Friday, May 29, 2020

உமறு லெப்பை பணிக்கர்

யானை - 03
இன்று சில விடயங்களுக்காக சிலவற்றை பழைய கோப்புக்களில் தேடியபோது இந்தக் கடிதம் கண்ணில் தட்டுப்பட்டது. அப்போது 1998ம் ஆண்டு. நான் வந்தாறுமூலை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தேன். அந்தப் பெரிய விலங்கு சம்பந்தப்பட்ட சில விடயங்களுக்காக அனுமதி தேவைப்பட்டது. அதற்காக அருகிலிருந்த காவல் நிலையம் சென்று, அதன் பொறுப்பதிகாரியைச் சந்தித்து. எனது கோரிக்கையை முன்வைத்தேன். உடனே உணர்வெழுச்சி மிகுந்தவராக, சத்தம்போட்டு ஒரு காவலதிகாரியை அழைத்து உடனே ஆயிரம் ரூபா தாள் காசு ஒன்றைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். உடனே எனது மனதின் ஓரத்தில் ஒரு சிறு நப்பாசை ஒட்டிக்கொண்டது. ஆய்வின் மேலும், விலங்குகள் மேலும் நமக்கிருந்த ஆர்வத்தை மெச்சும் முகமாக அந்த ஆயிரம் ரூபாவை நமக்கு பரிசளிக்கப் போகிறாரோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். ஆயிரம் அப்போது ஒரளவு பெரிய காசு. அந்த நப்பாசை குறுகிய நேரத்தில் முடிவுக்கு வந்தது. காவல் நிலையப் பொறுப்பதிகாரி, அந்தக் காசு கிடைத்தவுடன் அந்தக் காசை வைத்து எனக்க பாடம் நடாத்த தொடங்குகிறார். எனக்கும் விருப்பமாக இருந்தது. நானும் கேட்கத் தொடங்குகின்றேன்.
”இந்த கொம்பன் யானையும், இந்த மனிதரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மனிதர் ஏதோ பணிக்கர் எனப்பட்டார் (பின்னாளில்
உமறு லெப்பை பணிக்கர் எனத் தெரிந்தது). 1925 களில் ஏறாவூரில் பிடித்து வளர்க்கப்பட்டு, பின்னர் தலதா மாளிகைக்கு அன்பளிப்பாக வழங்கினார். பெரகராக்களில் பங்கு பற்றும் அந்த யானை ராஜா என அழைக்கப்பட்டது. பின்னர் ஐம்பது ஆண்டுகள் சேவையாற்றி 1988ல் இறந்து போனது. அதனால் ஏறாவூருக்கு ஒரு பெருமை இருந்தது. ஏறாவூரையும், அதன் மைந்தரையும் (பணிக்கரையும்) கௌரவிக்க அரசு பணிக்கரையும், யானையையும் ஆயிரம் ரூபா தாளில் அச்சிட்டது” என்று ஒரு தேர்ந்த பேராசிரியர் போல கூறி முடித்தார். இல்லை கற்பித்து முடித்தார். பின்னர் தமிழ், சிங்கள மொழி ஒப்பீடு, திரிபுகள் என மொழிக்குள் பிரவேசித்தார். ஆங்கிலத்திலேயே இவை போய்க் கொண்டிருந்தன. எனக்கு அவர் வித்தியாசமான பொறுப்பதிகாரியாய் தெரிந்தார். பின்னர் எனது கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு கடிதத்தையும் தந்தார். பின்னாளில் எஸ்எல்எம். ஹனிபா மூலம் பணிக்கரின் கொம்பன் யானையை இலகுவாக பின்தொடர முடிந்தது. விசித்திரமான கதைகளினால் நாங்களும், எங்கள் வாழ்க்கையும் சூழப்பட்டிருக்கிறது. அவைகளை அசைபோட்டு பார்க்கும்போது வியப்பு வந்து போவதை தவிர்க்க முடிவதில்லை.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...