- ஏ.எம். றியாஸ் அகமட்
மிகவும் புராதன காலத்திலிருந்தே அந்த குகையினதும், இறங்கு குழிகளினதும்;பெயர்கள் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் ஏதோவொரு காரணத்தால் சொல்வதற்கு தயங்கி, பெயர் தெரியாது என்கிறார்கள். அந்தக் குகை ஜின்கள் வாழ்ந்து, தங்களது கூட்டங்களை நடாத்துக்கின்ற இடம் என்றும், அந்த மூன்று துளைகளிலிருந்தும் விசித்திர ஒலிகளை தாங்கள் எப்போதும் கேட்பதாகவும், அவர்கள் டொன் டேவிசனுக்கு கூறினார்கள். பெயர் தெரியாத காரணத்தால் டெவிசன் அந்தக் குகைக்கு மஜ்லிஷ் அல்-ஜின் (ஜின்கள் கூட்டம் நடாத்தும் இடம்) என்ற பெயரைச் சூட்டினார். பின்னர் பழைய பெயர் தெரியவந்தாலும் மஜ்லிஷ் அல்-ஜின் என்ற இந்தப் பெயரே, புகழ்வாய்ந்ததாகவும், நிலைத்தும் நின்றுவிட்டது.
1984ம் ஆண்டு, மார்ச் மாதம், (தனது மனைவி இறங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, அவருக்காக டேவிசன் ஒதுக்கி வைத்திருந்த) இரண்டாவது இறங்கு துளையூடாக அவரது மனைவி செரில் குகைக்குள் இறங்குகிறார். அந்த இறங்கு துளையை முதன் முதல் பாவித்தவர் செரில். இதன் காரணமாக இதற்கு செரில் இறங்கு துளை என பெயரிடப்பட்டது. 1985ம் ஆண்டு மூன்றாவது இறங்குதுளையூடாக, டொன் டேவிசன் முதன் முதலாக குகைக்குள் இறங்கினார். இவ்வாறாக 1985ம் ஆண்டு, ஏப்ரல் தொடக்கம் மே மாதம் வரையான காலப் பகுதிகளில் தம்பதிகள் இருவதும் இவ்வாறான ஐந்து பயணங்களை மேற்கொண்டு குகைக்குள் இறங்கி பல ஆய்வுகளை மேற்கொண்டு, குகையின் அமைப்பை பூரணமான திட்ட வரைபாக்கினார்கள்.
அதன் பின்னர்தான் அவர்களுக்குத் தெரிய வந்தது, மிகப் புராதன காலத்திலிருந்தே உள்ளுர்வாசிகளுக்குத் அவைகள் நன்கு தெரிந்த இடங்கள்; என்றும், அதற்குப் தனிப்பட்ட பெயர்கள் இருக்கின்றன என்றும் தெரிய வந்தது.
முதலாவது இறங்கு துளையை அறபியில் கொஷிலத் மகன்தலி, இரண்டாவது துளை கொஷிலத் பெய்ன் அல்-ஹியூல், மூன்றாவது கொஷிலத் மினகொத் என்பதையும் அறிந்துகொண்டனர்.
மஜ்லிஷ் அல்-ஜின் குகைக்கு உள்ளுர்வாசிகள் முதலாவது இறங்குதுளையின் பெயரை வைத்தே கொஷிலத் மகன்தலி என்றுஅழைத்தனர்.
1990ம் ஆண்டு, தனது மஜ்லிஷ் அல்-ஜின் குகை அனுபவங்களை ஒரு ஆய்வுக்கட்டுரையாக சவூதி அறம்கோ வேர்ல்ட் சஞ்சிகையில் வெளியிடுகிறார். அதன் பிறகு இந்தக் குகை உலகத்தின் கவனத்தை பெறத் தொடங்குகின்றது. அதன் பின்னர் ஆய்வாளர்களும், விஞ்ஞான சஞ்சிகைகளும், ஆய்வுக்காக வரத்தொடங்குகிறார்கள். ஆய்வுக் கட்டுரைகளும் வரத் தொடங்குகின்றன. அதன் வரலாற்றின் இன்னுமொரு பக்கம் உதயமாகத் தொடங்குகின்றது.
டொன் டேவிசன் 1980 தொடக்கம் 1993ம் ஆண்டு, தான் ஓய்வு பெறும்வரை, Public authority for
water resources) (நீரியல் வள பொது அதிகார சபை) என்னும் ஓமானிய அரசின் அதிகாரசபையில், புவிவியியல், நீரியியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். அவர் தொழில்முறைத் தேர்ச்சியுள்ள மலையேறி, குகை இறங்கி, நீர் மூழ்கி. அவரின் மனைவியிடமும் இதே தகமைகள் இருந்தன. இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஒரு குகைதேடும் சாகசப் பயணம் ஒன்றில், செரிலை சந்தித்து, காதலில் விழுந்து, மணக்கிறார்.
ஓமானின் குகைகளின் கண்டு பிடிப்புகளின் முன்னோடியென்றால் அந்தப் பெருமை டொன் டேவிசனைத்தான் சாரும். தற்போது இருக்கும் பாதை வசதிகளோ, வாகன வசதிகளோ, குகைக்குள் சிக்குப்பட்டவர்களை மீட்கும் எந்த வசதிகளோ இல்லாத காலத்தில் உயிரைத் துச்சமாக மதித்து பல குகைகளைக் கண்டு பிடித்து, அதன் காரணமாக ஓமானின் நிலத்தடி நீரை உயர்த்துவதிலும், வருடம் முழவதும் நீரைப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதிலும் முன்னோடியாகவே இவர் பார்க்கப்படுகின்றார்.
தம்பதிகள் இருவரும், ஓமானின் நீர்நிலைகள், குகைகள் பற்றிய சுதேச அறிவையும், தகவல்களையும் பெற்றுக்கொள்ளவதற்காக ஓமானின் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பலிலும், சுவையான உணவுகளிலும் திளைத்திருக்கிறார்கள். அவர்கள் புவியியலாளராக இருந்தாலும், ஓமானின் செழுமையான கலாச்சாரத்திற்கு வாழும் சாட்சியாக இருந்த சமூகவியலாளர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
1993ம் ஆண்டு, பணியில் இருந்து ஓய்வுபெற்றவுடன், டேவிசன் தாய்நாட்டுக்கு திரும்பினார். 1994ம் ஆண்டு, ஆர்ஜென்ரினா – சிலி எல்லைப் பகுதியின் அண்டிஸ் மலைத் தொடரிலுள்ள, வொல்கன் லுல்லைல்லாகோ எரிமலையில் தன்னந்தனியராய், முதன் முதலாக ஏறி சாதனை படைக்க முயற்சிக்கும்போது, திடிரென காணாமல் போனார். சில நாட்களுக்குப் பின்னர் பனிக்குள் புதைந்து கிடந்த வாகனத்தை மட்டுமே மீட்புக் குழுவினரால் மீட்க முடிந்தது. மர்மமாக மறைந்து போனார். அவரின் மர்மமான மறைவின் முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே புதிராகவே இன்னும் இருந்து வருகின்றது.
No comments:
Post a Comment