Saturday, May 30, 2020

மகளுக்கு ஒரு பாடசாலை கிடைத்திருக்கிறது. மகள் பாடசாலை செல்கிறார்.


ஒரு ஆசிரியனாக என்னைப் பற்றிய ஒரு சுயமதிப்பீடு எனக்குண்டு. ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு எனக்குத் தெரிந்தவற்றை சொல்லிக் கொடுப்பதுண்டு. எனது பழைய மாணவர்களுடன் இன்றும் தனி முகநூல் பக்கம் ஒன்றுடன் தொடர்பில் இருக்கிறேன். நிறைய மாணவர்களிடத்தில் அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தியதில் ஒரு வேளை எனக்கு சில பங்குகள் இருக்கலாம் என நிறைக்கிறேன். நிறையப் பேர் ஒரு தந்தைமையைத்தான் என்னில் பார்த்ததாகச் சொன்னார்கள். மாணவர்களுடன் கண்டிப்பாக இருந்தாலும், மிகுந்த நண்பத்துவமாக நிறைய நேரங்களில் இருந்திருக்கின்றேன். அவ்வாறு இருக்கவும் முயற்சித்திருக்கிறேன். இலங்கையைப் பொறத்தவரை வரவுக்கான ஒப்பத்தையும், வருகையையும் யாராலுமே கேள்விக்குட்படுத்த முடியாததான தோற்றமளிக்கும் அரச பணிகள் இருக்குமானால் அதில் முதனிலைப்படுத்த வேண்டிய மிகச் சிலவற்றில் பல்கலைக்கழக ஆசிரியத்துவமும் ஒன்றாகும் என நினைக்கிறேன். இருந்தும் ஐந்து நாட்களும் செல்கிறேன். மீதமுள்ள இரு நாட்களும் பெரும்பாலும் மாணவர்களுடனே களப் பயணங்களில் இருக்கிறேன். ஆசிரியத்தை பொருளாதார நலன்சார்ந்து நோக்கிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானதாகும். ஆசிரியத்தை சம்பளம் தரும் தொழிலாக பார்த்ததில்லை. மாறாக, நிறைய தியாகங்களுக்க மத்தியில் விருப்பத்துடன் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையாகவே பார்க்கிறேன். இவ்வாறு கற்றல்கள், கற்பித்தல்கள் போன்றவற்றுடன் நானும், நான் சார்ந்தவைகளும் இருக்கையில், மனதின் ஒரு மூலையில் எப்போதும் ஒரு வலி இருந்துகொண்டே இருந்தது.
“நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியான எனது மகளுக்கு கற்பதற்கு ஒரு பாடசாலை இல்லையே”
*
கவிஞர் Sri N Vatsa எனது மகள் சம்பந்தப்பட்ட எனது கவிதை ஒன்றை மொழிமாற்றம் செய்திருப்பார். அதிலே கடைசி வரிகளில்
…..
To swallow the ocean roaring in a straight line like a wide street in front of the house once at least with your eyes;
Fly along with the tail of the dragonfly that sips the nectar off the tips of brushy grass;
Hug and swim with the tadpole from the overflowing pond;
Roll through the colours of roaming butterflies and dance;
Imitate the call of the koel on the neighbour's neem tree;
Herd the goats and feed green leaves;
Retreat when chased by a cow;
Wave out a hand to those going to school;
Like a homeless vagrant hungry for ten days,
You would have had your eyes on the way for your legs.
………
வீட்டு முன் பெருந்தெரு நேர்கோட்டின்
ஆர்ப்பரிக்கும் நீலக்கடலை
கண்களால் ஒருமுறையேனும் விழுங்கிட
தூரிகைப்புல் நுனி தேன்குடிக்கும்
தும்பியின் வாலுடன் பறந்திட
ததும்பிய குட்டையின் வாலாந்தவளையை
வாரியணைத்து நீந்திட
வலசை போகும் வண்ணத்துபூச்சிகளின்
வண்ணங்களில் குழைந்தெழுந்து நடனமாடிட
அயல் வேம்பின் குயிலொடு குரலிட
ஆடு விரட்டி குழை கொடுத்திட
மாடு துரத்தி பின் வாங்கிட
பள்ளிசெல்பவர்களுக்காவது ஒரு கையசைத்திட
பத்துநாள் பட்டினியோடு
பசியாக பரதேசிபோல்
உன் கால்களுக்காக
விழிமேல் வழிவைத்து பாத்திருப்பாய்.
அவ்வாறான ஒரு மாலை வேளையில், எனது வீட்டு முன்னாலுள்ள வீதியில் மகளை சக்கர நாற்காலியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, கல்முனை கல்வி வலய விசேட தேவை கல்விக்கு பொறுப்பான கல்வி அதிகாரி ரீ.எல். ஹபீபுல்லாஹ் மோட்டார் சைக்கிளில் எங்களைக் கண்டு, கடந்து செல்கிறார். சிறிது தூரம் சென்று சைக்கிளை திருப்பி வருகிறார். பிள்ளைக்கு என்ன என்று கேட்கிறார். சொல்கிறேன். பாடசாலை செல்கிறாரா என்று கேட்கிறார். மகளுக்குரிய பாடசாலைகள் இங்கு இல்லை. அதனால் இரு ஆசிரியைகளை வைத்து கற்பித்து வருகிறோம் என்கிறேன். எங்கள் வீதியில் இருக்கும் பாடசாலையில் (கமு-அல்மதீனா வித்தியாலயத்தில்) விசேட தேவையுடைய மாணவர்களுக்குரிய பிரிவை தொடங்கியுள்ளோம். மகளை அங்கு அனுப்புங்கள் என்கிறார். வீட்டிற்கு வந்து என்னிடமும், மனைவியிடமும் கதைக்கிறார். நம்பிக்கை தருகிறார். அடுத்த நாள் விசேட கல்விக்குரிய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் முகம்மட் சியாமுடன் வீட்டுக்கு வந்து இருவரும் மீண்டும் நம்பிக்கை தருகிறார்கள். மகளை அந்தப் பாடசாலைக்கு அனுப்பச் சொல்கிறார்கள். அரைகுறை மனதோடு (ஏனெனில் மகளின் எல்லாவற்றிற்கும் ஒருவர் முழுநேரமாக வகுப்பறையில் துணையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது அது பாடசாலையில் நிறைய நிருவாகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற பயம் இருந்தது), ஒரு திங்கட்கிழமை (29.07.2019) பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர், அப்பாடசாலையில் கடமைபுரியும் கவிஞர் ஜெமில் போன்றவர்களைச் சந்திக்கின்றேன். அவர்களும் ஆறுதலான நம்பிக்கைதரும் வார்த்தைகளைத் தருகிறார்கள். மகளுடன் அவரின் தாய் குறிப்பிட்டகாலம் பாடசாலை வகுப்பறையில் முழுநேரமும் இருக்கலாம் என்ற சலுகை வார்த்தையொன்றை அதிபர் தருகின்றார். புதன்கிழமை ஒரு விடுமுறை. அதனால் வியாழன் (01.08.2019) மகளை கூட்டிவருவதாக கூறுகிறேன். தன்னலமற்ற ஆசிரியம் ஒன்றின் தத்தைக்கு இளைப்பாற அதன் பத்தரை வயதில் கிளையொன்று கிடைத்துவிட்டது. மகள் பாடசாலை செல்லப் போவதாக நினைக்கையில் மனம் மிகுந்த மனவெழுச்சியில் திளைக்கிறது. மனம் கண்ணீரால் பேசத் தொடங்குகிறது. விட்டு விடுதலையாகி தனிமைச் சிறையிலிருந்து, சுதந்திர பறத்தலுக்கு ஒரு வெளி கிடைத்ததாக, அந்த நாள், வியாழன் எப்போது வரும் என்று மகள் கொண்டாடத் தொடங்கியது.
*
புதன் போகிறது. வியாழன் வருகிறது. மகள் பாடசாலை போகவில்லை. பாடசாலையில் மகளை எதிர்பார்த்து கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர், அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் காத்திருக்கிறார்கள். வகுப்பறைக்கு சக்கர நாற்காலியில் செல்வதற்கு வசதியாக படியை நிரப்பி புது வழி செய்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்;. மகள் போகவில்லை. கல்வி அதிகாரியும், பிரிவு பொறுப்பாசிரியரும் வீட்டுக்கே தேடி வருகிறார்கள்;. அவர்களுக்கு மகள் செவ்வாய்க்கிழமை “பெரிய மனுசியான” கதையைச் சொல்கிறோம். அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அது அந்தத் தவணையின் பரீட்சைக்கு முன்னான கடைசி வாரம். அடுத்த தவணை ஆரம்பத்தில் பிள்ளையை கூட்டி வருமாறு கூறுகிறார்கள்.
*
நானும், மனைவியும் முதல் நாள் (11.09.2019) பாடசாலைக்கு கூட்டிச் சென்றோம். மகளை வரவேற்க எல்லோரும் காத்திருந்தார்கள். அழுதே விட்டேன். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் தன்னை ஒரு பாடசாலையில் சேர்க்க வேண்டும் என்று மகள் அழுதபோது, பதில்கள் தெரியாமல் அழுந்தியிருந்த எனக்கு, மகளுக்கு பாடசாலை கிடைத்தபோது அழுதேவிட்டேன்.
*
பின்னர் மெல்ல மெல்ல அற்புதங்கள் நிகழத் தொடங்கின. எப்போதும், எதற்கும் மகளுக்கு வகுப்பறையில் மேலதிக துணை தேவைப்படும் என்று நினைத்த எங்களுக்கு, முதல் இரு நாட்கள் முழுவதும், அடுத்த இரு நாள் ஒவ்வொரு மணித்தியாலமும் தாயின் துணை தேவைப்பட்டது. ஐந்தாவது நாள் மகளே ஒருத்தரும் தேவையில்லை என்றார். அதற்குப் பிறகு பாடசாலக்கு கூட்டிச் செல்வதற்கும், கூட்டிவருவதற்குமே அந்த நேரங்களில் மற்றவர்கள் தேவைப்பட்டனர். அந்த வகுப்பறையில் ஒரு ஆசிரியை, இரு பயிலுனர் ஆசிரியைகள், பத்து மாணவர்கள். மகளுக்கு மட்டும்தான் மாணவர்களில் நடக்கமுடியாது.
இலங்கைபோன்ற நாடுகளில் விசேடதேவையுடையவர்களின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் சமூகவெளிகளில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கல்வியில்; போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம். மகள் செல்கின்ற பாடசாலை அறுநூறுக்கு மேற்பட்ட சாதாரண மாணவர்கள் கற்கும், சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலை. அவர்களிருக்கின்ற வசதியை வைத்து, விசேட தேவையுடைய மாணவர்களுக்குரிய ஒரு வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார்கள். அது சிறியதாயும், வசதிகள் குறைந்ததாகவும் காணப்படுகிறது. அவர்களுக்குரிய நிரந்தர கட்டடமொன்றை உருவாக்க வேண்டும். அங்கு வசதிகள் நிறைந்த வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். வெளிநாட்டிலுள்ள நண்பர்களும், உள்நாட்டிலுள்ள நண்பர்களும் உதவுவதாக வாக்களித்துள்ளனர். இங்கு மட்டுமல்ல இன, மதம், பிரதேசம் கடந்து ஒவ்வொரு கல்வி வலயத்திலும் இவ்வாறான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு கை தட்டி ஓசை எழுப்ப முடியாது. அது எல்லோரினதும் ஒத்துழைப்பினாலும், கூட்டு முயற்சியினாலுமே சாத்தியப்படும்.
*
வகுப்பறையில் மகளுக்கு தாய் தேவைப்படவில்லை. ஆசிரியைகளும், சக மாணவர்களும் மகளுக்கு தாய்களாகிப் போயிருந்தார்கள். அதிர்ந்துவிட்டேன். ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் பரிசுதான். அந்தப் பரிசின் உள்ளடக்கங்கள வெவ்வேறு நேரங்களில் திறந்து கொள்ளும். வாழ்க்கையின் போக்கை யாராலும் எப்போதுமே அனுமானிக்கவும், புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. அதன் எந்த முடிச்சுகள் அற்புதக் கணங்களை வைத்திருக்கும் என்றோ, எந்தக் கணத்தில் அற்புத முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் என்றோ யாராலும் எப்போதுமே அனுமானிக்கவும், புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. அது எழுதிச் செல்கிறது. அதனைத் தொடர்கிறோம்.










No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...