Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை – 25 (இரவுகள் அவைகளுக்கானவை, பகல்கள் எங்களுக்கானவை):

ஏ.எம் றியாஸ் அகமட்

ஜின்குடிகொள் காதைகள்:.

1.4) பஹ்லாவின் ஜின்கதைகள்:

ஆதி ஜின்னொன்று பஹ்லாவில் இஸ்லாத்திற்கு முன்னருள்ள காலத்தில்பிறந்ததாகவும், அதன் காரணமாக, வளைகுடாநாடுகளில் இந்த பஹ்லா கிராமம் மந்திர, தந்திரங்களுக்கு ஆதி நாட்களிலிருந்து பெயர்போனதாகவும் நம்பப்படுகின்றது.

பஹ்லா பேய்க் கதைகளின் நகரம். ஜின் கதைகளின் நகரம். எங்களுக்கு பகல்களும், அவைகளுக்கு இரவுகளும் என்ற விட்டுக்கொடுப்புடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களும், ஜின்களும் இரண்டறக்கலந்து வாழ்ந்துவரும் நகரம்.


இங்கு
நிறையக் கதைகள் உலாவுகின்றன. ஜின்கள் மனிதர்களைப் பீடிப்பதாகவும், சில பெண்கள் மறைக்கப்பட்டதாகவும், சிலர் சாபத்திற்குள்ளாகி ஆடு, மாடு போன்ற விலங்குகளாக உருமாற்றப்பட்டுள்ளதாகவும் நிலவுகின்றன.

இங்கு இந்த ஜின் கதைகளைப் பற்றி யாரிடமாவது கேட்டால் அவர்கள் உடனடியாக வாய்களைத் திறக்கமாட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஜின்கள் ஊரிற்குப் புறத்தேயுள்ள பேரீச்சை மரங்களில் தங்கி கிராமத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்றும், கிராமத்திலுள்ள ஒவ்வொருவரினதும் விபரங்களை அவைகள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன என்ற நம்பிக்கைகளே காரணங்களாகும்.

கிராமத்தவர்கள் ஜின்களை சட்டைசெய்யாமல் விடுவதும் இல்லை,விளையாட்டாக எடுப்பதுமில்லை. அவைகளிலிருந்து பாதுகாப்பு பெற சில சட்டங்களையும், எல்லைகளையும் ஆதியிலிருந்தே வகுத்து வைத்திருக்கின்றார்கள். அவைகளில் முக்கியமான ஒன்று, ஒரு போதும், ஜின்கள் குடியிருக்கும் மரங்களுக்கும், மதில்களுக்கு அருகில் செல்வதும் இல்லை. மதில்களில் சாய்வதும் இல்லை. அப்படிச் சென்றால், ஒரு போதும் வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாதவாறு தூரத்து நிலப் பகுதிகளுக்கு (சில பனுவல்கள் சவூதி போன்ற தூரப் பிரதேசங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றார்கள் என்கிறது) அவர்கள் கடத்தப்படுவதாகவும் நம்பிக்கை நிலவுகின்றது.

இந்தகக் கிராமத்தின் மீது கூறப்பட்டிருக்கின்ற அல்லது கட்டமைக்கப்பட்டிருக்கின்ற ஜின்களின் கதைகளால், இங்கு உல்லாசப் பிரயாணிகள் வருவதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கின்றார்கள். அத்துடன் இந்தக் கிராமம் 4000 வருடங்களாக களி, மட்பாண்ட, சட்டி பானை, நுண்கலைத்துவ வேலைகள், செம்பு, வெள்ளி நகை வேலைகள் போன்றவற்றிற்கு மிகவும் பிரபல்யமானது. அத்துடன் எரிமலைப் பாறைகளிலிருந்து தோன்றிய ஜபல் அக்தர், ஜபல் ஷம்ஸ் போன்ற கறுத்த மலைகளின் சுற்றயற்புறமாக இருப்பதன் காரணமாகவும் இந்தப் பிரதேசம் சுற்றுலாப் பிரயாணிகளை மிகவும் கவரக்கூடிய இடமாகமும் காணப்படுகின்றது.

இந்தக் கதைகளின் காரணமாக அவர்களின் வாழ்வாதாரங்களான இந்தத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது அழிவின் விழிம்பில் காணப்படுகின்றன. வெளியிடங்களில் கண்காட்சிகளுக்கு உற்பத்தி செய்த பொருட்களை விற்கச் சென்றால் கூட, ஜின்களின் சாபத்திற்குள்ளான பொருட்களாக இருக்கலாம் என்று வாங்குவதற்கு மற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்ற பல காரணங்களால் ஜின்கள் பற்றி இந்தக் கிராமத்தவர்கள் யாரிடமும் கதைப்பதில்லை. அவ்வாறு மீறி கதைத்தால், இரவு நேரங்களில் ஜின்கள் தங்களுக்கு தொல்லைகளைக் கொடுக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

மந்திர, தந்திரங்கள் ஓமானில் தடை செய்யப்பட்ட மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலாக பார்க்கப்படுவதுடன், அது சிறைவாசத்திற்குரிய குற்றமும் கூட. யாராவது ஜின்களினால் பாதிக்கப்பட்டால், அவர்கள் முஅல்லிம் என்று அழைக்கப்படுகின்ற ஜின்னோட்டுபவர்களிடம் (பேயோட்டுபவர்களிடம்) அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். ஜின்னோட்டிகள், அல்குர்ஆன் பாராயணத்துடன், ஜின்கள் ஓட்டுவது சம்பந்தமான விடயங்களை மிகவும் விபரமாகக் கொண்ட அல்-கஸ்ஸாலி என்ற அறபுக் கிரந்தத்தின் துணைகொண்டு, அங்கு சொல்லப்பட்ட முறைகளை வைத்து ஜின்களை ஓட்டுகிறார்கள்.

ஜின்கள் விசித்திரமானவை. மனிதர்களோடு ஒப்பிடும் போது பாரிய வித்தியாசம் இல்லாதவை. அளப்பரிய சக்தியையும், ஆற்றலையும் கொண்டவை. உரு மாறக்கூடியன. கண்ணுக்கு தெரியாதன. ஜின்களில் மிகப் பெரும்பான்மையானவை மனிதர்களுக்கு கேடுகள் விளைவிக்காதவை என்பது பஹ்லாவிலுள்ள மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.

பஹ்லாவின் சில வீடுகளில் இரவு நேரங்களில் பாத்திரங்களும்,தளபாடங்களும் இடமாறுகின்றன. திடிர் திடிரென நெருப்புக்களும் பற்றிக்கொள்ளுகின்றன. வீட்டின் மீது கல்மழைகளும் பொழிகின்றன. இவ்வாறான ஜின் தந்திரங்களால் வீட்டுக்காரர்கள் கடும் பீதிக்குள்ளாகின்றனர். ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் மேற்கூறிய அனைத்தும் அல்லது சில விடயங்களும் நடக்கலாம். அத்துடன் ஜின்களால் ஆட்கொள்ளப்பட்ட நபருக்கு எல்லாமே மறந்து போவதுடன், உடலின், முகங்களின் தசைகள் கோணல் மாணலாக இறுகி, சுருங்கிக் கொள்ளத் தொடங்கும். இது கெட்ட ஜின்களின் வேலையாகும்.

பஹ்லாவிலுள்ள ஜின்களுக்கு இன்னுமொரு கதையும் இருக்கின்றது. சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர், இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய மந்திரவாதி மக்களினால் கற்களினால் எறியப்பட்டு கொல்லப்பட்டு, அவரை ஒரு இடத்தில் அடக்கி, அடக்கிய அந்த இடத்தை அவரின் சீடர்கள் புனித வணக்கஸ்தலமாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில், அவரின் கல்லறைக்கு மேல் இப்போதுள்ள பஹ்லா கோட்டையைக் கட்டியிருக்கிறார்கள் என்றும், இதன் காரணமாக அவரது ஆவி அந்தக் கல்லறையிலிருந்து எழும்பி, அவர்களின் சீடர்களின் ஆவிகளின் உதவியோடு கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்ற இன்னுமொரு தொல்கதையும் இங்கே இருக்கின்றது.

பாலைவனத்தால் சூழப்பட்ட, பாலைவனப் பசுந்தரையான, காரணமில்லாமல் திடிர் திடிரென நெருப்புச் சுவாலைகள் வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின்ற பஹ்லா கிராமத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பல ஜின் கதைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஜின்களைக் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தலைநகர் மஸ்கட்டை சுற்றியிருப்பவர்கள்கூட கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பலர் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது இடைவழியில் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இறந்த பெற்றோர்களின், நண்பர்களின் உருவங்களில் வந்து, அவர்கள் இன்னும் நன்றாகவும், உயிருடனும் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்த சில ஜின்கள் முனைந்த சம்பவங்களும் இந்த ஜின் கதைகளில் நடந்தேறியிருக்கின்றன.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...