Monday, August 2, 2021

தொலைதலின் இனிமை – 33 (மஜ்லிஷ் அல்-ஜின் குகை):

ஏ.எம். றியாஸ் அகமட்

மஜ்லிஷ் அல்-ஜின் குகை ஓமானின் வடகிழக்கு கரையோரத்தில், தலைநகர்மஸ்கட்டிலிருந்து 160 கிலோமீற்றர் தூரத்தில், மஸ்கட் மாகாணத்தில், குறாயத் மாவட்டத்தில், பின்ஸ் என்ற கிராமத்திற்கு மேற்கே 12 கிலோமீற்றர் தொலைவில், சல்மா பீடபூமியின் வடகரையில், கடல் மட்டத்திலிருந்து 1490 மீற்றர் உயரத்தில் காணப்படுகின்றது. இந்தக் குகைக்கு பின்ஸ் கிராமத்தின் வழியாகவும் அல்லது தெற்கு அஷ் ஷர்க்கிய்யா மகாணத்தின் சுர் மாவட்டத்திலுள்ள, ரிவி என்ற கிராமத்தினூடாகவும் சென்றடையலாம். இந்தக் குகை பல ஆயிரமாண்டு காலத்திற்கு முன்னர் மறைந்துபோன இயற்கை உயிரிகளை சேகரித்து வைத்திருக்கும் சேமிப்பகமாகவும், மிகவும் பாதிப்படையக்கூடிய மென்மையான சூழற்றொகுதிகளைக் கொண்டமைந்தும் காணப்படுகின்றது.

மஜ்லிஷ் அல்-ஜின் குகைக்கு கொஷிலத் மகன்தலி என்ற உள்ளுர் பெயர் மிக நீண்ட காலமாக இருந்து வந்திருக்கின்றது. சல்மா பீடபூமியில் உள்ள இந்தக் குகையின் மூன்று இறங்கு குழிகளைப்பற்றி புராதன காலத்திலிருந்தே மக்கள் அறிந்திருக்கின்றார்கள். உள்ளுர் அறபியில் கந்திலா என்பது, ஆடுகள் அடைக்கலம் புகும் அல்லது ஓய்வெடுக்கும் இடத்தைக் குறிக்கின்றது.

பீடபூமியின் நிலமட்டத்திலிருந்து 40 மீற்றரின் கீழ் இந்தக் குகை தொடங்குகின்றது. இது 58000 சதுர மீற்றர் (624000 சதுர அடி) பரப்பையும், 340 மீற்றர் நீளம், 228 மீற்றறர் அகலம், 140 மீற்றர் உயரம் கொண்டு, 4 மில்லியன் கன மீற்றர் கனவளவையும் கொண்டு காணப்படுகின்றது. இதன் பரப்பு 11 பெரிய உதைபந்தாட்ட மைதானங்களுக்கு ஈடானது. அத்துடன் இதன் பரப்பிற்குள் 12 பெரிய 747 எஸ் ரக போயிங் விமானங்களையும் நிறுத்தி வைக்கலாம். இது 140 மீற்றர் உயரமாகையால், 40 மாடிக் கட்டடத்தை அல்லது எகிப்தின் பெரிய பிரமிட்டை இந்தக் குகைக்குள் நிறுத்தி வைக்கலாம். குகையானது கும்மட்ட வடிவில் காணப்படவதனால் அதிக கனவளவை எடுத்துக்கொள்கின்றது. குகையின் உளட்படக்க வெப்பநிலை 17 தொடக்கம் 18 பாகை செல்சியசாகும்.

குகைக்குள் இறங்குவதற்கு மூன்று வழிகள் காணப்படுகின்றன. வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்கின்றன.

1) கொஷிலத் மகன்தலி - இது முதலாவது இறங்கு குழி எனப்படுகின்றது. 20 மீற்றர் அகலமும், 118 மீற்றர் ஆழமும் கொண்டது.

2) கொஷிலத் பெய்ன் அல்-ஹியூல் - நட்சத்திர இறங்கு குழி எனப்படுகின்றது. 15 மீற்றர் அகலமும், 139.6 மீற்றர் ஆழமும் கொண்டது. தெற்குப் பகுதியில் காணப்படுகின்றது.

3) கொஷிலத் மின்கொத் - செரில் இறங்கு குழி எனப்படுகின்றது. 2 மீற்றர் அகலமும், 158 மீற்றர் ஆழமும் கொண்டது.

இந்த இறங்கு குழிகளின் கீழ், பிரமாண்டமான குப்பை மேடுகள், தவறுதலாகவிழுந்த ஆடுகள், மற்றைய விலங்குகளினால் உருவாக்கப்பட்ட எலும்புகள், மற்றும் வேறு குப்பைகளால் உருவானது. இந்தக் குகைக்கு முன்னொரு காலத்தில் அடியில் வெளியேறுவதற்கு வழிகள் இருந்ததாகும், பின்னர் அந்த வழிகள் குப்பை கூழங்களினால் அடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

40 தொடக்கம் 50 மில்லியன் வருடங்களுக்கு முன்னால், வெதுவெதுப்பான கடலின் அடியிலிருந்து இந்தக் குகை தோன்றியதாக கருதப்படுகின்றது. இதன் காரணமாக இங்கு காணப்படும் சுண்ணக்கற்கள், நம்மலைற்ஸ், கெல்லற்றோபொட்ஸ், பைவால்வ்ஸ், கொறல்ஸ், எகைனொடெர்ம் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் உயிர்ச்சுவடுகளைக் கொண்டு இந்தக் குகை காணப்படுகின்றன.

குகைச்சுவரின் கீழ் இருந்த நீரில் காபனிரொட்சைட்டு வாயு கரைந்து, செறிவு குறைந்த காபனிக்கமிலமாக மாறி, சுண்ணக்கற்களை மெல்ல மெல்ல கரைத்ததனாலும், கூரைப் பகுதியில் களிமண் செறிவு அதிகமாக இருந்த காரணத்தால், அதனைக் கரைக்க முடியாமல் போனதாலும் இந்தப் பாரிய குகை தோன்றியிருக்கின்றது.

உலகத்திலே இரண்டாவது, மிகப் பெரிய குகையான இந்தக் குகையில் மட்டுமே இயற்கையான ஒளியமைப்பு காணப்படுகின்றது. அழகான இயற்கையான ஒளியமைப்பு இந்தக் குகைக்கு மிகச் சிறப்பியல்பானதாகும். ஒளியானது, இறங்கு துளையூடாக பயணித்து, கூரையில் பிரகாசமான ஒளிக்கற்றைகளாக விழுகின்றன. அத்துடன் குகைத் தரையில் விழும் இந்த ஒளிப்பொட்டுக்கள், தரைப் பகுதியிலிருந்து, கூரை அதிக உயரத்தில் இருப்பதன் காரணமாக, மிக வேகமாக தரையில் நகர்ந்து, சூரியன் மறையும்போது, ஒளிப்பொட்டுக்களும் மறைந்து போகின்றன. அடுத்த குறுகிய நேரத்திற்குள் (இரவில்) சந்திரன் ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி ஒளிப்பொட்டுக்களை உருவாக்கி குகையை ஒளிர வைக்கின்றது. இந்த ஒளிப் பொட்டுக்களும், தரையில் வேகமாக பிரயாணம் செய்து சந்திரன் மறையும்போது அவையும் மறைகின்றன. இதன் காரணமாக இரவும், பகலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் தரைக்கீழ் புளொரெசென்ட் மின்குமிழ் போலவே காணப்படுகின்றது. இந்த அதிசயமான ஒளியமைப்பும், ஒளிப்பொட்டுக்களின் வேகமான பயணமும் இந்தக் குகையின் மர்ம, அசுரத்தன்மை உணர்வுகளை அதிகரிப்பதுடன், அதன் அழகையும் அதிகரிக்கின்றன.

2002ம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த குகை ஆய்வாளர்கள் இந்தக் குகைக்கு விஜயம் செய்து, 2003ம் ஆண்டு, ஏப்ரல் மாத நெஷனல் ஜியோகிறபிக் சஞ்சிகையில் ஒரு கட்டுரையை வெளியிடுகின்றார்கள், அதன் பின்னர் இந்தக் குகை உலகம் முழுக்க பிரபலம் ஆகின்றது. அரசாங்கம் கயிறு மூலமும், பரசூட் மூலமம் இறங்குவதற்கு உல்லாசப் பிரயாணிகளுக்கு அனுமதி கொடுத்திருந்ததன் காரணமாக, பாதிக்கப்படக்கூடிய மிக அதிக வாய்ப்பிலிருந்த மிக மென்மையான இதன் சூழற்றொகுதி பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக அரசாங்கம் இந்த குகைக்குள் செல்வதைத் தடை செய்திருக்கின்றது. தற்போது இந்த குகையின் சூழற்றொகுதிகளுக்கு பாதிப்பில்லாதவாறு எவ்வாறு பார்வையாளர்களை குகையை பார்வையிட அனுமதிக்கலாம் என்ற ஆய்வில் நிபுணர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இந்தத் துளைகளைப் பற்றி மிகப் புராதன காலங்களிலிருந்தே மக்கள் அறிந்துவைத்திருக்கின்றார்கள். மிகப் பிரமாண்டமான அரைவட்டொழுங்கு மேடையமைப்பைக் கொண்ட இந்தக் குகையில் ஜின்கள் வாழுவதாகவும், கூட்டங்களை நடாத்துவதாகவும் பல்லாயிரக்கணக்கா வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் கிராமத்தை அண்டிய மக்கள், இந்த மூன்று இறங்கு துளைகளிலிருந்தும், பயங்கரமான சத்தங்கள் வருவதை தொடர்ச்சியாகக் கேட்டிருக்கின்றார்கள். குகைக்குள் பல்வேறு உருவங்களை கண்டதாகவும் சொல்லியிருக்கின்றார்கள். இந்தக் குகை நீண்ட நேரம் நிற்பதற்கு பாதகாப்பானதல்ல, ஏனெனில் நேரத்திற்கு நேரம், சிறிய, பெரிய துண்டுகள் கூரைகளிலிருந்து பெயர்ந்து விழுந்துகொண்டேயிருக்கும்.

ஒப்பீட்டளவில் சிறிய முப்பது சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள, வறண்டசல்மா பீடபூமியில் காணப்படும் இந்த 11.5 கிலோமீற்றர் நீளமான சல்மா குகைத் தொகுதியும், மஜ்லிஸ் அல்-ஜின் குகையின் பிரமாண்டமான அறையும், அதன் இறங்குதுளைகளும், பிரமாண்டமான அரைவட்டொழுங்கு மேடையமைப்பும் (அம்பிதியேட்டர்) இன்னும் விளக்கங்களை வேண்டி நிற்கும் புரியாத மர்மங்களாகவே உள்ளன.

 






No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...