்கள், உளச்சிகிச்சை முறைகள் அனைத்தையும் தொட்டுணரமுடியா கலாச்சாரப் பாரம்பரியம் என்றே நான் கருதுகின்றேன்.
No comments:
Post a Comment