Saturday, October 8, 2011

சந்தன


-அம்ரிதா ஏயெம்-
...தோணியிடம் போகாமல், பக்கத்தில் இருந்த குளக்கரையில் எனக்கு ஆத்திரம் வரும் போது பாவிக்கும் ஆங்கில தூசண வார்த்தையை சத்தமாகச் சொல்லி நீருக்கு உதைக்கிறேன். நீருடன் தெறித்த சேறுகளையம், கந்தல்களையும், அழுக்குகளையும் எதிராக வீசிய கச்சான் காற்று மீண்டும் என் மேல் படவைத்தது. எனது முகத்திலிருந்து சேறுகளும், கந்தல்களும், அழுக்குகளும் வழியத் தொடங்குகின்றன.
                                                             **

“வாணகாவ எகக் ” என்றவுடன் 3.50 சதம் நீட்ட என்னை ஒரு தரம் பார்த்து விட்டு ரிக்கட்டை கண்டக்டர் கிழித்து தருகிறான். இருந்தபடி பார்க்கிறேன்;. வழமையானவைகள்தான். பௌத்த அறநெறிப் பாடசாலைக்கு செல்லச் சிறகாய் விரிந்த வெள்ளை ஜாக்கட், வெள்ளைப் பாவாடை நீள வெள்ளைச் சட்டை, வெள்ளைச் சாறன் போட்ட ஐந்தாறு சிறுவர்களுடனும் சிறுமியர்களுடனும் அருகேயுள்ள கரும்பு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுடனும் வழமையான என்னையும் சேர்த்து அந்த பஸ் கிலுகிலுத்து சத்தம் போட்டு சுமந்து போய் கொண்டிருந்தது. இரு பக்கமும் மலைகளால்; எல்லையிட்ட வயல்கள், அந்த வயல்களில் பிட்டபாகத்தை கச்சையில் மறைத்து ஏர் மிதிக்கும் உழவர்கள், சின்ன சின்னப் பற்றைகள், அதற்கப்பால் ஆளுயர பச்சைப் பசேலென்று புல் வளர்த்த குளக்கட்டு இடையிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக மாட்டுக் கூட்டம், எருமைக் கூட்டம், ஆட்டுக் கூட்டம், வைக்கோலும் காட்டிலிருந்து விறகும் ஏற்றி வரும் இரட்டை மாட்டுக் கரத்தைகள். சூரிய வெளிச்சம் கிழித்து காற்று உறுஞ்சி வானில் பறக்கும் பறவைகள். இவைகளுடே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போன்று வீதி-அதன் அருகே சமாந்தரமாக வாய்க்காலுடன் சென்று கொண்டிருந்தது. இந்;த வீதியில்தான் உறுமி உறுமி பஸ்சும் சென்று கொண்டிருந்தது.

கொண்டு வந்த பையை முதுகுக்குப் பின்னால் கொழுவி விட முதுகு நேராகியது. நிமிர்ந்து பாக்கிறேன். எனக்கு முன்னால் 120 அடி நீளமுள்ள 50 அடி உயர வாண் எனப்படும் மதகுப் பாலம் இருந்தது. அதன் கீழே பெரியதும் சிறியதுமான ஒழுங்கற்று எற்றுண்டு கிடந்த கூழாங்கற்களும், மலைக் கற்களும் தண்ணீர் கண்டு கனகாலம் என்று சொல்லின. அருகேயிருந்த புஞ்சிகாமினேயின் வாழைக்குலையும், தேயிலை பொய்லரும் இருந்த களிமண் கோப்பிக் கடையில் நந்தாமாலினி பாடிக் கொண்டிருந்தார். எனது இடது பக்கம், பள்ளத்திலிருந்த மீன்வாடியில் ஐஸ் கட்டிகள் உடைக்கும் சத்தமும், மீன்கள் அறுபடும் சத்தமும் பெண்களின் ஒலிகளோடு போட்டி போட்டன. கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். அங்கே கருவாடாக்கலும், பதப்படுத்தலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

எனக்கு முன்னாலிருந்த பள்ளத்திலிருந்த குளக்கரையைப் பார்த்தேன். போட்டி போட்டுக் கொண்டு சமாந்தரமாக வெற்றி தோல்வி தீர்மானிக்க கூடிய வகையிலும் உபாலி, லால், சூட்டி, குயின்ரஸ், மெகினோனாக்களின் நடுஇரவில் மீன்பிடிக்கச் சென்ற தோணிகள் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. பின்னால் வஜ்ரானி, திருமதி. ஜெயக்கொடி போன்றவர்களின் தோணிகளும், இன்னும் சில தோணிகளும் வந்து கொண்டிருந்தன. ஓரு தீர்;மானத்திற்கு வந்தவனாக ஏற்கனவே கரைதட்டியிருந்த திசாநாயக்கவின் தோணியை நோக்கி போவதற்காக கவனமாக சறுக்கி விடாதபடி குளக்கட்டிலிருந்து உயர்ந்த கிறவற் கற்கட்டுக்களினூடு குளத்தங்கரைக்கு இறங்கி நடக்கத் தொடங்கினேன்.
                                                                                   **

“ஆயுபோவன்”
“ஆயுபோவன்”
“என்னத் தெரியமா?"
"ஓம்,"
"எப்படி,"
"நீங்க கனகாலமா இந்தக் குளக் கரையிலதான் மீனளந்து திரியறயள்".
எனது முழங்காலுக்கு பக்கத்திலிருந்த காற்சட்டை பையிலிருந்து நோட்புக்கை எடுத்து குறிக்கத் தொடங்கினேன். அப்போது சிறிய அலைகள் குளக் கரைகளில், குளத்திற்குள் இவ்வளது காலமும் வைரத்துடன் அமிழ்ந்திருந்து வைரம் இற்று உதிர்ந்து போன கட்டைகளை குளிர்ந்த ஊதற் காற்றுடன் வெளித் தள்ளிக் கொண்டிருந்தது.
"பேர்,"
"சந்தன."
"வயசு",
"பத்து".
"வலைர நீளம்";,
"ஆயிரத்து ஐனூறு கண்",
"அகலம்";,
"நாப்பது கண்",
"வலைரஅளவு",
ரேண்N;டகாலிஞ்சி, மூண்டரயிஞ்சி, நாலிஞ்சி "
"மொத்தம் எத்தனை துண்டு வலை இருக்கி",
"பதின் மூணு துண்டு",
"கொஞ்சம் மீ;ன நிறுத்துப் பார்க்கலாமா?" என்று கேட்டேன்.
ஆம் என்பதற்கு அடையாளமாக தலையாட்டினான். ஒறியோகுரொமிஸ் மொசாம்பிகஸ் மீன்களை தனியாகவும். ஒறியோகுரமிஸ் நைலோட்டிகஸ் மீன்களை தனியாகவும் (இரண்டுக்கும் தமிழில் ஜப்பான்ஃசெப்பலிஃதிலாப்பியா மீன் என்று பெயர்) மீன்களை தனித் தனியாயும் நிறுத்தேன். 12 கிலோ கிராம்களும்; 10 கிலோ கிராம்களும் இருந்தன.

தோணிக்கருகே இருந்த நிலத்தின் அருகம் புல்லில் சூரியன் இவ்வளவு கிளம்பியும், இன்னும் இரவின் பனித்துளி விலகி ஓடாமல் ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் மீது அமர்ந்தேன். பின் மீன் அளக்கும் மூன்றாக மடிக்கப்பட்ட பலகையை நீட்டி நிமிர்த்தி ஓவ்வொரு வகை மீனிலும் ஐந்து ஐந்து மீன்களின் நீளம், அகலம், ஆணா, பெண்ணா வேறுபாடுகளையும் குறித்து விட்டேன் ஒவ்வொரு தரமும்; அந்த 500 கிராம் மீன்கள் முள்ளால் என் கையை குத்திக் காயப்படுத்தின. குளத்தில் இறங்கி வெப்பமானிகளையும், கொஞ்சம் கருவிகளையும் புகுத்தி சில வாசிப்புக்களைக் குறித்தேன். நாள் பூராக இந்த வேலைதான் ஒவ்வொரு தோணிக்கும் நடக்கும்.
                                                                        **

அதற்குள் சந்தனவின் மீன்கள் மீன்வாடிக்கார மைக்கேலிற்கு விற்கப்பட்டிருந்தன. சந்தனவை பாத்தேன். கூழாமர நிழலில் தோணியை தள்ளி வைத்து விட்டு அதே நிழலில்; பக்கத்திலிருந்து பூமியில் முளைத்த பாறாங்கல்லில் முதுகைச் சாய்த்து வலை பொத்திக் கொண்டிருந்தான். வலையில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். அவனது எதிர்காலத்தையோ.
மீன் குடித்தொகைகளை வளைத்து பிடிக்கும் கட்டு வலைகளைப் பாவிக்கும் போது எந்தளவு பெரிய கண் வலையை பாவித்தால் குஞ்சு மீன்கள் தப்பி, அடுத்த வருடத்திற்கான சந்ததிகளை உருவாக்கும் - பறனோவ்-ஹோல்ட் என்போர்களுடைய கணித மாதிரியுருவை அடிப்படையாக வைத்து- என்பதை பற்றிய கற்கையை செய்யும் ஆய்வு மாணவன் நான். கொஞ்சம் கணிதம், கொஞ்சம் உயிரியல், கொஞ்சம் இரசாயனம் கொஞ்சம் முகாமைத்துவம், கொஞ்சம் சட்டம்; சேர்ந்தது எனது ஆய்வு. ஆய்வுகள் எல்லாம் சரிதான் ஆனால் நடைமுறைப்படுத்தலில்தான்; மிகவும் சிக்கல். அதை அவதானிக்க வேண்டியவர்களே மீறுகிறார்கள். அல்லது வேறு யாருமா என்பதுதான் பிரச்சினை. ஆய்வென்பது இதுதான் பிரச்சினைகள் எனக் காட்டுவது அமுல்படுத்துவதற்கு அதிகாலை நேர பனித்துளிமீது ஓடி உருண்டு சுற்றி வீசி வரும் குளிர்ந்த காற்றின் தூய்மை கொண்ட இதயம் வேண்டும்.

எனது மீன்கள் வளரும்;. பெண்கள் அடிவயிற்றில் சிவப்பு நிறம் பெறும். ஆண்கள் மூஞ்சியால் மடு தோண்டி, இலையால் கூரை வேய்ந்து வீடு கட்டும்;. பெண் அழைக்கும். மூஞ்சிகளால் உராய்ந்து காதல் களிநடனம் புரியும். பெண் முட்டையிடும். ஆண் அதன்மேல் விந்து சொரியும். வீட்டில் குஞ்சுகள் பொரிக்கும். பெற்றோர்கள் காவல் காக்கும். குஞ்சுகள் பொரிக்கும். ஆபத்து என்றாலோ வாய் திறந்து ஒழித்து குஞ்சுகள் காக்கும். குஞ்சுகள் வளரும். இப்படி குளத்தடி கிராமத்தில் பல கூட்டு வீடுகள் பெருகும்.

சூரியனை இரத்தம் வடிக்க கடித்து தின்று மேற்றிசைமலை விழுங்கும். கறுப்பாய், வெள்ளையாய் எதிர்மூலை மலை சந்திரனை துப்பும். இரவாகும். பின் நடு இரவாகும். இதயம் துளைத்து மூளை நழுவி விழும் கூதற் காற்று வீசும். தாய்கள், தந்தைகள், பிள்ளைகள் குஞ்சுகள் உண்ணும், குலவும். களிக்கும். பின் தூங்கும். கும்மிருட்டோ சில்லூரிகளினதும், ஆந்தைகளிளினதும் தவளைகளினதும் கத்தல்களுக்கு மட்டுமே பயப்படும். கும்மிருட்டு சந்திரனை கூப்பிடும் நேரம் வரும். கட்டு வலை கூடுகளை வளைத்து தந்திரமாக அமைதியாக கட்டப்படும். பின் நீண்ட கம்பினால் கூடுகள் குலைக்கப்படும். தாய்கள், தந்தைகள், பிள்ளைகள், குஞ்சுகளும் அதிரும். ஓடும். தப்ப எத்தனிக்கும். பின் வலையில் மாட்டுப்படும.; பின் வெட்டுப்படும். அறுபடும். சுடுபடும். பொரிபடும். அடக்குப்படும்.

முகவரி என்றேன் தூரகிழக்கு எல்லையோர மாவட்டத்தைச் சொன்னான். அனாதை என்றான். ஓருவரும் தனக்கு இல்லை என்றான். திசாநாயக்கவின் தோணிதான் சோறு போடுகிறது என்றான். ஒரு ஓட்டையை பொத்திமுடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான். இன்னும் வலைக்குள் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். இழந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தையா? இழக்கப் போகும் எதிர்காலத்தையா? கரிபடிந்த, கலைக்கப்பட்ட இறந்தகாலத்தையா? அல்லது மூன்றும் உருகித் திரண்டு கொடுக்கும் அனுக்கிரகத்தையா, தாய், தந்தையையா, உற்றார் உறவினர்களையா நண்பர்களையா? செல்லமாய் வளர்த்த கிட்டியாவையா? வீடுகளையா? கிராமத்தையா? அருமருந்தன்ன கல்வியையா? எதனைத் தேடுகின்றான் என்று தெரியவில்லை. அவனின் வாழ்க்கை கட்டடத்தின் மாடிப் படிகளுக்கு யாரோ இவனுக்குத் தெரியாமல் கற்கள் வைத்தது மாதிரி கவலை பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல் தொடர்ந்து வலை பொத்திக் கொண்டிருந்தான்.
                                                                     **

நெருப்பு வாகை மரத்தின் பொந்துக் கூட்டின் புழுணிக் குஞ்சுப் பறவைக்கு, தாய் புழு ஊட்டும். பின் தட்டி விடும். குஞ்சோ கீழே விழும். தன் கிணற்றுத் தவளை உலகத்திற்கு அப்பால் இரு காலும் ஒரு சேர துள்ளி துள்ளிப் பாயும். கூடியிருக்கும் 12-14 பெரியவர்களும் குளு..குளு எனப் பாடி மகிழும்.

மழைக்காலத்துக்குத்; தோன்றும் பருவ காலத்து மீன்பிடிக்கும் குளத்தில், பெரிய ஆறு அடிச் சாரை தன் குட்டியுடன் உடம்பு நெளித்து நீரை உந்தித் தள்ள்p வேகமாய் நீந்தி வரும். மூச்சடக்கும். குட்டியுடன் நீரின் கீழ் மீன் துரத்தும். இரை கௌவும். குட்டியும் அதைத் தொடரும். விளக்கம் பெறும்.

பனிக்காற்று அதிகாலையில், கீரிப்பூனைத் தாய், குட்டிகளுடன் வெளிவரும். இன்னும் வாகனமே வரத் தொடங்காத நெடிய நேரான கறுத்த வீதியில், கட்டிப் புரண்டு, கடித்து விளையாடும். ஆளரவம் கேட்கும். புசுக்கென பற்றைக்குள் பாயந்து குட்டிகள் ஒழிக்கும். பின் மெல்ல மெல்ல, சர்க்கஸ் கரடி மாதிரி இருகாலில் நின்று எம்பி எம்பி பார்க்கும். ஆர்வ மிகுதி குட்டியொன்று கண்ணில் அறியாமை ஏந்தி முந்திக் கொண்டு புதினம் பார்க்க வெளிவரும். தாய் அதட்டி ஒழிக்கும். பின் குட்டிகளோடு வலசை போகும்.

வானரக் குட்டிகளோ கழகம் அமைக்கும். கூத்தாடி, பாய்ந்து பயிற்சி எடுத்து விளையாடும். எதிர்கால வாழ்வுக்கு உடம்பைக் கட்டாக்கும் பெரிசுகளோ வளைத்து காவல் காக்கும்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகள் வரும். நகரத்து குப்பைகள் வீதியோர காட்டுக்குள் கொட்டுப்படும். மாடுகள், எருமைகள் வரும். குப்பை மேயும். கூட்டத்திலிருந்த குட்டி யானை இவைகளைக் காணும். தன்னுயர எருமைகள், மாடுகள் தனது கூட்டமென எண்ணும். கூட்டம் விட்டு பிரியும். அதனோடு குப்பை மேயும். தாய் வேண்டாமென சொல்லும். குட்டியோ கேட்காமல் இருக்கும். காய்ந்த முதிரை மரக் கட்டையில் அடித்து மடங்கிய மூன்று அங்குல ஆணியை பிடுங்க வலது ஒரு தட்டு, இடது ஒரு தட்டு போல் தாய் தும்பி;க்கையால் குட்டியின் முகத்தில் தட்டும். பின் தட்டி கூட்டிப் போகும். குட்டியோ திமிறும். ஆபத்தென்றாலோ நடுவில் வைத்து குட்டியை பெரிசுகள் காக்கும்.

ஆங்கொரு மரத்திலிருந்து மறுமரம் தாவிய ஓணான் குஞ்சொன்றை தாய்ப் பூனை காணும். ஒரே அமுக்காய் அமுக்கும். குட்டியிடம் கொடுக்கும். குட்டியோ விட்டு விட்டு துரத்திப் பிடிக்கும். எதிர்காலத்துக்கு பயிற்சி பெறும்.
குஞ்சுகள் பழக்கமாதல்களாயும், மீளவலியுறுத்தல்களாயும், அகக்காட்சிக்குரியவைகளாயும், பதித்தல்களாயும், நிபந்தனைப்படுத்தல்களாயும், பெற்றோரிடமிருந்து கல்வி பெறும். எதிர்காலத்தை வெல்லும்.
                                                              **

இந்த வாரமும் அவனைக் குளக் கரையில் அலைந்து திரிவதைக் கண்டேன். இரவில் நீரருந்த வந்த யானைகள் இட்ட சாணிக்குள் கையைவிட்டு அழைந்து கொண்டிருந்தான். கறுத்த கண்ணாடி கரடு முரடு துணியாலான சட்டையும் அதே துணியாலான எட்டு பைகள் உள்ள காற்சட்டையும் அணிந்திருந்தான். முதுகுப் பக்கத்தில் தொங்கிய பை பாரமாய் அழுத்த காட்டுப் பக்கம் உள்ள அடுத்த கரைக்கு நடந்து கொண்டிருந்தான். தீர்க்கமாய் எதுவித பயப் பிராந்தியுமின்றி சிந்தனை ஒருமித்தவனாக அடுத்த கரையை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். தூரம் போகப் போக எனக்கு அவன் தேவதேவன் என்ற யதார்த்தம் புரியத் தொடங்கியது. பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினேன். அவனுக்கு முன்னால் நின்றேன். “என்ன சந்தன?” என்றான். “எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றேன். “என்ன வேண்டும்” என்பது போல் தலையாட்டினான். “சுபீட்சம்” என்றேன். “காலம்” என்றேன். “சந்;தனவின் சுபீட்சமே வா” என்றான். “சந்தனவின் காலங்களே! நீங்கள் நிகழ்வும் இறப்பும் எதிர்வும் ஒன்றாகக் கூடிக் கலவுங்கள். கலந்து பேசி முடிவுக்கு வாருங்கள். வந்து சந்தனவிற்கு துன்பத்தை விலக்கி இன்பத்தை ஏந்தி சுபீட்சம் கொண்டு வாருங்கள்” என்று ஆனைக்கல் மலையின் முன்னின்று பொடிமீன்கல் காட்டை நோக்கி கத்தி எனது தலையைத் தடாவி ஆசீர்வதித்தான். அதிகாலை எழும்பி, குளம் சென்று, மீன் பிடித்து, வலை பொத்தி சேர்ந்த அலுப்பு நீங்கி, குளிந்த காற்றாய,; மெல்லிய பச்சையும் வெள்ளையும் கலந்த பச்சை நிற நூலாய் எனது மனம் இலேசாகியது. எனக்கு இறகு முளைக்கத் தொடங்கியது. யாதுமாகிய காலத்தையும் இடத்தையும் கடந்துவிட்ட தேவதேவனாகிய அவனுக்கும் பெரிய இறகுகள் இருந்தன. தேவதேவனான அவனை கூட்டிக்கொண்டு பறந்தேன். ஒரு இடத்தை அடைந்தவுடன் இதுதான் எனது கிராமம் என்றேன். இறங்கச் சம்மதித்தான். இறங்கினோம் இறகுகள் மறைந்தன.

ஊரின் ஒதுக்குப் புறமிருந்த அந்த மயானத்திற்கு அவனை அழைத்துச் சென்றேன். ஓரு காலமும் இதற்கு முன் ஒரு தடவையைத் தவிர நான்கு இங்கு வந்ததில்லை. அதுதான் நான் இந்த ஊரில் இருந்த கடைசி நாளிற்கு முந்தின நாளாகும். அந்நாள்தான்; மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் நடுஇரவில் சுற்றிவளைக்கப்பட்டு; தடிகொண்டு கலைக்கப்பட்டு அரியப்பட்ட நாள். வழமையாக இங்கு சிறுவர்கள் வருவதில்லை. என்னுடன் அவன் இருந்ததால் எனக்குப் பயமில்லாமல்; இருந்தது. பற்றைகள் அடர்ந்த ஓற்றையடிப் பாதை எங்களை மயானத்திற்கு அழைத்துச் சென்றது. இன்னமும் புற்கள் மூடப்படாத அழுக்குப் படிந்த கல்லறை மண்கும்பான்கள் வரிசையாக கிடந்தன. என் கண்களை குளமாக்கிக் கல்லறைகளுக்கு கைகள் காட்டினேன். அந்தக் குளங்களுக்குள் விட மீன்கள், குஞ்சுகள் வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டான். அப்போது சற்று முன்னாலுள்ள நிமிடம்  வரையும் விட்ட காற்றில் கரைந்த கத்தல்களை ஆந்தைகள் மீ;ண்டும் தேடி உறுஞ்சத் தொடங்கின.

ஓவ்வொரு மண் கும்பக் கல்லறைகளையும் தொட்டான். செட்டை அறுந்த தாய்களும், வால்கள் அறுந்த தந்தைகளும், மூஞ்சுகள் அறுபட்ட பிள்ளைகளும் மீன்களாய் எழுந்தனர். கிட்டியாவும்தான். அவைகளை அவன் இன்னொரு தரம் பார்த்தான். மீன்கள் குறைபாடுகள் நீங்கி பூரணமாயின. பின் திரும்பி, முன்னே அவனும் பின்னால் நானும,; என் பின்னால் மீன்களுமாய் காற்றில் நீந்திக் கொண்டு வந்தோம். எனது பாடசாலை வந்தது. அவன் காலடி பட புதுப்பொலிவு பெற்றது. அங்கு என் நண்பர்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தார்கள். கள்ளன் பொலிஸ் விளையாடினார்கள். நானும் விளையாடினேன். விளையாடி முடித்துவிட்டு அவன் அருகே வந்தேன். அதுவரையும் அவன் அங்குதான் காத்துக்கொண்டு நின்றான். பின்னர் வயல் வெளியில் கால் வைத்தான.; வயல் வெளி செழித்தது. அறுவடை முடிந்தது. வயல் வெளிகளில் வண்ணாத்துப் பூச்சிகள் முட்டையிட வந்தன. அவன் தந்த பெரிய வலை கொண்டு “அள்ளி; இந்தக் கோலம் யாருனக்கு தந்தது” என்று பாடினேன். பின் கிட்டியாவும் நானும் மரப் பாலத்தில் இருந்து நீருக்குள் துள்ளிக் குதித்து நீந்தி விளையாடினோம். அப்போது ஐஸ்பழக் காரன் சத்தம் போட்டு வந்தான். “பழம் வேண்டும்” என்று அடம் பிடித்தேன். வாங்கித் தந்தான். “இன்னம் வேண்டும்” என்றேன். மீண்டும் வாங்கித் தந்தான். அப்பா அம்மா தேடுவார்கள். வா வீட்டுக்குப் போவோம் என்றான். கிட்டியாவைக் கூப்பிட்டேன். கிட்டியா முரண்டு பிடித்தது. நாணற் பிரம்பை முறித்து முகத்தில் இரண்டு போடு போட்டேன். இப்போது எனக்குப் பின்னால் வரத் தொடங்கியது. அவன் முன்னே போனான். அப்போது ஆராமம் வந்தது. பின்னால வந்த கிட்டியாவிற்கு “உஷ் சத்தம் போட வேண்டாம்” என்று கைகாட்டி வாயில் விரல் வைத்து காட்டினேன். கிட்டியாவும் பணிந்து கொண்டது. அம்மாவும், அப்பாவும் செய்வது போல் சாது சாது என்று பணிந்தேன். ஆராமத்து மணி ஒலிக்கத் தொடங்கியது. “கடவுளே எனக்கும் தாய் தந்தைக்கும் நீண்ட ஆயுளைக் கொடு, எனது உற்றார் உறவினருக்கும் கொடு, எனக்கு நித்திய சபீட்சத்தை கொடு” எனப் பிரார்த்தித்தேன். சந்தை வந்தது. அவன் போய்க் கொண்டேயிருந்தான். அங்கே எங்கும் மக்கள் கூட்டம், பல வண்ணமயமாய் கடைகள், பல விதமாய் இரைச்சலகளுக்கிடையில் பாதையோரம் நெடுக சிறிய சிறிய பந்தல்கள் போட்டுக் கடைகள் எழும்பி இருந்தன. இப்போது ஆடைக் கடைகள் வந்தன. அங்கே கத்தரிப் பூக் கலர் சட்டை, களிசானும் இருந்தன. அவனிடம் வாங்கித் தருமாறு கேட்டேன். வாங்கித் தந்தான். உடனே அங்கேயே அணிந்து கொண்டு பழைய உடுப்பை ஒரு பைக்குள் போட்டுக் கொண்டேன். கறுத்த கலர் பெல்ட் வாங்கிக் களிசானைக் கட்டிவிட்டான். பச்சை தொப்பியும் வாங்கித் தந்தான். பலூன் வாங்கித் தந்தான்.

விளையாட்டுத் துப்பாக்கிகள் தொங்கியது. அதுவும் வேண்டும் என்ற ஆவலுடன் அவனைப் பார்த்தேன். அதனைப் புரிந்து கொண்டு உடனே வாங்கித் தந்தான். உடனே அவனையே முதன் முதலில் அதனால் சுட்டேன். அவனுக்குச் சன்னம் படாவிட்டாலும் தான் செத்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டு விழுந்தான். எனக்கோ அவனைக் கொன்ற மகிழ்ச்சி. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். சுட்டுவிட்டேன் சுட்டுவிட்டேன் என்று கத்தினேன். செத்தது போதும் என்று விளங்கியது. சாவை முடித்து எழுந்து எனது துப்பாக்கியின் சன்னத்தை எனக்கு பொறுக்கி தந்தான். அடுத்த முறை கிட்டியாவிற்கு குறிபார்த்தேன். கிட்டியாவிற்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்று விளங்கவில்லை. முதலாவது குறி தப்பிவிட்டது. அடுத்த குறியில் கிட்டியா வாலைக் கிளப்பிக் கொண்டு அவனுக்கு முன்னால் ஓடியது.

கொக்கோ கோலா கேட்டேன் வாங்கித் தந்தான். குடிக்கும்போது புரைக் கேறி உடுப்பில் வழிந்து கசறாகிவிட்டிருந்தது. பரவாயில்லை வீட்டிற்கு போய் உடுப்பை கழுவித் தருவதாகச் சொல்லி என்னை தன் கழுத்தில் வைத்துக் கொண்டு வீடு நோக்கி வயல் வெளிகளுடாக நடந்தான். கழுத்தில் வைத்ததும் நான் அவனை விடப் பெரியவன் ஆனேன். நான் உன்னிலும் பெரியவன் என்றேன். அவனும் ஆம் என்று ஒத்துக் கொண்டு நீ என்னிலும் பெரியவன்தான் என்றான். இருள் என்னும் பிரசவ வலி இரவு

எங்கள் கூடு சிறியது. மண் கிண்டி, தரை செய்து ஓலையினால் வேய்ந்து கட்டிய சிறியது. தாயிடமும் தந்தையிடமும் என்னைக் கொடுத்துவிட்டு அடுத்த கிழமை வருவதாக கூறிச் சென்றுவிட்டான். நாங்கள் ஆந்தைகளினதும், சில்லூறிகளினதும் தவளைகளினதும் சத்தங்களுக்கு மட்டுமே பயப்படும் கும்மிருட்டு இரவுகளில் எங்களின் வாழ்வின் ஒளி விளக்கை அணைத்துவிட்டு அவனை எதிர்பார்த்து தூங்கத் தொடங்கினோம்.
                                                                           **

அடுத்த கிழமை வாணகாவ.., 3.50 சதம், புஞ்சிகாமினே, தேயிலைக் கடை, மதகுப் பாலம், கட்டுகள் தாண்டி திசாநாயகவின் தோணியிடம் போகிறேன். அங்கே சந்தனவுடன் இன்னுமொருவன் சந்தனவின் சிறிய சைஸ் போட்டோ கொப்பி மாதிரி வலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். தோணியிடம் போகாமல், பக்கத்தில் இ.ருந்த குளக்கரையில் எனக்கு ஆத்திரம் வரும் போது பாவிக்கும் ஆங்கில தூசண வார்த்தையை சத்தமாகச் சொல்லி நீருக்கு உதைக்கிறேன். நீருடன் தெறித்த சேறுகளையம், கந்தல்களையும், அழுக்குகளையும் எதிராக வீசிய கச்சான் காற்று மீண்டும் என் மேல் படவைத்தது. எனது முகத்திலிருந்து சேறுகளும், கந்தல்களும், அழுக்குகளும் வழியத் தொடங்குகின்றன.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...