Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை - 30 (மஜ்லிஷ் அல்-ஜின் குகை: அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் டொன் டெவிசன், செரில் ஜோன்ஸ் தம்பதியினரால் கண்டுபிடிக்கப்பட்ட கதை: ii)

- ஏ.எம். றியாஸ் அகமட்

பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அந்த 20 மீற்றர் விட்டமுள்ள, 158 மீற்றர்துளைவழியாக மேற்பக்கமாக இருந்து விழுந்த விழுந்த குப்பைகள், கற்களோடு, விலங்குகளின் எலும்புகள் நிறைந்த, எலும்புக் குப்பை மலைக்குமேல்தான் தான் நின்று கொண்டிருப்பதாக உணர்ந்து, பிரமித்துப் போகின்றார். சற்றுத் திரும்புகின்றார், அவருக்கு அருகில் மிகப் பெரிய இராட்சத பாம்பின் முழுநீள எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டு ஆச்சரியமடைகின்றார்.

அந்த எலும்புக் குப்பை மலையிலிருந்து இன்னும் இறங்க முயற்சிக்காமல், உண்மையான குகைத் தரையைப் பார்க்கிறார். சற்றுத் தூரத்தில் 5 மீற்றர் (16 அடி உயரமுள்ள) சுண்ணக்கல் கிடப்பதை அவதானிக்கிறார். தான் நிற்கும் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கான தூரங்களை அளக்க முயற்சிக்கின்றார். புலன்கள் ஒத்துழைக்க மறுக்கிறது. மிகப் பிரமாண்டமான உயரமும், அகலமும் புலன்களைக் குழப்புகிறது. உடம்பிலிருந்த கயிறுகளைக் கழற்றிவிட்டு, கவனமாக எலும்புக் குப்பை மலையிலிருந்து இறங்குகிறார். அது கொஞ்சம் சரிகிறது. கீழே இறங்கி, குகையின் உண்மையான தளத்திற்கு வருகிறார். அந்தத் தளத்திலிருந்து நிமிர்ந்து எலும்புக் குப்பை மலையின் உயரத்தை அளக்கிறார். அது 50 மீற்றர் (162 அடிகள்) உயரமாக இருக்கிறது.

தளப் பகுதிக்கு வந்து சுற்று முற்றும் பார்த்த போது, அந்தக் குகை முழுவதும்தெரிகிறது. அவரின் புலன்கள் ஒத்துழைக்க முடியாத, விக்கித்த, பேதலித்த நிலைக்கு மீண்டும் உள்ளாவதை உணர்கிறார்.

சற்று முன்னே நடக்கிறார். அங்கே கிறவலும், மணலும் கலந்த பரந்த வற்றிப் போன மலை அருவியொன்றின் படுக்கையையும், அதன் மேல் கிடந்த கோடிக் கணக்கான சிறிய உயிரினங்களின் வன்கூடுகளையும காண்கின்றார். அதனைத் தொடர்ந்து, உலர்ந்துபோன, வெடிப்புக்களுள்ள, களித் தரையுள்ள இன்னுமொரு மலையருவிப் படுக்கையை அவதானிக்கிறார்.

அதனைத் தொடர்ந்த கொஞ்சம் நடக்கிறார். வடக்குப் பக்கத்தில் ஈரமான,சேறுள்ள இன்னுமொரு படுக்கையையும் அவதானிக்கிறார். இந்தப் பகுதிதான் குகையின் கொஞ்சம் ஆழமானதும், சரிவுகூடியதுமான பகுதி. இந்த பீடபூமியிலிருந்து துளைகளுடாக வெள்ளநீராக புகுந்துகொண்ட இந்த நீர் வெளியேறுவதற்கு வழிகள் ஏதாவது இருக்கின்றனவா என்பதைத் தேடுகின்றார். ஒரு வழியும் இல்லை என்பதை தெரிந்து கொள்கின்றார். அங்கிருந்த உக்கிப்போன மரக்கட்டை ஒன்றில் கண்கள் விருத்தியடையாத வெள்ளைநிற பூச்சியொன்றை அவதானிக்கின்றார்.

அதிசயிக்கத்தக்கவகையில் குகையின் வெப்பநிலை 17 தொடக்கம் 18 பாகை செல்சியஸாக (63 -65 பாகை பரனைற்) குறைவாக இருப்பதால், வெள்ளநீரினால் உருவாகி, வடிந்து, மீதமுள்ள ஈரலிப்பு வற்றிப்போக பலமாதங்களாகின்றன என்பதையும் அவதானிக்கிறார். இந்த நிலப் படுக்கையின் சில அடிகள் ஆழத்திற்குள்ளேயே புதைந்து கிடக்கும் மில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன், ஈரக் காலநிலை, வறள் காலநிலையென மாறி மாறி வந்துகொண்டிருந்த ஓமானின் புவிச்சரிதவியல் காலங்களில் வாழ்ந்த சுதேசிய தாவரங்கள், விலங்குகள் பற்றிய தகவல்களை அறியக்கூடிய எச்சசொச்சங்கள் இருக்குமென புரிந்துகொள்கிறார்.

பிரமாண்டத்தினாலும், அங்கிருந்த ஒளி அமைப்புகளினாலும், விசித்திர ஒலிகளினாலும் கட்டுப்பட மறுத்த அல்லது அடங்க மறுத்த மனநிலை காரணமாக அந்தக் குகைகளின் தரவுகளை பதிவதிலும், அளவிடல்களை மேற்கொள்வதிலும் தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்.

இருந்தும், ஒருவாறாக, குகையின் நீளம் மேற்கு-கிழக்காக 300 மீற்றர் (972 அடிகள்) எனவும், வடக்கு-தெற்காக 250 மீற்றர் (810 அடிகள்) எனவும் அளந்துகொள்கிறார். ஒரு முறையூடாக அந்தக் குகை 40 தொடக்கம் 50 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியிருக்கலாமெனவும் அதன் காலங்களைக் கணிக்கிறார்.

இந்தக் குகையின் 120 மீற்றர் (389அடிகள்) உயரத்திலிருந்த. அரைவட்ட வடிவ, மிகப் பிரமாண்டமான றோமன் வில்வளைவுக் கூரை எந்தவித ஆதாரங்களும், தூண்களினதும் உதவியின்றி உறுதியாக இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்து வியக்கிறார்.

அங்கிருந்து மேற்குப் பக்கம் சற்று நடக்கிறார். சல்மா பீடபூமியிலிருந்துஆயிரக்கணக்கான வருடங்களாக காற்றின் மூலம் இறங்கு துளைகளுக்கூடாக அடித்துவரப்பட்டு, அடித்தளத்தில் 50 தொடக்கம் 100 மில்லிமீற்றர் உயரத்தில் படிந்திருக்கும் மிக மிக நுண்ணிய புழுதிப் படையை அவதானிக்கிறார். அந்தப் படையில் பல்லிகள், பூச்சிகள், பாம்புகள் ஊர்ந்துசென்ற தடங்களையும் கவனிக்கிறார். வெறுக்கத்தக்க மணம் இருப்பதையும் உணர்கிறார்.

தனக்கு முன்னால் வற்றிக் கிடந்த குளத்தில், ஆயிரக் கணக்கான குகை முத்துக்கள் (cave pearl) உருவாகியிரப்பதை அவதானிக்கிறார். இவை பார்ப்பதற்கு லிங்க வடிவில் காணப்படும். சிப்பிக்குள் முத்தும், குகை முத்தும் ஒரே முறையினூடாகத்தான் உருவாகின்றன. ஆனால் குகை முத்துக்கள் பொருளாதார முக்கியத்துவம் அற்றவை.

இறங்கும் போது, முன்னர் தான் நிலைகொண்டு கால் பதித்த, மேற்குப் பக்கம் இருந்த 50 மீற்றர் (162 அடிகள்) உயர எலும்புக் குப்பை மலையின் மீது மீண்டும் ஏறுகிறார். சறுக்குகிறார். மீண்டும் ஏறி உச்சியை அடைகின்றார்.

அந்த உயரத்திலிருந்து பார்க்கும்போதுதான் அவருக்கு ஒரு உண்மை உறைக்கிறது.

யாரோ? எதுவோ? கூட்டம் கூடும் இடம் போன்று இருக்கிறதே!

 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...