Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை – 28 சல்மா குகைகள்:

ஏ.எம். றியாஸ் அகமட்

ஒரு பிரதேசத்தில் அதிகளவான குகைகள் காணப்பட வேண்டுமாயின், அங்குஅதிகளவான நீரிருப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்க வேண்டும். ஆனால் சல்மா பீடபூமி மலைப் பாலை. வறள் நிலம். ஒரு சிறிய நிலப்பரப்பில், பாரியளவிலான பல குகைகள் எப்படிச் சாத்தியமாயின?.

இது பல மில்லியன் காலத்துக் குகைக் கதை. இந்தக் குகைகள் தோன்றி பல மில்லியன் வருடங்களாகின்றன. இந்த பல மில்லியன் காலங்களில் வறட்சியும் ஈரலிப்பான காலநிலைகளும் மாறிமாறி இருந்திருக்கின்றன. இறுதியாக இந்தப் பகுதி சுமார் 7000 வருடங்களுக்கு முன்னர் ஈரலிப்பான காலநிலையுள்ள இடமாக அல்லது ஈரலிப்பான வலயமாக இருந்திருக்கின்றது. இதற்குப் பிறகு படிப்படியாக ஓமான் காலநிலை மாற்றத்திற்கு உள்ளாகி, வறட்சியான காலநிலைக்கு மாறியிருக்கின்றது. இந்தக் காலப் பகுதிகளில், வறட்சியான காலநிலை காரணமாக குகையாக்க செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே நடந்துவந்திருக்கின்றன.

முன்னொரு காலத்தில் மஜ்லிஷ் அல்-ஜின் குகையும் இந்த சல்மா குகைத் தொகுதிகளுடன், இணைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகின்றது. பின்னர் இதன் இணைப்பு வழிகளில் தடைகள் ஏற்பட்டு மற்றக் குகைகளுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கின்றது.

ஏழாவது துளைக் குகை (கஹப் அகாபத் குஷில்), ஜன்னல் குகை, வில்வளைவுக் குகை (பெய்ன் ஹலைன்), புனல் குகை (கஹ்ப் காஷா), தாஹிரி குகை (கஹ்ப் தாஹரி):

1980களில் டொன் டேவிசன், ஜோன் செரில் (அவரது மனைவி) தம்பதியினரால் ஏழாவது துளைக் குகை விபரிக்கப்பட்டள்ளது. சல்மா பீடபூமியில் காணப்பட்டட ஏழாவது துளை காரணமாக இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. எனினும் இதன் அறபுப் பெயர் கஹப் அகாபத் குஷில். சல்மா குகைத் தொகுதியில் (ஒன்றுக்கொன்று தொடர்புபட்டுள்ள குகைகளில்) மிகவும் பெரிய குகையான ஏழாவது துளைக் குகை, தன்னுடன் மற்றைய மூன்று குகைகளான, ஜன்னல் குகை, வில்வளைவுக் குகை (பெய்ன் ஹலைன்), புனல் குகை (கஹ்ப் காஷா), தாஹிரி குகை (கஹ்ப் தாஹரி) போன்ற நான்கு குகைகளையும் இணைக்கின்றது.

நிலமேற்பரப்பிலிருந்து கயிற்றின் மூலம் 108 மீற்றர் கீழே இறங்கினால்தான் ஏழாவது துளைக் குகையின் அடிப் பரப்பை அடைய முடியும். சுமார் 250 மீற்றர் வரை பூமியின் ஆழம் நோக்கி இந்தக் குகை செல்கின்றது. ஏழாவது துளைக் குகையானது நிலத்தின் கீழுள்ள 250 மீற்றர் பாதையால் அதன் 200 மீற்றர் நீளமும், 80 மீற்றர் அகலமும் கொண்ட பாரிய நிலக்கீழ் குகை அறையை இணைக்கின்றது. இந்தக் குகையிலிருந்து ஒடுக்கமான, இறுக்கமான, அகலமான பல வழிகளை நடந்தும், ஓடியும், தவண்டும், ஊர்ந்தும், நீந்தியும் கடந்து சென்றால், 13 கிலோமீற்றர் அப்பாலுள்ள தாஹிரி குகையை அடைந்து சல்மா பீடபூமியின் மேற்பகுதிக்கு கயிற்றின் துணையில்லாமல் மீண்டும் வரலாம்.

5 தொடக்கம் 20 மீற்றர் தடிமனான புவியோட்டுப் பாறைகளால் ஆக்கப்பட்டஇந்த நான்கு துளைகளும், வாதி என்னும் ஆற்றுப்பள்ளத்தாக்கில் காணப்படுவதனால், மழையின் மூலம் உருவாகும் வெள்ள நீரை இந்த நான்கும் சேகரித்து தங்களது நிலக்கீழ் குகைக்குள் அனுப்பி, பின்னர் நான்கு குகைகளின் நிலக்கீழ் வழிகளும் ஒன்றாக சேர்ந்து உருவாக்கும் 250 மீற்றர் நீளமான நிலக்கீழ் சுரங்கவழிக்குள் செலுத்தி, பின்னர் 5 தொடக்கம் 10 பாகை சாய்வாக புகுத்தி, வெள்ள நீரை மீண்டும் 13 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தாஹிரி குகையினூடாக பீடபூமியின் வெளிப்பகுதியில் வெளியேற்றுகின்றன.

புனல் குகையானது நிலத்தின் கீழ்ப்பகுதியில் 170 மீற்றர் இறங்கக் கூடிய துளைகளைக் கொண்டு காணப்படுகின்றது.

மூன்று ஜன்னல்கள் குகையானது நிலத்தின் கீழ் 385 மீற்றர் ஆழத்தில் சுமார் 6 கிலோமீற்றர் சுரங்கவழியாக பரந்து, அந்த 6 கிலோமீற்றர் வழிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 3 தொடக்கம் 34 சதுரமீற்றர் பரப்புள்ள 39 குழிகளைக் கொண்டமைந்து காணப்படுகின்றது. இங்கு காணப்படுகின்ற நீர் பலதடைகளைக் கடந்த வந்தாலும், தூய்மையான பளிங்கின் நிறத்தில் காணப்படுகின்றது.

இந்தக் குகைகள் யாவும் மத்திய இயொசின் சீப் உருவாக்கம் நடந்தபோது தோன்றியவைகளாகக் கருதப்படுகின்றது.

 
















No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...