கூண்டுகள்
அம்ரிதா ஏயெம்
கூண்டுக்குள் வாழ்க்கைக்கான போராட்டம் தொடங்கிவிட்டிருந்தது. வெள்ளை நிற முயல்குட்டியளவு பருமனுள்ள கினிப்பன்றி எலி, நீரைக் குடித்து திமிறி, புரண்டு உயிரை விட்டது. கறுப்போ கொஞ்சம் கூண்டுக்குள் ஒடித் திரிந்து, அங்கேயும் இங்கேயும் தட்டி, முட்டி மோதி, நீர் குடித்து உயிரைவிட்டது. சாம்பலோ கூண்டுக்குள் மிகக் கடுமையான வாழ்க்கைக்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. இங்கும் அங்கும் ஒடியது. முன்னங்கால்களால் கூண்டை உதைத்தது. சுpலந்தி போல் கூண்டின் மேற்பக்கமாக ஊர்ந்து மேலே ஏறி பின்னங்கால்களால் கூண்டின் மேற்சுவருக்கு உதைவிட்டது. எங்கும் மோதுப்பட்டது. வெளியெ வர எவ்வளவோ முயற்சி பண்ணியும் தோற்ற நிலையில், முதலாவது மிடறு தண்ணீரை குடித்தது. என்றாலும் முயற்சியை கைவிடாமல் கூண்டில் முட்டி மோதி, இரண்டாவது, மூன்றாவது நீர் மிடறு குடித்து...
**
எந்த ஊர்? என்று எனக்கு பின்னால் இருந்த கட்டிலில் படுக்க ஆயத்தப்பட்ட, அந்த நடுத்தர வயது மனிதனிடம் கேட்டேன். அந்த அறையில் நான்கு கட்டில்கள் ஒவ்வொரு மூலையிலும் இருந்தன. ஏன்னைத் தவிர மற்றைய மூவரும் நித்திரைக்குப் போக ஆயத்தப்பட்டார்கள். நள்ளிரவு 2.30 மணிக்கு நித்திரைக்குப் போகாது வேறு எங்கு போவது? நான் கேட்டதும் தனது ஊரைச் சொன்னார். அந்த ஊரிலுள்ள ஒருவனைப் பற்றி விசாரித்தேன். அவன் தன்னுடைய மகன்தான் என்றார். எனக்கு சந்தோசமாகிப் போனது.
அவனைப் பற்றி விசாரித்தேன். அவன் தற்போது சோசலிசம் உடைந்து நொறுங்கி துண்டு துண்டாய்ப் போன ஒரு நாட்டில் “ஏரொநாட்டிக்ஸ்” (வானூர்தி விஞ்ஞானம்) பயில்வதாகச் சொன்னார். அந்த நாட்டிற்கு கல்வி கற்க செல்லவிருக்கும் ஒரு முஸ்லிம் பையனிடம் அவனுக்கு இனிப்புப் பண்டங்களும், கடிதங்களும் கொடுத்து விடுவதற்காகத்தான் தான் தலைநகர் வந்ததாகச் சொன்னார். அந்த முஸ்லிம் பையனுக்கு கடவுச்சீட்டு, வீசாவுக்கெல்லாம், அவரே உதவி செய்ததாகச் சொன்னார். அந்த முஸ்லீம் பையனின் கடவுச்சீட்டையும் காட்டினார். அந்த பையனைச் சந்தித்து, கடவுச்சீட்டை அவனிடம் கொடுத்தால்தான் அவனும் வெளிநாட்டுக்கு படிக்க போகவியலுமாம் என்றும் சொன்னார்.
எனக்கு இடுப்பு வலிக்கத் தொடங்கியது. வுpடியப் போகும் காலை 10.30 மணிக்கு நடைபெறவிருக்கும் ஒரு விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த மகாநாட்டில், நான் பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வை ஆற்றுகை செய்வதற்காக, இன்று பின்னேரம் 2.00 மணிக்கு வாகனம் ஏறி, அது மரவெளி, மலை, குகை எல்லாம் கடந்து ஒடி நள்ளிரவு 2.30 மணிக்கு லொட்ஜ் ஒன்றுக்கு கொண்டு விட்டது.
தலை நகரம் மிகவும் மாறித்தான் போயிருந்தது. வழி நெடுக திடிர் திடிரென வழிமறிப்புக்கள், சோதனைகள், அதட்டல்கள் இருந்தன. தலை நகரம் எனது பிரதேசத்தை விட மோசமாகத்தான் பட்டது. ஒளி எங்கும் பரப்பப்பட்டிருந்தும் அந்த தலை நகரத்து ஒளிகள் அமைதியை இழந்து விட்டிருந்தன என்று தெரிந்தது. லொட்ஜில் தனி ரூம் கேட்டேன். இல்லை என்றார்கள். நான்கு பேருடன் ஒரு ரூமுக்கு போனேன். அதுதான் இந்த ரூம்.
நான் எதற்காக தலைநகர் வந்தேன் என்பது பற்றி அவர் கேட்டார். நான் விசயத்தை சொன்னேன். “நான் நாளைக்கு பிறசன்டேசனுக்கு கொஞ்சம் ஆயத்தம் பண்ண வேண்டியிருக்கு, நீங்க முந்திப் படுங்க, நான் கொஞ்சம் சுணங்கிப் படுக்கன்.” என்று அவரையும் மற்ற இருவரையும் பார்த்துச் சொன்னேன். அவர்கள் தூங்க ஆயத்தம் செய்தார்கள். மணிக்கட்டைப் பார்த்தேன். நேரம் நள்ளிரவு 2.45 மணி.
லேசர் பிறின்டரில் பிறிண்ட் எடுத்து வைத்திருந்த ட்ரான்ஸ்பேரண்ட் சீற்களை ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கினேன். நேற்றுக் காலை கெம்பஸில் இரு தடவைகள் எனக்கு ஒத்திகை பார்க்கப்பட்டது. “ஓவர்nஉறட் புறஜெக்டரை மறைக்காதே, நிமிர்ந்து நில், ஆங்கிலத்தை அப்படி உச்சரிக்காதே, இப்படி உச்சரி” என்றெல்லாம் என் பேராசிரியை என்னை ஒத்திகையில் திருத்துவார். அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆட வேண்டும். இப்போது அம்பலத்தில் ஆடப்படுபவைகள் கூட, திட்டமிட்டு அறைகளில் தனித்தனியாக அரசர்களை திருத்தக்காரர்களாக வைத்து ஆடிப் பார்த்தவைகள்தான். இதுவும் ஒரு வகை நாடகமே.
தற்போது நேரம் நள்ளிரவு 3.30 மணி. என்னைத் தவிர மற்றைய எல்லோரும் நன்றாகக் குறட்டை விட்டு தூங்கத் தொடங்கி ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்றுவிட்டிருந்ததை உணர முடிந்தது. ஒரு இரவின் நீளம் என்னைத் திடுக்கிட வைத்தது. காலத்தின் பரிமாணத்தையும், ஒளியையும் முறுக்கித் திரித்தாலும் சாதாரண புலனுக்கு அப்பாற்பட்ட நீளம் கொண்டது இரவு என எனது புலனுக்குப் பட்டது. இந்த நீளங்களின் விழிம்புகளில்தான் எத்தனை திட்டங்களும் தவிடுபொடிகளும். ஓரு இரவின் நீளம் பற்றிய பிரக்ஞையே இல்லாது, அலுத்துக் களைத்துத் தூங்குபவனின் ஆழ்ந்த தூக்கத்தை குலைப்பது உண்மையிலேயே மிருகத்தனமானதுதான் என்று எண்ணி;க் கொண்டேன். ஆனால் அதற்குப் பின்னாலும் ஏதோ காரணங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். தூங்குபவர்களை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே அவர்களின் துயிலின்பத்தை இரசித்தேன்.
டொக்.. டொக்.., யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பின்னர் கதவு யாதாலோ இடிபட தொடங்கிவிட்டிருந்தது. உலகத்திலுள்ள நாகரிகமற்ற செயல்களில் தூங்கிக் கொண்டிருப்பவர்களின் தூக்கத்தை கலைப்பதும் ஒன்றாகும் என்று நான் நினைத்தது சரியென நினைத்தேன்.
கதவைத் திறந்தேன். ஐந்தாறு பேர் ஒரே வகையான உடையில் ஒரே வகையான மொழி பேசி உள் நுழைந்தார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த மற்றைய மூவரையும் எழுப்பச் சொன்னார்கள். எழுப்பினேன். மிகவும் கஸ்டப்பட்டு எழும்பி, அந்த உடையணிந்தவர்களைக் கண்டதும் பேயறைந்தவர்கள் போலானார்கள்.
என்னிடம் மஞ்சள் அட்டை கேட்டார்கள். காட்டினேன். ஓன்றும் பேசவில்லை. அவரிடம் கேட்டார்கள். கொடுத்தார். அவர்களது இடத்திற்கு அவர்களுடன் உடனடியாக வெளிக்கிடுமாடு கூறினார்கள். அவர் தனது உத்தியோக அட்டையையும் காட்டினார். அவர்களின் மொழியையும் நன்றாக் கதைத்து, தான் தலை நகரத்திற்கு இல்லை நரகத்திற்கு வந்த விளக்கத்தையும் சொன்னார். எந்தப் பலனும் இல்லை.
“உடனே வெளிக்கிடு” என்று சத்தம் போட்டு நின்றார்கள். இதற்கிடையில் மற்றைய இருவரிடமும், அவர்களது மஞ்சள் அட்டைகளை வாங்கிப் பார்த்தார்கள். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். நாளை மறுநாள் மத்திய கிழக்கு போகப் போவதாக சொன்னார்கள். அந்தப் பேச்செல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.
அவர்களையும் வெளிக்கிடு என்று அவர்கள மொழியில் கத்தினார்கள். அவர் றவுசர் மாற்றப் போனார். ஆனால் அவர்கள் விடவில்லை. “சாரனோடயே வா” என்றார்கள். அவர்கள் ஏச ஏச அவர் றவுசரை போட்டு முடித்துவிட்டு ரூமைவிட்டு வெளியே வந்தார். மற்ற இருவரும் கூட வந்தனர்.மற்ற ரூம்களிலிருந்து பிடிபட்டவர்களையும் சேர்த்து அவர்களையெல்லாம் கொஞ்சம் தூரத்திலிருந்த அவர்களின் நிலையத்திதற்கு கொண்டு போவதற்காக மாடு போல் சாய்க்கத் தொடங்கினார்கள்.
கொஞ்ச தூரம் விட்டு அவர்களின் பின்னால் நாங்கள் போனோம். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. லொட்ஜின் வெளிப்பக்க பெரிய இரும்புக் கேற்றை காவலாளி திறந்துவிட மாட்டுப் பட்டியிலிருந்து மாடுகள் கவலைகளுடன் வெளியேறுவது போல் வெளியேறினார்கள். அல்லது வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுடன் அவர்களின் பதவி, பட்டம், சாதி, வகுப்புகளுக்கான பெருமை, பொருளாதார அந்தஸ்த்து, வயதுக்குரிய அந்தஸ்த்து போன்றவைகளும் பெறுதி குறைந்து அவர்களை துரத்திச் சென்று கொண்டிருந்தன. போர்வைகளால் போர்த்தி மெத்தைகளில் படுத்தவர்கள் எத்தனை பேர் வெறும் மேலுடன் வெறுந்தரையில் கூண்டுக்குள்ளே எத்தனை மாதத்திற்கோ எத்தனை வருடத்திற்கோ இருக்கப்போகிறார்களோ? தெரியாது.
அவர்களுக்கும் எனக்கும்ஃஎங்களுக்கும் உறவு அறுந்து விட்டதை லொட்ஜ் காவலாளி மூடிவிட்ட 15 அடி உயர கதவின் நெடிய கிறீச் சத்தம் எனக்கு உணர்த்தியது. கதவிற்கு உள்ளே இருட்டும் சூனியமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு துரத்தின. “நீயும் கூண்டுக்குள்ளேதான் ’ என்று கதவு கூறியது. அப்போது நானும்ஃநாங்களும் அடைக்கப்பட்ட கூண்டுக்குள்தான். கொஞ்ச நேரத்தில் எனது கூண்டுக்குள்ளே போய் என்னை நானே சிறையிடப் போகின்றேன். கொஞ்சம் வித்தியாசம் என்னவென்றால் இந்தக் கூண்டில் கொஞ்சம் வசதி கூட. சிறைக் காலம் குறைய.
என்னைச் சிறையிட முன்பு லொட்ஜ் மெனேஜரிடம் போனேன். “தம்பி இப்படி அடிக்கடி நடக்கிறது. மண்ணிற தாளோ இல்லாட்டி பச்சை நிற மயில்தாளோ குடுத்தா விட்டுருவானுகள். தாளெல்லாம் நீங்க நேரடியா குடுக்க ஏலாது. அதுக்கு ஆக்கள் இருக்காங்க. கவலப்படாம போய்ப் படுங்க” என்றார்.
இந் நாட்டின் இந்த பெரிய பெறுமதிமிக்க தலைவர்களெல்லாம் தலை சிதறி குண்டுகளால் செத்து போனார்கள் ஏதோவொரு வகையில் யுத்தத்தையோ சமாதானத்iயோ அல்லது ஜனநாயத்தையோ ஆதரித்ததால். அவர்களின் அருமந்த விலை அந்த மண்ணிறத் தாளா?
போதிசத்துவரின் தந்தக் கோயில் வெடிக்கவைக்கப்பட்டு காட்டுமிராண்டித்தனமாகச் சிதறவைக்கப்பட்டது. போதிசத்துவருக்கும், தந்தத்திற்கும், எண்கோணத்திற்கும், நின்ற நிலை தியான நிலை புத்தர்களுக்கும் பெறுதி பச்சை மயிற்தாளா?
கலிங்க மன்னன் மகள் கொண்டு வந்த, வெள்ளரசுமர நகரில் பல காவியுடைச் பௌத்த சாமியார்கள் சன்னங்கள் முத்தமிட மனிதத்தின் புனிதங்களுடன் செத்துப் போனார்கள். அந்த முக்திகளின் விலை மண்ணிறத் தாளா?
மண்ணிறத் தாள்களும், பச்சைநிற மயிற் தாள்களும் கோடிக் கணக்காய் பிறக்கும் மத்திய இடமோ வெடிப்பு ஓடி வந்து மோதி வெடித்து சுக்காகிப் போனது. தேசத்தின் பொருளாதாரமே ஆட்டம் கண்டது. நாட்டின் பொருளாதாரத்தின் மொத்தப் பெறுமதியே ஒரு பச்சை மயிற்தாளா?
எங்கோவொரு மதவழிபாட்டின் நிமித்தம் சென்று கொண்டிருந்த 29 பொளத்த தேரர்கள் நிற்கவைக்கப்பட்டு வாளாலும், கத்திகளாலும் அரியப்பட்டார்கள் அவர்களின் பெறுதி அந்த மண்ணிறத்தாளா?
இந் நித்தில துவீபத்தின் இறைமை, சுயகௌரவம், சுயாதிபத்தியம் என்பவற்றின் விலையெல்லாம் ஒரு மண்ணிறத் தாளாம், ஒரு பச்சைநிறத் தாளாம்.
ரூமுக்குள் நுழைந்து கதவைப் பூட்டி என்னை நானே கூண்டிலடைத்தேன். மூன்று கட்டில்களும் வெறுமையாகி கிடந்தன. நான் மட்டும் அந்தக் கூண்டுக்குள் உழல வேண்டி இருக்கிறது. நாயுருவி சுள்ளியால் இதயத்தை வருடுவது மாதிரி மனம் வேதனைப் பட்டது. திடிரென மூன்று கட்டில்களும் கிளம்பி நிமிர்ந்து நின்று எனக்கு ஆறுதல் சொல்லின. என்னைச் சிந்திக்குமாறு கூறின. கூண்டுகளுக்கு விளக்கங்களும் தந்தன. மற்றைய இருவரையும் விட அவனின் அப்பாவின் இழப்புத்தான் எனக்கு மிகவும் மனவருத்தமாய் இருந்தது. எவ்வளவு கெஞ்சிப் பார்த்தார். கதைத்துப் பார்த்தார். தான் காலையில் இந்தப் பாஸ்போட்டை அந்த முஸ்லிம் பையனிடம் கொடுக்காவிட்டால் அவன் வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றுக்கு படிக்கப்போக இயலாது போய்விடும் என்றெல்லாம் கதைத்துப் பார்த்தார். எந்தப் பலனும் இல்லை. என் தந்தையின் அதே வயதுதான் அவருக்கும் இருக்கும். வயது வந்த பிள்ளைகள் இருக்கும் பெருமிதம், தன் குடும்பப் பெருமிதம், சாதிப் பெருமிதம், வணக்கஸத்தலத்திற்கு தர்மகர்த்தாவாக இருக்கிற பெருமிதம், தனது ஊரில் மரியாதைக்குரிய கௌரவ பிரஜையாக நடத்தப்படுகின்ற பெருமிதங்கள் எல்லாம் சிறுமிதங்கள் ஆகுமாறு எருமை மாட்டை மேய்ப்பது போல் மேய்க்கப்பட்டுக் கொண்டுதானே போனார்.
ஏன் அவர் எருமை மாடானார்? அமிழ்தினும் இனிய மொழியைப் பேசும் தாய் தந்தையருக்கு பிறந்து அம் மொழியை பேசியதாலா? அவர் விரும்பித்தான் பேசினாரா, அவர் பிறந்ததால் பேசினார். அதற்கு அவரா குற்றவாளி? அவரைப் பிறக்கவும் பேசவும் வைத்த அதைத்தானே கைது செய்ய வேண்டும். பட்டியாக்கி சாய்த்துக் கொண்டு போக வேண்டும்.
மன இறுக்கத்தை தளர்த்திவிட்டு மீண்டும் எனது ட்ரான்ஸ்பேரன்ட் சீட்களை நோட்டமிடத் தொடங்குகிறேன்.
**
நேரம் காலை. வேன் திறந்த பல்கலைக்கழகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. 10.30 மணிக்கு எனது விஞ்ஞான ஆய்வு பற்றிய ஆற்றுகை முடிய, இன்று இரவே 6.30க்கு ஊருக்கு போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
இப்போதெல்லாம் நான் கதைப்பதும் எழுதுவதும் விளங்குவதில்லை என்று சொல்லிக் கொண்டு என்னைவிட்டு தூரமாகுபவர்கள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இயலுமென்றால் ஒரு பெண்ணை கதைத்து விழவைத்து காதல் பண்ணிக் காட்டு என்று சவால் விட்டு போகிறார்கள். இப்போதெல்லாம் எனக்கு குறியீடு-குறிப்பான் பற்றிய தத்துவச் சிக்கல்தான் உள்மனவெளியெங்கும் போராய் அறைகூவலுடன் நடந்து கொண்டிருக்கின்றது. மொழிப் பிரச்சினை என்றால் கை-கால்களிலுள்ள மொழிகளைப் பார்த்து காயமா? வீக்கமா என்று தொட்டுப் பார்த்து எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். பயங்கரவாத தடைச் சட்டம் என்றால் முதலில் கால்களிலுள்ள முழங்கால்களை வேதனையோடு கண்கள் விரியப் பார்த்து கைளால் தடவி இல்லாத வலியை ஏற்று பயங்கரவாதத்தை உணர்ந்து, மின்னோட்டத்தில் ஏஸ்ரீஐசு இல் வரும் சு என்ற தடையை உணர்ந்து, பின் சீனி ஒடாவியார் எங்களது வீட்டில் எனது நான்கோ அல்லது ஐந்து வயதுகளில் கோழிகளை அடைக்க செய்த கோழிக் கூண்டுக்கு அடித்து, இப்போது உக்கிப் போக நிலத்தில் கிடக்கும் கறையான் அரித்த சட்டங்களை நினைத்துப் பார்த்து, முச்சொல்லுக்குமான கருத்தேற்றத்தை நினைத்து தனிமையில் சிரிக்கிறேன்.
நான் இப்போது திறந்த பல்கலைக் கழகம்தான் போகிறேன். எவ்வளவோ பிரச்சினைககன் நடந்தாலும், குண்டுகள்தான் வெடித்தாலும் மூவினக் குருதி தார் வீதியில் கலந்து ஒருங்கொட்டி கட்டியாகி காய்ந்து, ஊரடங்கு சட்டம் போட்டாலும் இலங்கையில் எப்போதும் திறந்திருப்பது இந்தப் பல்கலைக்கழகம்தான். மூடினாலும், பூட்டுக்கள் தெறிக்க, திறந்திருப்பது இதுதான். சுவரில் எழுதிய விசர்நாய் குலைக்காது. கடிக்காது. என் குறிப்பானும் - குறியீடும் என்னைத் தூக்கிக் கொண்டு எங்கேயோ பறந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். ஓரு வேளை நான் மனநிலை பிறழ்ந்தவனோ தெரியாது. அல்லது என் இயலாமை இப்படி என்னை சிந்திக் வைக்கிறதோ. வந்த எருமை மாட்டுக் கூட்டத்தில் நான் தப்பிய மாட்டுக் குஞ்சு.
நான் பின்னேரம் லொட்ஜ் திரும்பினேன். அவர் அதுவரை விடுவிக்கப்படவில்லை என்று தெரிந்தது. எனவே பின்னர் இடம் போனோம.; கூண்டுகள் கண்டோம். ஓரு கூண்டுக்குள் அவர் அன் கோ கிடந்தனர். அந்த இரு முஸ்லிம்களும் விமான ரிக்கட்டை அடுத்த நாள் காட்டி கூண்டுக்குள்ளிருந்து சென்றதாக அறியக் கிடைத்தது. கூண்டுக்குள் கிடந்த அவரை பார்க்க பாவமாக இருந்தது.
வாழ்க்கையின் ஏதோவொரு தேடல்களுக்காக நகர்ந்து கொண்டிருக்கின்ற புலங்கள் யாவும் எதொவொரு வகையில் கூண்டுகள்தான். அவருக்கோ இடத்திலிருந்த சிறை கூண்டு. விட்டு வெளியே வந்தால் தலை நகரம் கூண்டு. இரவில் லொட்ஜ் கூண்டு. பின் பிரயாணம் கூண்டு. எங்கும் கூண்டுகள். கூண்டுகளில் கிடைக்கும் வசதிகளையும், அதன் பரப்புக்களையும் பொறுத்து கூண்டுகள் செய்யும் சித்திரவதைகளின் கடூரத் தன்மை மாறுபடும். கூண்டுகளுக்கான அர்த்தப்படுத்தலும் வேறுபடும்.
**
தாயகநில மீட்பில் நிலத்தைப் பறிகொடுத்து வயிறு காய, பின் அந்நிலத்தில் சோறு பயிரிட போனவனுக்கு ஒரு கூண்டு, அதற்கு கறிக்கு மீன் பிடிக்க போனவனுக்கு ஒரு கூண்டு, அடுப்பிற்கு சுள்ளிபொறுக்கப் போனவனுக்கு ஒரு கூண்டு, பின்; பாலுக்கும், இறைச்சிக்கும் கால்நடை மேய்த்தவனுக்கு ஒரு கூண்டு;, ஒதுங்க ஒரு இடத்திற்காக கம்பு வெட்டப்போனவுக்கு ஒரு கூண்டு, உடுப்பு விற்கப் போனவனுக்கு வரி கேட்டு ஒரு கூண்டு, மருந்துவிற்கப் போனவனுக்கு மறு ஒரு கூண்டு, வெளிநாட்டிலிருந்து ஓடோடி வந்தவனுக்கு ஒரு கூண்டு, பின் உள்நாட்டிலிருந்து ஓடப்போனவுக்கு ஒரு கூண்டு. அதற்கு கூண்டு. இதற்கு கூண்டு. இம்மென்றால் கூண்டு. ஏனென்றால் கூண்டு. அடைத்துப் பின் அடிக்க ஒரு கூண்டு. துவைக்க ஒரு கூண்டு. பின் காயப்போட ஒரு கூண்டு. கூண்டு, கூண்டு, கூண்டு, கூண்டு. குண்டு, குண்டு, கூண்டு. கூடு. டு. டு.. டு…டூமீல்.
**
கூண்டுகள் பற்றிய எனது வாழ்க்கையின் அனுபவங்கள் பலவகையானவை. இயற்கைத் துறைமுகம் அமைந்திருக்கிற நகரத்தின் வட கரையின் கடல்களில் நட்சத்திரங்களை அடையாளமாய் இடங்குறித்து, உள்ளே இரைபோட்டு, கூண்டுகளுக்குள் (கூண்டுகள் நிறைய நேரங்களில் பேரினமானவர்களால் களவெடுக்கப்படுவதும் உண்டு). கிடக்கும் இரையால் கவரப்பட்டு உள்ளே போன மீன்கள் திரும்பி வர இயலாமல் கூண்டுக்குள் அடைபடும். இந்தக் கூண்டுகள் மீன்கள் தரும். காசுகள் தரும்.
கிழக்கு வாவியின் மேற்குக் கரையின் ஆழங் குறைந்த பகுதிகளில் இரும்பு வளையமும், வலையும் கொண்டு செய்யப்பட்ட கூண்டுகள் நண்டுகளைச் சிக்கவைக்கும். ஊண் தரும். பணம் தரும்.
மலைப் பாம்புகள் பிடிக்க, அதைப் பரிசோதிக்க, படிக்க ஒரு கம்பி வலைக் கூண்டு. அது அறிவு தரும். பதவி தரும்.
கினிப் பன்றிகள் என்னும் பெரிய எலிகளை வெட்டிப் பரிசோதிப்பதற்கு முன் மூன்று மூன்றாய் அடைத்து நீரில் அமிழ்த்தி கொல்வதற்காக ஒரு கூண்டு. ஒரு தரம் வெள்ளை, கறுப்பு, சாம்பல் நிற மூன்று கினிப் பன்றி எலிகளையும், ஆய்வுகூட உதவியாளன் கூண்டுக்குள் போட்டு அடைத்து, நான் மீன்கள் வளர்க்கும் பெரிய சீமெந்து நீர்த்தொட்டிக்குள் போட்டான். (அதிலிருக்கிற தந்திரமான நியாயம் யாதெனில் கொன்ற பாவத்திலிருந்து தான் தப்புதலாகும்.) மணிக்கட்டைப் பார்த்தேன். கூண்டுகள் வாழ்க்கைக்கான போராட்டம் தொடங்கிவிட்டிருந்தது. வெள்ளை நிற முயல்குட்டியளவு பருமனுள்ள கினிப்பன்றி எலி, நீரைக் குடித்து திமிறி, புரண்டு உயிரை விட்டது. கறுப்போ கொஞ்சம் கூண்டுக்குள் ஒடித் திரிந்து, அங்கேயும் இங்கேயும் தட்டி, முட்டி மோதி, நீர் குடித்து உயிரைவிட்டது. சாம்பலோ கூண்டுக்குள் மிகக் கடுமையான வாழ்க்கைக்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. இங்கும் அங்கும் ஒடியது. முன்னங்கால்களால் கூண்டை உதைத்தது. சிலந்தி போல் கூண்டின் மேற்பக்கமாக ஊர்ந்து மேலே ஏறி பின்னங்கால்களால் கூண்டின் மேற்சுவருக்கு உதைவிட்டது. எங்கும் மோதுப்பட்டது. வெளியெ வர எவ்வளவோ முயற்சி பண்ணியும் தோற்ற நிலையில், முதலாவது மிடறு தண்ணீரை குடித்தது. என்றாலும் முயற்சியை கைவிடாமல் கூண்டில் முட்டி மோதி, இரண்டாவது, மூன்றாவது நீர் மிடறு குடித்து இறந்தது. இந்தக் கூண்டுகள் புள்ளிகள் தரும். பதவி உயர்வுகள் தரும்.
கூண்டுகளுக்குள்ளேயும் இன்னும் எனக்கு மிகையுற்பத்தியும், வாழ்க்கைப் போராட்டமும், வல்லனவற்றின் வாழ்வும், இயற்கை தேர்வும், இனம் ஒன்று அழிந்து, இன்னுமொரு இனம் செழித்து தோன்றுதலும்தான் தெரிந்து கொண்டிருக்கின்றது.
நான் பார்த்த, பழகிய, செய்த, கூண்டுகள், மீன் தரும். நண்டுகள் தரும். குரங்குகள் தரும். பாம்புகள் தரும். பணம் தரும். பரீட்சைகளில் புள்ளிகள் தரும். பதவிகள் தரும். வாழ்வில் வளம் தரும். பொருள் தரும். இவைகள் வாழ்வு அளித்த கூண்டுகள்.
ஆனால் இந்தக் கூண்டுகளோ, வெளிநாட்டுக்கு கல்வி கற்கப் போகவிருந்த பையனின் கல்வியை தடுத்த கூண்டுகள். குடும்பப் பாரம் போகுமென்று வட்டிக்கு பணமெடுத்து வெளிநாடு போகவந்தவர்களின் வெளிநாட்டு பயணத்தை தடுத்து அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்கு ஆக்கிய கூண்டுகள். மகனை குடும்பத்தவர்களிடமிருந்தும், அப்பாவை மகளிடமிருந்தும், மகளை தந்தையிடமிருந்தும், புதிதாக திருமணம் முடித்த அந்த முற்போக்குக் கவிஞனை மனைவியிடமிருந்தும் பிரித்த கூண்டுகள். சுகதேகிகளுக்கு நோய் கொடுத்த கூண்டுகள். கௌரவப் பிரஜைகளுக்கு இழிவு கொடுத்த கூண்டுகள். வாழ்வு அழித்த கூண்டுகள்.
எங்கேயோ போய் யாரோ கதைத்தார். கூண்டுகள் திறக்கப்படும் சத்தம் கேட்க, கசங்கிய கந்தல் புடவையாய், இரண்டு நாள் வியர்வை உடம்பு பூராக மணக்க, அழுக்கேறிய உடுப்புக்களுடன் அவர் கூண்டைவிட்டு வெளியே வந்தார். கூண்டு பூட்டப்படும் சத்தம் கேட்டது. இரண்டாயிரத்து ஐநாறு கால நாகரிகங்களும், பழம் பெருமைகளும், சீலங்களும், இறைமையும், மண்ணிறத்தாள்களாலும், பச்சை நிற மயிற் தாள்களாலும் சுற்றி மூட்டையாய்க் கட்டப்பட்டு இன்னும் கூண்டுக்குள் கிடப்பது அருவமாய் தெரிவதை கண்டு கொண்டே இடத்தை விட்டு வெளியேறத் தொடங்குகின்றேன்.
No comments:
Post a Comment