புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் 01
ஏகாதிபத்தியம் என்ற பதம் அரசியல் சூழலில் மிகவும் பரிச்சயமானது. ஆனால் சூழலியல் ஏகாதிபத்தியம் அதிகம் பரிச்சயமான விடயமல்ல. தோலிருக்கச் சுளை விழுங்கும் சூழலியல் ஏகாதிபத்தியம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் பூகோளமயவாதம் என்ற போர்வையுள் பல்தேசிய நிறுவனங்கள் நடத்துகின்ற வியாபாரம் ஒரு அழித்தொழிப்பு யுத்தமாகவே கண்ணுக்குப் புலனாகாமல் நடந்து கொண்டிருக்கிறது.
காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு காலனியப்பட்ட நாடுகளின் பௌதிகச் சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை விபரிப்பதாக சூழலியல் ஏகாதிபத்தியம் என்ற பதம் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இப்பதம் முதன் முதலில் அலபிறெட் டபிள்யு. குறொஸ்பி (Alfred W. Crosby)என்பவரால் பயன்படுத்தப்படடிருக்கின்றது.
ஏகாதிபத்தியம், காலனியப்பட்ட நாடுகளின் சமூக, அரசியல், பண்பாட்டுக் கட்டமைப்புக்களை மாத்திரம் மாற்றியமைக்கவில்லை அந்நாடுகளின் சூழலியலையும் சிதைவுக்குள்ளாக்கியது. பாரம்பரியமான வாழ்வியல் வளங்களையும் சிதைவுக்குள்ளாக்கியது.
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் வெற்றிக்குக் காரணமாக உயிரியல் மற்றும் சூழலியல் அம்சங்கள் அடிப்படைகளாக இருந்ததை குறொஸ்பி கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். தான் வாழும் சூழலைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட எவரும் இதனைத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும். எங்களது சூழல் சார்ந்து இவை பற்றிய சிந்தனைகளும், செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகும்.
ஏகாதிபத்தியத்தால் உலகின் ஏனைய பகுதிகளுக்குப் பரவவிடப்படும் ஐரோப்பிய நோய்களால் அப் பகுதிகளில் வாழும் மக்களைப் பலங் குன்றச் செய்வதன் மூலமாக, ஏகாதிபத்தியவாதிகளது இராணுவ, தொழிநுட்ப ரீதியான வெற்றிகளுக்கான வாசல்கள் திறக்கப்படுகின்றன. ஏகாதிபத்தியவாதிகளால் அறிமுகப்படுத்தப்படும் தாவரங்கள், விலங்குகள் என்பவை ஏகாதிபத்தியவாதிகளுக்கோ அல்லது அவர்களது இராணுவ நலன்களுக்கோ ஆதாரமாக இருப்பது மாத்திரமல்லாமல், காலனியப்படுத்திய நாடுகளில், சூழலியல் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. இம் மாற்றம் அத்தேச மக்களுக்குப் பாதகமாக அமைவதுடன் அவர்களது பண்பாடுகளை, அவர்களது வாழ்வியலைப் பேணியிருக்கும் தாவர, விலங்குச் சூழல்களையும் நாசப்படுத்திவிடுகின்றது.
காலனியப்பட்ட நாடுகளது பயிர்ச்செய்கைகளை மாற்றியமைத்து, காலனித்துவ நாடுகள் தமக்குத் தேவையானவற்றை அறிமுகம் செய்துவிடுகின்றன. இதன் மூலமாக காலனியப்பட்ட நாடுகளது சூழல் சார்ந்த இயக்கம் தடுக்கப்பட்டு, காலனித்துவ நாட்டினை மையமாக கொண்டு, அந் நாட்டின் தேவைக்கேற்ப இயங்க வைக்கப்படுகிறது. இன்றைய உலகம் எதிர்கொள்கின்ற மிகப் பெரிய சூழல் மாற்றம் இதுவாகும்.
காலனியப்பட்ட நாடுகள் தமது பாரம்பரியச் சுழற்சிமுறைப் பயிர்ச் செய்கைகளில் இருந்து தடுக்கப்பட்டு, காலனித்துவ நாடுகளுக்கு பொருளாதார வளஞ்சேர்க்கும் பணப் பயிர்ச் செய்கைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதற்கும், மேற்படி நாடுகள் எதிர்கொள்ளும் பஞ்சம், பட்டினிச் சாவுகளுக்குமுள்ள நேரடித் தொடர்பும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஏன் ஒரு பகுதி நாடுகள் எப்போதும் பஞ்சத்தையும், பட்டினிச் சாவுகளையும் எதிர்கொள்பவைகளாhகவும், மற்றொரு பகுதி நாடுகள் நிவாரணம் வழங்குபவைகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன என்று சற்றுச் சிந்திக்கத் தொடங்கினால், பிரச்சினைகளை அடையாளம் காணும் கதவுகள் திறக்கத் தொடங்குகின்றன.
ஒட்டுப் போடப்பட்ட அல்லது மெருகிடப்பட்ட காலனித்துவக் கல்வி முறைமையுள் இத்தகைய பார்வைகளுக்கான சாத்தியப்பாடுகள் எந்தளவிற்கு இருக்க முடியும்? நடைபெறுகின்ற ஆய்வுகளுள், எழுதப்படுகின்ற ஆய்வுக் கட்டுரைகளுள், அவற்றை மேற்கொள்ள கையாளப்படுகின்ற ஆய்வு முறைமைகள் பற்றிய மறுமதிப்பீடுகள் இதனை நன்கு புலப்படுத்தும். இவை பற்றிய உக்கிரமான விவாதங்கள் இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.
சூழலியல் ஏகாதிபத்தியம் குறைத்து மதிப்பிடக்கூடிய விடயமல்ல. அது நவகாலனித்துவச் சூழலில் தன்னை நன்கு விசாலித்து நிலைநிறுத்தித் கொண்டு வருகின்றது. “மூன்றாம் உலக” அல்லது “அபிவிருத்தி அடைந்து வருகின்ற” நாடுகளது தாவர, விலங்கு உயிரினங்கள் மீதான மேற்குலக நிறுவனங்களின் உரிமைகோரல்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய மேற்குலக முன்வைப்புகளுக்குப் பின்னாலுள்ள ஏகாதிபத்திய அரசியல் பற்றியும் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இயற்கைச் சூழல்பற்றிய மேற்குலகம் கடைப்பிடிக்கும் கொள்கைகளும், ஏனைய நாடுகள் மீது குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது நிர்ப்பந்திக்கும் கொள்கைகளும் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. இவற்றின் மூலமாகத் தொடர்ந்தும் தமக்குச் சாதகமான சூழ்நிலையை வைத்திருக்க அந்நாடுகள் விளைகின்றன. ஐ.நா.வினதும், யுனஸ்கோவினதும் பல தீர்மானங்களும் விமரிசனங்களுக்கு உட்பட்டு; வருவதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகிறது.
நவகாலனித்துவச் சூழலியல் ஏகாதிபத்தியம், கல்வி, தொடர்புசாதனம், தகவல் தொழில்நுட்பம், சூழலியல், ஆங்கில மொழி எனப் பல்வேறு வடிவங்களில் தனது பொல்லாச் சிறகினை விரித்துக் கொண்டிருக்கிறது. “புதிய உலக ஒழுங்கு”, “பூகோளமயவாதம்” என்ற மாயப் பெயர்களையும் சூடிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment