Tuesday, August 3, 2021

தொலைதலின் இனிமை – 40 (வரலாற்றெழுதியலில் மூலக்கூற்றுச் சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல் துறைகளை உபயோகித்தல்: ஓமானிய ஆடுகளின் ஆய்வுகளை முன்வைத்து – iii):

ஏ.எம். றியாஸ் அகமட்

பரம்பரையியல், தொல்பொருளியல், வரலாற்றாதாரங்கள்:

வரலாற்றுக் காலங்களில் மனிதர்களும், விலங்குகளும் அரேபியதீபகர்ப்பத்திலிருந்து இடம்பெயர்ந்ததை புரிந்துகொள்வதற்கு ஓமானின் பல தரப்பட்ட சிக்கலான சுற்றுச்சூழல்கள் பற்றிய அறிதல்கள் மிகமுக்கியமான அம்சங்களாக காணப்படுகின்றன. வரலாற்றின் ஆரம்ப காலங்களில் தென்கிழக்கு அரேபியாவில் தற்போதைய ஓமானின் அமைவிடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பெர்ட்டைல் கிரசன்ட் எனப்படும் மத்திய கிழக்கு அறபு நாடுகள், இந்து வெளி, வடகிழக்கு ஆபிரிக்க கரையோரங்கள் போன்ற கேந்திரங்களுக்கு மத்தியிலும் ஓமானின் கரையோரங்கள் முக்கிய வர்த்தக கேந்திர நிலையங்களாக காணப்பட்டன. தென்பகுதி ஓமான் சாம்பிராணி காரணமாக முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. இதன் காரணமாக அறேபிய ஒட்டகம் அல்லது dromedary ஒட்டகம் வீட்டுவளர்ப்பு பிராணியாக இந்தக் காலப்பகுதியிலேயே ஓமானுக்கும், யெமனுக்கும் இடைப்பட்ட தென்பகுதிகளில் உருவாகி இருக்க வேண்டுமெனவும் கருதப்படுகின்றது.

பெரும்பாலான ஓமான் வாதி எனப்படும் ஆற்றுப்பள்ளத்தாக்குகள், குகைகள் போன்றவைகளின் சுவர்களிலுள்ள ஓவியங்களில் இபெக்ஸ், கெசல், கழுதை, ஒளறக் மாடு, தீக்கோழி போன்றவைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் ஜபல் அக்தர் மலைகளில் கி.மு 7000 தொடக்கம் 6000 ஆண்டுகள் வரை வேட்டையாடி வாழ்ந்த மனிதக் குழுக்கள் வரைந்தவையாகும். இதே போன்ற உருவங்கள் அறேபிய தீபகற்பத்தின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன.

இந்த ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்ட மூன்று ஹெப்லொகுழுக்கள் , பீ,ஜீ போன்றவைகளில், ஹெப்லொகுழு யானது ஆட்சியான வீட்டுவளரப்பு ஆடுகளிலும், பீயானது பாக்கிஸ்தான். இந்திய தென்கிழக்கு ஆசியா (பர்மா, கம்போடியா), துணை சஹாறன் ஆபிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலுள்ள ஆடுகளிலும், ஹெப்லொகுழுக ஜீ யானது சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், துருக்கி, வடகிழக்கு ஆபிரிக்க நாடுகள் போன்றவைகளிலும் காணப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக புராதன காலங்களில் ஓமான் ஆடுகள் வர்த்தகம் செய்யப்பட்டதும், மனிதர்கள் இந்த நாடுகளுக்கு இடையே தங்களது ஆடுகளுடன் இடம் பெயர்ந்ததுமே இந்த ஹெப்லோகுழுக்கள் அங்குள்ள ஆடுகளில் காணப்பட்டதற்கான காரணங்களாகும்.

சமீபத்திய சில ஆய்வுகள் ஓமானின் கப்றா ஏகாக்றஸ் வான்வகை ஆட்டில் காணப்பட்ட இழைமணி டீஎன்ஏ ஹெப்லொகுழுக்கள் ஈரானின் . ஏகாக்றஸ் வான்வகை ஆட்டிலிருந்தே இனங்கலப்பின் மூலம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மகாணங்களின் மத்திய ஈரானிய பீடபூமியிலுள்ள சக்றொஸ் மலையின் ஒரு பகுதிக்கு அருகிலேயே ஓமான் அமைந்துள்ளது.

இந்த ஆடுகளில் செய்யப்பட்ட பரம்பரையியல் ஆய்வுகள், அறேபிய தீபகற்பத்தில் மிகவும் புராதன காலத்தில் வாழ்ந்த வாழ்ந்த அறேபியர்களின் வரலாறுபற்றியும் மறைமுகமாக பல தகவல்களைத் தந்திருக்கின்றது. அறேபியர்கள் மிகப் புராதன காலம்தொட்டே, தங்களது பக்கத்திலுள்ள அயல் கிழக்கு நாடுகள், மெசொப்பத்தேமியா, எகிப்து, மற்றும் மத்தியதரைக்கடல் நாடுகள், கிழக்கு ஆபிரிக்க, இந்திய உப கண்ட நாடுகளிலுள்ள மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். இந்த நெருங்கிய தொடர்புகள் தென் அறேபியாவின் சாம்பிராணி, myrrh, செம்பு, விலங்குகள் போன்றவைகளின் வர்த்தக தொடர்பு காரணமாகவே ஏற்பட்டன.

ஓமானிய ஆடுகளின் பரம்பரையியல் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு, மற்றைய மக்களுடனான இந்தப் பிராந்தியத்தின் கலாச்சார, குடித்தொகை தொடர்புகள் பற்றிய அறிதல்கள் மிக முக்கியமானவையாகும். நியோலித்திக் ஆதாரங்களான (மட்பாண்டங்கள், பீங்கான்) ஓமான் தீபகற்பத்திற்கும் (மகான், மெலுக்கா அரசாட்சிகளின்போது), மெசெப்பத்தோமியாவுக்கும் (ஈராக்) 10000 வருடங்களுக்கு முன்னருள்ள வரலாற்றுத் தொடர்பைத் தெரிவிக்கின்றன. இறந்தவர்களை அடக்கும் புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட பலூச்சி, ஈரானியன் சாயலுள்ள மட்பாண்டங்களும், இந்து வெளியைச் சேர்ந்த ஹரப்பன் மணிகளும், புராதன காலத்தில் ஓமானுக்கும் ஈரான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்குமான தொடர்புகளைக் குறிக்கின்றன.

கி. மு. இரண்டாவது மில்லனிய ஆண்டுகளில் மகான் அரசாட்சியில் ஓமானின்சொஹார் பிரசேத்தில், செம்பு தோண்டியெடுக்கப்பட்டு டில்மன் கலாச்சாரத்தினூடாக, மெசெபத்தேசமியாவின் உர் நகருக்கு வர்த்தக நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. நிஸ்வாவின் வெங்கல ஆயுதங்கள் கூட ஓமானுக்கு ஈரானுடன் உள்ள தொடர்பபைத் தெரிவிக்கின்றன. ஓமானின் கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்களிலள்ள உபகரணங்களும், ஆயுதங்களும் தென்னாபிரிக்கா, லெபனான், பலஸ்தீன், இஸ்ரேல், சிரியா, இந்தியா போன்ற நாடுகளுடனான தொடர்புகளையும் காட்டுகின்றன. அத்துடன் தற்காலத்தில் மூலக்கூற்று தொற்றுநோயியல், 'வை' நிறமூர்த்தங்கள், இழைமணி டீஎன்ஏ க்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆய்வுகள் வரலாறு நெடுக, அயல்நாடுகளிலும், மற்ற நாடுகளிலுமுள்ள மக்கள் குடித்தொகைகள் ஓமானுக்கு வந்துகொண்டும், சென்றுகொண்டுமிருந்திருக்கின்றார்கள் என்றே தெரிவிக்கின்றன.

பாரம்பரிய மந்தை வளர்ப்பு முறைகள்:

ஓமானிய ஆடுகள் இரண்டு பாரம்பரிய மந்தை வளர்ப்பு முறைகளில் கிராமப்புறங்களில் புராதன காலங்களிலிருந்து வளர்க்கப்பட்டன. ஒன்று பதாவி (நாடோடி) மற்றது ஜபலி அல்லது ஷவாவி (மலைகளில் ஆட்டுமந்தை வளர்ப்பு) இது பகுதியான நாடோடி மந்தை வளர்ப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. மந்தை வளர்ப்பும், அதன் செல்கின்ற திசையும் கிடைக்கக்கூடிய உணவுகளின் அளவு, உணவு கிடைக்கக்கூடிய தன்மை. காலநிலை போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படும்.

இந்த வகையான மந்தை வளர்ப்பு முறையானது ஏனைய நாட்டு, பிரதேச ஆடுகளின் பரம்பரையலகுகள் உள்நாட்டு ஆடுகளின் பரம்பரையலுகுக்குள் கலந்துவிடக்கூடிய சாத்தியத்தன்மையைக் கொண்டுள்ளன. ஆதி காலத்தில் (ஏன் இப்போது கூட) ஆடுகள் பணத்துக்குப் பதிலாக உபயோகிக்கப்பட்டதனால், அவைகள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பலபிரதேசங்களின் குடித்தொகைகளுடன் இனப்பெருக்கத்தின் மூலம் பரம்பரையலகைக் கலந்துவிட்டிருக்கின்றன.

அறேபிய வளைகுடாவிலிருந்து சுமார் 1000 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஈரானின் சக்றொஸ் மலைத் தொடர் பிரதேசத்தை மையமாகக் கொண்டே 4119 வருடங்களுக்கு முன், ஓமானிய ஆடுகளின் முன்னோர்கள் பரவியிருக்கின்றனர். இதனை விட ஹெப்லோகுழு A 5389 வருடங்களுக்கு முன்பிருந்தும், ஹெப்லோகுழு G 6353 வருடங்களுக்கு முன்பிருந்தும் பரவியிருக்கின்றன என்று ஒரு ஆய்வும், ஹெப்லோகுழு A, ஹெப்லோகுழு G என்பன 12800 வருடங்களுக்கு முன், 9000 வருடங்களுக்கு முன்பிருந்தும் முறையே தோன்றியிருக்கின்றன என ஒரு ஆய்வும் தெரிவிக்கின்றன. இதிலிருந்து ஆடுகள் 10000 வருடங்களுக்கு முன்பிருந்தே வீட்டு வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கப்படத் தொடங்கியிருக்கின்றன என்பது உறுதியாகின்றது.

மேலும் தொல்பொருளியல் ஆதாரங்கள் ஓமானில் விலங்கு வளர்ப்பு கி.மு. 7000 தொடக்கம் 6500 வருடங்களுக்கு முன்னரேயே தோன்றியிருந்தன என்றும், ஆடுகள் நியொலித்திக் காலமான கி.மு. 5500 தொடக்கம் 3200 வருடங்களுக்கு முன்னரேயே வீட்டுவளர்ப்பு பிராணிகளாக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கின்றன. இதற்கு ஓமானிய வீட்டுவளர்ப்பு ஆடுகளின் டீஎன்ஏயில் செய்யப்பட்ட ஆய்வுகளும் இந்த வரலாற்றாதாரத்தை உறுதி செய்கின்றன.

எனவே வரலாற்றெழுதியலில் மூலக்கூற்றுச் சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல் போன்ற பல உயிரியல் துறைகள் மிக முக்கிய பங்காற்றக்கூடியனவையாக இருக்கின்றன.

 













No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...