Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை - 23 (ஜின்கள்):

ஏ.எம் றியாஸ் அகமட்

சல்மா என்னும் வீரமுள்ள அழகிய பெண்ணின் கதையைச்தெரிந்துகொள்வதற்கு முன், இங்கிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் நாங்கள் செல்கின்ற பாதையில் இருக்கும், 50 மாடிக் கட்டிடங்கள் உயரம் கொண்ட, நிலத்தின் மேற் பகுதியிலிருந்து குகைக்குள் கயிற்றினாலோ அல்லது பரசூட் மூலமோ மட்டும் இறங்கக்கூடிய, சுமார் 15 போயிங் 747 விமானத்தை இலகுவாக நிறுத்தி வைக்கும் பரப்புக்கொண்ட நிலத்தின் கீழுள்ள, மஜ்லிஸ் அல் ஜின் என்னும் உலகின் இரண்டாவது பெரிய குகையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். மஜ்லிஸ் அல்-ஜின் என்றால் ஜின்கள் கூட்டம் நடாத்தும் இடம். எனவே சல்மாவினதும், குகைகளினதும் கதைகளுக்கு முன்னால், நீங்கள் ஜின்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் மனிதர்களை மண்ணினால் படைப்பதற்கு பல இலட்சம் வருடங்களுக்கு முன்னர், மலக்குகள் என்னும் வானவர்களை ஒளியினாலும், ஜின்களை நெருப்பினாலும் படைத்தான் என்பதும், இவைகளில் மலக்குகள் இறைவன் ஏவிய நன்மையான விடயங்களை மட்டுமே செய்வார்கள் என்பதும், ஜின்கள் மனிதர்களைப்போல நன்மையான, தீமையான விடயங்கள் இரண்டையும் செய்வார்கள் என்பதும் இஸ்லாமியர்களினதும், இஸ்லாத்தைப் பின்பற்றும் ஓமானியர்களதும் நம்பிக்கையாகும்.

ஜின் என்ற அறபுப் பதத்திற்கு மறைவானது அல்லது கண்ணுக்குப்புலப்படாதது என்று பொருள். அல்-குர்ஆன் பாம்பை அறபு மொழியில் ஜான் என்கின்றது. நமது பார்வையிலிருந்து மிக வேகமாக மறையக்கூடிய ஆற்றல் அதற்கு இருப்பதனாலேயே, அவ்வாறு அழைக்கின்றது.

ஜின்களில் நல்லவர்களும், தீயவர்களும், முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்று அல்-குர்ஆன் கூறுகின்றது. மனிதர்களை மனிதர்கள் வழிகெடுப்பதுபோல, ஜின்களிலும் மனிதர்களை வழிகெடுப்பவர்கள் இருக்கின்றார்கள்.

இஸ்லாமிய அறிவியல் மரபில் கிடைக்கும் தகவல்களின்படி, ஜின்களில் பல வகைகள் காணப்படுகின்றன. ஒரு பாகுபாடானது ஜின்களை,

1) இறக்கைகள் கொண்டு ஆகாயத்தில் சஞ்சரிப்பவை,

2) கண்ணுக்குப் புலப்படாமல் பூமியில் வாழ்பவை,

3) மனிதன், பாம்பு, தேள், ஒட்டகம், மாடு, ஆடு, கழுதை, குதிரை, குருவிகள், பூனை, நாய் உருவில் இருப்பவை,

4) ஷரிஅத் என்னும் இஸ்லாமிய சட்டத்தை பேணி நடப்பவை,

என்றும்,

அறிஞர்களிடம் காணப்படும் இன்னுமொரு வகையான பாகுபாடானது ஜின்களை,

1) ஆமிர் - மனிதர்களுடன் சேர்ந்த வாழ்பவை,

2) அர்வாஹ் எனப்படும் ஆவிகள் - சிறுபிள்ளைகளுடன் சேட்டை புரிபவை,

3) ஷைத்தான் - கீழ்த்தரமான, இழிவான செயல்களைச் செய்பவை,

4) இப்ரீத் - அதிக ஆற்றலும், சக்தியுமுள்ளவை,

என்றும் பிரிக்கின்றன.

ஜின்களில் இதனை விட இன்னும் பல வகைகளும், அதன் உருவங்களும், அதன்தொழில்களும் சம்பந்தமாக பல பனுவல்களில் தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஜின்களை அவைகளின் சொந்த உருவத்தில் பார்க்கும் வாய்ப்பை இறைவன் மனிதர்களுக்கு ஏற்படுத்தவில்லை. அவைகளால் மனிதர்களினதும், விலங்குகளினதும், சில படைப்புக்களின் தோற்றங்களிலேயே காட்சியளிக்க முடியும். அத்துடன் மனிதர்களில் ஊசலாட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்த ஜின்களால் முடியும். அவ்வாறான சதந்தர்ப்பங்களில் அவைகளை தைரியமாக எதிர்கொள்ளவதன் மூலம் ஊசலாட்டத்தையும், பயத்தையும் இல்லாமற் செய்துகொள்ள முடியும் என்பதும் நம்பிக்கை.

மனிதர்களைப் போன்று ஜின்களும் உண்டு, குடித்து, திருமணம் செய்து, சந்ததிகளை விருத்தி செய்கின்றன என்றும், அவர்களுக்கு கட்டமைப்பும், கலாச்சாரமும் உண்டு என்றும் அவர்கள் பல்வேறு சமயங்களையும் பின்பற்றுகின்றார்கள் என்றும், அவைகளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றுவர்களும், பின்பற்றாது மாறுசெய்கின்ற முஸ்லிமல்லாவர்களும் இருக்கிறார்கள் என்றும், முகம்மது நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு, ஜின்களில் நபிகளும், தூதுவர்களும் இருந்திருக்கின்றார்கள் என்றும், இஸ்லாமிய பனுவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜின்கள் இறைவனின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட எலும்புகள், காய்ந்த கெட்டியான சாணம் போன்றவைகளை உணவாக கொள்கின்றன.

ஜின்கள் இருட்டான இடங்கள், பாழடைந்த இடங்கள், பராமரிப்பில்லாதமைதானங்கள், பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், மலைகள், ஓடைகள், மையவாடிகள், பாழடைந்த பள்ளிவாசல்கள், கிணறுகள், சமுத்திரங்கள், வயல் வெளிகள், சுரங்கங்கள், பொந்துகள், வீட்டின் முகடுகள், மரங்கள், குகைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகள் அடைக்கப்படும் தொழுவங்கள், அசுத்தமான குளியலறை, மலசலகூடங்கள் போன்ற இடங்களை தங்கள் வாழிடங்களாகக் கொள்கின்றன. ஜின்கள் பூமியிலேயே வாழுகின்றன.

சூரியன் மறைந்த பின் இருள் பரவும் வேளைகளில் அதிளவில் ஷைத்தான்கள் என்னும் ஜின்கள் வெளியேறத் தொடங்குகின்றன. இந்த நேரங்களில் சிறுபிள்ளைகளை பாதுகாப்பது அவசியம் என்பதும், வெயிலும் நிழலும் சந்திக்கும் இடங்களில் இருப்பதை ஷைத்தான்கள் விரும்புகின்றன. அவ்வகையான இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதும், அதிகமாக சண்டைகள், வாய்த் தர்க்கங்கள் நடக்கும் சந்தைகள், கடைத் தெருக்கள் ஜின்களுக்கு விருப்பமான இடங்கள் என்பதும், இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

மாலை வேளைகளில் (இரவு) தொடங்கும்போதுபாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை சுருக்குப்போட்டு மூடி வையுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். உங்கள் குழந்தைகளை வெளியே செல்லவிடாமல் அணைத்துப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அந்த நேரத்திலேயே ஜின்கள் பூமியில் பரவி பொருள்களையும், குழந்தைகளையும் பறித்துச் சென்றுவிடும் என்றும், தூங்கும்போது விளக்குகளின் திரிகளை அணைத்துவிடுங்கள் என்றும் இந்தப் பனுவல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜின்கள் மனிதர்களிடம் கல்வி கற்றிருக்கின்றன என்றும், அவைகளால் மனிதர்களுக்குள் இலகுவாக நுழைந்துகொள்ள முடியும் என்றும், அவைகள் மனிதர்களுக்கு உதவியும் புரிந்திருக்கின்றன என்றும் நம்பப்படுகின்றது. ஏனெனில் மனிதர்களைவிட பல்லாயிரம் மடங்கு ஆற்றலைப் பெற்ற படைப்புக்களாதலால், மிகவும் கடினமான பெரிய காரியங்களைக்கூட மிக இலகுவாகவும், வேகமாகவும் செய்து முடிக்கக்கூடியன.

1) பல்கீஸ் அரசியின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலிருந்து சுலைமான் (அலை) நபிக்கு கொண்டு வந்தமை,

2) சுலைமான் நபி (அலை) அவர்களுக்கு பெரிய மாளிகைகள், சிற்பங்கள், தடாகங்கள், பாத்திரங்கள் செய்து கொடுத்தமை,

3) பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலைக் கட்டுவதற்கு உதவியமை,

4) இந்தியாவின், கீழக்கரையில் ஒரு பள்ளிவாசல் கட்ட உதவியமை,

5) கடலில் மூழ்கி முத்தெடுத்தமை,

6) மனிதர்கள் மீது ஜின் இறங்கி (பொய்யும், புரட்டுமாகி, சிறிது உண்மையுடன்) சாத்திரம், குறி கூறியமை,

மனிதர்களுக்குச் செய்த உதவிகளுக்கு சில உதாரணங்களாகக் கொள்ள முடியும்.


 
No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...