Tuesday, August 3, 2021

தொலைதலின் இனிமை – 37 (ஓமானின் ஆடுகள் - காலநிலை மாற்றத்திற்கெதிராகவும், உணவு, போசணைப் பாதுகாப்புக்காகவும் முன்னணியில் நின்று போராடும் 'வீரர்கள்': ii):

 ஏ.எம். றியாஸ் அகமட்

காலநிலை மாற்றத்தால் புயல்களின் எண்ணிக்கையும், வறட்சியின் அளவும்நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களிலுள்ள பண்ணையாளர்கள் ஆடுகளில் முதலீடு செய்வது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் மீண்டௌச் செய்ய ஒரு இலகுவான முறையாகும். (இதனையே தென்னாபிரிக்க, மொசாம்பிக், இந்திய ஆய்வாளர்களும் வலியுறுத்துகின்றனர்). ஏனெனில்,

1) ஆடுகள் ஒப்பீட்டு ரீதியில் பராமரிப்புக் குறைவாகத் தேவையான கால்நடை விலங்குகளாகும்.

2) ஆடுகள் வளர்ப்பதற்கான கூடுகள், பட்டிகள் அமைப்பதற்கும், உபகரணங்களுக்கும் தேவையான முதலீடுகள் ஒப்பீட்டு ரீதியில் குறைவானதாகும்.

3) ஆடுகள் தரம் குறைந்த உணவு, வளர்ச்சி குன்றிய தானியப் பயிர்கள் போன்றவைகளை உண்டு தரமான அறுவடையை அல்லது விளைவைத் தரக்கூடியன.

4) ஆடுகள் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையான காலங்களில், தங்களது அனுசேபத் தொழிற்பாடுகளைக் குறைத்து, சக்தியைச் சேமிக்கின்றன.

5) ஆடுகளின் மேய்ச்சல் நடத்தைகளும், அதன் மேற்பக்க தடித்த உதடுகளும் வறள் வலயங்களில் உயிர்வாழ்வதற்கு தேவையான இசைவாக்கங்களை கொண்டுள்ளன.

6) ஆடுகள் மற்ற அரைத்து உண்ணிகளோடு ஒப்பிடுகையில் அதிகவறட்சியையும், வெப்பத்தையும் தாங்கக்கூடியன. அத்தோடு தானியப் பயிர்களோடு ஒப்பிடும்போது நீண்டகால வறட்சியை தாங்கிப் பிடிக்கக்கூடியன.

7) ஆடுகள் வறட்சியான காலங்களில் நீர்த்தேவைகளைக் குறைத்து, நீரை சேமிக்கின்றன.

8) பண்ணையாளர்களுக்கு, ஆடு வளர்ப்பு வங்கிகளில் தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள் போன்றது. பணம் மேலதிகமாக இருக்கும் போது ஆடுகளை வாங்கி வளர்க்கிறார்கள். ஆடுகள் குட்டிபோட்டு வட்டிபோல பெருகிக் கொண்டே இருக்கின்றது. பொருளாதார கஸ்டமான நிலைமைகளின்போது, அந்த ஆடுகளில் சிலவற்றை விற்று தங்களது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். ஆடுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. உலகிலுள்ள பல பகுதிகளில் ஆடுகள், பணநோட்டுக்களுக்குப் பதிலாக அல்லது பணமாக இன்றும் பாவிக்கப்படுகின்றன.

9) கம்பளி ஆடுகள் உட்பட மற்றைய அரைத்துண்ணும் விலங்குகளோடுஒப்பிடுகையில் ஆடுகள் குறைந்தளவே சமிபாட்டு மெதேனை வெளிவிடுகின்றன.

10) ஆடுகள் சிறிய பருமனும், குறைந்தளவு உணவுத் தேவையும் கொண்டதாகையால பயிர்ச்செய்கை நிலங்களற்ற விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு பொருத்தமானதாகும்.

11) ஆட்டு மந்தைகளின் அளவும், அதற்குத் தேவையான உணவும் சிறியதாகையால், தொலைந்த மந்தைகளை இலகுவில் கண்டு பிடிப்பதற்கும் இலகுவானதால். பெண்களால் இந்த மந்தைகளை மேய்ப்பதற்கும், நிருவகிப்பதற்கும் இலகுவாக முடிகிறது.

மேலே கூறிய பல காரணங்களால், காலநிலை மாற்றத்தின் காரணமாக, பாதிக்கப்படப்போகும் குறிப்பாக சிறியளவில் கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு, ஆடு வளர்ப்பு மிகச் சிறந்த தெரிவாகும்.

பொதுவாக அரைத்துண்ணும் (ruminant) கால்நடை விலங்குகளின் சமிபாட்டுத்தொகுதியில் தாவரத்தின் பகுதிகளை நுண்ணுயிர்கள் பிரிந்தழிகையும், நொதிக்கவும் செய்யும்போது மெதேன் வாயு உருவாகின்றது. இது சமிபாட்டு மெதேன் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த மெதேன் வாயுக்கள் ஏப்பமாக வாய்வழியாக சுற்றுச்சூழலுக்கு வெளிவிடப்படுகின்றது. மெதேன் வாயு பசுமை வீட்டு வாயு ஆகும். இது சுற்றுச்சூழல் வெப்பநிலையை அதிகரித்து பூகோள வெப்பமுறலுக்கு காரணமாகின்றன. அரைத்துண்ணும் கால்நடை விலங்குகளில் ஆடுகள் மற்றைய விலங்குகளோடு ஒப்பிடும்போது, மிகக் குறைவான மெதேன் வாயுவையே வெளிவிடுகின்றன. அத்தோடு வறட்சியும், சுற்றுச்சூழல் வெப்பநிலையும் அதிகரிக்கும்போது அரைத்துண்ணும் கால்நடை விலங்குகள் வெளிவிடும் மெதேன் வாயுக்களின் அளவும் அதிகரிக்கின்றது. ஆனால் ஆடுகள் அந்த நிலைமையிலும் மற்றைய விலங்குகளைவிட குறைவான மெதேன் வாயுக்களையே சூழலுக்கு வெளிவிடுகின்றன. இதன் காரணமாக ஆடுகள் சூழலின் நண்பன் என அறியப்படுகின்றன.

வீரர்களும் எல்லோரும் பதக்கங்களுக்கு தகதியானவர்கள் அல்ல. ஆனால் ஓமானின் ஆடுகள் என்னும் 'வீரர்கள்' காலநிலை மாற்றத்திற்கெதிரான போராட்டத்தில் முன்னரங்கில் நின்று போராடுவதால் அவர்கள் வீரர்களாகவே கருதப்படுகின்றார்கள். 'அவர்களுக்கே' பதக்கங்களும் உரியன. 'அவர்களுக்குள்' இருக்கும் பரம்பரையலகுக் கட்டமைப்புக்களே இதற்குக் காரணமாகும். காலநிலை மாற்றத்திற்கெதிரான போராட்டத்தில் ஓமானின் ஆடுகள் மற்ற நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமும், மாதிரியுருவுமாகும்.




 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...