Saturday, May 30, 2020

சிறுவர் விதைப் பந்துகள் - ஓமந்தை, பாலமோட்டை, மாதர்பனிக்க மகிழன்குளத்தில்


நேற்றும் (19.10.2019) ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாகவே இருந்தது. சிறுவர்களின் 5000 பனைவிதைப்பு, விதைப்பந்துகள் கலந்துரையாடல், செய்முறை, ”வெளி” (இம்முறை பனை விழிப்புணர்வு) சஞ்சிகை அறிமுகம், வனங்களைத் தரிசித்தல், எங்களது நுாற்களைக் கையளித்தல், நந்திக்கடல் பேசுகிறது நுால் அறிமுகத்தில் கலந்து கொள்ளல் (வவுனியா பொதுநுாலக மண்டபத்தில்) என்று ஆசீர்வதிக்கப்பட்ட நாளாகவே இருந்தது.
வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பாகும். எந்தவித பொருளாதார எதிர்பார்ப்புக்களுமில்லாது தங்களுடைய முழுச்செலவிலேயே இயங்கும் ஒரு அமைப்பாகும். தற்போது அவர்கள் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைப்பதை செய்து வருகின்றார்கள். கிட்டத்தட்ட அதன் அரைவாசிக் கட்டத்தை நிறைவுசெய்யும் தறுவாயில் இருக்கின்றார்கள். விதைகளைக் கண்டுபிடிப்பது, அவைகளைச் சேகரிப்பது, பொறுப்பானவர்களை சந்திப்பது, அவர்களை உறுதுணையாக்குவது, அனுமதி பெறுவது, இடங்களை அடையாளம் காண்பது, விழாக்களை ஒழுங்கமைப்பது, மக்களை கூட்டுவது, விதைப்பது, பரிபாலனம் செய்வது என மிகப் பெரிய விசயங்களை அனாயாசமாக செய்து கொண்டே செல்கின்றார்கள். இதற்கு வரலாறு கடமைப்பட்டிருக்கின்றது. வரலாறு அவர்களை நிச்சயமாக உள்வாங்கும்.
இந்த அமைப்பு ஓமந்தை, பாலமோட்டை, மாதர்பனிக்க மகிழன்குளத்தில், பொதுநோக்கு மண்டபத்தில், விதைப்பந்து கலந்துரையாடல், செயன்முறை நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார்கள். அதற்கு முன் பனைவிதைப்பு நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாது அந்த வீரச் சிறுவர்கள் பனைகளை மும்முரமாக விதைத்துவிட்டு, விதைப்பந்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் மழையில் நனைந்து ஈரமாக இருந்தார்கள். அதனை ஒருத்தரும் பொருட்படுத்தாது விதைப்பந்து தொடங்கியது. கலகலப்பான அறிமுகம், ஆரம்பம், கேள்விகள், பதில்கள் போன்றவற்றை தொடர்ந்து விதைப்பந்துகள் செய்துகாட்டப்பட்டது. சிறுவர்கள் தங்களது களைப்பையும் பொருட்படுத்தாது பெரு விருப்புடன் செய்தார்கள். தொடர்ச்சியான இவ்வாறான சுற்றுச்சூழல் ஆர்வச் செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதாக வாக்குறுதியளித்தார்கள். காடுகளால் சுற்றியுள்ள அவர்களது பிரதேசங்களில், தற்போது காடுகள் அழிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தி, அந்த இடங்களில் முன்னெடுக்குமாறு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினோம். பனைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அம்சங்களை இம்முறை தாங்கிவந்துள்ள ”வெளி” சஞ்சிகையும் அறிமுகம் செய்யப்பட்டது. அமைப்பினரின் எதிர்கால முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தப் பிரதேசங்களிலிருள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கள், பாடசாலைகள் போன்றவற்றிற்காக எங்களால் நுாற்றுக்கு மேற்பட்ட நுால்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன. (இந்த நுாற்களை முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. நசீர் அகமட் அன்பளிப்பு செய்திருந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்).
மாயவன் மீடியாவின் என்னுடனான விரிவான நேர்காணலின் ஒளிப்பதிவும் இடம்பெற்றது. பனைவிதைப்பில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பனங் கூழும், மற்றும் பனை தின்பண்டங்களும் வழங்பட்டன. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஏதோ ஒருவகையில் மழை எங்களை நனைத்து குளிர்வித்துக் கொண்டே இருந்தது. நிகழ்ச்சி முடியும்போதே தெரிந்தது. குளிர்ந்தது எங்கள் மனமும்தான்.
இந்த ஆசீர்வதிக்ப்பட்ட நாளை ஒழுங்கு செய்து தந்த சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு, அதன் செயற்பாட்டாளர் அருள்ஆனந் அவர்களுக்கு ஒரு கடலளவு அன்பும். நன்றியும்.
(நன்றியும், அன்பும் - புகைப்படங்கள் - மாயவன் மீடியா





No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...