Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை - 22 (பல்நூற்றாண்டுகால அழகிய வீரமங்கை சல்மாவின் பூமிக்குள் நுழைதல்):

 ஏ.எம் றியாஸ் அகமட்

அந்த ஏழு குடும்பங்கள் மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருந்த மஸ்ஜுல்லாஹ்கிராமத்தில் எங்களைப் புதினம் பார்க்க வந்திருந்த பிள்ளைகளுக்கு முகமனும், பிரார்த்தனைகளும் செய்துவிட்டு எங்களது வாகனம் புறப்பட்டது.சகலன்தான் (டொக்டர் றயீசுல் அகமட்)  கிராமத்தவர்களிடம் எல்லாவேளைகளிலும் அறபியில் உரையாடுவது வழக்கம். இலங்கையில் இருக்கும்போது அவருக்கு ஆங்கிலமும், சிங்களமும் நல்ல சரளம். இங்கே ஓமானில் நான் அவதானித்த போது, அவரிடம் ஹிந்தி, உருது கொஞ்சம் வந்து சேர்ந்திருந்தன. அறபியும் நன்றாக இயலுமாக இருந்தது. அதனைவிட முக்கியமான விடயம், மலையாளம் அவரிடம் சரணாகதியாகியிருந்தது. அவரிடம் உள்ள சிறப்பம்சம் எந்த மொழியையும் அவர்களின் பாணியிலேயே பேசமுற்படுவதாகும்.

நம்மட தமிழில் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்த தமிழ்ச் சொற்களுக்கான ஒத்த கருத்துச் சொற்களை போட்டு, ஒரு லயத்துடன் (அல்லது ரியூனுடன்) கதைத்தால் அதுதான் மலையாளம் என்பார். என்னையும் கதைப்பதற்கு ஆர்வமூட்டுவார்.


மலையாளம்
எப்போதும் என்னைக் கவர்ந்த மொழிதான். தகழிசிவசங்கரன்பிள்ளை, வைக்கம் முகம்மது பசீர், வீ. ஆனந்தனின் தமிழ் மொழி பெயர்ப்புக்கள்,; முதலாம் வருட பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு வாரமும் திரையிட்ட அடுர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் திரைப்படங்கள் போன்றவை காரணமாக மலையாளத்தில் ஒரு காலத்தில் காதல் வந்திருந்தது. முப்பது நாள் புத்தகம் வாங்கி, இணையத்தில் அதன் எழுத்துக்களை இறக்கி, பிறிண்ட் எடுத்து, மனனமாக்கி, எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கியிருந்தபோது, தொடர்ச்சியின்மை காரணமாக மலையாளம் கைநழுவிப்போயிருந்தது.

இப்போது எனது மலையாளத்திற்கு இரண்டே இரண்டு ஆதர்சங்கள். ஒன்று வீட்டில் இருக்கும் சூரியா சனல். மற்றையது மலையாள எழுத்தாளர் சி.எஸ். சந்திரிக்காவின் கபானி என்ற சிறுகதையை ஆங்கில வழி தமிழில் சூரியா அமைப்பின் பெண் சஞ்சிகைக்காக மொழி பெயர்த்ததிலிருந்து அவர் எனக்கு முகநூல் நண்பர். அவரின் அந்த முகநூலின் மலையாளம். கடவுளின் தேசத்தின் மொழி ஒரு நாள் வாலாயப்படும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

ஓமான் எங்கும் பெருநகரங்களிலும், பெருந்தெருக்களின் முக்கியமான பகுதிகளிலும் மலையாளிகளின் வர்த்தக முயற்சிகளை அல்லது ரெஸ்ரொறண்டுகளைப் பார்க்கலாம். அது அவர்களின் விடாமுயற்சியையும், கடின உழைப்பையும் காட்டுகின்றது. பொதுவாக ஆசிய நாட்டவர்களைவிட அல்லது மற்ற இந்தியவர்களுடன் ஒப்பிடும்போது பொருட்களின், சேவைகளின்; விலைகளும் குறைய. இவர்களின் வர்த்தக முயற்சிகளின் வெற்றிக்கு மிகுந்த தந்திரோபாயங்களை வகுத்துச் செயல்படுகின்றார்கள்.

பொதுவாக மலையாளிகள் அறபு, ஆங்கிலம், தமிழ் எல்லாம் நன்றாகபேசுவர்கள். ஆனால் சகலன் அவர்களது கடைகளுக்குச் சென்றால் மலையாளத்தைத் தவிர எதுவும் பேசமாட்டார். அதுவும் அதே வேகத்துடனும், அதே லயத்துடனும். நான் கதைக்கும்போதும், பிழைகள் வருகின்றன. அது அவர்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. நம்மட மொழியை இவன் மதிக்கின்றானே. நன்றாக பேச முயற்சிக்கின்றானே என்று, ஒரு பாராட்டுணர்வோடுதான் பார்க்கின்றார்கள். என்றும்; கூறுவார்.

அவருடன் சென்ற பயணங்களிலெல்லாம், அவருக்கு மட்டும் எப்படி மொழிகளை இலகுவாக ஆட்கொள்ள முடிகின்றது என்பதை அவதானிக்கத் தொடங்கினேன். ஒரு ரெஸ்ரொறண்டுக்கு சென்றால் வரவேற்பாளர், முகாமையாளர், காசாளர், உணவு தயாரிப்போர், பரிமாறுவோர் எல்லோரிடமும் உரையாடுகிறார். பின்னர் திரும்பும்போது நன்றி தெரிவித்துவிட்டும் வருகிறார்.

அப்போதுதூன் புரிந்தது, ஒரு மொழியின் சொல்வளத்தை (vocabulary)அதிகரிப்பதன் நுட்பம் என்வென்று. முக்கியமான ஏழு-எட்டு நுட்பங்களில் ஒன்றான பல்வேறு தரப்பினருடன் உரையாடல்களை (conversation) நிகழ்த்துவது. அதனையே செய்கிறார். சொற்களும், வசனங்களும், அவரிடம் இலகுவாக வந்து குடியிருந்துகொள்கின்றன. எந்த மொழியையும் இலகுவில் கற்க நினைப்பவர்கள். அந்த மொழி பேசும் பல்வகையான மனிதர்களை, அவர்களது பண்பாடு, கலாச்சாரம் போன்ற அம்சங்களுடன் விரும்ப வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். இது மொழி பயில நினைப்பவர்களுக்கு முக்கியம் என நினைக்கின்றேன்.

இப்போது எங்கள் வாகனமும், நாங்களும். புதிய அத்தியாயத்திற்குள் நுழைகின்றோம். நிலக்காட்சிக்குள் பிரவேசிக்கின்றோம். மரபுசார் தொல்கதைகளின் புனைக்களமளாக விளங்கும் சல்மா பீடபூமிக்குள் நுழைகின்றோம். உயரமான இரு மலைகளுக்கிடையே காணப்படும் சமமான அல்லது ஓரளவு சமமான நிலப் பரப்பு பீடபூமி எனப்படும்.

கடல் மட்டத்திலிருந்த சுமார் 6000 அடி உயரத்தில், 10 சதுரகிலோமீற்றர் பரப்பில் அழகும் வீரமும் கொண்ட சல்மாவின் பூமி எங்களை வரவேற்றது. அங்கிருந்து நேரே பார்க்கின்றேன். சுமார் முப்பது அல்லது நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் யாரோ நீலத்தை கரைத்து தாறுமாறாக இறைத்துக் கொட்டியது போல ஏதோவொன்று தளம்பிக் கொண்டிருந்தது. அது இந்து மகா சமுத்திரம். மனதுக்குள் சந்தோசம் இன்னுமொரு சமுத்திரமாக இங்கேஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. அந்த இந்துமுகா சமுத்திரத்தை ஒட்டியவாறு சமாந்தரமாக செல்லும் 17ம் இலக்க பற்றினா-மஸ்கெட்-சுர் பெருந்தெருதான் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு. சரியான திசையிலும், வழியிலும்தான் செல்கிறோம். ஆனால் இந்த சிலந்தி வலைப்பின்னல் பாதைகளில் வழி தவறாமல் இருக்க வேண்டும். அல்-ஜாரு வல்-அய்சியில், நாஸர் அல்-வைசி காட்போட் மட்டையில் வரைந்து தந்த பாதைகளின் வரைபடம் என்னிடமிருந்தது. எந்தப் பாதைகளால் செல்லக்கூடாது என்பதில்தான் அவர் மிகக் கவனமாக இருந்தார். அதற்கு பல காரணங்களும் இருக்கலாம்.

சல்மா என்றால் பாரசீகத்தில் அன்புக்குரியவள். காதலி. அறபியில் அமைதி.பாதுகாப்பு. ஆனால் சல்மா என்பது உண்மையில் வீரம். வீரத்தால் மட்டும்தான் அமைதியையும், பாதுகாப்பையும், அதன் பின் அன்பையும் தரமுடியும். அதனை நாங்களும் உணரத் தொடங்கினோம். மரபுசார் தொல்கதைகளின் புனைகளங்களால் நிரம்பியிருக்கும் சல்மா பீடபூமி என்னும் சாகரத்தில் தனியொரு படகாய் நாங்கள் அலைகளில் ஏறி, இறங்கி, ஆடி, அடங்கி மிக மெதுவாக இந்து மகா சமுத்திரத்தை நோக்கி முன்னேறத் தொடங்கினோம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...