Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை – 29 (மஜ்லிஷ் அல்-ஜின் குகை: அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் டொன் டெவிசன், செரில் ஜோன்ஸ் தம்பதியினரால் கண்டுபிடிக்கப்பட்ட கதை - i ):

ஏ.எம். றியாஸ் அகமட்

1980 செப்ரம்பர் மாதம், ஓமான் அரசின் அழைப்பின் பெயரில்,சுண்ணாம்புக்கல் பீடபூமிப் பரப்பில் எவ்வாறு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது?, அந்த விநியோகத்தில் இயற்கையான வடிகான்களும், குகைகளும் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? என்பது பற்றிய ஆய்வுகளுக்கு அமெரிக்க புவியியலாளரும், நீரியல் ஆய்வாளருமான டொன் டெவிசன் (ஜுனியர்) வருகிறார். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகள் ஓமானின் நிலக்கீழ் நீரை அதிகரிப்பதற்கு மிக முக்கியமாக உதவும். தனது நண்பர்களால் சுருக்கமாக டீடீ (DD) என அறியப்பட்ட, டொன் டெவிசன் (ஜுனியர்), ஆய்வாளர் மட்டுமல்ல தொழில்முறைத் தேர்ச்சியான ஒரு மலைஏறி, குகை இறங்கி, நீர்மூழ்கி போன்றவைகளாகவும் இருக்கிறார்.

அந்தக் காலப் பகுதியில், ஓமானில் பல இடங்கள் செல்வதற்கும், பிரயாணம் செய்வதற்கும் கடினமானவைகளாக இருந்தமையால் 1980 முதல் 1982 வரை அவரால் மிகவும் குறைவான தகவல்களையே திரட்ட முடிகின்றது. இதனை நிவர்த்திக்க 1982ல், விமானத்தை பாவிக்கத் தொடங்குகின்றார். அதே காலப் பகுதியில் வடகிழக்கு ஓமானின் பானி ஜாபிர் மலைப் பகுதிகளை விமானத்தில் படமெடுக்கிறார்.

தான் எடுத்த படங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, சல்மாபீடபூமியின் வடகரையில், பாரிய குழிகளையும், நிறுத்தற்குறியின் அளவுள்ள இரு புள்ளிகளையும் அந்தப் படத்தில் அவதானிக்கிறார். அந்த இரு சிறு புள்ளிகளும் அவரின் சிந்தனையை கிளறத் தொடங்குவதை உணருகிறார்.

1983ம் ஆண்டு ஜனவரியில், தான் அப்போதுதான் திருமணம் முடித்துகரம்பற்றியிருந்த புது மனைவியும், சக ஆய்வாளரும், தொழில்முறை மலைஏறி, குகை இறங்கியுமான செரில் ஜோன்சுடன் ஓமானுக்கு திரும்பி, சல்மா பீடபூமியில் தனது புகைப்படத்தில் சிறுபுள்ளிகள் போன்று தோன்றிய இடங்களை மிகவும் கடினமான முயற்சியெடுத்து, 1400 மீற்றர் (4593 அடிகள்) மலைகளின் மேல் 6 மணித்தியாலங்களாக மலையேறி அடைய முயற்சிக்கின்றார்கள். ஆனால் உரிய இடத்தை அவர்களால் அடையாளம் காண முடியாதும், அந்த மலைப் பாலையில் எவரையுமே சந்தித்து உதவி கேட்க முடியாதவாறும் தடுமாறுகிறார்கள். சற்று தூரத்தே சுக்குன் என்ற இடத்தை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அடைந்து, ஆடு மேய்க்கும் சமூகம் ஒன்றைச் சந்தித்து, அடையாளம் காண முயற்சித்து, இடங்களை அடையாளம் காணமுடியாமல், பயணம் தோல்வியில் முடிய திரும்புகிறார்கள்.

மீண்டும் 1983 ஜுன் மாதம், டொன் டெவிசன், அவரின் நண்பர், சாகசப் பயிற்சிஆசிரியர் டப் கிறீன் என்பவருடன், றோயல் ஓமானி விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டரின் உதவியுடன் ஏற்றிச் செல்லப்பட்டு, சல்மா பீடபூமியின் மத்திய பகுதியில் இறக்கி விடப்படுகிறார்கள் (விமானத்திலிருந்து குதிக்கிறார்கள்). பின்னர் விமானம் சென்றுவிடுகின்றது. பின்னர் இருவரும் தங்கள் இலக்கு நோக்கி கால்நடையாக, திசையறி கருவிகளின் உதவியுடன், மிகவும் கடினமான இந்த நிலப் பரப்பில் முன்னேறுகிறார்கள். மலைகளின் மேல் ஏறுகிறார்கள். பள்ளத்தாக்குகளை தாண்டுகிறார்கள். தேடிவந்த இலக்கை கண்டுபிடிக்கிறார்கள். அவை மலை ஒன்றின் உச்சியில் இருப்பதை அவதானிக்கிறார்கள்.

அந்த மலையில் ஏறி அந்த இரு புள்ளிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவை நிலத்தின் பாரிய தூரத்தில் இருக்கும் குகைக்குள் இறங்கும் இறங்கு துளைகள். முதலாவது துளையை அளக்கிறார்கள். அது 120 மீற்றர் (389 அடிகள்). அங்கிருந்து 100 மீற்றர் தொலைவிலுள்ள இரண்டாவது துளையை அளக்கிறார்கள் அது 140 மீற்றர் (454 அடிகள்). ஓரே நாளில் இவ்வாறு ஐந்து குகைகளின் வாயில்களைக் கண்டுபிடிக்கின்றார்கள். பின்னர் திரும்புகிறார்கள்.

அதன் பின்னர் இரு வாரங்கள் கழித்து, ஜுன் 23, 1983ம்ஆண்டு, 180 மீற்றர் (583 அடிகள்) கயிறு உட்பட குகைக்குள் இறங்கும் சாதனங்களுடன், அதே ஹெலிகொப்டரில், அதே டப் கிறீன் உடன் டொன் டெவிசன் வருகிறார். ஆனால் இந்த முறை டொன் டெவிசன் மட்டுமே குதிக்கிறார். டப் கிறீனுடன் விமானம் திரும்பிச் செல்லுகின்றது. அன்று அந்த மலைப் பாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையுமே, எவற்றையுமே காணமுடியாததாகவும், அந்த நாள் தனது வாழ்நாளின் மிகக் கொடுமையான தனிமையான நாளாக இருந்ததாகவும் உணருகிறார்.

தன்னந்தனியே நடந்தும், ஓடியும், ஏறியும் மலைமேல் இருந்த இறங்கு குழிகளை அடைகிறார். 18 மீற்றர் (58 அடிகள்) அகலமுள்ள, முதலாவது இறங்கு குழியை குகைக்குள் இறங்குவதற்காக தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் குகை இறங்கு சாதனங்களை தனியனாக பொருத்தி, கயிற்றை இறங்கு குழிக்குள் இறக்கி, மீண்டும் மீண்டும் கவனமாக பரிசோதித்து குகைக்குள் அமைதியாகவும், மெதுவாகவும் தன்னந்தனியே இறங்குகின்றார். அந்தக் குகையின் பெயர் என்ன? அதன் தொல் கதைகள் என்ன? என்பது போன்ற எந்த விபரமும் அறியாது தைரியமாக இறங்குகின்றார்.

அமைதியின் பேரிரைச்சலுக்கும், தனிமையின் இருளுக்குமிடையில்,ஆச்சரியமும், அமானுஷ்யங்களின் பீதியும் தொற்றிக் கொண்ட குகை இறங்கலின் ஐந்து நிமிட முடிவில் இராட்சத மலையில் கால் பதிக்கிறார். பாரிய மலை உறுதியில்லாதது. அசைகிறது. சரிகிறது. ஆடுகிறது. அந்த மலையைக் குனிந்து பார்க்கிறார். பிரமித்து, விக்கித்து வாயடைத்துப் போய் நிற்கிறார்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...