Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை - 17 (பெற்றோலிய சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன நாடு):

-ஏ.எம். றியாஸ் அகமட்


பெற்றோலிய சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட,பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்ட அரசாங்கம், தங்களுடைய நாடு, நவீன நாடு என்று அறிவித்ததுடன், அவர்களது பொருளாதார நடவடிக்கைகளை அல்லது கவனத்தை, அகழ்ந்தெடுக்கும் வளங்களின் மீதே செலுத்தத் தொடங்கியது. மேலும் வேலைவாய்ப்பை அதிகரித்தல், முதலீடுகளை ஊக்குவித்தல், அரசுக்கு சொந்தமான பல துறைகளில், தனியார்மயமாக்கலை படிப்படியாக அதிகரித்தல் போன்ற பல தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டது. இது ஓமானியர்களின் வாழ்வில் பல வழிகளில் தாக்கத்தைச் செலுத்தியது.

இந்த நவீனத்துவத்திற்காக, அரசாங்கம் 1980களின் ஆரம்பத்தில் ஓமானின் தலைநகரான மஸ்கெட்டை சுற்றி, புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியது. இதன் காரணமாக கிராமப்புற விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களையும், பண்ணைகளையும் கைவிட்டு, தலை நகரின் புதிய பொருளாதாரத்தில் தங்களுக்கு மிக முக்கிய பாத்திரம் கிடைக்கும் என்று நம்பி அங்கு குடும்பங்களுடன் இடம்பெயருகின்றார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கிய காரணம் அவர்களது பாரம்பரிய விவசாயத்திற்கு இதுவரை வழங்கி வந்த மானியங்களையும், உதவிகளையும் அரசாங்கம் நிறுத்தத் தொடங்கியதாகும்.

நவீன ஓமானுக்கு முந்திய ஓமானில், குர்ஆனும், அறபு மொழியும், அடிப்படைக் கணிதமும்தான் கல்வி என்றிருந்த கல்விமுறையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பழைய ஓமானின் மார்க்கக் கல்வியிலிருந்து, நவீன உலகின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளுவதற்கு ஏற்ற கல்வி முறை நவீன ஓமானில் புகுத்தப்படுகின்றது. இந்தக் கல்வியில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் முன்னுரிமையாக்கப்பட்டு, தொழில் முறைக் கல்விகளான விவசாயக் கல்வியும், பாரம்பரிய சூழலியல் அறிவும், அதன் பிரயோகங்களும், விளிம்புநிலைக்குள்ளாக்கப்படுகின்றன அல்லது நீக்கப்படுகின்றன.

உலக வர்த்தக தாபனமும், சுதந்திர சந்தை தோழமை பொருளாதாரமும் :

உலக வர்த்தக தாபனம் (World Trade Organization (WTO) கூறும் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, நவீன ஓமானானது, தனது பொருளாதாரத்தை சுதந்திர சந்தை தோழமை பொருளாதாரமாகவும் மாற்றுகின்றது. இதன் காரணமாக அதிகளவான உணவுப் பொருட்களை ஓமான் இறக்குமதி செய்கின்றது. இந்தப் பொருட்கள் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுடன் கடும் போட்டி போடுகின்றன. ஒரு நிலையில் இந்தத் தாபனத்தின் ஆலோசனையின் பேரில், விவசாயிகளுக்கான விவசாய மானியங்களை நவீன ஓமான் அரசு குறைக்கின்றது.

இரண்டாயிரம் ஆண்டு, நவீன ஓமான் அரசாங்கம் உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்து கொண்டதன் பின்பு கிராமப்புற விவசாயிகள் மிகவும் சிக்கலான புதிய ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கத் தொடங்குகின்றார்கள். தாங்கள் உற்பத்தி செய்யும், அதே உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் குறைந்த விலைகளில் கிடைத்ததைத் தொடர்ந்து, தங்களது கிராமிய பாரம்பரிய விவசாயம் ஆட்டம் காணுவதை உணரத் தொடங்கினார்கள். இதன் காரணமாக விவசாயிகள், விற்பனையின்மையால் தேங்கிய உணவுப் பொருட்களை சேமிப்பதற்கு இரசாயனப் பொருட்களையும், வேறு பொருட்களையும் வாங்க வேண்டிய நிலைமை உருவானது. இது மேலும் உற்பத்திச் செலவை அதிகரித்து, நட்டத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. உலக வர்த்த நிறுவனமானது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஒரு உறுதியான சந்தையை நவீன ஓமானில் உருவாக்கிக் கொடுத்தது. அதன் காரணமாக ஓமானின் கடந்த காலத்தின் உணவில் தன்னிறைவு என்றிருந்த பெருமித நிலைமை இல்லாமற் போலானது அல்லது கனவாகிப் போனது.

 





No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...