Friday, May 29, 2020

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பசுமையாக்கல் இப்பிரதேசங்களின் வைத்தியத்துறைக்கு முன்னுதாரணம்.


ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்).
இரு நாட்களுக்கு முன், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின், தர முகாமைத்துவத்திற்கு (Quality Management) பொறுப்பான வைத்திய அதிகாரி ஆர். நியாஸ் அகமட் அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அடிப்படையில் அவர் ஒரு கவிஞர். இலக்கியவாதி. தங்களது வைத்தியசாலையின் நிலத் தோற்றவுரு, பசுமையாக்கம் போன்றவற்றை மேலும் விருத்தி செய்வற்கு எனது அனுசரணையை கேட்டிருந்தார். நேற்று மாலை அவர்களின் வைத்தியசாலை சென்றிருந்தேன். நியாஸ் வைத்தியசாலையைின் மருத்துவ அத்தியட்சகர் (மெடிக்கல் சுப்ரிண்டன்ட்) டொக்டர் ஏ.எல்.எப். றகுமான் அவர்களிடம் கூட்டிச் சென்றார். அதன் பின்னர் அந்த வைத்தியசாலையின் பசுமையாக்கல், நிலத்தோற்றவுரு வேலைகளில் நீண்டநாட்களாக மிகவும் ஈடுபாட்டுடன் இயங்கிவரும் அட்டாளைச்சேலன கல்விக் கல்லுாரி விரிவுரையாளர் முகம்மட் அமீரும் சேர்ந்தார். எல்லோருடனும் சுமார் மூன்று மணித்தியாலயங்களுக்கு மேலாக வைத்தியாசலையின் தாங்கள் எடுத்துச் செலலும் பணிகளை டொக்டர். றகுமான் முற்று முழுதுாக சுற்றிக்காட்டியும், எடுத்துமுரைத்தார்.

நான் பிரமித்துப் போனேன். டொக்டர் றகுமான். ஒரு இயற்கை உபாசகன். இயற்கை விரும்பி. அவருடைய எண்ணத்தில், வழிகாட்டுதலில், இயக்கத்தில் பல விடயங்களைக்கண்டு அதிசயித்துப் போனேன். மா, நாவல், அத்தி, இத்தி, நறுவிளி, ஜம்பு, ஜேம், முந்திரி, விழா, காயா, மருதை போன்ற பல மரங்கள் நெடுநெடுவென வளர்ந்து வளர்ந்து நிற்கின்றன. எங்கும் நுாற்றுக் கணக்கில் பரவிக் காணப்படும் பூமரங்கள் பல்வேறு நிறங்களில் மலர்ந்து நிற்கின்றன. இன்னொரு புறம் பல வகையான மரக்கறி வகைகள் (கத்தரி, மிளகாய், றாபு, பீற்றுாட், பயற்றை, பாகல் போன்றவை) பயிரிடப்பட்டு காய்த்து நிற்கின்றன. இன்னொரு புறம் கடுகு, நிலக்கடலை போன்றவை பரீட்சார்த்த நிலையில் வெற்றிபெற்றிருக்கின்றன. டாகடர் றகுமானும் குழுவினரும் பொன்சாய் மரக்கலையை கூட பல மரங்களில் பரீட்சித்து வெற்றி பெற்றிருக்கின்றார்கள். எங்கும் பச்சை, எதிலும் பச்சை. எங்கும் வண்ண மலர்கள், எங்கும் மரங்கள்.

திண்மக் கழிவு முகாமைததவத்தில் திண்மக் கழிவுகளை கலைப்பொருளாக்கத்தி திண்மக் கழிவின் அளவினையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் குறைப்பது ஒரு பிரபல்யம் குறைந்த முறையாகும். என்றாலும் அதனையும் அவர்கள் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றார்கள். ஊசி மருந்து போத்தல்களை பாவித்து ஒரு சிற்பத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். மருந்துகள் வரும் பிளாஸ்ரிக் போத்தல்கள், கலன்கள் தாவரங்கள், செடிகள், புற்கள் வளரும் சட்டிகளாகவும், தொங்கு சட்டிகளாகவும் பாவிக்கப்படுகின்றன. குளிரூட்டிகளிலிருந்து வடிகின்ற நீலர ஓன்று சேர்த்து அதனை நான்காம் மாடியிலுள்ள மரக்கறிப் பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சுகிறார்கள். பயற்றை நன்றாக வந்துள்ளது. கழிவு நீரைப் பரிகரித்து மீண்டும் மரங்களுக்கு பாய்ச்சுகிறார்கள். 

வைத்தியசாலைகளுக்குரிய எந்த ஒரு மணத்தையும் குறிப்பாக கழிவு நீர் தொட்டிகளுக்கு அருகில் உணர முடியவில்லை. அங்கே வாழை மரங்களும் வைத்திருக்கின்றார்கள். வாழையும் குலைகளுடன் நன்றாக வந்துள்ளது. இன்னொரு புறம் சிறிய குளமும், நீர் வீழ்ச்சியும், உருவாக்கியிருக்கிறார்கள். அதற்குள் நீண்ட காலத்திற்கு முன் இரண்டு (ஆண், பெண்) சிவப்பு திலாப்பியாக்கள் விடப்பட்டிருக்கின்றன. இன்று இரண்டு, பல நுாறு சிவப்பு திலாப்பியாக்களாக பெருகிக் காணப்படுகின்றன. அந்த நீர்வீழ்ச்சிக்கருகில் எழுந்தமானமாக, எந்த ஒழுங்குமில்லாத காடு போன்று மரச் செறிவான இடம் ஒன்று உருவாகி வருகின்றது. ”மியவாக்கி” முறையை என்னவென்று தெரியாமலே பரீட்சித்து முயற்சித்திருக்கிறார்கள். நன்றாக வருகின்றது. சில பசுமை வீடுகள் காணப்படுகின்றன. அவைகளில் அவர்களுக்குத் தேவையான பூ மரங்களையும், மரக்கறி செடிகள், பெரு மரங்களின் கன்றுகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இன்னொரு புறம் அவர்கள் உருவாக்கிய சேதன பசளையை அவர்களது பயிருக்கு இடுகிறார்கள். சுற்றுச் சூழலைப்பொறுத்தவைரை எங்குமே அவர்கள் சிறந்த வழிமுறைகளையே (Best Practices) கையாளுகிறார்கள். நவீன எண்ணக்கருவான (Cleaner Production) யில் அதிக அக்கறைகாட்டி, வளங்கள் வீணாவதைத் தவிர்த்து, வினைத்திறனான வளங்களின் பாவனையைக் கூட்டியிருக்கிறார்கள். எதனை எழுதுவது எதனை விடுவது என்றே தெரியவில்லை.

நவீன சூழலியலில் காலைநிலை மாற்றத்தை எதிர்கொண்டு போராடுவதில் மருத்துவத்துறையின் பாரிய பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் மருத்துவத்துறை பாரியளவில் மின்சாரம், நீர், உணவு, கட்டுமானப் பொருட்கள் போன்ற அதிகளவான வளங்களை அதீத கவனிப்புக்காக (நோயாளிகளின்மீது) உபயோகம் செய்கின்றன. இதன் காரணமாக, இந்த வைத்தியத் துறையினடமிருந்தும் சுற்றுச் சூழலானது நன்மையை எதிர்பார்த்து நிற்கின்றது. ஏனெனில் மருத்துவத்துறையினரால் எளிமையாகவும், உறுதியாகவும், நிலைபேறாகவும் திட்டங்களை வகுக்கக்கூடிய திறன் இருக்கின்றனது. அந்த வகையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் ஒரு முன்னோடி வைத்தியசாலையாகவும் இருக்கின்றது. வருடாந்தம் எவ்வளவு தொன் காபனைப் மரங்களின் மூலம் பதிக்கின்றார்கள் என்பதையும் கணக்கிட்டு வைத்திருக்கின்றார்கள். அதேபோல அவர்களிடமிருக்கின்ற தாவரங்களையும் விஞ்ஞானப் பெயர்களுடன் பட்டியல்படுத்தி வைத்திருக்கின்றனார்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்காக இரு தடவைகள் ISO 14064-12006 விருதையும் இரு தடவைகள் பெற்றிருக்கின்றார்கள்.

பொது வைத்தியத்துறையில் பரீட்சயமும், இயற்கையின்மீது ஆர்வமும் உள்ள ஒருவரால் செழிப்பான, சடைத்த, வடிவான தாவரங்களும், நிலத்தோற்றவுரும் நோயைக் குணப்படுத்தும் வேகத்தை கூட்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும். இதனையே ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. டொக்டர் றகுமானும், குழுவினரும் இதனை மிக நன்றாக அறிந்தும், புரிந்தும், உணர்ந்துமுள்ளார்கள்போல் தெரிகின்றது. நிழல்களும், அமைதியும், இயற்கையுடன் அமிழ்ந்து போகும் வாய்ப்புகளும் எந்த நோயின் தீவித்தையும் குறைக்கும். இவைகள் நோயாளிகளின் நோயை மட்டும் குறைக்காது, சக பணியாளர்களின் மனங்னளையும், பணியைநோக்கி நேர்மறையாக ஆற்றுப்படுத்தும். அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நான் அவதானித்த பசுமை, பறவை, பூச்சி கவர்ந்திழுத்தல், பல நிற மலர்கள், அவற்றின் மணங்கள், பசுமையை அணுகுவதற்கான பாதைகள், மருத்துவ தாவரங்கள், நீரின் சலசல, நீர் வீழ்ச்சியின் சத்தங்கள் போன்றன இந்தப் பிரதேங்களின் மிக முக்கியமான பசுமைச் சாதனையைச் செய்த வைத்தியசாலையாக அல்லது பசுமையாக்கலின் மூலம் நோயை விரைவாக குணப்படுத்துகின்ற வைத்தியசாலையாக இருப்தைனையே நான் உணருகின்றேன்.

இதற்குரிய முற்றுமுழுதான பாராட்டுக்களும் டொக்டர் ஏ.எல்.எப். றகுமான் அவர்களையும், அவர்களின் குழுவினரையுமே சாரும். தான் செய்கின்ற பணியையும், பணி செய்கின்ற இடத்தையும் நேசிப்பது, சக பணியாளர்களை தட்டிக் கொடுப்பது, பாராட்டுவது, அவர்களுடன் எளிமையாக பழகுவது, விரைவாக முடிவெடுப்பது, வேகமாக செயற்படுத்துவது போன்றன அவரில் நான் கண்ட சில தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ பண்புகளாகும். அவர்களின் பசுமையாக்கலின் சில இன்னும் முன்னேற்றம் செய்யப்பட வேண்டிய பகுதிகள் இருக்கின்றன. அவைகளையும் செய்தால். முழுமையடைந்துவிடும். விரைவில் செய்வோம். நன்றி டொக்டர் நியாஸ் அகமட், டாக்டர் றகுமான்.

இயக்கவியலில் ஒரு உண்மையிருக்கிறது. ஒத்த துணிக்கைகள் ஒன்றாக இயங்கி ஒரே இடத்தில் படிவடையும். சமீபகாலங்களில் எனக்கு அது பேருண்மையாக இருக்கிறது. காலத்தை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. விரிந்துகொண்டிருக்கும் எல்லையில்லா அதன் புள்ளிகளில் அபூர்வமான மனிதர்களை அடிக்கடி சந்திக்க வைக்கின்றது.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...