Saturday, October 8, 2011

கிருஸ்ணபிள்ளை

-அம்ரிதா ஏயெம்-
டேய், அந்த டம்ளரெல்லாத்தையும் கெதியாய் எடுத்து வாடா? என்ற அரக்கச் சத்தம் கிருஸ்ணபிள்ளையை நோக்கி அந்த தடியன் முதலாளியின் பானை வயிற்றிலிருந்து வந்தது. கெதியாய் எடுத்துக் கொடுக்க வேணும், இல்லாட்டி இந்த தடியன் காதை மின்னிவிடுவான். இல்லாட்டி பணிஸ், பாண் வக்கிற பட்டறை பொட்டிக்கு பின்னால என்ன கூட்டிக்கு போய் நாலு சாத்து சாத்துவான். சாத்துப்பட்டத வெளிய சொல்லவும் கூடாது. சொன்னால் திரும்பி அடிச்சி வெளியே அனுப்பிவிடுவான். அனுப்பினா என்ற வயிறுதான் காயும்.

நான் கிருஸ்ணபிள்ளை, இந்த கெம்பஸ் கென்ரீன்ல ஒரு நாளைக்கு பத்து ரூபாவுக்கும் மூணு வேளைச் சாப்பாட்டுக்கும் வேல செய்றன். இ;ந்தக் கெம்பஸ்ல படிக்க அக்காமாரும் அண்ணணன்மாரும் கதச்சிச்கிருக்க அந்த வட்டமான மேசயவிட என்ற உயரம் என்னவோ அர அடிதான் கூட. ராவையில ரெண்டு மணிக்கி எழும்பி, ராவு புளிக்க போட்ட மாவ எடுத்து ரொட்டி வீசி, கிளாஸ் கழுவி, சாப்பாட்டு பிளேட் துறைச்சி, அதுக்கு மேலே லன்ச் பேப்பர் போட்டு சாப்பாடு கட்டி அத வெறுங்காலோட அந்தக் கறுத்த தார் வீதியால வெயிலுக்குள்ள தலைக்கு மேல வச்சி சுமந்து மெயின் கென்ரீனுக்கு கொண்டு போயி, பின்ன நான் வேல செய்யிற கென்ர்pனுக்கு சாமான் தட்டு;பட்டா மதிலுக்கு மேலால பாய்ஞ்சி கடைக்கு போய், மீண்டும் மதிலுக்கு மேலால ஏறி கொண்டு வந்து, எல்லாம் செஞ்சி முடிக்கையில ராவு பத்து மணி வேற. அதுக்கிடையில கெம்பஸ்ல படிக்க அண்ணன்மார ஏச்சு வேற. என்ர சம்பளமோ பத்து ரூபா. ஆனா அந்த தாடிக்கார அண்ணன் ஒரு நாளக்கி பத்து கோல்லீப் வாங்கிறவரு. பத்துக்கும் அம்பத்து அஞ்சி ரூபா வரும். என்ர சம்பளம் ஒண்ணேமுக்கா கோல்லீப். பதினாலு வயசிற்கு கீழே சின்னப் பிள்ளயள் வேல செய்யப்போடாதாம், செஞ்சா பொலிஸ்ல புடிச்சிக் குடுக்கலாமாம் எண்டு அந்த கண்ணாடிக்கார அண்ணன் கத்திக்கிட்டு இருப்பாரு. ஒரு வேள அவன் புடிச்சிச்குடுத்து, எனக்கு வேல போனா என்ர வயிறு காயும் எண்டுபோட்டு புடிச்சிக்குடுக்காமலும் இருக்கலாம்.

நான் கிருஸ்ணபிள்ளை. வயது பத்து, இன்னேரம் நாலாம் வகுப்பு படிக்கணும் ஆனா படிக்கல. கென்ரீன்ல எச்சிக்கல்ல கழுவுறன். நான் படிக்காட்டியும் படிப்புக் கூடின இடத்துக்கும் எனக்கும் என்னவோ ஒரே ராசிதான். பத்து வருசத்துக்கு முன்னால இந்த கெம்பஸின் 13ம் நம்பர் ரூம்லதான் ஒரு வெள்ளி கிழமை நான் பிறந்தேன். நானும் அம்மாவும் ரெத்தத்தில துவைஞ்சி கிடக்கிற நேரத்திலதானெ அப்பாவும் ரெத்தத்;தில துவைஞ்சி கிடந்தாராம். அந்த மாமரக் கட்டையில, நெஞ்ச வளத்தாட்டி கத்தியால குத்திச் சாவச்ச 153 பேரில என்ர அப்பாவும்தானெ ஒராள். இந்தக் கெம்பஸ்ல இருந்துதானாமே அப்பாவையும் மத்த எல்லாரையும் கூட்டிக்கிட்டு போனாங்களாம். அம்மா தந்த அப்பாட போட்டோவ நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கன். அப்பா என்ன வடிவு. நடுவால தல புறிச்சி, எருமகடா மீசையோட என்ன வடிவு. அப்பாவ கத்தியால குத்திச் சாவைக்காம இருந்திருந்தா நான் எச்சிக்கல்ல கழுவுவேனோ என்னமோ? நான் பிறந்த கெம்;பஸ்லயே நான் வேலை செய்றன். ஒரு வித்தியாசம் எல்;;;லாரும் படிச்சி முடிச்சிட்டுத்தான் கெம்பஸ் வருவாங்க. நான் படிக்காமலே வந்து அடிபட்டு ஏச்சுப்பட்டு கல்ல கழுவுறன்.

ஏனெண்டா நான் கிருஸ்ணபிள்ளை எச்சில் பாத்திரம் தொறைக்க பொறந்த எச்சம். என்னோட படிச்சவனுகளுக்கெல்லாம் றுசாந்தன். திpனோஜன், அபராஜிதன் எண்டு பேரிருக்க எனக்கு மட்டும் கிருஸ்ணபிள்ளை, கிழட்டு பேர். அம்மாவுக்கு நெனவு தெரிஞ்சிருந்தா நல்ல மொட்டான பேர் வச்சிருப்பாவுக்கும். எனக்கு பேர் வக்கற ரைம்ல அவட உடம்புக்கும் மனசுக்கும் வலி கட்டி மயங்கிக் கிடந்தாவாமே. என்ர பாட்டிதான் இந்த பேர வச்சதாம். அப்;படியே பதியுறவனுகளும் பதிஞ்சிட்டானுகளாம். ஆனா கிருஸ்ணன் என்டா பகவானாம். நான் பகவானின் பிள்ளையாம். கிருஸ்ணனை எப்படியும் கிருஸ்ணன் எண்டுதானே கூப்பிடுறம் எண்டு அந்த அழகான செத்தையில மாட்டியிருக்க குழந்தை கிருஸ்ணன் படத்தைக் காட்டி பாட்டி கதை சொல்லுவா. அந்த வடிவான குழந்த மாதிரியா நான் இருக்கன். அந்தக் குழந்தைக்கோ நெற்றியில மட்டும்தான் கறுத்தப்பொட்டு. எனக்கோ உடம்பு, முகம் பூரா கரி;ச் சட்டிப் பொட்டு. ~கிருஸ்ண| எண்டா உலகத்த ஆக்கி அழிக்க சக்திகொண்ட அரச எஜமானன் எண்டு கருத்தாம் எண்டு பாட்டி சொல்லுவா. அப்ப நான் அரச எஜமானின் பிள்ளையா? அப்பிடியெண்டா என்ர கோட்ட கொத்தளமெல்லாம் எங்கே?. முட்டக்கோது வீசுற மூலையும், கொத்து ரொட்டிக் கல்லுமா?

நான் ரெண்டாம் வகுப்பு வரயும்தான் படிச்சன். முதலாம் வகுப்புல ரெண்டு ஏயும் நாலு பீயும். நான் கெட்டிக்காரன். ஆனா படிக்க இப்ப விருப்பமில்ல. ஒரு நாள் வகுப்பில இருக்கன். டீச்சர் அப்ப படிச்சி தந்திகிட்டு இருக்கா. டப், டப்பெண்டு குண்டு சத்தம். அதுக்குப் பின்னே படபடவெண்டு சத்தம். அப்ப ஒரு ஓடு உடைஞ்சி நொறுங்கி சனோஜாவுக்கு தலையில விழுந்து ரத்தம் ஒடிச்சு. கொஞ்ச நேரத்துக்கு பின்ன றுசாந்தன்ட காலுக்;குள்ள என்னவோ வெடிச்சி கால இருந்து ரெத்தம்; வழியத் தொடங்கிச்சு. றுசான்தன்ட சேட்டு களிசான் புள்ளா ரெத்தம்தான். றுசாந்தனும், சனோஜாவும் அண்டக்கிக் கத்தின கத்துவ இன்னமும் ஞாபகத்தில இருக்கி. போன ஜனவரி மாசம் முதலாம் தேதி சாமிக்கு பூச்சாத்த வீட்டு முற்றத்திற்கு மல்லிகைப் பூ ஆயப் போன என்ர பள்ளியில மூண்டாம் வகுப்பு படிக்க அந்தப் பிள்ளையும் மண் மூடப் பக்கம் இருந்து வந்த குண்டு பட்டு சாகற ரைம்ல இப்பிடித்தானே கத்திச் செத்திருக்கணும். றுசாந்தனும், சனோஜாவும் கத்தி, அபராஜிதன் மயங்கிக் கிடக்கற ரைம்ல அப்ப சிவப்பு நெருப்புக் கட்டி ஒண்டு சத்தத்த தூக்கிக்கிட்டு என்ர சொத்தைக்கி நேராய்ப் போய் வெடிச்சிது. அண்டு பள்ளிக்கு பயந்த நான்தான், அதுக்கு பிறகு பள்ளிப் பக்கமே போனதில்ல. இப்படி என்னப்போல எத்தன பிள்ளையள் பள்ளிக்கி போகாம இருக்காங்களோ தெரியாது. கோரப் பல்லு முளச்சி பெரிய நகம் வளர்த்து, நாக்கால ரெத்தம் ஒழுக ஒழுக ராவையில சங்கிலிக் கறுப்பன் வருவானாம் எண்டு பாட்டி கத சொல்லுவா. எனக்கு பள்ளி எண்டா சங்கிலிக் கறுப்பன் போல கனக்கா தரம் பயம். அப்பா செத்தோடனேயெ அம்மா ரெண்டாம் கலியாணம் செஞ்சா. சித்தப்பா மப்புல ஒருவனை கத்தியால குத்திட்டு மறியலுக்கு போயிட்டாரு. அம்மா பொறகு கஸ்டப்பட்டு வெளிநாடு போனா. ரெண்டு வருசமாகியும் இன்னமும் ஒரு கடிதம் கூட வாறதேயில்ல. ஒரு வேள கடிதம் வந்தாலும் எங்களுக்கு கிடக்கிதில்ல என்னமோ? இப்பிடி எத்தனை கிருஸ்ணபிள்ளைகளின்ர அம்மாக்களின்ர கடிதங்கள் கிருஸ்ணபிள்ளைகளின்ர பாட்டிமாருக்கும், கிருஸ்ணபிள்ளைகளுக்கும் கிடைக்கிறதில்லையோ? அம்மா இருந்திருந்தாவெண்டா, இல்லாட்டி அம்மா காசு அனுப்பினாவெண்டா இ;ல்லாட்டி அம்மா அனுப்பின காசு கிடைச்சிருந்தா இந்தக் கென்ரீன்ல கறிகொதிச்சி சட்டியிலிருந்து அடிச்ச வெக்க என்ட முகத்தில பட விட்டிருப்பாவோ என்னமோ?

அண்டைக்கி ஒரு சேர் அவர்ர மகன கென்ரீனுக்கு கூட்டிக்கி வாறாரு. என்ர வயசிதான் அவனுக்கு இருக்கிம் போல. சேர் அவனுக்கிட்ட கேட்ட கேள்ளிவியொண்டுக்கு அவனுக்கு விட தெரியல்ல. எனக்கு தெரிஞ்சிது. நான் அப்ப அவனோட கெட்டிக்காரன்தானெ. அப்ப நான் ஏன் இப்படி இருக்கன்? அவன் வடிவா சிவத்த ரீசேட், மஞ்சள் கோடு பச்சக் கரை போட்ட சோட்ஸ் போட்டு வடிவா இருக்கான். என்ர உடு;ப்போ எப்பவும் ஊத்தையாத்தானே இருக்கிம்;. ரெண்டு உடு;;ப்பத் தவிர வேறு உடுப்பு இல்லையே. என்ர உடுப்பிலயும் சிவப்பு, பச்சை, மஞ்சள் எல்லாம் கோடு கோடா, கரை கரையா இருக்கிம். ஆனா, அது கரட் பீற்றூட்டாலயும், மஞ்சளாலயும், மரக்கறியாலயும் வச்சதாக்கும். நான் ஏன் இப்பிடி? அவன் ஏன் அப்பிடி? நான் மாறிப் பொறந்திருந்தா? அந்த சேர்ற மகன் இந்த வேலையெல்லாம் அடிபட்டு ஏச்சுப்பட்டு செய்வானா? எல்லாம் பாட்டி சொல்லுற கிருஸ்ணன்ட வேலையாக்கும்.

கிருஸ்ணபிள்ளை என்பது நான் மட்டுமா? கிருஸ்ணபிள்ளைகள் பிறக்கிறதே எச்சில் கல்ல கழுவவும், குறப்பால் ஊத்தவும்தானே. ஏன் மணியக்காட சாப்பாட்டுக் கூட சுமக்கும் தியாகும் கிருஸ்ணபிள்ளை. விக்னேஸ்வராட கிளாஸ் கழுவுற இளங்கோவும் கிருஸ்ணபிள்ளை. பூச்சி அண்ணனுக்கு ராவைக்கு இரவு ரெண்டு மணியிலிருந்து ரொட்டி வீசும் கண்ணனும் கிருஸ்ணபிள்ளை. ரசீத் காக்காவுக்கு அரிசரிக்க அமீரும் கிருஸ்ணபிள்ளை. கனிபா காக்காட கையால அடிபட்டு தொவபட்டு குறைஞ்ச கூலிக்கு சேல செய்யும் சமயல் மெசின் பிரபாவும் கிருஸ்ணபிள்ளை. மயில் அண்ணனிற்கு விறகும் அரிசிம் சுமக்கும் சத்யனும் கிருஸ்ணபிள்ளை. முரளிர கென்ரீன்ல மாவாட்டுற அருளும் கிருஸ்ணபிள்ளை. பாலகிருஸ்ணனின் சாப்பாட்டு பார்சல்களை லாம்பு பிடிச்சி ராவையில கெம்பசுக்கு கொண்டு போற பாலுவும் கிருஸ்ணபிள்ளை. கிருஸ்ணபிள்ளை என்பது நான் மட்டுமில்ல.

டேய் என்னடா? ஒரு அஞ்சாறு டம்ளர் எடுக்க இவ்வளவு நேரம்? என அந்த தடிச்ச வயிறன் காத முறுக்கி தலையில குட்டுறான். குட்டுச் சத்தம் பெரிசாக் கேட்டது . ஆனா வலிக்கல்ல. ஏனென்டா, நான் கிருஸ்ணபிள்ளளை, அடக்குப்படவும் அடிபடவும் பிறந்தவன்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...