Monday, August 2, 2021

தொலைதலின் இனிமை – 34 (சல்மாவின் தொல்கதைகள்):

ஏ.எம். றியாஸ் அகமட்

அறிமுகம்:

சல்மா பீடபூமியிலுள்ள நிலத்தின் கீழுள்ள மஜ்லிஷ் அல்-ஜின் என்ற ஓமானின்குகை, பல்வேறு மர்மக் கதைகளுக்கும், தொல் கதைகளுக்கும், கதைகளுக்கும் பெயர் போனது. இந்தக் கதைகளுடன் சம்பந்தப்பட்ட ஜின்கள் என்னும் படைப்பினம், இஸ்லாத்திற்கு முன்னராக தொல்கதைகளிலும், இஸ்லாமிய தொல் கதைகளிலும் முக்கிய இடங்களைப் பெறுகின்றன. முஸ்லிம்களின் புனித நூலான அல் குர்ஆனிலும் இடம்பெறுகின்றன.

இந்தக் குகைகளுடன் சம்பந்தப்படுத்தி சல்மா என்ற பெண்ணிற்கு பல தொன்மக் கதைகள் இந்தப் பீடபூமியில் பல நூற்றாண்டு காலமாக உலாவுகின்றன. இந்தக் கதைகளிளெல்லாம் பொதுவாக இருப்பவை, சல்மா என்ற பெண். இந்த பீடபூமியில் ஆடுகளை மேய்த்துவரும் பெண். அழகான பெண். வீரமான பெண். சல்மாவின் வீரத்தை மையப்படுத்தியே பல கதைகள் உலாவுகின்றன. அவைகளில் சில கதைகளைப் பார்ப்போம்.

சல்மாவின் கதைகள் ஒன்று

முன்னொரு காலத்தில், அருகிலுள்ள கிராமப் புறத்தைச் சேர்ந்த சல்மாஎன்னும் அழகுள்ள, வீரமுள்ள பெண் இந்த பீடபூமியில் ஆடுகளை மேய்த்து வந்ததாகவும், ஒரு நாள் தனது ஆடுகளுக்கு நீர் தேவைப்பட ஆடுகளை குகையில் விட்டுவிட்டு நீர் எடுத்துவர சற்று தூரத்தே சென்றதாகவும், நீர் எடுத்து குகைக்கு திரும்பியபோது, அங்கே சிறுத்தை ஒன்று சல்மாவின் ஆடுகளில் ஒன்றை கொன்று சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும், உடனே தனது ஆட்டு மந்தையை சிறுத்தையிடமிருந்து பாதுகாக்க, அருகிலிருந்த கொடரியை எடுத்து, சிறுத்தையுடன் சண்டையிட்டதாகவும், அப்போது சிறுத்தையும் சல்மாவைத் தாக்கியதாகவும், இருந்தும் சல்மா கோடாரியினால் சிறுத்தையைத் தாக்கி, அதன் தலையை இரண்டாக பிளந்ததாகவும், பின்னர் சல்மாவும், சிறுத்தையும் கடும் காயங்களுக்குள்ளாகி சல்மாவும், சிறுத்தையும், கோடாரிக்கருகில் இறந்து காணப்பட்டதாகவும், சல்மாவின் வீரத்தையும், தியாகத்தையும் பாராட்டி, கௌரவப்படுத்த, இறைவன் வானத்திலிருந்து ஏழு நட்சத்திரங்களை கீழிறக்கியதாகவும், அந்த ஏழு நட்சத்திரங்களும் வீழ்ந்த இடங்களில் ஏழு கொஷிலத்துக்களை (ஆடுகளின் புகலிடம்) உருவாக்கியதாகவும், என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

சுல்மாவின் கதைகள் இரண்டு

சல்மாவின் கதைகள் ஒன்று என்ற மேலுள்ள கதையோடு, அந்தப் பெண்ணை பாராட்டும் முகமாக இறைவன் வானத்திலுள்ள ஏழு நட்சத்திரங்களை, இந்தப் பெண் நடமாடிய இந்த பீடபூமிக்கு அனுப்பியதாகவும், அவை தற்போதுள்ள ஏழு குகைகளை உருவாக்கியதாகவும், அந்தக் குகைகளையே தற்போது உலகெங்கிலுமிருந்து ஆட்கள் பார்க்க வருவதாகவும், என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

சல்மாவின் கதைகள் மூன்று

உள்ளுர் அறபியில் கண்தலெஹ் எனப்படுவது கம்புகளை சுற்றி, நாட்டி,ஆடுகளை அடைத்து வைக்கும் கூடாகும். நமது பாசையில் ஆட்டுப்பட்டியாகும். அந்தப் பட்டி ஒன்றில் சல்மா ஆடுகளை வளர்த்து வந்ததாகவும், ஆடுகளை கூட்டினுள் அடைத்துவிட்டு, ஆடுகளுக்கு தீவனங்கள் அல்லது உணவு எடுத்தவரச் சென்றதாகவும், சல்மா சென்ற சமயத்தில், சிறுத்தை ஒன்று அந்த பட்டிக்குள் சென்று ஆட்டுக் குட்டிகள் பலவற்றைக் கொன்று தின்று அவ்விடத்திலேயே உறங்கிவிட்டதாகவும், பின்னர் பின்னேரப் பொழுதில் ஆட்டுக்கு தீவனங்கள் அல்லது உணவு எடுத்துத் திரும்பிய சல்மா, சிறுத்தை செய்திருந்த காரியத்தைக் கண்டு கோபமடைந்து, தனது மேலங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, ஒரு பலமுனையுள்ள குத்தீட்டியையும், ஒரு கையிலும், இன்னொரு கையில் கோடாரியையும் ஏந்திக் கொண்டு, சிறுத்தையுடன் போரிட்டு, அதனது மண்டையை கோடாரியினால் தாக்கி பிளந்ததாகவும், அதேவேளை சிறுத்தை தனது கூரிய நகத்தால் சல்மாவின் கண்களைத் தாக்கி சல்மாவைக் குருடாக்கியதாகவும், பின்னர் சல்மாவின் கோத்திரத்தார்கள் வந்து பார்த்தபோது, சல்மாவும், சிறுத்தையும் கட்டிப்பிடித்து சண்டையிட்ட நிலையிலேயே இறந்துகிடந்ததாகவும், அதன் பின்னர் சல்மாவின் வீரத்தையும், தியாகத்தையும் பாராட்டி, கௌரவிக்க இறைவன் வானத்திலிருந்து ஏழு நட்சத்திரங்களை அனுப்பியதாகவும், அந்த ஏழு நட்சத்திரங்களும் பூமியை மோதியதாகவும், முதல் இரு நட்சத்திரங்கள் கொஷிலத் என்னும் தற்போதுள்ள குகையை (மஜ்ஜிஷ் அல்-ஜின்) உருவாக்கியதாகவும், மற்றைய நட்சத்திரங்கள், இந்தப் பீடபூமியிலுள்ள மற்றைய குகைகளை உருவாக்கியதாகவும், என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

சல்மாவின் கதைகள் நான்கு

சல்மா என்னும் பெண் இந்தக் குகையில் வாழ்ந்து வந்ததாகவும், ஒற்றைக் கண்ணுள்ள ஜின் ஒரு நாள் கோபம் கொண்டு, சல்மாவை இந்தப் பீடபூமியில் துரத்திக்கொண்டு சென்றதாகவும், அந்த ஜின் சல்மாவின் மீது மூன்று மின்னல்களை எறிந்ததாகவும், ஜின்னுக்கு ஒற்றைக் கண் இருந்ததால், சரியாக தூரங்களை கணிக்க முடியாமையால், மின்னல்கள் சல்மாவில் படுவதற்குப் பதிலாக குறி தவறி, நிலத்தில் பட்டு, பூமியில் மூன்று பிளவுகளை ஏற்படுத்தின என்றும், அந்த மூன்று துளைகளுமே நாம் தற்போது காணும் குகையின் மூன்று இறங்கு துளைகளாகும், என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

சல்மாவின் கதைகள் ஐந்து

சல்மா என்னும் ஆடுகள் மேய்த்துவரும் அழகான பெண் இந்தக் குகையில்,தனது ஆடுகளுடன் வாழ்ந்து வந்ததாகவும், சல்மாவின்மீது ஆசைகொண்ட ஒற்றைக் கண்ணுள்ள ஜின் சல்மாவை அடைய முற்பட்டதாகவும், இதற்கு சல்மா மறுத்ததாகவும், இதனால் கடும் கோபம் கொண்ட ஜின், சல்மாவை இந்த பீடபூமியில் துரத்திக் கொண்டு சென்றதாகவும், அப்போது சல்மா குறுக்கு மறுக்காக (சிக்செக்) மாறி மாறி ஓடியதாகவும், பார்வைத் திறன் மந்தமான, தூரங்களை சரியாகக் கணிக்க முடியாத ஒற்றைக் கண் ஜின் சல்மாவின் மீது மூன்று மின்னல்களை எறிந்ததாகவும், அவை சல்மாவில் படுவதற்குப் பதிலாக குறி தவறி, நிலத்தில் பட்டு, மின்னல் பூமியில் மூன்று பிளவுகளை ஏற்படுத்தின என்றும், அந்த மூன்று துளைகளுமே நாம் தற்போது காணும் குகையின் மூன்று இறங்கு துளைகளாகும், என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

 






No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...