Thursday, May 28, 2020

அமரசிங்கம் பகீரதன் என்னும் அற்புதமான மனிதன்

ஏ.எம். றியாஸ் அகமட்

முந்தா நாள் கிழக்கு பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். அது நான் தவண்டு, எழுந்து, நடந்து, ஒடி, கல்வி கற்று, பணியாற்றிய இடம். இருந்தும் இன்னும் கற்றல், கற்பித்தல், ஆய்வு என அதனுடன் உள்ள தொப்பூழ் கொடி உறவு முடியவில்லை. சென்ற நோக்கங்களில் ஒன்று ஒருவரைச் சந்தித்து வாழ்த்துக்கூற வேண்டும்.
“அவர் நான் அங்கு 90களின் ஆரம்பங்களில் கற்ற காலத்தில், எனக்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் சீனியராக கற்றிருந்தார். பின்னர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் தற்காலிக உதவி விரிவரையாளராகவும் கடமையாற்றி, பின்னர் உபவிடுதிக் காப்பாளராக மாறியிருந்தார், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு உதவி பதிவாளராக செல்லும் வரை. நான் விடுதியே கதியெனக் கிடந்த ஒருவன். எனக்கும் அவருக்கும் நல்ல உறவு இருந்தது. அவரை நான் அண்ணன் என்று அழைப்பதில்லை. சேர் என்றுதான் அழைப்பது வழக்கம்.
அந்தக் காலத்தின் ஒரு நாள் (90களின் நடுப் பகுதி, முதலாம் வருடம் படிக்கும்போது என்று நி;னைக்கின்றேன்), விடுமுறையில் வீடு செல்ல, எனது பிரயாணப் பையை சுமந்தவனாக, விடுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீறர் தொலைவில் பிரதான வீதியிலிருந்த பஸ் நிறுத்தத்திற்கு நான் கால்நடையாக புறப்பட்ட போது, “நான் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு விடுகிறேன்” என்று என்னை கொண்டுவிட்டார். அப்போது நான் வசதியீனமானவனாக அவரைப் பார்த்தேன். “என்ன” என்றார். “காலைக்கடன் முடிக்க வேண்டும் போல் இருக்கிறது”. பயணப் பையை அங்கேயே வைத்துவிட்டு மீண்டும் அவருடன் எனது அறைக்கு பயணிக்கிறேன். அறையை நெருங்கியவுடன், மீண்டும் அவரைப் பார்க்கிறேன். புரிந்துகொண்டு “என்ன என்றார்”. “ரவலிங் பேக்கில் கீ”. மீண்டும் பஸ் நிறுத்தத்திற்கு என்னை ஏற்றி வந்து, திறப்பெடுத்து, அறைவந்து, கடன் முடித்து, மீண்டும் பஸ் நிறுத்தத்திற்கு ஏற்றிக்கொண்டு சென்றார்.
முகத்தில் எந்தவிதமான மாறுதல்களும் இருக்கவில்லை. அந்த ஆறு தடவைகளும் முகத்தில் மாறாத பொறுமையும், புன்முறுவலும். எல்லா மனிதர்களிலும் காணமுடியாதது இது. அருமந்தமானது. சுpல கிராமிய வழக்குகளில் இதனை “தன்மை” என்கின்றோம். சக மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் மதிக்கும் இந்தத் தன்மையானவர்களை காண்பது அரிதிலும் அரிது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து உதவிப் பதிவாளராக கடமையாற்றிவிட்டு, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வரும்போது (அப்போது நான் உதவி விரிவுரையாளராக இருக்கிறேன்) அவரில் விருத்தியடைந்திருந்த மொழிகளுடனான ஆற்றல் என்னை பிரமிக்க வைத்தது. உதவி விரிவுரையாளராக, உப விடுதிதக் காப்பாளராக, உதவி பதிவாளராக, சிரேஸ்ட உதவி பதிவாளராக, பிரதி பதிவாளராக, பதில் பதிவாளராக, கிழக்குப் பல்கலைகழகத்தில் கடமையாற்றி அந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு நிருவாகம் சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணியாற்றி, பெரிய அனுபவங்கபளைப் பெற்று அதன் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினைச் செய்திருந்தார். சிறிய நிகழ்வுகளிலிருந்து பெரிய நிகழ்வுகளோ அல்லது சிறிய திட்டங்களிலிருந்து பெரிய திட்டங்களோ அவைகள் அனைத்தினதும் வெற்றிக்குப் பின்னால் விமர்சனங்களுக்கு அப்பால் அவரின் கடுமையான மறுக்க முடியாத உழைப்பிருந்தது. துறைபோனவர்களும் “மனிதவள முகாமைத்துவம்” சம்பந்தமாக கற்கவேண்டியது அவரிடம் நிறைய இருந்தது. ஒரு அண்ணன்போன்று இன்றும் என்னை நீயென்று உரிமையுடன் அழைக்கக்கூடியவர். ஆரம்பத்திரிலிருந்தே எனது இலக்கியம், எழுத்து, ஆய்வுகளுக்கு இரசிகர். இன்றும் எனது களச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துபவர். கூட்டுச் செயற்பாடு, பங்களிப்பு, தொடர்ந்தியங்கல், தொடர்பாடல், சகமனித மதிப்பு, இணைத்தல், ஊக்கல், கற்றல், நேர்மறை புத்தூக்கம் போன்ற பல நல்ல முகாமைத்துவ பண்புகளைக் கொண்டவர்.
அவர்,
களுதாவளையைச் சேர்ந்த “அமரசிங்கம் பகீரதன்”. அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். பல்கலைக்கழகச் சுற்றயல் சமூகத்தினதும், விளிம்புநிலையோர்களின பல்வேறு கூறுகளின்மீதான அபிவிருத்தியை நோக்கிய பல்கலைக்கழகத்தின் பங்கு உங்களுடைய காலத்தில் மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று வாழத்துகிறோம்.

(26, ஜுலை 2019)

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...