- ஏ.எம். றியாஸ் அகமட்
இந்தத் தொலைதலின் இனிமையின் பயணத்தில் நான் எதனையும்குறிப்பெடுக்கவில்லை. கண்டது, கேட்டது, வினவியது, பேசியது, பெற்றது எல்லாவற்றையும் நினைவின் அடுக்குகளிலேயே சேமித்திருந்தேன். ஏனெனில் இது ஏற்கனவே நன்றாகத் திட்டமிடப்பட்ட ஆய்வுகளுக்கான பயணம் அல்ல. ஆனால் நிறைய புகைப்படங்களை அலைபேசியில் எடுத்துக்கொண்டே இருந்தேன். நான் மட்டுமல்ல. பிள்ளைகளும் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அலைபேசிகளின் பெற்றரிகளின் மின்சாரம் தீர்ந்துபோகும்வரை நிறையப் படங்களை எடுத்துக்கொண்டே இருந்தோம். முடிவு என்னவென்று தெரியாத, எங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாத, கொண்டாட முடியாத பயணம். அடக்கித்தான் வாசிக்க வேண்டியிருந்தது.
சுமார் 700 கிலோமீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும் கொண்ட அல்-ஹாஜர் மலைத் தொடரின் கிழக்குப் பகுதியில் தொலைந்து, அந்தத் தொலைதலை உணர்ந்து, நேர்மறையான மனதுடன் அந்தத் தொலைதலிலிருந்து எப்படியாவது வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன், அந்தப் பகுதியில் மிகவும் கவனமாகவும், மெதுவாகவும் மேலே ஏறத் தொடங்கி, சுமார் 3000 மீற்றர் உயரத்தை அடைந்து, பல நூற்றுக்கணக்கான ஏற்றங்கள், இறக்கங்கள், பள்ளத்தாக்குகள், சிகரங்கள், வளைவுகள், சமநிலங்கள் போன்றவைகளைத் தாண்டி, வழி தவறி, கேட்டு, அலைந்து, கண்டு பிடித்து, பின்னர் அதே 3000 மீற்றர் உயரத்திலிருந்து மேலே கூறிய அனைத்தையும் தாண்டி இறங்கி மேற்கு அல்-ஹாஜரின் அடிவாரத்தை அடைந்தோம். இந்தப் பயணத்தில் நாங்கள், கண்டதும், கேட்டதும், உணர்ந்ததும், அனுபவித்ததும், கேள்விப்பட்டதும் மிகவும் புதமையான அனுபவங்களாகவே இருந்தன.
இந்த அனுபவங்களை முகநூலில் எழுதினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.தொலைதலின் இனிமை என எழுதினேன். பெரிய வரவேற்பிருந்தது. நிறையப் பேர் ரசித்தார்கள். பாராட்டினார்கள். அனுபவங்களை தொடர்ச்சியாக எழுதும்படி என்னை ஆர்வமூட்டினார்கள். ஊக்கப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் பெரிய தொடரை எழுத வேண்டிய எண்ணம் இருக்கவில்லையாயினும், அவர்களின் தொடர்ச்சியான ஆதரவும், ஆர்வமூட்டல்களும் என்னை தொடராக எழுதவைத்தன. இந்தத் தொடர் ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டன. எனது பெயருடனும் பகிரப்பட்டன. எனது பெயர் இல்லாமலும் தாங்களே எழுதியதுபோலவும் பகிரப்பட்டன.
இந்தத் தொடரை எழுத கண்டது, கேட்டது, கேள்விப்பட்டது போன்றவைகளை மட்டும் நம்பியிருக்கவில்லை. இதற்காக நிறையப் புத்தகங்களையும், நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், கட்டுரைகளையும் வாசிக்க வேண்டியேற்பட்டது. தமிழுக்கு சில புதிய விடயங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். சில விடயங்களில் தெளிவையும், தெளிவான பார்வையையும் பெற்றுக்கொள்வதற்காக, ஓமானின் பல துறை சார்ந்தவர்களின் உதவிகளை அணுகிப் பெற்றிருக்கிறேன். இன்னும் சில விடயங்களை சகலன் டொக்டர் றயீஸுல் அகமட் அவர்களின் உதவியுடன், நாங்கள் சந்தித்த கிராமத்தவர்களை மீண்டும் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு பெற முடிந்தது. அமெரிக்க நியு மெக்சிகோ பல்கலைக்கழகத்தினதும், அவுஸ்த்தரேலிய நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தினதும் பேராசிரியை ரெமா மைல்ஸ்ரின், ஓமான் சுல்தான் காபூஸ் பல்கலைகழக பேராசிரியை மரியமா அல்ஹினாய் போன்றவர்களை இந்த தொடருக்காக தொடர்புகொள்ள வேண்டியேற்பட்டது. அவர்கள் என்னை நிறைய வாசிக்க வைத்தார்கள். எனக்கு நிறைய விடயங்களை அறிமுகம் செய்துவைத்தார்கள். அவர்களின் ஒரு குழுவிலும் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள். இதன் காரணமாக சுற்றுச்சூழல் சம்பந்தமான பல புரிதல்களின் வாசல்கள் எனக்கு திறந்துவிடப்பட்டன. எனது எதிர்காலப் போக்குகள் எப்படியிருக்க வேண்டும்?. நான் எப்படி பயணிக்க வேண்டும்? போன்றவைகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.
சல்மா பீடபூமியில் சல்மாகுகைத் தொகுதிகளைக் கண்டுபிடித்த, மறைந்தபுவியியலாளர் டொன் டெவிசன் அவர்களின் மனைவி செரில் ஜோன்சனைத் தொடர்புகொள்ள முடிந்தது. செரிலுக்கும் அந்தக் குகைத் தொகுதிகளின் கண்டுபிடிப்பில் பாரிய பங்கிருந்தது. இருவருமே புவியியல் விஞ்ஞானிகள். செரில் மிக அன்பானவரும். மிக கருணை மிகுந்தவரும். டொன் டெவிசன், மாட்சிமைக்குரிய அரசருடன் பகிர்ந்துகொண்ட மஜ்லிஷ் அல் ஜின் சம்பந்தமான மிக முக்கிய ஆவணமொன்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவரது அன்பு என்னை திக்குமுக்காட வைத்தது.
என்னைப் பொறுத்த வரையில் தொலைதல் என்பது கற்றல். பிரபல்யமான டிஸ்கவரி, நெஷனல் ஜியோகிறபி, அனிமல் பிளானட் அலைவரிசைகளில் ஒளிபரப்பரப்படும் மேன் வெர்சஸ் வைல்ட், மேன், வுமன் வெர்சஸ் வைல்ட், டுவல் சர்வைவல், மாஸ்டர் சர்வைவல், பிறிமவல் சர்வைவல், சர்வைவ் த றைப் (பியர் கிறில்ஸ், மைகல் ஹவ்க், றுத் இங்லான்ட், டேவ் கற்றபறி, கொடி லண்டின், ஜோசப் ரெற்றி, மாற் கிரகாம், லெஸ்ட் ஸ்ரௌட், ஹெசன் ஒடல் போன்ற பிரபலங்கள் பங்குபற்றும்) போன்ற நிகழ்ச்சிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு, எழுதப்படவைகளாக இருந்தாலும் தொலைதல்களே நடக்கின்றன. ஆரம்பத்தில் தொலைந்து அல்லது தொலையவைக்கப்பட்டு சில நாட்களின் பின் அல்லது பல நாட்களின் பின் அவர்கள் உரிய இலக்கை அடைகின்றார்கள். அங்கே கற்றலும் நடக்கின்றன.
நாங்கள் தொலைதலின் இனிமையில் நடாத்திய பயணங்கள் இலகுவில் கிடைத்துவிடக்கூடிய பயணங்கள் அல்ல. அவை அட்வன்சர் ரக வீரதீரப் பயண வகைகளைச் சார்ந்தது. நாங்கள் சென்ற நிறைய பிரதேசங்களுக்குள் நுழைவதற்கு அரசாங்கத்தின் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய தனியார் சுற்றுலா ஏஜென்சிகளுக்கு பெரும் தொகை பணத்தை செலுத்தி, வழிகாட்டிகளைப் பெற்று, தங்குமிடம், உணவு, மருத்துவ உதவி, ஆபத்துகளுக்குள் சிக்கிக் கொண்டால் மீட்கப்படுவதற்கான வசதிகள், காப்புறுதி போன்றவைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு செய்திருக்க வேண்டிய பயணம். இந்த பயணங்களுக்கான பல ஒழுக்கக் கோவைகள் இருக்கின்றன. இருந்தும் இது எவையும் இல்லாமலே பெரும் பயணம் ஒன்றை தொலைந்து, மீண்டு, நடாத்தி முடித்திருக்கின்றோம்.
No comments:
Post a Comment