Saturday, October 8, 2011

பாம்புகள்


-அம்ரிதா ஏயெம்-
நம்பிக்கையின் ஒளிக்கற்றைகள் வானிலிருந்து மேகத்தில் பட்டு தெறித்து விழும், நடுநிசியின் குளிர்ந்த காற்று வீசுகின்ற இருண்ட பாலைவனத்தின் ஒரு இடத்தில் சசியின் வீடு இருப்பதாக எனக்குப் பட்டது. அமைதியான பௌர்ணமியின் குளிர்ந்த காற்று என் தேகத்தில பட்டு அந்தக் பிரக்ஞைக்கு உரமேற்றியது. கத்தரித் தோட்டம், ட்ரக்டர் கராஜ், நெல் அடுக்கி வைக்கும் ஸ்டோர், மாமரங்கள், தென்னை மரங்கள், பாக்குமரங்கள், நாய்களுக்கு கட்டிய சிறிய வீடு, பூந்தோட்டம். இவைகள் சசியின் பெரியவீட்டு வெள்ளை மணல் முற்றத்தை சுற்றி இருந்தன. வெள்ளை மணலில் நீளமான கறுத்தப் பாம்புகள், சிறிய சிறிய கறுத்த எலிகளை துரத்திக் கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று பலமாக வீச பரமபத பாம்புகளும், எலிகளும் கரைந்து போயின. இலைகள் யாவும் பழைய நிலைக்கு மீண்டும் வர துரத்தல்கள் தொடர்ந்தன. மீண்டும் மீண்டும் துரத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. துரத்தல்களுக்கு முன்பும், பின்பும் எலிகள் மிகையுற்பத்தியாக, அதற்கேற்றாற்போல் பாம்புகளும் ஆயின. துரத்தல்கள் வாழ்க்கைப் பேராட்டங்களாயின. வல்லன பிழைத்தோ, முதுகுகாட்டியோ வாழ்ந்தன. பின் யாதுமாகி பாரம்போடப்பழகிய அல்லது ஆதாரமான இயற்கை பாம்பு-எலி துரத்தல்களை வெற்றிப் பெருமிதத்துடன் தெரிவு செய்தது. எலிகளும் காற்றின் மேலும், நிலவி;ன் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு ஓடிக் கொண்டேயிருந்தன. பாம்பு-ஏணி-தாயக்கட்டை விளையாட்டு தொடர்ந்து கொண்ருந்தது. எலிகளின் வாழ்க்கைப் போராட்டத்தில், பாம்புகளினால் கடிபட்டு சாண் எற முழம் சறுக்கின. எலிகளும் தங்கள் முயற்சிகளில் சற்றும் மனம் தளராமல் தப்புதலுக்கான முயற்சிகளை தொடர்ந்து கொண்டிருந்தன. இருள்வெளி மேடைகளில் உயிர்நிழல் கரைந்துகொண்டிருந்தது. இந்த வெள்ளை மணல் மொடர்ன் ஆர்ட் முற்றத்தில் இன்னும் என் பார்வை ஆழமாகிக் கொண்டே இருக்க, வாழ்க்கையின் ஒரு கோணம் புரிபட ஆரம்பிக்கின்றது.

கறுப்பு என்பது துக்கம். வெறுப்பு. நடுநிசியின் அந்தகாரத்தை கிழித்து நரிகள் கூவும் ஏதாவது டிராகுலா இரவுகளில்தான், இந்தக் கறுப்பு, மேகமாய் முழுமதியை மூடத் தொடங்கி நடுநிசி இரவு பற்றிய பயத்தை தோற்றுவிக்கத் தொடங்கும். நிலவைப் பார்க்கிறேன். நிலவுக்குள் இருப்பது, அம்மி அரைக்கும் கிழவியா? முயலா எனப் பார்க்க முயல்கிறேன். முயல் தோற்கிறது. இன்று கடல் சரியாக பொங்கும். கடற்கரையில் படகு, தோணிகளை கொஞ்ச தூரம் தள்ளி வைப்பார்கள். கடல் இன்று தங்கச் சரிகை போட்ட சாரி கட்டி, நிலாப் பொட்டு வைத்து, கூந்தலில் வெள்ளிப் பூக்களை சூடி, சுமங்கலிப் பெண்ணாகும். காட்சியளிக்கும். கடலும் பெண். நிலவும் பெண். பெண்களாயிருந்து இவைகளுக்குள் கடல் ஏன் கொந்தளிக்கிறதோ தெரியாது. என்று யோசிக்கையில், மணிக்கட்டை பார்க்கிறேன். ஐந்து நிமிடங்கள் பத்து மணிகளைத் தாண்டிவிட்டு இருந்தது. சசி வந்து பக்கத்து கதிரையில் அமர்கிறான். ~சசி, நிலவும் பெண். கடலும் பெண். ஏன் வழமையா பௌர்ணமயில கடல் பொங்குது|.என்று சசியிடம் கேட்டேன். ~நேர் கோட்டு வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைப்பதுதான் கொந்தளிப்பு என்று எனக்குள்ளேயே யோசித்துவிட்டு சசியைப் பார்த்தேன். பாம்புகள் பற்றிய பயப் பிரக்ஞைகள் இரவுகளில்தான் அதிகமாக உற்பத்தியாகி ஊற்றெடுப்பது வழக்கம்.

அப்போது ~சசி சசி| என்று பக்கத்து வீட்டு பையன், அவர்கள் வளவுக்கும் இவர்கள் வளவுக்கும் பொதுவாயுள்ள வழியால் ஓடி வந்து கொண்டிருந்தான். ~என்ன| என்று சசி கேட்டான். ~அம்மாவுக்கு என்னமோ பூச்சி குத்திடிச்சி போல, அம்மா வலியால கத்துறா| என்றான் பையன். உடனே நானும் சசியும் அம்மாவின் வீட்டுக்கு ஓடுகிறோம். அங்கே அம்மா எதிர்பார்த்து போனதைவிட கொஞ்சம் சுகதேகி மாதிரித்தான் தெரிகிறார். சசி வீட்டுக்கு நான் போவதற்கு வழமையாக அம்மாவின் வளவிற்குள்ளால்தான் போவது வழக்கம். அதுதான் சோட் கட்டும் கூட. அப்படி போகும் போதெல்லாம் அம்மா மலர்ந்த முகத்துடன்தான் வரவேற்பார். அம்மா எனக்கு சொந்தம் இல்லாட்டியும், நான் அம்மாவ அம்மா என்றுதான் கூப்பிடுவது வழக்கம். அம்மாவின் முகத்தை பார்க்கிறேன். வலியின் கடுமை முகத்தில் தெரியத் தொடங்கியது.

~என்னம்மா நடந்தது?| என்றேன். ~இவ்விடத்த படுக்கறப்போ பூச்சி குத்தி கொழுவி இழுத்த மாதிரி இருந்திச்சி, வலிக்குது. சரியா போயிடும் |என்றார் அம்மா. கொஞ்சம் பூச்சி குத்தினத காட்டுங்க| என்றேன். இரண்டு குண்டூசி, பதிஞ்ச தடம் இருந்தது.. என்ன நடந்தது என்பதை உடனடியாபுரிந்து கொண்டேன். உடனே அம்மாட மகனைக் கூப்பிட்டு, ~அம்மாவ அடுத்த அறைக்கு கூட்டிச் செல்லுமாறு பணித்துவிட்டு, அம்மாட மற்ற மகனிடம் ~அம்மாக்கு பாம்பு கடிச்சிட்டுதுபோல. பாம்பு இங்கதான் எங்கேயோ இருக்கோணும். தேடிக் கண்டுபிடிச்சி அடியுங்க, இல்லாட்டி உயிரோட பிடியுங்க. ஆனா பாம்ப தப்ப விட வேணாம் அடிக்க முடியாட்டியும் கடிச்சது என்ன பாம்பெண்டாவது பாருங்க|. நாங்க அம்மாவ nஉறாஸ்பிட்டலுக்கு கொண்டு போக ஓட்டோ கொண்டு வாறம்|; என்று சொல்லிவிட்டு அடுத்த சந்தியிலிருந்த கோவிந்தன் அண்ணனின் வீட்டை நோக்கி சசியுடன் ஓடினேன்.

கடந்த மாதம் பக்கத்து கிராமத்தில் மிருகத் தனமான செல் வீச்சால் மூளை வெளிவந்து, கை கால் பறந்த பன்னிரண்டு பேரையும், அந்த நடுச் சாமநேரத்தில் தன்ர உயிரைப் பணயம் வைத்து மூன்று ட்ரிப்பில் நான்கு நான்கு பேரா nஉறாஸ்பிட்டலுக்கு ஒரு சதக் காசும் வாங்காம கொண்டு போய,; அதில் பத்து பேரின் உயிரைக் காப்பாற்றினாரே, அதான் கோவிந்தன் அண்ணன். போன கிழமை கணேஸ் பரிசாரியாரிடம் வைத்தியம் பார்க்க வந்;த அந்த முஸ்லிம்பெண் ஆஸ்த்மா வந்து உயிருக்கு போராடின போது, மண்மூடை, முள்கம்பிவேலி பயம் எல்லாவற்றையும் மறந்து nஉறாஸ்பிட்டலுக்கு கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமிலாமல் அந்தப் பெண்ணுக்கு சாப்பாட்டுக்கும் ஒழுங்கு பண்ணிவிட்டு, ஒரு சதக் காசும் வாங்காம வந்தவர்; கோவிந்தன் அண்ணன்.     ஓரு
நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, தலைப் பிரசவத்திற்கும,; உயிருக்கும் போராடின பெண்ணை, மற்றவர்கள் மண் மூடை முட்கம்பி வேலிப் பயத்திற்கு கைவிட்ட நிலையிலும் காசு எதுவும் வாங்காமல் nஉறாஸ்பிட்டலில் சேர்த்து, அசமந்தமா இருந்த நர்ஸ்களுக்கு, ~உங்களப் பத்தி பேப்பர்ல எழுதிப்போடுவேன்| என்று பயமுறுத்தி தாயினதும் சேயினதும் உயிரைக் காப்பாற்றி வைத்தவர்தானே கோவிந்தன் அண்ணன். இரவு நேரத்தில் எத்தனை கெம்பஸ் பிள்ளைகளை nஉறாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் கோவிந்தன் அண்ணன் காப்பாற்றி இருப்பார். கோவிந்தன் அண்ணன் ஒரு ஆபத்பாந்தவன். பாம்புக்கும் கீரிக்கும் காட்டில் சண்டை நடக்கும் பல கொத்துக்கள் வாங்கியும் பாம்பை கீரி தோற்கடித்து கொன்று போடும். பின் பாம்பின் விசத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற, ஒரு மூலிகையை நாடி ஒடும். இறுதியில் வேரில் மனிதாபிமானத்தையும், கிளைகளில் தைரியத்தையும் கொண்டு மூலிகையையும் அடையாளம் காணும். இறுதியில் உயிர்களைக் காக்கும் இந்த மரத்தைப் பற்றி கோவிந்தன் அண்ணனுக்கு தெரியும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

~அண்ணன், அண்ணன்| என்று கோவிந்தன் அண்ணனின் கேற்றைத் தட்டுகிறேன். உடனே சத்தம் போட்டு அண்ணன் வருகிறார். என்னை ஆச்சரியம் கலந்த சந்தோசத்துடன் பார்க்கிறார். விசயத்தை சொல்ல அடுத்த நிமிடம் அம்மாவின் வீட்டடியில் லாந்தருடன் ஓட்டோ நிற்கிறது.

அம்மாக்கு அருகிற்போய் ~அம்மா| என்றேன். ~ம்..|.; என்றார். அம்மாவின் கண் மேலே இழுபட்டு இருந்தது. தலை ஒருபக்கம் நிற்க முடியாமல் சரிந்து கொண்டிருந்தது. எலாபிடெ குடும்ப பாம்பான நாகம் இல்லாவிட்டால் கருவளலை கடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ~பாம்பை கண்டு பிடிச்சாச்சா| என்றேன். ~இல்லை| என்றார்கள். அம்மா படுத்த பாயைப் பார்க்கிறேன். பாய்க்கடியில் ஏதோவிருப்பதாக உள்ளுணர்விற்குப்பட்டது. ~சசி இங்க வாங்க இந்த பாயைக் கிளப்புறன் பொல்லால ஒரே போடு மண்டையில போடுங்க|. என்றேன்.பாயைக் கிளப்பினேன். அம்மா தலை வைத்து படுத்த இடத்திற்கு கீழ், அம்மாவைக் கொழுவிக் கொத்திக் குத்திய அந்த அழகிய கறுத்த பாம்பு சுருண்டு நீண்டு, படுத்திருந்தது. கரண்டித் தலை. சுங்கான் மீன்போல் பளபளத்த கரு நீல, மண்ணிற தோலில் மெல்லிய சாம்பல் கலந்த கறுப்பு கோடு போட்ட பாம்பு. கண்டங்கருவளலை. விஞ்ஞானப் பெயர் பங்காறஸ் சிலோனிகஸ். சசிக்கும் எனக்கும் விசப் பாம்புகள் என்றால் ஒரே ராசிதான். எனது டிப்பார்ட்மென்ட் மியுசியத்திற்காக நிறைய விசப்பாம்புகளைப் பிடித்துச் சேர்த்திருக்கிறோம். பொல்லால் ஒரே போடு மண்டையில் சசி போட்டு, ரிஸ்யு பேக்கிற்குள் பாம்பை போட்டு ஆட்டோவிற்குள் கொண்டு போனான்.

நானும், அம்மாவும், சசியும், பாம்பும், கோவிந்தன் அண்ணனும் ஓட்டோவுடன் nஉறாஸ்பிட்டல் நோக்கி பறந்தோம். கிருஸ்ணன் கோயில் தாண்டி, வெள்ளைமணல் முச்சந்தி கடந்து, கெம்பஸ் தாண்ட பாம்புப் புற்றொன்று மண்மூடைகளுக்கும் முட்கம்பி வேலிகளுக்கும் நடுவே தோன்ற ஆரம்பித்தது. புற்றுக்களை நினைக்க பாவமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. பாவம் கறையான்கள் பாம்பு புற்றுகளுக்காக. கறையான்கள் சமூக வாழ்க்கைப் பிராணிகள். சிறுக சிறுக, பிற்சொண்டால் மண்பொறுக்கி, சொட்டு சொட்டாய் உமிழ்நீர் கக்கி புரட்டி தங்கள் ராஜ்ஜியங்களை நடாத்த புற்றுக்கள் கட்டும். தங்கள் ராஜ்யபரிபாலனங்களை மனைவிகளோடும், பிள்ளைகளோடும் இன்பமாய் நடாத்திக் கொண்டிருக்கையில், புற்றுக்கள் பாம்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டு கறையான்கள் துரத்தப்படும். இந்த நெடு வீதியெங்கும் புற்றுக்கள் இவ்வாறுதான் உருவாக்கப்பட்டதாக்கும். இப்போது சில்லூறிகளின் சத்தத்தையும், எங்களையும் தவிர அந்த வீதியல் புழு, பூச்சி கூட இல்லை. nஉறாஸ்பிட்டல் போய்ச் சேர்ந்த உடனே ~கொமன் கிறய்ட் கடிச்சது| என்று டொக்டரிடம் சொன்னால், அதற்குரிய அன்ரிவெனம் சீரத்தை, டொக்டர் ஒரு வயலுக்கு 10 மில்லி லீற்றர் சேலைன் அல்லது தூய நீருடன் 10 வயல் கலந்து அம்மாவுக்கு ஒரு ஊசி போட்டால் அம்மா உடனே உயிர் பிழைத்துவிடுவார். அதற்கு விரைவாக nஉறாஸ்பிட்டலுக்கு போக வேண்டும். ஆனால் விரைவாக போக இயலாதே. நூறு மீற்றர் தூரத்திற்கு முன்னால் புற்றுக்கள் கட்டி நேரான வீதியில் வைத்திருக்கிறதால், குண்டும், குழியும், பள்ளமும், மேடும், கல்லும், கரடுமாயிருக்கிற இந்த கிளைக்கப்பட்ட ~பை| ரூட்டால , நூறுமீற்றருக்கு பதிலா ஒன்றரை கிலோ மீற்றர் ஓட வேண்டும். பத்து செகண்ட்ல கடக்கிற தூரத்தை பத்து நிமிசம் செலவாக்கி கடக்க வேண்டும். கடக்கின்ற நேரத்திலே கூட எவ்வளவு பிரச்சினைகள். இப்படித்தானே அந்த தென்னை ஆய்வு நிலையம் இருக்கின்ற ஊரில் நள்ளிரவில் பாம்பு கடித்தவரை மாட்டு வண்டியில் ஏற்றி லாந்தர் விளக்குடன் வந்த போது, பாம்பு கடிபட்டவருடன், அவரை ஏற்றி வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்தல்லவா புற்றுக்குள்ளிருந்து சத்தமாய் நெருப்பாய் சீறிவந்த விசத்தால் கொத்துப்பட்டு செத்தார்கள். இன்னொரு முறை இதே மாதிரித்தானே அந்த புற்றுக்கு முன்னால் நள்ளிரவில் பிரசவ வேதனையால் மாட்டு வண்டியில் துடித்துக் கொண்டிருந்த தாயை பாம்புகள் கொத்தி தாயும், சேயும் பரலோகம் போக சுகப் பிரசவம் நடந்தது. இப்படித்தானே எனது கெம்பஸின் தெற்குப்புறமாக பதினேழு கிலோமீற்றர் தொலைவிலுள்ள அந்த ஆதார வைத்தியசாலையின் மேற்கு புறமாகவுள்ள படுவான்கரையிலுள்ள கிராமங்களிருந்து இரவு நேரத்தில் பாம்புகள் தீண்டி, மாட்டு வண்டி கட்டி nஉறாஸ்பிட்டலுக்கு விரைபவர்கள் இடையிலுள்ள ஒரு பாம்பு புற்றுக்கு முன்னால் இரண்டு மணித்தியாலங்கள் காக்க வைத்து, புடையன் கடித்தால் இதயம் பாதிக்கப்பட வைத்தும், வளலை, நாகமானால் நரம்பு தொகுதி பாதிக்கப்பட வைக்கப்பட்டும், விசம் பரவச் செய்யப்பட்டும் கொல்லப்படுகிறார்களே. ராஜாவினால் வளர்க்கப்படும் இந்த ராஜநாகப் புற்றுக்களைப்பற்றி உலகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்?. உலகிலே இதைவிட மிருகத்தனம் வேறு என்ன இருக்கிறது? இலங்கையில் ராஜநாகங்கள் இல்லை என்று யார் சொன்னது. நான்கு குடும்ப விசப்பாம்புகளுக்கு 93ம் ஆண்டு, 49ம் இலக்க சட்டத்தில் பாதுகாப்புக்கொடுக்கப்படவில்லை. ஆனால் ராஜ பாம்புகளுக்கோ 82ம் ஆண்டு சட்டத்தால் ராஜாக்களாகவும், கடவுளாகவும் ஆகும் வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு ,விரும்பிய நேரத்தில் உயிர் கொடுத்து எடுப்பதால் ராஜாக்களும், கடவுள்களுமாகிறார்கள். நாகராஜாக்கள் வணங்கப்படுவதும் உண்டு. பாம்புகள் இராக் கால பிராணிகள். பாம்புகள் ராஜ்ஜியத்தில் பாம்புகள் சிறு குழுக்களாக ராஜாங்கம் அமைத்து, இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கை அவைகளாகவே உருவாக்கிக் கொள்ளும். ஆபத்து, அவசரத்திற்கு புற்றுக்கு அருகால் போனால் கொத்தவும் செய்யும்.

இப்போது புற்றுக்கு நூறு மீற்றர் முன்னால் முதலாவது களிமண்மூடை கும்பத்திற்கு முன்னால் ஓட்டோ நிற்க, நான் லாந்தருடன் இறங்கி முன்னால் நடக்கிறேன். கோவிந்தன் அண்ணன் nஉறட்லைட்டை அணைத்துவிட்டு மெல்ல மெல்ல எனக்கு பின்னால் ஓட்டோவை ஓட்டி வருகிறார். உண்மையில் இப்படிச் செய்யக் கூடாது. முதலில் லாந்தருடன் போய் விசயத்தை சொல்லி, அடையாள அட்டை காட்டி, சந்தேகம் தீர்த்த பின்தான் ஓட்டோ வர வேண்டும். அவசரம் என்றால் எனக்குப் பின்னால் ஓட்டோ வருகிறது. இது கோவிந்தன் அண்ணனின் ஆளுமை. புற்று நெருங்க நெருங்க பயமாக இருந்தது.

ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிந்தன் அண்ணன் வந்தார். லாந்தரை என்னிடமிருந்து வாங்கி புற்றுக்கு சற்று தள்ளி நின்று ஏதோ ஒரு மொழியில் கூப்பிட்டார். ஓரு பாம்பும் வெளி வரவில்லை. கூப்பிட்டதுதான் மிச்சம். ஒரு வேளை வந்திருப்பது கீரியென்றும் பாம்புகள் நினைத்திருக்கலாம். ஆனால் கீரிகளுக்கும், கிரிகளுக்கும் வித்தியாசங்களை பாம்புகள் இலகுவில் உணர்ந்து கொள்ளும். ~அம்மாவ இன்னும் கொஞ்ச நேரத்தில கொண்டு போக வேணும|; என்று நான் கோவிந்தன் அண்ணனை அவசரப்படுத்தினேன். இந்த நாட்டில் விசப் பாம்புகள் நான்கு குடும்பங்கள்தான் என்று படித்திருக்கிறேன் அவைகளை எனது டிப்பார்ட்மென்ட மியுசியத்திற்காக சேகரித்தும் இருக்கிறேன். இந்த பாம்புகளைப் பற்றி தலைநகரின் அந்த புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில்தானே விரிவாக அறிந்தேன். ஓரு நாள் அம்மாவை கொத்திய சாதிப் பாம்பின் தலையை வெட்டி, அதனை பொட்டாசியம் ஐதரொட்சைட்டில் போட்டு அவித்து, அதன் விசப் பல்லை எடுத்திருக்கிறேன். மீன்முள்ளால் செய்த பூமறாங் மாதிரி இருக்கும். நாகப் பாம்புக்கு கொஞ்சம் நீளம், புடையனுக்கு கொஞ்சம் வளைவு அதிகம். பாம்பகளிலும் எவ்வளவு வடிவான பாம்புகள், எவ்வளவு நிறமான பாம்புகள். பாம்புகள் உண்மையில் உருண்டு, நீண்டு, வளைந்த ஆயுதங்களை எதிரிகளை கொல்லுவதற்கு நிறைய வைத்திருக்கின்றன. சிவப்பாய், சிறிதாய் கறுப்பு வரி கொண்டு ஒரு பாம்பு. மண்ணிறமாhய், நெளிந்து சுருண்டு, விலாங்கு மீனின் வாலில் புலித் தோல் கறுத்தப் புள்ளி கொண்டு ஒரு பாம்பு. முக்கோணத் தலையுடன், நீண்டு கட்டையாகி, ஒடுங்கும் மஞ்சள் தோலில் ஒழுங்கற்ற சதுரங்களை பக்கவாட்டில் கறுப்பும் வெள்ளையும் கொண்டு; ரின்ற் பண்ணி ஒரு பாம்பு. கரண்டித் தலையுடன், மண்ணிற, சுங்கான் மீனின் பள பள தோலில் இளங் கறுப்பு வரி கொண்டு ஒரு பாம்பு. மரத்திலேயிருந்தால், இலையா, கிளையா பாம்பா எனப் பிரித்தறியமுடியா, பச்சை நிறத்தில் இளமஞ்சள் கலந்து மூக்கிலே குழி கொண்டு ஒரு பாம்பு. இதுவரையில் நான் பார்த்த படத்தில், எனக்குப் பிடித்த படம் பாம்பு எடுத்த படம்தான். காணக் கண்கோடி வேண்டும் என்பார்களே அது இதுதான். நாகம் எடுத்த படம். நாகத்திற்கு விஞ்ஞான(லத்தீன்) பெயர் நஜா நஜா நஜா. நாகராஜாவின் சுருக்கம் என்னவோ. இலங்கையில் படம் எடுக்கும் ஒரே ஒரு பாம்பு நாகம்தான். இலங்கையில் நட்டப்படாமல் இப்போதெல்லாம் படம் எடுப்பதும் இது மட்டும்தான். ஸ்..ஸ்.. எனச் சீறி நெருப்புக் கண்பார்வை வீசி, அங்குமிங்குமாய் பார்த்து ரெட்டை நாக்கு வெளி எறிந்து, ரொட்டிக் கல்லில் வைத்து போத்தலால் நசிபடத் தொடங்கிய பிசைந்த கோதுமை மாதிரி தலை விரியவைத்து படமெடுத்தாடும். கண்ணாடிப் பாம்புக்கே கண்ணாடி இல்லாத போதும், எல்லோரும் கண்ணாடியை முன்னால் போட, இது வளைந்து சுருண்டு, எழுந்து வளைந்த கறுப்புக் கண்ணாடியை பின்னால் போடும். முள்ளில்லாத சப்பாத்துக்கள்ளி, நாகதாளி வடிவ படம் எடுக்கும். படத்தின் மையப் பகுதி தட்டையுமில்லாமல் உருண்டையுமில்லாமல், நீழமாய், சின்ன கறுத்த பெல்ட்டினால் மேலிருந்து கீழாக தைக்கப்பட்டிருக்கும். படத்தின் விழிம்பிலிருந்து மையம் வரை மூன்று நிரலில் நான்கு ஓரங்களிலும் கடும் கறுப்பும், சிவப்பும் நடுவில் இளம் சிவப்பும் கொண்ட சரிந்த செவ்வகத்திலான செதிலால் இழைக்கப்பட்டிருக்கும். சரிவகமோ மேலிருந்து கீழாக பருமனில் குறையும். முன்னும். பக்கமும் ஒரே நேரம் பார்க்கும் தீச் சட்டிக் கண்கள். இரு கண்களுக்கிடையே மேற் சொண்டின் மூக்கின் மேல், முதலைத் தோலில் செதிலால் செய்த பெரிய செதில்கள் மூட, இரட்டை நாக்கை நீட்டி, சொண்டைத் திறந்து வாயை ஆவென்று, சிவத்த உதடுள்ள சின்னக் குழந்தையின் வாயை நினைவுபடுத்தும். நாக்கு கீழே கறுப்பாய் ஒரு குழி. தொடங்கி தொண்டைக்குள் திறந்து, ரெட்டை நாக்கிற்கு அருகிலும் இரு குழிகள் திறக்கும். மேற் சொண்டிலோ விசப் பல்லு இரண்டையும். முயல் போல் ஒளித்து வைத்திருக்கும். நாகம் வாயைத் திறப்பதே ஒரு அழகுதான். அழகு என்பது நிறமா? நிறங்களின் சேர்க்கையா? சமச்சீரா? அழகிலும் ஆபத்திருக்கிறது. ஆபத்திலும் அழகிருக்கிறது.
பாம்புகள் வேண்டுமென்றே கொத்தி மனிதனை கொன்று வாழ்வை முடிப்பன அல்ல. பாம்புகள் வாழ்வுகள் கொடுப்பவை. இன்றும் அலிக்கம்பையிலும், தம்பானையிலும், வேறு பகுதிகளிலும் பாம்புகள்தானே மனிதக் குடும்பங்களை ஊட்டுகின்றன. பாம்புகள் நடுத்தெருவில் நடனமாடாவிட்டால் எத்தனை குடும்பங்கள் தெருவில் ஆடும். பாம்புகள்தானே கேடு செய்யும் பூச்சிகளையும், கிழங்குகளையும் அகழந்து, விவசாயத்தை கெடுக்கும் எலிகளையும், அகிழான்களையம் அழித்து சூழல் சமநிலையைப் பேணுகின்றன. நடக்கும்போது மிதித்தால், படுக்கும் போது கால்கள்; ஆடினால் தனது எதிரி என நினைத்து பயந்து பாய்ந்து கொத்தி கொழுவி ஊசி ஏற்றும். நான்கு சாதிப் பாம்புகள் மட்டும்;தான் மரணம் ஏற்படுத்தக் கூடியவை. பாம்புகள் கடித்தால் மரணம் என்றில்லை. கொடுக்கப்படும் பிழையான முதலுதவிகளும், அதுபற்றிய அறிவுக் குறைவுகளுமே பாம்புகள் ஆளை முடிக்க உதவுகின்றன. உலகிலே பாம்புக்கடி விதம் இங்கேதானாம் அதிகம். ஒரு நாளைக்கு இருவர் சாகிறார்களாம். இருவர் மட்டுமா.? என்ன பொருத்தமான ஒப்பீடு. பாம்புக்கு நாங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். பாம்புகள் நீண்டு, நெளிந்து படமெடுத்து மட்டுமா இருக்கும்?

காக்கி நிறத்தில் ஒரு பாம்பு, கரும் நீல நிறத்தில் ஒரு பாம்பு
கடும்பச்சை நிறத்தில் ஒரு பாம்பு, அதில் வரிகொண்டு ஒரு பாம்பு
காட்டில் ஒரு பாம்பு, வள நாட்டில் ஒரு பாம்பு
கொடும் பாம்புகள் எந்நிறமிருந்தாலும்
கொத்துதலில் யாவுமவை ஒரே தரம்கொண்டு
கோரப்பல் விசத்தால் மனித வாழ்வை முடித்துவிடுவதன்றோ?.

என்று பாரதி இன்றிருந்தால் பாடியிருப்பானோ? என்று யோசிக்கிறேன். இப்போது, மண்மூடைப் பொந்துக்குள்ளிருந்து ஊர்ந்து தலையில் தொப்பியால் படமெடுத்து கை, கால் முளைத்து பச்சையாய் எங்களை நோக்கி ஒரு பாம்பு வருகிறது. அப்போது வேகமாக காற்றடித்து லாந்தரின் சுடர் அணையப் போகும் கடைசி நேர ஜோதியின் வெளிச்சத்தில் அம்மா தனது நெஞ்சை நிமிர்த்தி வாயில் நுரை தள்ள கண்கள் மேலே சொருக, உடம்பு நீலம் பாரிக்க தனது கடைசி மூச்சை விட்டார். இந்த பௌர்ணமி வெளிச்சத்தில் அம்மாவைக் கொத்திய பாம்பு அமைதியாய் ரிஸ்யு பேக்கிற்குள் கிடந்தது. அம்மாவைக் கொன்ற பாம்புகளில் ஒன்று இப்போது கதைக்கத் தொடங்கியது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...