ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்
பசுமைச் சுவடுகள் அமைப்பின் ஏற்பாட்டில் 11.10.2019, வெள்ளிக்கிழமை, பின்னேரம், வலிக்கண்டி காளிவயல் பிள்ளையார் கோயில் (குடத்தனை மேற்கு) முன்றலில் விதைப்பந்துகள் தயாரிப்பும், கலந்துரையாடலும் என்ற சிறுவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குடத்தனை பருத்தித்துறையிலிருந்து சுமார் 10 கிலோமீறறர் தூரத்திலுள்ள பசுமையும், வனப்பும் நிறைந்த கிராமமாகும்.
பிள்ளையார் கோவில் முழுக்க மருதை, இருப்பை போன்ற பல மரங்கள் உயர்ந்து, கிளை பரப்பி நின்றன. கோயிலுக்கு ஒரு புறம் புற்கள் படர்ந்த பச்சை வயல்வெளியும், இன்னொரு புறம் பனந்தோப்பும், இன்னொரு புறம் மரங்கள் நிறைந்த சிறு சிறு வனாந்திரங்களும் காணப்பட்டன. பி.ப. 2.30 க்கு ஆரம்பமாக இருந்த நிகழ்வுக்கு சிறுவர்கள் பி.ப. 1.30 க்கே நடையாகவும், துவிச்சக்கர வண்டிகளிலும் வரத் தொடங்கினார்கள். நிகழ்ச்சி தொடங்கும் வரை குழுக்களாக ஓடிப் பிடித்தும், மரங்களில் ஏறியும், சாப்பிடுவதற்காக மரங்களிலுள்ள காய்களைப் பறித்தும், பறவைகளைகளையும், வண்ணாத்திப் பூச்சிகளை பின்தொடர்ந்தும், பாட்டுக்கள் படித்தும், நடனமாடியும் இருந்துகொண்டிருந்தனர். இவைகளை மருதமும், இலுப்பையும் ஒன்றாகக் கலந்த மரங்களின் அடியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் எனக்குமிடையே ஒரு அந்நியத் தன்மை இருந்ததை உணர்ந்தேன். அவர்களும் உணர்ந்திருப்பார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அது போய்விடும் என்று எனக்குத் தெரிந்தது.
பி.ப. 2.30, மருத மரத்திற்கு கீழ் படங்கு விரிக்கப்பட்டது. நான் அமர்ந்தேன். எல்லோரும் அமர்கிறார்கள். அவர்களை சுய அறிமுகம் செய்யச் சொன்னேன். அவர்களது வாழ்க்கையின் இலட்சியங்களையும் சொல்லச் சொன்னேன். செய்தார்கள். சொன்னார்கள். சுய அறிமுகங்களில் எவ்வளவு, வித்தியாசமான டிசைன்கள் இருந்தன. இடை இடையே சில குறுக்கு கேள்விகள். எங்கும் சிரிப்பு, புன்னகை. கொஞ்ச நேரத்திற்கு முன்னர் அந்நியத்தன்மை காரணமாக என்னடம் தூரத்தை நிலைநிறுத்தியவர்கள். எனது மடிக்கு கிட்ட வந்து விட்டார்கள். அவர்களின் அறிமுகம் முடிந்த பின்னர் நான் என்னை அறிமுகப்படுத்தி, விதைப் பந்து செய்து காட்டுவதற்கு முன், மரங்கள், உயிரிகள், சுற்றுச்சூழல் போன்ற நிறைய விடயங்களை அவர்களுடன் வினா, விடையாக உரையாடினேன். எந்தக் கேள்விக்கும் உடனடியாகவும், அதிரடியாகவும் ஒரு பதிலை வைத்திருந்தார்கள். பெரும்பாலான விடைகள் “கௌன்ரராகவே” இருந்தது. ஒவ்வொரு பதிலும் கடி மாதிரியே இருந்தது. அவை அவர்களின் கள்ளமில்லா வெறும் மனங்களிலிருந்து இயல்பாகவே வந்து விழுந்து கொண்டிருந்தன. நீண்ட நேரத்திற்கு சிரிப்பாகவே இருந்தது.
பின்னர், நான் கொண்டு சென்றிருந்த விதைப் பந்துகளை காட்டி, விதைப் பந்துகள் என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன என்பனவற்றை அவர்கள் மூலமாக சொல்ல வைத்து. களியையும், சாணத்தையும் கலந்து விதைப் பந்துகள் செய்து காட்டினேன். அவர்கள் கவனமாக அவதானித்தார்கள். அதன் பின்னர் சுயமாகவே செய்யத் தொடங்கினார்கள். அரை மணி நேரத்திற்குள் 700க்கும் அதிகமான விதைப்பந்துகளை செய்து முடித்திருந்தார்கள். விதைப் பந்துகளை சேமிப்பதற்கும், வைத்துக் காய வைப்பதற்கும் சூழலிருந்த பொருட்களையே பாவித்தார்கள். தங்களுக்குள்ளே கேலியும், கிண்டலும், பேச்சுமாக செய்து கொண்டிருந்தார்கள். அது மிகவும் வினைத் திறனாக இருந்தது. பின்னர் தேனீர் உபசரிப்பு நடைபெற்றது. அதற்குப் பின்னர் அவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை கோயில் முற்றத்தில் விளையாடத் தொடங்கிவிட்டிருந்தார்கள். ஒரு நாள் நிழலிலும், மறு நாள் வெயிலிலும் காய வைத்த பின்னர், அவர்கள் செய்த பந்துகளை பாதிப்புக்குள்ளான காடுகளுக்குள் சென்று வீசிவிட்டும் வந்திருந்தார்கள்.
சிறுவர்கள் விதைப்பந்து செய்வதும், வீசுவதும் சுற்றுச்சூழல் நலன்சார்ந்தது மட்டுமல்ல. அது ஆளுமையையும், திறன்களையும் விருத்தி செய்யும் கற்றல் முறை. ஒரு பள்ளி. கல்விக்கூடம். இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்த பசுமைச் சுவடுகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் வசீகரன், விதுர்சா, றாஜிதா, துவாரகா, கிரிசாந் போன்ற நண்பர்களுக்கு ஒரு கடலளவு அன்பும், நன்றியும். விதைப்பந்துகளை வீசச் சென்று, சிறுவர்களின் அன்பையும், அதன் கல்வியையும் எடுத்து வந்திருக்கிறேன். வாழ்க்கை பொத்தி வைத்திருக்கும் அதன் அபூர்வ அற்புத மணித்துளிகளை எப்போது திறந்து காட்டும் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு காட்டியது.
No comments:
Post a Comment