-ஏ.எம். றியாஸ் அகமட்
அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அதிகரித்த வேலைவாய்ப்புகள், அதிகஊதியம், கவர்ச்சியான நகரப்புற வேலைவாய்ப்புக்கள், தங்களது உள்ளுர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘சுக்” என்ற சந்தைகள் மூடப்படுதல், விவசாயிகளின் விவசாய மானியங்களை அரசுநிறுத்துதல் போன்றவை காரணமாக தங்களது பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டு ஓமானி விவசாய கிராமத்தவர்கள் நகரத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
இதனால் பல விவசாய பண்ணைகள் கைவிடப்பட்டன. இவ்வாறான தோட்டங்களுக்கு அப்போது சென்றால், தோடை, மா போன்ற பழங்கள் காய்த்திருக்கும். பேரீச்சையோ தனது வாழ்க்கைக்காக அதிகரித்த வெக்கையில் நீரின்றி போராடும். இருந்தும் தங்கள் முயற்சியை சிறிதும் கைவிடாத, தங்கள் தொன்மங்களை கிராமங்களிலிருந்து அறுக்க விரும்பாத விவசாயிகள் தொடர்ச்சியாக சில விவசாய பண்ணைகளை பல சிரமங்களுக்கு மத்தியில் நடாத்திக் கொண்டிருப்பார்கள். இருந்தும் அவை முன்னருள்ள காலங்களோடு ஒப்பிடும்போது நோய், பீடை, களைகள் தாக்கங்கள் அதிகரித்து விளைச்சலையும் குறைத்திருககும்.
ஓமானி கிராமப்புற விவசாயிகள், விவசாய நிலங்களிலிருந்து பெறப்படும்விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகள், உணவுக் கழிவுகள் போன்ற கழிவுகளை அதனை மீண்டும் உரமாக தங்களது விவசாய நிலங்களுக்கு இடுவார்கள். இதன் காரணமாக அவர்கள் அப்போது இரசாயன உரங்களை விவசாய நிலங்களுக்கு இடவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் தற்போதைய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் காரணமாக இரசாயன உரங்கள், விதைகளுடன் இறக்குமதி செய்யப்பட வேண்டி இருந்தது. இது அவர்களது சுமையை மேலும் அதிகரித்தது.
நவீன அரசு பல புதிய தொழில்நுட்பங்களை விவசாயத்தில் அறிமுகப்படுத்தியது. உதாரணமாக பேரீச்சை மரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்ய இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. முன்னர் இளைஞர்கள், மரத்தில் ஏறி, பெண் பூக்கள்மீது ஆண் பூக்களைத் தடவுவார்கள். சிறுவர்கள் வளைத்து நின்று உதவி செய்வார்கள். முதியோர்கள், இளைஞர்களுக்கு ஆண் பூக்களை ஒன்றாகச் சேர்த்து கட்டிக் கொடுப்பார்கள். மகரந்தச் சேர்க்கை செய்தல் என்ற இந்த சமூக செயற்பாடானது சுதேச அறிவை, சுற்றுச்சூழல் அறிவை, பண்பாட்டு அறிவை மற்றவர்களுக்கு பகிருதல், அதன் முறைமைகளை கற்றுக்கொடுத்தல், அயல் விசாயிகளுக்கு உதவி செய்தல் போன்ற பல விடயங்களை கொண்டு காணப்பட்டன. இதன் காரணமாக சமூக உறவுகள் உறுதிப்படுத்தப்பட்டன. அரசாங்கத்தினால் புதிய மகரந்தச் சேர்க்கை தொழில்நுட்ப இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்த சமூகச் செயற்பாடும், கற்றலும், உதவுதலும் என்ற, இந்த சூழலியல்கலாச்சாரம் (Eco-culture) மறைந்து போகின்றது.
அரசாங்கம் அறிமுகப்படுத்திய நவீன முறைகள், காரணமாக, தங்களதுபேரீச்சை மரங்களை ஆரோக்கியமாக பராமரிக்க முடியாமல் போயுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். முன்னர் பசுந்தாட் பசளையாக “ஹாரமல்” என்ற தாவரத்தை தங்களது விவசாய நிலத்திற்கு பயன்படுத்தினார்கள். “வாடி” என்று அறபியில் அழைக்கப்படுகின்ற ஆற்றுப்பள்ளத்தாக்கின் மேல் மண்ணை சேகரித்து தங்களது விவசாய நிலங்களுக்கு இட்டார்கள். இந்த மண் வளமானது. இது அறபியில் “ரீக்ஹ்” எனப்படுகின்றது. இந்த மேல்மண் கொண்டிருந்த அதீத கனிப்பொருட்கள் காரணமாக, இதனை இயற்கைப் பசளையாக பாவித்தார்கள். இது பீடைகளைக் கட்டுப்படுத்தியது. மண்ணை வளப்படுத்தியது. ஆனால் இந்த பாரம்பரிய நுட்பங்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளாது, அவைகளை நிராகரித்து, புதிய தொழில்நுட்பங்களை விவசாயத்தில் அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் புதிய நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கியபோது, அவை புதிய பிரச்சினைகளை உருவாக்கத் தொடங்கின. உதாரணமாக, தற்போது பேரீச்சை மரங்கள் “அல்ஹர்மூஸ்” என்ற புதிய பீடையினத் தாக்கத்தை எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இதனது பெருமை அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய இரசாயனப் பொருட்களையே சாரும் என்றும், அரசாங்கம் அறிமுகப்படுத்திய இந்த இரசாயனப் பொருட்கள் தங்களையே கொன்றுவிட்டன என்றும் விவசாயிகள் கருதுகின்றார்கள்.
தற்போதைய சூழலில் “ஹார்மல்” தாவரங்களை சேகரிக்க முடியாதுள்ளதாகவும், அந்தத் தாவரங்களை பாதுகாக்கப்பட்ட தாவரங்களாக அரசு அறிவித்துள்ளதாகவும், அத்துடன் இந்த தாவரங்கள் இருந்த அரசு நிலங்கள், தற்போது தனியார் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், “வாடி” எனப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் மேல் அபிவிருத்தி என்ற பெயரில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், முன்னர் போன்ற வளமுள்ள மேல் மண்களை எடுக்க முடியாமல் போயுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.
பல்லாண்டு காலமாக இந்த விவசாயிகள் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் நிலைபேறானதன்மை குறைவடைந்தது. இந்த விவசாயமுறையை வேலையாட்கள் அதிகம் தேவைப்படுவது, இலாபம் குறைவாக தருவது, ஏற்றுமதியை நோக்காகக் கொள்ளாதது என்று அரசு வகைப்படுத்திய வேளை, இறக்குமதியை மையப்படுத்திய, பெற்றோலியத்தையும், வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் அதிகளவில் பாவிக்கும் நவீன விவசாயத்தை முன்னேற்றகரமானது, இலாபமானது, பேண்தகு நிலையுடையது, வினைத்திறனானது, பொருளாதார நலன் மிகுந்த, உற்பத்தித் திறன் மிக்கது, என்றும் அரசு வகைப்படுத்தியது.
No comments:
Post a Comment