Saturday, May 30, 2020

உலகின் நுரையீரல் பற்றி எரிகின்றது.


ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

“நீங்கள் உங்கள் படுக்கையை  அசுத்தப்படுத்தினால்  அந்தக் கழிவுப் பொருட்களாலேயே  மூச்சுத் திணறி முடிவடைவீர்கள். எந்த கடவுள் உங்களை இந் நிலத்திற்கு கொண்டு வந்து ஏதோ ஒர காரணத்திதற்காக சிவப்பிந்தியரை வெற்றி கொள்ள வைத்திருக்கிறாரோ அவரது சக்தியாலேயே நீங்கள் அழிவீர்கள்”.
(செவ்விந்தியர்களின் தலைவர் சியாட்டில், அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்டனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து…)


அமேசன் காடு உயிரியற்தொகுதியானது பிரேஸில், பொலிவியா, பராகுவே, பெரு, கொலம்பியா, வெனிசுவலா, ஈக்குவடோர் போன்ற பல நாடுகளை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. அமேசன் மழைக்காடுகளில் தீ பரவல்; என்பது வழமையான ஒரு வருடாந்த நடிவடிக்கையாகும். பொதுவாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரம் வெட்டுதல், அகழ்வுக் கைத்தொழல் போன்றவற்றிற்காக வருடாந்தம் தீயின் மூலம் காடுகள் அழிக்கப்படுகின்றன.

இந்த வருடம் இவ்வாறு காடுகள் எரிவது மிகவம் அசாதாரணமானதாக காணப்பட்டது. பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறவனம் ஜீன் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை செயற்கைக் கோள் தரவுகளை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்தக் கண்டுபிடிப்பை உறுதி செய்தது. அதாவது ஓகஸ்ட் 29ம் திகதி வரை சுமார் 88816 காட்டுத் தீ சம்பவங்கள் அமேசன் காட்டின் 60 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள பிரேசில் பூராக நடந்ததாகவும், இது முன்னைய ஆண்டைவிட 80 சதவீதம் அதிகரித்தும் காணப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை பிரேசில் அரசு மறுத்திருந்தது. இந்தக் காலப் பகுதிகளில் மற்றைய அமேசன் வலய நாடுகளிலும் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்திருந்ததாக அறிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. அமேசானிலிருந்து ஆயிரத்தி எழுநூறு கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள சாபோலொ என்ற நகர் வரை காட்டுத் தீயின் புகை பரவிக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பிரேசிலின் அமேசன் காடுகளில் ஒன்றரை கால்பந்து மைதானம் அளவு பரப்புள்ள காடுகள் அழிக்கப்படுவதாக பிரேசிலின் விண்வெளி ஆய்வுநிறவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2019 இல், 906000 ஹெக்டேயர் பரப்பளவுள்ள காடு காட்டுத் தீ பரவலால் அழிக்கப்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றகனவே இந்தப் பூமியானது காலநிலை மாற்றத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தவேளையில், இந்தக் காட்டுத் தீயானது அதிகளவில் காபனீரொட்சைட்டு, காபனோரொட்சைட்டு போன்ற பச்சைவீட்டு வாயுக்களை வளிமண்டலத்திற்கு சேர்த்திருந்தது. அத்துடன் உயிரினப் பல்வகைமைக்கும் பாரிய அழிவை ஏற்படுத்தியதுடன், கட்டடப் பொருட்களையும், மூலிகைகளையும், உணவுகளையும் அழித்ததன் காரணமாக, காட்டை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த 306000 ஆதிக்குடிகளின் வாழிடத்தையும், வாழ்க்கையையும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக இது திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக கருதப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது. அத்துடன் பெரும் நெருப்பின் வெப்பத்திற்கு இசைவாக்கப்படாத சிறிய வேகமாக அசைய முடியாத அணுங்குகள், பல்லிகள், எறும்பு தின்னிகள், தவளைகள், பறவைக் குஞ்சுகள், இளம் பாலூட்டிகள் போன்ற விலங்குகள் பாரியளவில் அழிந்துள்ளன. அத்துடன் பல உள்நாட்டுக்குரிய சுதேச தரை விலங்குகளும் அழிந்துள்ளன. சில விலங்குகள் முற்றாகவே அழியும் வாய்ப்புக்களும் உள்ளன. இந்த காட்டு தீயின் காரணமாக நீரின் பௌதீக, இரசாயன இயல்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அமேசன் நதியில் வாழ்ந்த டொல்பின்கள், மீனினங்கள் போன்ற பல நீர்வாழ் விலங்கினங்களும் அழியும் நிலைக்கு வந்துள்ளன என்று அறிக்கையிடப்பட்டிருக்கிறது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் காட்டுத் தீயினால் கடுமையாக காயமடைந்த நிலையில், சிகிச்சைகள் இன்றிய நிலையிலும் காணப்படுகின்றன. அத்துடன் இந்தக் காட்டுத் தீயின் காரணமாக வளிமண்டலத்தின் காபனோரொட்சைட்டு வாயவின் செறிவு அதிகரித்திருப்பதால், இதனைச் சுவாசிக்கும் மக்கள் தலைவலி, வாந்தி, மயக்கம், சுயநினைவு அற்ற நிலை, மாரடைப்பு போன்ற நிலைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த அயன மண்டல மழைக்காட்டின் பல விதானங்களும் தீயின் காரணமாக அழிக்கப்பட்டதனால், அடியிலுள்ள சூழற்றொகுதிகள் இலகுவாக சூழலுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரணங்களால் இந்தக் காட்டின் சக்திப் பாய்ச்சல், உணவுச் சங்கிலி, உணவு வலை போன்றவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்டுத் தீக்களுக்க மூல காரணம், அதீத இலாபத்தை மையமாக கொண்ட உற்பத்தியின் மீது நம்பிக்கை கொண்ட தீவிர வலதுசாரியான பிரேசிலின் ஜனாதபதி ஜயர் பொல்சொனாரோ என உலகில் பல அரசு, அரசுசார நிறுவனங்களும், பிரான்ஸ், ஜேர்மன் உட்பட பல அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டினர். 2019, ஜனவரியில் அதிகாரத்துக்கு வந்த இவர், இறுக்கமாக இருந்த சுற்றுச்சூழல் சட்டங்களை, காடுகளை அழித்து உபயோகப்படுத்துவதற்கு வசதியாக நன்றாகத் தளர்த்தினார் என்றும், அதன் காரணமாக காடு அழிப்பை, தீ வைத்தலை தூண்டினார் என்றும், காடழிப்பு சம்பந்தமான சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் தரவுகள் பொய் என்று கூறினார் என்றும், அதன் மூலம் வேண்டுமென்றே காட்டுத் தீயை கட்டுப்படுத்தத் தவறினார் எனறும் ;பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக காடழிப்பை கட்டுப்படுத்துவதில் அசமந்தப் போக்கைக் கையாண்டு கொண்டிருந்த பிரேசிலின் ஜனாபதிக்கு உலக நாடுகளினதும், ஜி ஏழு நாடுகளினதும் நெருக்குதல் காரணமாக காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 44000 இராணுவ வீரர்களை அவர் அனுப்ப வேண்டியிருந்தது. இருந்தும் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் 3859 தீ வைப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது.

அமேசன் மழைக்காடுகள் 670 மில்லியன் ஹெக்டேயர் பரப்பைக் கொண்டது. மனிதத் தலையீடுகள் காரணமாக அமேசன் மழைக்காடுகளில் ஏற்படுத்தப்படும் சமனிலைக் குழப்பமானது, நேரடியாக உலகின் காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் என்று சொல்லப்படுகின்றது. ஏனெனில் உலகில் வெளியிடப்படும் புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருக்கின்ற காபனீரொடசைட்டு வாயுவின் 25 சதவீதத்தை ஒளித்தொகுப்பு மூலம் உறிஞ்சும் தகவுகளை அமேசன் காடுகள் கொண்டிருப்பதால் புவி வெப்பமாதலலை பாரியளவில் தடுக்கின்றன. அத்துடன் ஒளித்தொகுப்பு மூலம் உலகத்திற்கு தேவையான 20 சதவீதமான ஒட்சிசன் வாயுவை உற்பத்தி செய்வதனால் உலகின் நுரையீரல் என்றும் அழைக்கப்படுகின்றது. அத்துடன் பல இலட்சக்கணக்கான ஆதிக்குடிகள், சுமார் 2.5 மில்லிய்ன பூச்சியினங்கள், 390 மில்லியன் மரங்கள், 40000 தாவர வகைகள், 2200 மீனினங்கள், 1300 பறவையினங்கள், 427 பாலூட்டிகள், 378 ஊர்வனங்கள் போன்றவற்றைக் கொண்ட மிகவும் வளமான உயிரினபல்லினத்தன்மை அதிகம் கொண்ட ஒரு தொகுதியாகும்.

அமேசன் காடுகளின் தாவரங்கள் ஆவியுயிர்ப்பின் மூலம் உருவாக்கும் பாரியளவிலான நீராவியானது, பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் “வளிமண்டல ஆறாக” பிரயாணம் செய்து, அந்தந்த நாடுகளின் மழைவீழ்ச்சிக்கும் காரணமாக அமைகின்றது.

முதலில் நவம்பர் தொடக்கம் ஜீன் மாதம் வரையான மழை காலத்தில்; புல்டோசர்கள் அல்லது இராட்சத ரெக்றர்கள் கொண்டு மரங்களை சாய்த்து, விழ வைக்கிறார்கள். பின்னர் உலர்ந்தவுடன் ஜீலை தொடக்கம் ஒப்ரோபர் வரையான வெப்ப காலத்தில்  அந்த உலர்ந்த மரங்களுக்கு தீ வைக்கிறார்கள். இப்படி வைக்கப்படும் தீ பல சமயங்களில் அருகிலுள்ள காடுகளுக்கும் விபத்தாக பரவியிருக்கின்றது. அமேசனைச் சுற்றியுள்ள நாடுகளில் பல இறுக்கமான சட்டங்கள் அமுலில் இருந்தும், அவை ஒழுங்காக அமுல்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக பல சட்டவிரோத தீவைப்பு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

அமேசன் ஈரலிப்புள்ள பசுமையான அயனமண்டல மழைக்காடு என்ற காரணத்தால் அது இலகுவாக இயற்கையாக எரிவதற்கு சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே அவை மனிதர்களாலேயே வேண்டுமென்றே எரிக்கப்படுகின்றன. ஏனெனில் நிறைய தீ வைப்பு சம்பவங்கள் பெருந்தெருக்களை அண்டிய பகுதிகளிலும், விவசாய காணிகளுக்கு அருகிலேயுமே நடைபெற்றுள்ளன. அத்துடன் மனித சஞ்சாரமற்ற பகுதியில் தீ பரவல் சம்பவங்கள் ஏற்பட்டதும் குறைவு. காடு இயற்கையாக எரியும்போது வெளியேற்றும் காபனைவிட, நன்றாக உலர்ந்த மரங்களுக்கு தீ வைக்கப்படும்போது வெளியேற்றப்படும் காபனின் அளவு மிக அதிகமானதாகும். இதன் காரணமாக முற்று முழுதாக மனிதர்களே இந்த தீவைப்பு சம்பவங்களுக்கு காரணமெனக் கூறப்படுகின்றது. இந்த தீ வைப்பின் காரணமாக ஏற்பட்ட சமூக பொருளாதார, சுற்றுச்சூழல் இழப்புக்கள் கணிக்கப்பட்டதை விட இன்னும் அதிகமாக இருக்கவே வாய்ப்பிருக்கின்றது. பல இழப்புக்கள் மீளமுடியாத நிரந்தரமான இழப்புக்களாகவே இருக்கப் போகின்றன. அதீத இலாபத்தை மையமாகக் கொண்ட சூழலியல் ஏகாதிபத்தியவாதத்தின் தீங்கான பக்கத்திற்கு இந்த உலகின் நுரையீரல் பற்றி எரிதல் சிறந்த உதாரணமாகும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...