Tuesday, August 3, 2021

தொலைதலின் இனிமை – 39 (வரலாற்றெழுதியலில் மூலக்கூற்றுச் சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல் துறைகளை உபயோகித்தல்: ஓமானிய ஆடுகளின் ஆய்வுகளை முன்வைத்து – ii):

- ஏ.எம். றியாஸ் அகமட்

இழைமணி டீஎன்ஏ (mtDNA) பல்வகைமை பரிசோதனைகள்:

ஓமானின் காணப்படும் ஐந்து சுதேசிய ஆட்டு வர்க்கங்களின் (ஜபல் அக்தர்,பற்றினா, டோபார், அஸ்-ஷர்க்கியா, முசான்தம் ஆட்டு வர்க்கங்கள்) உண்மையான மூதாதையர் யார்? வரலாற்றுக் காலங்களில் எந்தப் பாதைகளினூடாக (எந்த நாடுகளினூடாகவும், எந்த தரைவழி, கடல்வழி பாதைகளினூடாகவும்) கொண்டு வரப்பட்டு ஓமானில் வீட்டுவளர்ப்பு பிராணிகளாக அறிமுகப்படுத்தப்பட்டன? என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாக காணப்படுகின்றன. இதற்காக இந்த ஆடுகளில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அதுவும் இந்த ஆடுகளின் (mtDNA) பல்வகைமைகளில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் உலகில் ஆடுகளின் (mtDNA) பல்வகைமைகளில் செய்யப்பட்ட ஆய்வுகள், வீட்டு வளர்ப்பு ஆடுகளில் தங்களுக்கிடையே அதிக வித்தியாசங்களைக் கொண்ட A,B,C,D,F,G என்ற ஆறு வகையான (mtDNA) ஹெப்லோக் குழுக்கள் காணப்படுவதாகச் குறிப்பிடுகின்றன. இந்த (mtDNA) ஹெப்லோகுழுக்களில் A ஹெப்லோவகை உலகில் 90 சதவீதமான ஆடுகளில் காணப்படுகின்றது. மற்றும் A,B,C,D ஹெப்லோவகைகள் (91000 9000) வருடங்களுக்கு முன் மத்திய பெரியொலித்திக், எபிபெரியொலித்திக் காலங்களில் உருவானதாக அல்லது மாறியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது 10000 வருடங்களுக்கு முன்னரே வான்வகை ஆடுகள் வீட்டுவளர்ப்பு பிராணிகளாக வளர்க்கப்படத் தொடங்கியிருக்கின்றன.

சுதேசிய ஆடுகளில் செய்த பரிசோதனைகள்:

ஓமானிலுள்ள ஐந்து மாகாணங்களிலுள்ள பண்ணைகளிலுள்ள சுதேசிய ஆடுகளின் (ஜபல் அக்தர், பற்றினா, டோபார், அஸ்-ஷர்க்கியா, முசான்தம் ஆட்டு வர்க்கங்கள்) தசைமாதிரிகள் பண்ணையாளர்களின் அனுமதியுடன் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

ஐந்து வர்க்கங்களிலும், இந்த வர்க்கங்களிலுள்ள பரம்பரையலகு பல்வகைமை, இழைமணி ஹெப்லோகுழுக்களும், வெவ்வேறு அறியப்பட்ட வீட்டுவளர்ப்பு குடித்தொகையின் தாய்வழி இன்றரொக்றசன் களும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அத்துடன் அந்த ஆடுகளின் தோல்களிலிருந்து பெறப்பட்ட டீஎன்ஏ பிரித்தெடுப்புக்கள் பீசிஆர் (PCR = Polymerase chain reaction) பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனைகளிலிருந்து பெற்ற தொடரிகளை (sequences) வைத்து கணவரலாற்று மரமும் (Phylogenetic tree) வரையப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கிடையேயான தூரங்களையும், வரலாற்றில் மக்கள் குடித்தொகை இடம்பெயர்ந்ததற்கான அறிகுறிகளையும் ஆராய்ந்தார்கள். இதற்கு நிறைய சொப்ற்வெயார்கள் பயன்படுத்தப்பட்டன.

மூலக்கூற்று சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல் ஆதாரங்கள்:

இந்த ஆய்வுகளில் A, B, G என்ற மூன்று ஹெப்லொகுழுக்கள் அடையாளம் காணப்பட்டன. ஹெப்லோகுழு A ஆட்சியானதாகவும், 80 சதவீதமாகவும், ஹெப்லோகுழு B, G என்பன 6 சதவீதம், 14 சதவீதம் என முறையே காயப்பட்டன எனகணவரலாற்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.


தற்போதைய
ஆய்வுகளின் முடிவுகள் தென்கிழக்கு அறேபியதீபகற்பத்தின்ஆடுகளின் குடித்தொகையின் பரம்பரையியல் வரலாறுகளை தெளிவாகத் தெரிவித்தன. பரிசோதனை செய்யப்பட்ட ஐந்து ஆட்டு வர்க்கங்களும் தங்களுக்கிடையே அதிக வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. இதே போல வேறு வித்தியசங்கள் கொண்ட ஆட்டு வர்க்கங்கள் ஆபிரிக்கா, ஆசியா, சவுதி அறேபியா போன்ற அறேபிய தீப கற்ப நாடுகளிலும் காணப்பட்டிருக்கின்றன. கணவரலாற்று மரத்தில் இந்த ஐந்து ஆட்டு குடித்தொகைகளும் (ஜபல் அக்தர், பற்றினா, டோபார், அஸ்-ஷர்க்கியா, முசான்தம் ஆட்டு வர்க்கங்கள்), கப்றா ஏகாக்றஸ் என்ற வான்வகை ஆடுகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளதாக அதாவது புராதன ஹெப்லோக்குழுக்களை கொண்டதாக அடையாளம் காணப்பட்டன.

பெசோர் (கப்றா ஏகாக்றஸ்), மார்கொர் (கப்றா பெல்கொனெரி), இபெக்ஸ் (கப்றா இபெக்ஸ்) போன்ற மூன்று கப்றா வான் இனங்களும் (wild genus), கப்றா ஹிறஸ் வீட்டுவளர்ப்பு ஆடுகளின் நெருங்கிய உறவினர்களாகும். இந்த மூன்று வான் இனங்களும், அவைகள் இங்கிருந்து உலகின் வேறுநாடுகளுக்கு பரவுவதற்கு முன்பாக அல்லது காட்டுவளர் விலங்காக்கப்படுவதற்கு (பெரலைசேசன்) முன்பாக இந்த வீட்டுவளர்ப்பு ஆடுகளின் பரம்பரையலகு குளத்திற்கு (ஜீன் பூல்) தங்களது பங்களிப்புக்களைச் செய்துள்ளன. தற்போதைய ஆய்வுகள் பெசோர் எனப்படுகின்ற (கப்றா ஏகாக்றஸ்) என்ற வான்வகை ஆடுகள்தான் வீட்டுவளர்ப்பு ஆடுகளின் மூதாதையர்கள் எனத் தெரிவிக்கின்றன. ஏனெனில் பெசோர் எனப்படுகின்ற (கப்றா ஏகாக்றஸ்) என்ற இந்த ஆடுகளின் குடித்தொகையில் எல்லா 'வீட்டுவளர்ப்பு' கெப்லோகுழுக்களும் காணப்படுகின்றன.

 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...