Monday, August 2, 2021

தொலைதலின் இனிமை – 31 (மஜ்லிஷ் அல்-ஜின் குகை: அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் டொன் டெவிசன், செரில் ஜோன்ஸ் தம்பதியினரால் கண்டுபிடிக்கப்பட்ட கதை: iii)

ஏ.எம். றியாஸ் அகமட்

அந்த உயரத்திலிருந்து பார்க்கும்போதுதான் அவருக்கு ஒரு உண்மை உறைக்கிறது.

யாரோ? எதுவோ? கூட்டம் கூடும் இடம் போன்று இருக்கிறதே!

அந்தக் குகை மிகப் பெரிய திறந்த வட்டவெளி அரங்கு (அம்பிதியட்டர்)போன்றும், வற்றிய சமதரையான அருவிப் படுக்கைகள் அரங்கு போலவும், அதனைச் சுற்றியுள்ள குகைச்சுவர்களின் சரிவுகளில் பல்லாயிரக்கணக்கில் காணப்படுகின்ற குவியல்கள் இயற்கையான அமர்வதற்குரிய இடங்கள் போன்றும் காணப்பட்டன. இவ்வாறு ஏன் இவை காணப்படுகின்றன? தற்செயலாக உருவாகியவையா? அல்லது உருவாக்கப்பட்டவையா? என்று சிந்தனையை குழப்பிக் கொள்கிறார்.

எலும்புக் குப்பை மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, இன்னும் பல இடங்களை சுற்றிப் பார்க்கிறார். அப்போது சிறிய கல்லொன்று கூரையிலிருந்து தரையில் விழுந்து, பாரிய சத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் எதிரொலி மிக நீண்ட நேரத்திற்கு அந்தக் குகையில் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றது. சிறிய கல், பாரிய சத்தம், நீண்ட நேர எதிரொலிகள் இந்த நிகழ்வுகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றார்.

அங்கிருந்து வடக்குப் பக்கம் 150 மீற்றர் (500 அடிகள்) தொலைவிலுள்ள இருண்டசுவரைப் பார்க்கிறார். அங்கே பிரகாசமான ஒளிரும் ஒளிப் பொட்டுக்களை சுவரில் அவதானிக்கிறார். ஆனால் சுவர் ஒளிரவில்லை. ஏதோவொன்று ஒளிரவைக்கிறது. அது யாது?. அதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முயல்கிறார். நேரமாக நேரமாக அந்த ஒளிப்பொட்டு அளவிலும், அடர்த்தியிலும், பிரகாசத்திலும் மத்திய பகுதியில் திடிரென அதிகமாவதை அவதானிக்கிறார். அந்த ஒளிப்பொட்டுக்கு காரணம், தான் இறங்கிய துளையின் வழியால் வந்த சூரிய வெளிச்சத்தினால் உருவாக்கப்பட்ட 300 மீற்றர் (972 அடிகள்) நீளமான ஒளிக் கற்றைகள் எனவும், பளபளப்புக்கு காரணம் தூசுகள் எனவும் விளங்கிக் கொள்கின்றார்.

மீண்டும் மேற்பரப்புக்கு செல்வதற்காக அல்லது குகையிலிருந்து வெளியேறுவதற்காக தன்னுடைய பொருட்களையெல்லாம் எடுத்து, அடுக்கி, கட்டிக்கொண்டு, கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்த எலும்புக் குப்பை மலையில் ஏறி, கயிற்றுக்கு முன்னால் சென்று, நின்று, உடம்பில் கயிறுகளைப் பொருத்தி மெல்ல மெல்ல மேலே ஏறுகிறார்.

ஒவ்வொரு உயரமும் வெவ்வேறு குகைக் காட்சிகளைக் கொடுக்கிறது. குகை சிறிதாகிறது. ஒரு கட்டத்தில் பூரண குகைக் காட்சி தெரிகிறது. எல்லா அம்சங்களும் ஒரே நேரத்தில் தெரிகிறது. நிலமட்டத்திற்கு கீழ், உலகின் 4 மில்லியன் லீற்றர் கனவுள்ள ஒளிரும் புளொரொசன்ட் மின்குமிழைக் கண்டு அதிசயித்துப் போகிறார்.

கூரையின் விளிம்புக் வருகிறார். குகையின் அறை முடிகிறது. 40 மீற்றர்தடிப்புள்ள (உயரமான) துளை வழியாக மேலே இனி ஏற வேண்டும். துளையின் ஆரம்பத்தில் நுழைந்தபோது சல்மாவின் பிந்திய காலையின் வெப்பமும், வெளிச்சமும் அவரை வரவேற்கின்றன.

இருபது நிமிட ஏற்றத்திற்குப் பிறகு, துளையின் விளிம்பைத் தொட்டு, மீண்டும் சல்மாவை வந்தவுடன், மஜ்லிஷ் அல்-ஜின்னின் குளிர்மையின் நினைவுகள் மட்டுமே அவரிடம் எஞ்சியிருந்தன.

கயிறுகளை வெளியே இழுத்து, குகை இறங்கு உபகரணங்களையும் மீண்டும் அடுக்கி கட்டிக்கொள்கிறார். முன்னர் குகையின் கீழ்ப் பகுதியிலிருந்து பார்த்தபோது கூரையில் தெரிந்த, 2 மீற்றர் (6.5 அடி) விட்டமுள்ள, மூன்றாவது இறங்கு துளையை பீடபூமிப் பரப்பில் கண்டுகொள்கின்றார்.

வெளியே தன்னந் தனியே மலைப்பாலையில் தனது உபகரணங்களைச் சுமந்துகொண்டு நடந்து வருகிறார். நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு கிராமத்தைக் கண்டுகொள்கிறார். அங்கிருந்தவர்களிடம் தான் அங்குள்ள குழியில் இறங்கி அந்தக் குகைக்கு சென்று திரும்பி வருவதாகவும், அந்தக் குகையின் பெயரைத் தெரிந்தால் சொல்லுங்கள் எனவும் வேண்டுகிறார்.

அதனைக் கேட்டவுடனே, விபரங்களைச் சொல்லுவதற்கு அவர்கள்பீதியடைவதையும், தயங்குவதையும் அவதானிக்கிறார். ஏதோ விசயம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை மீண்டும், மீண்டும் தெண்டித்து விபரங்களை பெற முயற்சிக்கிறார்.

அவர்கள் சொல்லத் தொடங்க, அவர் பிரமித்து, அதிசயித்து நிற்கிறார்.

 No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...