Thursday, May 28, 2020

ஒரு மா மரத்தின் மரணம்:

ஏ.எம். றியாஸ் அகமட்

எனது சாச்சா எம்.எஸ்.எம். ஹம்தூன், உம்மாவின் தங்கையின் கணவர். அட்டாளைச்சேனையைச் aசேர்ந்தவர். மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர். அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் சித்திரப் பாட ஆசிரியராக இறுதியாக பணியாற்றியவர். அடிப்படையில் அவர் நல்ல கலைஞர். நன்றாக ஓவியம் வரைவார். கையெழுத்தும் மணிமணியாய் அழகாக இருக்கும். அவரின் எழுத்தும், ஒவியமும் பங்குதல் செய்த மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின், 1970களின் பிற்பகுதியின், “கலங்கரை” கையெழுத்துச் சஞ்சிகைகளை எனது மிகச் சிறு வயதில் வாசிக்கத் தொடங்கியபோதே என்னுள் வாசிப்பும் தொற்றத் தொடங்கியிருந்தது.

சாச்சா, அற்புதமான நேர்த்தியான தையற் கலைஞர். அவர் எப்போதும் நேர்த்தியாகவும், அழகான உடைகளையுமே உடுத்துவார். ஏப்போதும், தன்னையும், தனது உடைகளையும் சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறைகாட்டுவார். அவர் இனிமையான குரல் வளம் வாய்க்கப்பெற்ற பாடகரும்கூட. அவரிடம் அலாதியான இசை ஞானமும் இருந்தது. 1980களின் நடுப்பகுதியில் இலங்கை கானொலியின் பாட்டுக்குப் பாட்டு போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியது இன்னும் ஞாபகத்திற்கு வருகிறது. அதே காலப் பகுதியில் வானொலி விவசாயப் போட்டியில் பங்குபற்றியதும் ஞாபகத்திற்கு வருகிறது.

அவரின் வீட்டிற்கு முன்னால் ஆறு ஒன்று ஓடுகின்றது. அதன் கரையில் அவரைச் சார்ந்த தோணியும், வலைகளும் இருப்பது வழக்கம். நள்ளிரவில் தானே தோணிவிட்டு, வலை வீசி, மீன்களைப் பிடிப்பார். அவரின் ஊர் எங்கள் ஊரிலிருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கின்றது. இருந்தும் தான் பிடித்த உயிருள்ள மீன்களை தந்துவிட வேண்டும் என்ற ஆவலில், நள்ளிரவில், மோட்டார் சைக்கிளில் இருளும், ஆபத்துக்களும் கிழித்து எங்கள் வீட்டுக்கு வந்து, எங்களை தட்டி எழுப்பி மீன்களை தந்துவிட்டு சென்றுவிடுவார்.

சாச்சா ஒரு இயற்கை உபாசகன். இயற்கை விரும்பி. மிக நீண்ட பயணங்களை மோட்டார் சைக்கிளிலேயே நண்பர்களுடனே பயணிப்பார். அவருக்கும் அவரின் சில நண்பர்களுக்கும் இடையே இருபது வயது வித்தியாசம்கூட இருக்கும்.

சாச்சா 1983களில், புத்தளத்திற்கு சென்று வரும்போது மாம்பழங்கள் வாங்கியிருக்கின்றார். அது சுவையாக இருக்கவே, அதனை வீட்டிற்கு கொண்டு வந்து, அதன் விதையை நாட்டி, கன்றாக்கி, நன்றாக பராமரித்து மரமாக்கியிருக்கின்றார். அந்த மரத்தை ஒரு பிள்ளையைப் போலவே பாராட்டி சீராட்டி வளர்த்திருக்கின்றார். சாச்சாவிற்கு 59 வயதானாலும், அவரின் உடல்வாகு 40களின் ஆரம்பத்திலிருக்கின்ற ஒரு மனிதனைப் போன்றது. மிகவும் குறைவாக, கவனமாக தேர்ந்தெடுத்த உணவையை மிக நீண்ட நேரத்திற்கு அரைத்து அரைத்து ஆறுதலாக உண்பார். அதனால்தான் என்னவோ அவரின் வாழ்க்கைக் காலத்தில் அவர் எந்த நோய்க்கும் ஆளாகியதை நான் கண்டதில்லை. இதன் காரணமாக அவர் மிக நீண்ட காலம் வாழ்வார் என நினைத்திருந்தபோது, நீண்டகாலமாக அவரே ஏறி மாங்காய்கள் பறிக்கும் மரத்தில், வழமைபோல் ஏணி வைத்து ஏறி மாங்காய் பறிக்கும்போது தவறி விழுந்து, கை, கால், விலா, தலை ஓடு எலும்புகள் உடைந்து, அக்கரைப்பற்ற, மட்டக்களப்ப வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

அவரின் பழைய வீட்டிற்கு அருகில், புதிய வீடு ஒன்றை கட்டத் தொடங்கும்போது, அந்த மா மரத்தை வெட்டிவிட பல ஆலோசனைகள், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தபோதும், சாச்சா எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மரத்தை அவர் மிகவும் நேசித்தார். இலங்கையின் எங்கோ ஒரு முனையிலிருந்து மரணத்தின் விதையாக அந்த மரத்தை கொண்டு வந்த போதும், அந்த மரத்தை யாரும் வெறுத்ததை நான் அவதானிக்கவில்லை.

அவரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த சனத்திரளைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். என் வாழ்க்கையில் நான் கண்ட மிகப் பிரமாண்டமான இறுதி ஊர்வலங்களில் ஒன்று அது. பணத்தைத் தவிர எல்லாவற்றையும் சம்பாதித்த சாச்சா அன்று மிகப் பெரிய செல்வந்தனாக எனக்குத் தெரிந்தார்.

தன்னைச் சூழ்ந்துள்ள சுழிகளின் அழுத்தங்களை உள்வாங்காமல், வாழ்க்கையை இயல்பாகவும், மகிழ்வாகவும் எதிர்கொண்டு, தனது சக மனிதர்களை எப்போதும் மதித்து, சந்தோசமாக வைத்திருந்த ஒரு தந்தையாக, நண்பனாக, உறவினனாக, ஆசிரியனாக, உளவளத்துணையாளராக, ஆற்றுப் படுத்துனராக, தையற்காரனாக, கலைஞனாக, பாடகனாக, ஓவியனாக, பொழுதுபோக்கு மீனவனாக அவர் நிரப்பியிருந்த வெளிகள், இன்று அவர் இல்லாதபோது மிகப் பிரமாண்டமான இடைவெளியாய் விரிகிறது. சாச்சாவின் மரணம் மந்திரக் கீசாவினுள் இதுவரை காலமும் அடக்கிவைக்கப்பட்டிருந்த அவரின் பிரமாண்டத்தை திறந்துவிட்டிருக்கின்றது. இன்னும் வியந்து கொண்டிருக்கின்றேன். மரங்களுக்கு பல கதைகள் இருக்கின்றன. அதில் இப்படி ஒரு கதையும் இருக்கிறது. இது ஒரு மா மரத்தின் கதை. இருக்கும்போது மரங்களை கொண்டாடியது இல்லை உலகு.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...