Saturday, October 8, 2011

விலங்கு நடத்தைகள்..



-அம்ரிதா ஏயெம்-
அந்தக் கப்பல் ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கிறது. கப்பலில் ரெண்டாவது தளத்தில் நிண்டு கடலைப் பார்க்கிறேன். எங்கும் பரந்திருக்கிற நீலம். எங்கும் நீலம். எதிலும் நீலம். நீலம் என்பது நிறம் மட்டுமில்ல. அது தூய்மை. ஞானம். தியானம் செய்யிற ரைம்ல நெத்திப் பொட்டில உண்டாகி முள்ளந்தண்டுக்கூடாகப் போய் குண்டலினி சக்தியை தூண்டி பேரின்பத்தை உணரச் செய்யிற அந்தச் சுடர்கூட நீலந்தான். நீலக் கடல் தாய்மையின் வடிவம். ஏனென்றால் எங்களச் சமந்து எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுவதால். இந்தக் கடல், இதே கடல்தான் எனது தாய், தந்தையால என்ர ரெண்டு வயதில அறிமுகம் செய்யப்பட்ட கடல். கடல் மேலே கப்பல். கப்பல் மேலே நான். கப்பல் அலைந்து போற மாதிரி என்ர மனமும் அலையத் தொடங்குது.

என்ர பட்டப் படிப்ப நிறைவு செய்ய குரங்குகளில் நான் ஒரு ஆய்வை செய்ய வேணும். அந்தக் குரங்குகள் இப்ப நான் போகப் போற இடத்தில தான் மிகவும் கூட இருக்கிறதாம். எப்படி அந்த ஊரை கப்பல விட்டு இறங்கி கண்டுபிடிக்கப் போறேனோ என்ட பயம் எனக்கில்ல. நான் சின்ன வயதில குடும்பமா இருந்த நகரப் பகுதியைச் சார்ந்த கிராமப் புறம்தான் அந்த ஊர் என்பதால எப்படியோ கண்டுபிடிச்சிடலாம் எண்டு மனதில ஒரு தன்னம்பிக்கை இருக்குது. கப்பல் ஆடி அசைந்து போய்க்; கொண்டிருக்குது. நிமிர்ந்து என்ர தெற்குப் புறம் நோக்கிப் பார்க்கிறன். கடல் நடுவே சற்றுத் தொலைவில அமைந்திருக்கிற கோதுமைத் தொழி;ற்சாலை புகைகக்கி சூழலையும் மாசாக்கிறதையும் பாhக்கிறன். இப்ப அந்த ஏழு மாடித் தொழிற்சாலைக்குப் பக்கத்தில கப்பல் போகுது. அங்கே நெறைய மீனெல்லாம் செத்துக் கிடக்குது. கடற்படையினரால் அரைமணிக்கொரு தரம் நீருக்கடியில செய்யிற கிரனேட் சார்ஜினால் சாக்கொல்லப்பட்டவைதானாம் அந்த மீனெல்லாம். கொல்லப்பட்டவை தங்கட முகாமுக்கு அள்ளுப்பட்டுப் போக மீதப்பட்டவையெல்லாம் செத்துமிதக்குது. கப்பல் இப்ப அடிக்கடி உயிர்களைக் காவெடுக்கும் அந்த மலைப் பக்கமாக போகுது. அந்த மலைப் பகுதி கழியுமட்டும் இந்தப் பிரயாணிகளுக்கு கடவுள் மேலெ எவ்வளவு பக்தி. கப்பல் இப்ப இறங்கு துறையை அடைஞ்சிட்டுது போல. பாதுகாப்பு சோதனைகள் முடிஞ்சவுடன் என்ர பெயர், முகவரி போன்ற விபரங்களையெல்லாம் பொலிசில் பதிஞ்சிட்டு இறங்குதுறையை விட்டு வெளியே வாறன். பஸ் ஒண்டு அந்தக் குரங்குகள் இருக்கிற ஊர்ப்பக்கம் தாண்டி போகத் தயாரான நிலையில் நிக்குது. அதில ஏறுறன். இப்ப பஸ் என்னச் சுமந்து போய்க் கொண்டிருக்கிது. ஓரு பதினஞ்சு வருசங்களுக்குள்ள எவ்வளவு மாற்றங்கள். வீதி மருங்கில இருந்த காடுகள் அழிக்கப்பட்டிருக்குது. வீடுகள் நிறைய இடங்களில தரைமட்டமாக்கப்பட்டிருக்குது.

நான் இறங்க வேண்டிய நாற் சந்தியில இறங்குறன். சந்திக்கு மேற்குப் பக்கமா ரெண்டு மைல் போனா நான் சின்ன வயதில இருந்த அந்தப் பச்சை மாடிவீடு வரும் என மனதில பழைய நினைவுகள் ஓடுது. ஆனா நான் என்ர குரங்ககள் இருக்கிற ஊருக்கு சந்திக்கு கிழக்குப் பக்கமா நாலு மைல் நடந்து போக வேணும்.

நடக்கிறன். வீதி எவ்வளவோ மாறியிருக்குது. பள்ளமும் படுகுழியமாய். வீதி ஓரத்திலிருந்த கண்டல் காடுகள் கண்டபடி அழிக்கப்பட்டிருக்குது. வீதியோட சேர்ந்தாப்போல ஒரு ஓடையும் வீதிக்குப் போட்டியாய் ஒடிக் கொண்டிருக்கிது. இங்க வீதியின்ற ரெண்டு ஓரத்தில இருக்கிற வீடெல்லாம் ஓட்டையும் உடைசலுமாய் காணப்படுகுது. நிறைய வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டும் இருக்குது. குண்டுகள் சன்னங்களினது வேலையாக்கும் இதெல்லாம் என நினைச்சுக் கொள்ளுறன். கூரையில்லாத வீடுகளில் ஜன்னல், கதவு நிலைகள் பிடுங்கப்பட்டு இருக்குது.

திடிரென நிறையச் சப்பாத்துச் சத்தங்கள் கேட்கத் தொடங்குது. சீருடை அணிஞ்ச ஆக்கள் வந்து கொண்டிருக்காங்க. ஏதோ தாக்குதல் ஒண்ட நடத்தி முடிச்சிட்டு வாறாங்கள் போல்தான் தென்படுகுது? அதில அவங்களுக்கு வெற்றியோ? தோல்வியோ? எத்தனை பேர் செத்தாங்களோ தெரியாது?. அவங்க என்ன நோக்கி வர வர எனக்கு பயம் வரப் பார்க்குது. ஓரு வேளை அவங்க வாற எதிர்ப்பக்கம் நான் போறேனோ? அல்லது நான் போற எதிர்ப்பக்கமா அவங்க வாறாங்களோ தெரியாது? இதில என்ன பயம் வேண்டிக் கிடக்குது. நான் என்ன பயங்கரவாதி மாதிரியா இருக்கிறன். அப்ப வீதிய திரும்பிப் பார்க்கிறன். வீதியில ஒருத்தரும் என்னத் தவிர இல்ல. ஒரு சீருடைக்காரன் எனக்கிட்ட வந்து அவன்ர மொழியில விசாரிச்சு சந்தேகம் தீர்க்கிறான். இந்த சீருடைக்காரனிடம் கொள்ளையா ஆண்மையும், ஆணவமும் இருக்குது. முகத்திலே அகங்காரம் நெரம்பி வழியுது. ஓரு வேளை அவன்ர வீடு ஆளுயரமேயில்லாத ஒத்த அறைக் குடிலோ என்னவோ? இவனுக்கு கலியாணம் கட்டாத ரெண்டு அக்காக்களும், தங்கைகளும் வயல்ல வேல செய்யிற ரெண்டு தம்பிமாரும் பத்தாம் வகுப்பை மூணு தடவை படிக்கிற ரெண்டு தம்பிமாரும் இருக்கலாம். இல்லாட்டி ரெண்டு தம்பிமாரும். வேறெ எங்கோ சீருடைக்காரனா வேலயும் செய்யலாம்.
இவைகள நெனச்சிக் கொண்டு அந்தப் பாலத்தை தாண்டுறன். ஒரு பதினஞ்சு வருசங்களுக்கு முந்தி ஒரு மாலைப் பொழுதில நானும் என்ர சொந்தக்காரப் பெண்ணும் ஆளுக்கொரு சைக்கிளில் இந்தப் பாலம் வரைக்கும் வந்து திரும்பியிருக்கம். இந்தப் பாலத்திற்கும் அந்தப் பாலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குது. இங்க நிறையத் தூண்கள் உடைஞ்சி காணப்படுகுது.

பாலத்த தாண்டி வந்து கொண்டிருக்கன். இந்த உச்சி வெயிலுக்கு வீதியில ரெண்டு சைற்றிலயும் மரங்கள் குடை போல அமைஞ்சி குளிர்மை குடுத்துக் கொண்டிருக்குது. அப்ப எனக்கு முன்னால தூரத்தில அஞ்சாறு பொடியன்கள் நின்று கொண்டிருக்கிறத பார்க்கிறன். அவங்கள யாரென மதிச்சிட்டன். அவங்கள் முகத்தில சிரிப்பும் இல்ல, ஆனா கவலயும் இல்ல. செருப்பு போட்டிருக்காங்க. அவர்களிடம் இயல்புக்கு மீறிய அழுத்தம் இருந்தது. உண்மையில இயல்புக்கு மீறிய அழுத்தம் வாறத்திற்கு அவங்களின் கடந்த காலம் கசப்பான மாதிரி இருக்க வேணும். வாழ்க்கையில நிறைய அடிகள் பட்டிருக்க வேணும். அந்தத் திடகாத்திரமான உடம்புள்ள பொடியன்கள் என்னப் பார்க்கிறாங்க. நான் புன்னகைக்கிறன். அவங்க பதிலுக்கு புன்னகைப்பதா அல்லாட்டி வேண்டாமா என்று யோசிச்சிட்டு கஸ்டப்பட்டு புன்னகைக்கிறாங்க. அவங்கள தாண்டிப் போறன். என்னையே பார்த்துக் கொண்டிருக்காங்க.

விடிகாலைச் சூரியக் கிரணத்தின் வெம்மை என்னைத் தட்டியெழுப்புது. கட்டிலில படுத்தபடி ஜன்னலுக்கூடாக பார்க்கிறன். அந்த நாற்சந்தி, நீரோடையின் வளைவு எல்லாம் தெளிவாகத் தெரியுது. தூரத்தில விவசாயம் செய்யாம பல வருசங்களா கைவிட்ட தரிசு நிலத்தில புல்லு முளைச்சு அது பச்சைக் கம்பளம் மாதிரி காட்சியளிக்குது.  இக்கரைக்கு அக்கரை பச்சை அது மாதிரி என்னவோ?

"குய்.. குய்.. குய்.." என்று சத்தம் கேட்குது. திரும்பிப் பார்க்கிறன். பெரிய குரங்கு ஒண்டு ஜன்னலுக்கு வெளியில இருந்து எனக்கு பயம் காட்டுது. நானும் பதிலுக்கு அது மாதிரிக் கத்துறன். பின்ன அந்தக் குரங்கு போயிட்டுது. ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கிற இந்த ரெண்டு அறை வீட்டுக்கு வந்து ஒரு வாரமாயிட்டுது. மெல்ல மெல்ல ஊரும், இந்த வீடும், குரங்குகளும் பழக்கமாயிட்டுது என்ர அறைக்குப் பக்கத்தில இருக்கிற பெரிய ஆல மரத்திலதான் குரங்குகள் தங்குது. பகல் நேரத்தில பன்ரெண்டர மணியிலிருந்து ஒண்ணரை மணிவரையம் சிறு தூக்கம் செய்யுது. பின்ன குறூப் குறூப்பா பிரிஞ்சி விளையாடுவதும், சாப்பிடுவதும், சேர்க்கை செய்து ஓடிப் பிடிச்சும் விளையாடுது.

திடிரென அலறலுடன் சேர்ந்த மாதிரி குரங்கொன்றின் சத்தம் கேட்குது. அது அசாதாரணமான சத்தம் என்று உணர்ந்து கொள்ளுறன். வெளிய வந்து பார்க்குறன். குரங்கொன்று மண்டை வெடிச்சி ரெத்தம் வழிஞ்சி நான் பார்ப்பதற்கு இடையில். அஞ்சாறு முறை மூச்செடுக்க கஸ்டப்பட்டு செத்துப் போட்டுது. மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதாம். இது எப்பவும் உண்மையில்ல எண்டு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. என்ர யுனிவர்சிட்டி வளவுக்குள்ளேயே கூட மூண்டு குரங்குகள் பிடி பிழைச்சி செத்திருக்குது. அவை விழுந்து கிடந்தாலும், உடனே முதலுதவிக்கு குரங்குக்கு கிட்ட போகவேலாது. அது தற்கொலை முயற்சி மாதிரி. நாம் சத்துருவா மித்திரனா எண்டு மற்றக் குரங்குகளுக்கு தெரியாது. எல்லாம் சேர்ந்து நாலு வேட்டைப் பல்லாலும், இருபது நகத்தாலும் தாக்கத் தொடங்கினால் அதோ கதிதான். இப்போ செத்த குரங்கைச் சுற்றி பதினைஞ்சுக்கு மேலே குரங்குகள் நிற்கிது. ஒரு குட்டிக் குரங்கு செத்த குரங்கைச் சுற்றி கட்டிப் பிடிச்சி அழுது கொண்டிருக்கிது. சின்ன கறுத்த முலைக் காம்பு அதற்கு இருந்தது. "ஜெனி" என்று பெயர் வைக்கிறன். அதற்கு அருகிலே முலைக்காம்பு நீண்டு தொங்கும் பெரிய குரங்கு செத்த குரங்கை தட்டிப் தட்டிப் பார்த்து தன்ர தலையில் கைவைச்சி எதையோ தொலைச்சிவிட்டது மாதிரி சோகமாக கண்ணில் நீருடன் நிலத்தையும் மரத்தையம் மாறி மாறி அண்ணாந்து பார்க்குது. செத்த குரங்கை ஜெனி கட்டிப் பிடிச்சி அழுது கொண்டிருந்ததைப் பார்க்கையில மனசுக்கு கஸ்டமாக இருக்குது.

இந்த பெரிய பெட்டைக் குரங்கு ஜெனியின் தாயாக இருக்கணும் போல. தாய்க்கு வீணா என்று பெயர் வைக்கிறன். செத்துக் கிடக்கும் குரங்கு ஜெனியின் தகப்பனாக இருக்கணும் போல. அதற்கு விக்கி எண்டு பெயர் வைக்கிறன். விக்கி எண்ட பேர் வச்சா வகுப்பில அடிக்கடி என்ன கிண்டல் பண்ணும் அந்த தாடிக்காரனை பழிவாங்கியது போல் கூட இருக்கும்.

விக்கியை கட்டிப் பிடிச்சி அழுதுக்கிட்டிருந்த ஜெனியை வீணா தகப்பனாக்கிப் போட்டுது. அப்பவும் ஜெனி திமிறிக்கொண்டிருக்குது. தன் தகப்பனில்லாத எதிர்காலத்தப் பத்தியா? அல்லது சாப்பாட்டப் பத்தியா? தூங்குகின்ற மரக்கிளையைப் பத்தியா? தகப்பனின் அன்பின் பிரிவைப் பத்தியா? ஆனா ஏதோ ஒண்டு ஜெனிக்கும் வீணாவுக்கும் ஏதொவொரு வகையில் இழப்பாத்தான் இருக்கணும் போல. எப்படி விக்கி செத்திருக்கும்? சாப்பாட்டுக்கும், பெண்ணுரிமைக்கும் போட்டி போட்ட மத்தக் குரங்குகள் ஒரு வேளை ஒரு மரத்திலிருந்து மத்த மரத்திற்கு தாவற ரைம்ல தட்டியும் விட்டிருக்கலாம். இங்கே எல்லாம் விரவிக் கிடப்பது போட்டியும் பொறாமையும்தானே. அடக்குதலும், அடங்குதலும்தானே.

ரெண்டு கிழமைக்கு பிறகு இண்டைக்குத்தான் ஜெனியும், வீணாவும் விளயாடுவதப் பார்க்கிறன். காரணம் மூணாவது குரங்கு. ஆண் குரங்கு. அதற்கு பரா என்று பெயர் வைக்கிறன். மூணும் ஓடிப்பிடிச்சி விளையாடிக் கொண்டிருக்கிது. அதற்குப் பின்ன மூணு நாளுக்கு தொடர்ச்சியா மூணும் ஒருமிக்கத்தான் இருக்கிது. வீணா பராவை துணையாக்கிக் கொண்டுவிட்டது போல. ஜெனிக்கு புதுசா ஒரு அப்பா கிடைச்சிருக்கார் போல. வாழ்க்கை என்பதில் பரம்பிக் கிடப்பது வளைத்தலும், வளைதலும், மயங்குதலும், மயக்குதலும், துணையாதலும், துணையாக்குதலும்தானே.
முக்கிப் பிடிச்சி ஒடையில முங்கி முங்கி குளிச்சிக் கொண்டிருக்கிறன். ஒரு தரம் முங்கி எழுந்து நிமிர்ந்து பார்க்கிறன். ஓரு தோணி என்ர தலைக்கு நேரே தெரியுது. அதில ஒருவன் தன்னந் தனியே வலை வீசிக் கொண்டிருக்கிறான். அவன் வலை வீசுவதையே பார்த்;துக் கொண்டிருக்கன். பதினஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு வலைப்பாட்டில எவ்வளவு மீன்கள் படும். ஏன் இப்ப குறஞ்சு போச்சு? ஒரு வேளை யுத்தம் காரணமாக்கும். அந்த மெல்லிய கறுத்த வலை வீசுற தோணிக்காறன் தோணியுடன் என்னை நெருங்குகிறான். ஏதாவது கதைக்கணும் என்பதற்காக மீனப்பத்தி விசாரிக்கிறன். நான் அவனோட கதைச்சது அவனுக்குச் சந்தோசம் எண்டு அவனது முகத்தைப் பார்த்ததும் புரிஞ்சி போச்சி.

தோணி, இப்ப எனக்குப் பக்கத்திலிருந்த துறையடிக்கு போய்க்கொண்டிருக்கிது. பொதுவாக ரெண்டு துறையடிகள் இருக்கிது. ஒண்டு குளிக்கவும், மத்தது தோணி தள்ளி வைக்கவும். இப்ப இரண்டு பெண்களும் நெருங்கி வருகினம். ஒரு பெண் நடுத்தர வயது. மற்றது இள வயது. ரெண்டு பேரும் அம்மாவும் மகளுமாக இருக்கணும் போல. குளிச்சி வெளியேறிய நான் கரையாலேயே நடந்து அந்த தோணித் துறைக்குப் போறன். இப்ப தோணி தரை தட்டிட்டுது. அந்த ரெண்டு பெண்களும் தோணியைப் பிடிச்சி தோணிக்காரனுடன் சேர்ந்து தோணியை கரைக்கு இழுக்கினம். நானும் உதவி செய்ய நெனச்சி தோணியில கை வைக்க அவர்கள் அதை மறுக்கினம். ஓரு வேளை எனக்கு கஸ்டம் தரக்கூடாதாக்கும் எண்டு நெனக்கிறாங்களோ தெரியாது.

தோணிக்குள் கிடந்த மீன்களை அந்த ரெண்டு பெண்களும் கோர்வையாக்கினம். கோர்வையாக்கின கொஞ்ச நேரத்தில அடி மாட்டு விலைக்கு மீன்கள் வில போகுது. மீன்கள் போன பின் முகத்தில் அவங்களுக்கு திருப்தி இல்ல போல. மீன் வித்த காசு இன்றைய நாளை ஒரு வேளை ஒப்பேற்ற போதுமோ என்னவோ? தெரியாது. நான் இந்த நடுத்தர வயதுப் பெண்ணிடம் கதை கொடுக்கிறன். இளவயதுப் பெண் தனது மகளென்றும், முதலாவது திருமணத்தில் பிறந்தவளென்றும், தோணிக்காரன் கணவனென்றும: தனது முதற் கணவனை பத்து வருடத்திற்கு முன்னால் சீருடைக்காரர்கள் கூட்டிச் சென்று கொண்டு போட்டார்கள் என்றும் சொல்லுகிறாள்.

பெரிய முள்ளை சின்ன முள் துரத்த, அது நிமிசத்தை துரத்த, பின் மணியை, நாளை, மாதத்தை துரத்திச் சென்று விட்டன. நான் இந்த ஊருக்கு வந்து ஆறு மாதமாயிட்டுது. எனது புறஜக்ட் இன்னும் முடிய ஆறு மாதம் இருக்குது. துரத்தல்கள் மாதங்களுக்கிடையே நடந்து கொண்டிருந்த பிரக்ஞையிலிருந்து விடுபட்ட நேரம் எனது அறைக்குப் பக்கத்து ஆல மரத்தில் குரங்குகள் ஒன்றை யொன்று துரத்திக் கொண்டிருந்தன. அதில பத்தொன்பது பேர். எல்லோருக்கம் பேர் வச்சிருக்கன். எல்லாம் என்ர வகுப்புத் தோழர்களின் பெயர்களின் சுருக்கம்தான். தெரிந்தால் கொன்றுபோட்டு விடுவானுகளாக்கும்.

கிழக்குப் பக்கமாக இருந்த கிளை பலமாக ஆடிக்கொண்டிருக்குது. என்னெண்டு பார்க்கிறன். அங்கே பராவும், ஜெனியும் இருக்காங்க. ஜெனி முனகிக் கொண்டிருந்தது. வர வர பராவின் நடத்தை காட்டுமிராண்டித் தனமாகி வருவதை அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறன். ஓரு முறை ஜெனிக்கு முதுகுப் பக்கமாக கடிச்சிவிட்டது. அதற்கு நான்தான் மருந்த போட்டு விட்டன். இப்ப ஜெனியை பரா புணருவதற்கு முயல்கிறது. நாலு காலில் ஜெனியை நிற்க வைச்சி பரா பகீரதப் பிரயத்தனம் எடுக்கிறது. ஆனா ஜெனி ஒத்துக் கொள்கிறாப் பொல இல்லையே. பரிதாபமாக பின்னால் திரும்பிப் பார்க்குது. உடனே பரா ஜெனியின் கழுத்தின் பின் பகுதியைக் கடித்துவிடுகிறது. அப்ப ரெத்தம் கசியத் தொடங்க வலியினால் ஜெனி அலறுகிறது. பின் ஜெனிய நாலு காலில் நிற்க பரா அதன் முழங்கால் சில்லுக்கு பின்னால மேலே தன்ர ரெண்டு பெரிய கால வச்சி ஏற, ஜெனி துவண்டு கீழே விழுகுது. பின் ஏறி ஜெனியின் பிற்பக்கத்தில் தன் முன்பக்கத்தினால் புணருது. ஜெனி மீண்டும் துவளத் தொடங்குது. ஒரு வேளை ஜெனியின் தாய் வீணா இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமோ தெரியாது. இந்தப் பாலியல் வல்லுறவு வீணா இல்லாத நேரங்களில்தான் நடக்கின்றன என்று நான் இரு மாதங்களுக்கு பின்தான் உறுதி செய்து கொள்ளுறன். வாழ்க்கை என்பது நம்புதலும், நம்ப வைத்தலும்தானே. பலதார திருமணம் இல்லாத இந்த குரங்கினத்தில் (மொனோகெமி) ஜெனி கர்ப்பமானால் இந்தக் கர்ப்பத்திற்கு காரணம் பரா என்றால் அது மிகவும் முறைகேடான ஒன்றாகத்ததான் இருக்கும். பராவின் அட்டகாசம் அந்த "பன்யன் ட்ரூப்பில்" (ஆலமர குறூப்) அளவுக்கு மீறிப் போயிட்டுது. இது "மேல் ஓவர்ரேக்கிங்"காகத்தான் இருக்குமாக்கும்.

கட்டிலில புரண்டு புரண்டு படுக்கிறன். நித்திரை இன்னும் வரவில்லை. இன்றையுடன் இந்த ஊருக்கு வந்து ஒரு வருசம். இன்றுடன் என்ர புறஜக்ட் முடிஞ்சிட்டுது. நாளைக்கி என்ர யுனிவர்சிட்டிக்கு நான் போக வேணும். புறஜக்ட் றிப்போர்ட், பத்தகங்கள், உடுப்புக்கள் வைக்கப்பட்ட பையை தூக்கிக் கெதாண்டு மேற்குப் பக்கமாக நாலு மைல் நடந்து, அந்த நாற்சந்தியை அடைஞ்சி, பஸ்ஸோ அல்லது வேனோ அல்லது வேறு என்னத்தையோ பிடிச்சி ஜெற்றிக்குப் போய், பத்தரை மணிக் கப்பலைப் பிடிக்கணும். ஒரு வருசத்திற்குப் பின்ன இந்த ஊரை விட்டுப் போறது சந்தோசமென்றாலும், இந்த ஊர், இந்த வீடு, இந்;த ஓடை, இந்த ஆல மரம், இந்தக் குரங்குகள் இவைகள பிரிஞ்சு போறத நினைக்கிற நேரத்தில கொஞ்சம் துக்கமாத்தான் இருக்கிது. இந்தக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம். ரெண்டு வயது குழந்தையும், ரெண்டு வயது குரங்கும் எனக்கு ஒரே மாதிரித்தான் இருக்கினம். அறிவிலும் சமம்தான். எனக்கு இவைகள் மாமாட, சித்தப்பாட பிள்ளைகள் மாதிரி. அவைகள் என்னிடம் கேள்வி கேட்கும். நூனும் பதில் சொல்வன். நானும் கேட்பன். அவையும் மறுமொழி சொல்லும். இந்தக் குரங்குகளின்ர இன்பத்திலும், துன்பத்திலும், சாவிலும், பிறப்பிலும் கலந்து கொண்டிருக்கன். இந்த ஆலமரம் இவைகளின் அரண்மனை மாதிரி. அதில் அரசோச்சிய அரசனும், அரசியும், அரசிளங்குமாரர்களையம், சேவகர்களையும் எனக்குத் தெரியும். மற்றவர்களின் கண்ணுக்கு வாயில்லாத வாலுள்ள வானரங்களாத் தெரியும். எனக்கோ அவற்றின் ஒவ்வொருவரின் கதை கூட நன்றாக இந்த ஒரு வருடத்தில் தெரியும். என்ன, மனிதனும் குரங்கும் எவ்வளவு செயல்களிலும் நடத்தைகளிலும் ஒண்டுதான். ஆனால் மனிதன் வாலில்லாத வானரம்.

வையகத்தை
சுருக்கிவிட்டவைகளின்
துணையோடு
தொலைந்துவிட்ட
வாலைத்தேடி...
என மனசு கவிதை சொல்லத் தொடங்க தூக்கம் கண்களைச் சொருக தூங்கிப் போகிறன்.

சூரியன் பரவி, பறவைகள் வெளிக்கிழம்பி, பொழுது விடிஞ்சி காலை நேரமாகி விட்டிருந்தது. நான் யுனிவர்சிட்டி திரும்ப தயாராகி நிற்கிறன். எனது பேக்கை தோளில் போடுகிறன். அப்போ, மக்களின் கத்தல் ஆரவாரச் சத்தம் மெல்ல மெல்ல கேட்கத் தொடங்குது. அப்போ தெளிவாக கேட்கத் தொடங்குது. ஒரு ஆள் அடிபட்டு அலறும் சத்தமும், சவுக்கடியும் கேட்குது. அப்போ அலறுபவனுக்குத்தான் அடி விழுதாக்கும் என்று நான் நினைக்கையில இப்ப ஆல மரத்திலயும் பாயும் சத்தமும், அரளும் சத்தமும் கேட்கத் தொடங்குது. பல குரங்குகள் ஒண்டாகச் சேர்ந்து ஒரு குரங்கை தாக்கத் தொடங்குது என்று புரிஞ்சு கொள்ள எனக்கு கன நேரம் எடுக்கல்ல.

இப்போ ஜன்னலுக்கூடாக எனக்கு தெளிவாக தெரிகிற தூரத்தில் சனங்கள் வந்து கொண்டிருக்காங்க. சனக் கூட்டத்தில் அந்த திடகாத்திரமுள்ள பொடியன்கள் ஒருத்தனை தலையை மொட்டை அடிச்சி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, சவுக்கால் அடிச்சி, நடத்திக்கிட்டு அவன்ர மேலெல்லாம் ரெத்தம் வழிஞ்சி கொண்டிருக்க வந்து கொண்டிருக்கினம். என்ன தவறு செஞ்சானோ தெரியாது. இவன ஏன் இப்படி அவனைத் தண்டிக்காங்களோ? அவன் கழுத்தில ஏதோ போட் மாட்டி அதில் ஏதோ எழுதப்பட்டிருக்குது. தூரத்தில எண்டதால என்னால வாசிக்க முடியல்ல. இப்ப என் ஜன்னலுக்கு நேரேயுள்ள முச்சந்திக்கு கொண்டு வந்து அங்கு இருக்கிற புளியமரத்தில பொடியன்கள் அவனைக் கட்டுகினம். ஆ! அவன் நமக்குத் தெரிஞ்வன். அந்தத் தோணிக்காரன். கழுத்தில் கிடந்த போட்டை வாசிக்கிறன். "எனது மகளைக் கற்பழித்தவன் நான்".

இப்ப ஆல மரத்திலுள்ள கிளைகளெல்லாம் உடையற மாதிரி சத்தமும், அலறல்களும் கேட்கத் தொடங்குது. முச்சந்தியைப் பார்க்கப் பிடிக்காமல் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறன். மரத்திலிருந்து ஒரு குரங்கு தலை அடிபட விழுந்து, அஞ்சாறு முறை மூச்செடுக்க கஸ்டப்பட்டு மூச்சுக்கு ஏங்கி மேலெல்லாம் பல்லும் நகமும் பட்டு சதை கிழிஞ்சி ரத்தம் ஒடி செத்துப் போய்விட்டிருந்தது. கிட்டப் போய்ப் பார்த்தன் அது பரா. சத்தம் இல்லாமல் தனது கடைசி மூச்சையும் விட்டுட்டுது. அப்போது புளியமர முச்சந்தியிலிருந்து டுமீல்.. என்று மூண்டு சத்தங்களும், யாரோ தன்ர தாயை அலறிக் கூப்பிடுகிற சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...