-அம்ரிதா ஏயெம்-
கருஞ்சுழிக்குள் ஆழப் புதைந்து தொலைந்து போகவிருந்த, நெபுலக் கட்டியை சுழியின் அரைவழியிலேயே பிடித்திழுத்து திறந்து பார்த்தேன். கோடானுகோடி கலக்சிக்குள், கவிழ்த்துவைக்கப்பட்ட இரண்டு வெள்ளைநிற சோற்றுப் பீங்கான்களை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தேன். அதனுள்ளும் கோடானுகோடிகள் நட்சத்திரங்களாய். எங்கிருந்தோ பாலை வனத்து நெடும்பயணத்து வழிப்போக்கனாய், அழையா விருந்தாளியாய் வந்த, கல்லொன்று நட்சத்திரமொன்றுடன் மோத, அது பத்துப் பதினொன்று துண்டுகளாய் சிதிலமடைகின்றது. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்ற துண்டு, குளிர்ந்து திண்மமாகி, நீருண்டாகியது. கண்டங்கள் மோதி, பஞ்ஜியாக்கள் பஞ்சுகளாய் விலகின. மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை நீராய் இருக்க இந்த துண்டோ, பூமியெனப்பட்டது. அப்போதே பெரும்பான்மை-சிறுபான்மை திரிபுகளும் தொடங்கிவிட்டிருந்தன. அண்டவெளிக் கடலில் வெளித்துண்டு பூமிக் கப்பல் ஓடிக் கொண்டிருக்கிறது. வெள்iளாய் படிந்து கடலடியில் உயிர் தோன்றி, ஒரு கலம், இரு கலமாகி, இழையமாகி, அங்கமாகி, தாவரமாகி, விலங்குகளாகியது. விலங்குகளுள் சில மிருகங்களுமாகின. மிருகங்கள் நான் என்றன. நானுக்குள் தொலைந்து, மூழ்கி, இரத்தத்தாலும், வாந்தியாலும், சீழாலும் முக்குளித்து சுயம் கொண்டு வந்தன. திடிரென வால் முளைத்த வானரங்கள் வந்தன. சுயநலத்தில் மூழ்கி மனிதன் தேடின. தேடியும் கிடைக்காமல் அலுத்துப் போய்வாலிழந்து, நிமிர்ந்து மனிதனாய் வந்தன. எனக்கோ தலை சுற்றியது. எனது பொறுமையைத் தொலைத்த நான், எனது கூடு தேடி பறக்கத் தொடங்கினேன்.
**
எனது நாட்டை கட்டியெழுப்ப, Operation
Terminated Seeds (மழுங்கடிக்கப்பட்ட விதைகள்- இனி சுருக்கமாக ழவள எனப்படும்). திட்டத்திற்கான தலைமைப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. குட் nஉறட் இஸ் நொட் எ டிக்ரெற்றர். பட் உறீ இஸ் த டெடிக்கேற்றர்- நல்ல தலைவன் சர்வாதிகாரமாக ஆணையிடுபவனல்லன். ஆனால் செயலில் இறங்கி தியாகிப்பவன். எனவே நானே செயலில் இறங்கினேன்.
(நான் எனப்படும் அம்ரிஷ் ஸாகர்- இராணுவ, உயிர் இரசாயன உயர் தொழிநுட்ப, விஞ்ஞான கலாநிதிப் பட்டதாரி).
வள நாட்டில் பெரிய நீர்த்தேக்கம் ஒன்று இருந்தது. வளநாட்டிலிருந்து செழி நாடு பிரிந்து தனி நாடாகியபோது, அந்த நீர்த்தேக்கத்தை வளநாட்டுக் காரர்களாகிய நாங்கள் எடுத்துக்கொண்டு, இந்த நீர்த்தேக்கத்திற்கு அப்பால் எல்லை போட்டுக் கொடுத்தோம். எங்கள் நாட்டுக்கு நீர் தந்து, மின்சாரம் உருவாக்கி, பயிர் வளர்த்து, செல்வம் கொழிக்க வைத்து, எங்கள் நாட்டு மக்களுக்கு வாழ்வு தந்த இந்நீர்த்தேக்கத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னால், அதே மக்களுக்கு, மற்றவனை அடுத்துக் கெடுத்து, சாம்பல் மேட்டில் கட்டடம் கட்டி சுகபோக வாழ்க்கை நடாத்தி, நல்ல உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுக்க நான் செயலில் இறங்கினேன். இரவோடிரவாக நீர்த்தேக்கத்தை அண்டியிருந்த எங்கள் நாட்டு மக்களை, வெள்ளப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு செயலில் இறங்கினேன். இல்லை நீரில் இறங்கினேன்.
நானும் இன்னும் ots ஐச் சேர்ந்த மூன்று பேரும், நடு இரவு நேரம் படகிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை வாய்க்குள் திணித்து நீருக்குள் விழுந்தோம். பின் செழிநாட்டுப் பக்கமிருந்து அணைக்கட்டின் அடிக்கு நீந்திச் சென்றோம். நான்கு பேரும் தயாராக வைத்திருந்த குண்டுகளை பொருத்தினோம். வெடிக்கும் நேரம் 61 நிமிடமா அல்லது 19 நிமிடமா எனத் தெரியவில்லை. குழம்பிப் போனேன். 61 நிமிடமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் பல இடங்களிலும் நேரத்தைச் செலவழித்து குண்டுகளைப் பொருத்திவிட்டு விரைவாக மேலே வர முயற்சி செய்துகொண்டிருந்தோம். சத்தங்கள் பலமாய்க் கேட்க, தொடர்ச்சியானது எனவும், வாலில் இறந்ததையும், தலைப்பக்கத்தில் எதிர்வையும் கொண்டுள்ளது என்று அபத்தமாய் எண்ணும,; நிகழ்வதுவே யதார்த்தம் என்ற காலத்திற்கான வெடி வெடித்தது. எங்கள் திருவிழா தினங்களில் வாணவேடிக்கையின், பட்டாசு வெடிகளின், பல நாளாய் அடைத்து வைக்கப்பட்ட புறாக்களை, திறந்து மேகத்துள் கலப்பதற்காக, கொண்டாடப்படும், சுதந்திர தினவிழாக்களின் பீரங்கிகளிடை மரியாதைக் குண்டுச் சத்தங்கள் போல், குண்டு வெடித்து சத்தம் போட்டு அணை உடைந்தது.
அடுத்த நாள் காலை செழி நாடு எங்கும் வெள்ளம். விதவைகளின் கணவர்களினதும். தபுதாரர்களினது மனைவிகளினதும், பிள்ளைகளின் பெற்றோர்களினதும், பெற்றோர்களின் பிள்ளைகளதும் பூதவுடல்கள் ஆடு, மாடு, நாய்களுடன் மிதக்கத் தொடங்கின. இந்தப் பூதவுடல்களின் மீது எனது நாட்டின் சுயாதிபத்யம், இறைமை, கௌரவம், பொருளாதாரங்களின் அடித்தளம் காலையில் தெரியத் தொடங்கியது. குண்டு வெடித்த செய்தி கேட்டு சந்தோச மிகுதியால் விடிய விடிய விஸ்கியடித்து, அரண்மனை மஞ்சத்தில் மங்கைகளுடன் கொஞ்சிக் குலவிய வளநாட்டு தலைவர்களும் அமைச்சர்களும் அடுத்த நாள் கண்ணை கசக்கி பிதுக்கி, மலத்திவிடும் இரங்கல் செய்திகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வளநாட்டுத் தலைவர் கிளிசறீன் வாரி முகர்ந்து, கண்ணீர் வடித்து, ஒரு தாயின் பி;ள்ளைகளாக (தென்னம் பிள்ளையா? அல்லது கீரிப் பிள்ளையா?) இருந்த நாம் பிரிந்து கொண்டோம். ஆனாலும் உங்களுக்கோர் துன்பம் என்றால் அது எங்களுக்கானது மாதிரி. எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம் என்று அறிவித்தார்.
ஓசியிலயெண்டா அம்மாக்கொண்டு, அப்பாக்கொண்டு, அதுவும் ஆபத்திலயெண்டா சின்னம்மாக்கொண்டு, பெரியம்மாக்கொண்டு என்ற அடிப்படை மனப்பான்மையை சரியாக அளவெடுத்துக்கொண்டோம். எங்கள் வேலையைக் காட்டத் தொடங்கினோம். அதிக உரங்கள், பூச்சி, பீடை நாசினிகள் தேவைப்படும் ( இவைகளை நாங்களே ஆரம்பத்தில் இலவசமாகவும், பின்னர் கடனாகவும் கொடுப்போம். ஒரு நிலையில் எங்கள் நாட்டின் பாரிய கடன்காரனாக செழிநாடு ஆகும். ஏனெனில் நாங்கள் கொடுக்கம் விதைகளுக்கு எங்களது இரசாயனங்கள் மட்டுமே பொருந்தக் கூடியதாகையால்). நோய் பீடைத் தாக்கம் கூடிய குறுகிய கால விளைச்சல் கொண்ட, அதன் அறுவடைகளை சாப்பிட்டால் உடம்புக்கு அலர்ஜி, புற்று நோய் வரக்கூடிய, நரம்பு, தசைநார் இழையங்களின் அயன் கால்வாய்களை அடைத்து ஆளின் கதையை முடிக்கும், அல்லது அங்கவீனராக்கும் பதார்த்தங்களை சுரக்கக்கூடிய, மீண்டும் நாற்றாய் பாவிக்க முடியாத இயல்புகளைக் கொடுக்கக்கூடிய, வைரசுகளிலிருந்து எடுத்த பரம்பரை அலகை பயிர் விதைகளுக்கு பொருத்தி பரம்பரையலகு மாற்றம் செய்யப்பட்ட விதையைப்படைத்து, படைத்தல் தொழிலைச் செய்ததினால் நான் பிரம்மாவாகியதாக மகிழ்ந்தபோது, ழவள இன் கதாநாயகனும் தயாரானான்.மானியத் தொப்பியும், இலசவச மார்புக் கவசமும் அணிந்து கதாநாயகன் தயாரானான். இலவசமாக கொடுக்க விரைவாக வளர்ந்து, பெருத்து உள்நாட்டு மீனினங்களை நீர்;நிலைகளிpலிருந்து துரத்தும் மீனினங்களை உருவாக்கினேன். தாய்ப்பால் சுரக்கும் மாடு, தந்தையில்லா கால்நடைகள், வளர்ந்த நாடுகளுடன் செழிநாட்டை சண்டை மூட்ட, அந்நாடுகளின் பேடன்ட் பண்ணப்பட்ட தானியவகை, எண்ணெய்தரும் விதைவகைகளின் போலிமாதிரி விதைகளையும் செழிநாட்டுக்கு வளநாட்டு தர்மமாக கொடுக்க உருவாக்கினேன். மரங்கள் மனிதனை வளர்த்து வாழ்வளிக்கும். பரம்பரையலகு மாற்றப்பட்ட விக்ஸ், பைனஸ், இபில் இபில் போன்ற மரங்களையும் நடுவதற்காக கொடுக்க உருவாக்கினேன். ஓசியில் கிடைத்த சந்தோசம், தேவைக்கதிகமாக கோடிக் கணக்காக நாட்டுவார்கள். மரங்களோ விரைவில் வளரும். நிலத்திலிருந்து கனியுப்புக்களையும், நீரையும் விரைவாய் உறுஞ்சி முடிக்கும். இலைகளோ விரைவிலோ உக்காது. இபில் இபில் போன்ற விதைகள், கொட்டும் இடமெல்லாம் பல்கிப் பெருகும். பின் மண் வளம் குன்றும். பின் ஏனைய பயிர்ச் செய்கை குன்றும். விவசாயம் பாதாளத்தில் போகும். செழிநாடு செழி;க்காது. நாங்கள் உடைந்து நொறுங்கிய, செழிநாட்டின் எலும்புகளை எடுத்து எங்கள் நாட்டு முன்னேற்றத்தின் பிள்ளைகளுக்கு சூப்புக் காய்ச்சிச் கொடு;ப்போம்;. அந்த எலும்புகளினாலேயே படிக்கட்டுக்களையும் கட்டுவோம். “ரொக்கட்டின் மூக்கில் அணுகுண்டு சுமந்து, போர் செய்து குடி அழித்தது அந்தக் காலம். கத்தியின்றி, சத்தமின்றி யுத்தமொன்று நடக்குது அது இந்தக் காலம.; தக்கத் திமி தக்கத் திமி” என்று நான் பாடுவேன், என்பதை நினைக்க மனம் சந்தோசத்தில் இறக்கைகள் கட்டி பறக்கத் தொடங்கியது.
இலவசமாகக் கொடுத்தோம். கடனாளியாகுமாறு கடன் கொடுக்க பதினேராவது விரலாக ஒப்பமிடும் பேனாவையும் நீட்டி வாங்கிக்கொண்டார்கள்.
**
திடிரென ஆஸ்பத்திரியின் வளவின் நடுமையத்தில் nஉறாலோகிறபிக் மணிக்கூடு வானவில் நிறங்களுடன் தோன்றியது. நேரம் பிற்பகல் 2.40 மணி எனக் காட்டிவிட்டு, காற்றிலே பைற் பைற்சாய் கரையத் தொடங்கியது. நல்ல குணமும், காருண்யமும், மனித நேயமும் மிக்க தாய் தந்தைக்குதானே பிறந்தேன். இடையில் ஏன் நான் இப்படி ஆனேன். இவர்களினதில் கொஞ்சமேனும் எனக்கு பரம்பரை அலகின் மூலம் வந்துதானே இருக்க வேண்டும். எனக்கு எப்படி இந்த வக்கிர, காட்டுமிராண்டி புத்தி வந்தது. என்னை ழவள யிற்கு தலைமை தாங்க வைத்தது, செழிநாட்டை அழிக்க வைத்தது எது? நானா? நான் என்றால் எது? அதன் குறியீடும் குறிப்பானும் எது? ஒரு வேளை நாங்களா? அப்படி நாங்கள் என்றால் வளநாடா? வளநாடு என்றால் காட்டுமிராண்டிச் சித்தாந்தமா? அராபியனிடமிரந்து அறிவைச் சுரண்டி, சீனனிடமிருந்து கந்தகச் செம்புருளை தொழிநுட்பம்வெளவி, அதனை பீரங்கி வாயால் அனுப்பி, மண், பெண், பொன், பிடுங்கி, மனிதம் அழித்து, கிடைத்த, வெற்றிக் கொக்கரிப்பின் போது, காலனித்துவத்தினதும் அதன் பேய்ச்சேய்கள் பல்தேசியக் கம்பனிகளினதும் வாயால் வழிந்த வீணியிலிருந்து வழிந்ததா இந்த காட்டுமிராண்டிச் சித்தாந்தம். மொன்சன்ரோயிசமே ! நீவீர் தாலிகள் அறுத்து தேசங்கள் சிதைத்து நீடுழி வாழ்க.
ஒரு முடிவுக்கு வந்தவனாக உறாஸ்பிட்டலின், எனக்கு முன்னாலிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். அப்போது சில தாதிகளும் மருத்துவர்களும் எனக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் என்னை கவனிக்காதது போலும், கண்டும் காணாதது போலும் சென்றார்கள்.
அங்கிருந்த பெரிய மெசினுக்கு அருகில் போகிறேன். மெசினை ஓன் பண்ணினேன். EEG(எலக்ரொனிக் என்செபலோகிராபி) யா? (அதிலும் அல்பா, பீட்டா, டெல்ற்றா என்ற கேள்விகள் வேறு). CAT (கம்பியூட்டரைஸ் அக்சியல் ரொமொகிராபியா? DSR (டைனமிக் ஸ்பேசியஸ் ரிகன்ஸ்ரக்சன்) ஆ? NMR (நியுக்ளியர் மெக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜ்) ஆ? MRI (மக்னட்டிக் றெசொனன்ஸ் இமேஜ்) ஆ? என்று கேட்டது. MRI தெரிந்து வெள்ளை கோட் தலை தவிர்த்து உடம்புபூராக மாட்டி, மெசினில் ஏறிப் படுத்தேன். கால்ப்பக்கமிருந்து தலைப்பக்கம் நோக்கி கட்டில,; போறணைக்குள் பாண் தட்டம் தள்ளப்படுவதுமாதிரி அசைந்து, தலையை ஒரு குகைக்குள் பொருத்தியது. பின்னர் தலையைச் சுற்றி, X-கதிர்கள் ஒரு மூலத்திலிருந்து பாயத் தொடங்கின. சுpறிது நேரத்திற்கு பின் கட்டில் கால்பக்கம் நோக்கி அசைய. தலை குகைக்குள்ளிருந்து வெளிவர நான் கட்டிலைவிட்டு இறங்கி, கோட்டை கழற்றிவிட்டு, கம்பியூட்டர் முன் போய் அமர்ந்தேன்.
மெய்ன் மெனுவில் Brain போய் சற்று நேரத்திற்கு முன் ஒளிக் கட்டியாய் பிடித்து வைக்கப்பட்ட எனது மூளை தெரியத் தொடங்கியது. வலது, இடது, மேல், கீழ்ப்பக்கமாக திருப்பியும், சுழற்றியும் எனது மூளையைப் பார்த்தேன். என்ர தாயே இந்த வழா வழா- கொழா கொழாவுக்குள்தான் இவ்வளவு சமாச்சாரங்களா?.
மூளைத் தண்டுக்கும், நடுமூளைக்கும் இடையில் எதேச்சையாக மவ்ஸ் போக, உடனே ரெட்டிக்கியுலர் போர்மேசன் என்று எழுத்தில் வந்தது. அதை டபிள் கிளிக் பண்ண மனம் வந்தது. மனத்தை திறந்தேன். அங்கே மனம் அசுரனுடைய உசிர் நிலைபோல ரெட்டிகுலர் போர்மேசனில் மூளையின் அடிக் கூட்டத்தில் ஒரு கலக் கூட்டத்திற்குள் இருந்ததைக் கண்டேன். அங்கே மனத்தின் பல பகுதிகளும் வந்தன. சப் கொன்ஸியஸையும், இட்டையும் திறந்தேன். எங்கும் சிவப்பு மயம். எத்தியோப்பிய, கென்ய, புற்பற்றைக்குள் நாலு காலில் ஊர்ந்து. இரண்டு காலில் நின்று, பெண்துரத்தி, மண் பிடித்து, ஆட்சி பிடித்து, விவசாயம் கண்டுபிடித்து, சக்கரம் செய்து, மாடு பழக்கி, காடுவெட்டி, அடுத்துக் கெடுத்த அந்த மனம், நாற்பதினாயிரம் வருடங்களாக இன்னும் மாறவில்லை என்று தெரிந்தது. இதுதான் “மழுங்கடிக்கப்பட்ட விதைகள்” உருவாகிய அடித்தளம். நிகழ் மனம் மற்றையை மனங்களின் தளங்களினால் பாரமேற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. என்றாலும் நல்ல தாய்க்கும், தந்தைக்கும் பிறந்த நான் இடையில் எப்படி இழிந்தவன் ஆனேன். வாசிப்புச் சூழலுடன் எளிமையாகத்தானே வளர்க்கப்பட்டேன். உலகமயமான முதலாளித்துவ வானில் காற்றிற் கரைந்து போய்விட்ட நட்சத்திரமான மார்க்சிசத்;திலேதானே நான் ஊஞ்சல் ஆட்டி வளர்க்கப்பட்டேன். இடையில் எப்படி நான் முதலாளியாய் மாறியது?. ஏனக்குச் சந்தேகம் வந்தது. அந்த சிவப்பு புள்ளிகளுக்குள் டபிள் கிளிக் பண்ணி, இரசாயனம் அழுத்தினேன். சோடியம் தயோ பென்டோன், பென்டத்தோல் என்று விpடை வந்தது. உடனே தூசணத்தில் சத்தம் போட்டு விட்டு, உடனே வழா வழா- கொழா கொழா அழுக்கு நிற எனது மூளைக்குள், இடது பக்க டெம்போரல் லோபிற்குள் வந்து பார்த்தபோது, அது சோடியம் தயோ பென்டோன், பென்டத்தோல், அட்ரோப்பின் ஊசி மருந்தால் சேதமாக்கப்பட்டிருந்தது தெரிந்தது. கடமையுணர்ச்சியும், நாட்டுப் பற்றும் ஊட்டப்படடிருப்பதும் தெரிந்தது.
கம்பியூட்டரை மூடிவிட்டு உறாஸ்பிட்டலின், மூன்றாவது தளத்திற்கு வந்து கண்ணீர் விட்டு அழுகிறேன். எத்தனை கொலைகள், அழிவுகள். நான் கண்ணீர்விட்டு அழுதாலும். நான் அழுதுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு என்னுள் ஒட்டவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு நடக்கப் போகும் மிகச் சிறிய கவன அழுகையை நிறுத்தி விட போதுமானது எனத் தெரிந்தது.
திடிரென கீழே மழுங்கடிக்கப்பட்ட விதை பயிர் நிலங்களைப் பார்க்கிறேன். ஆயிரக்காணக்கான, இல்லை இலட்சக்கணக்கான பூச்சிகள், நாங்கள் இனாமாக கொடுத்த விதையிலிந்து உருவான பயிர்களில் அயன் மகரந்தச் சேர்க்கைக்காக மொய்த்து, மேலெழும்பி, கம்பி வேலி எல்லைகளைத் தாண்டி, எனது தாய் நாட்டிற்குள் புக ஆயத்தமாகி கொண்டிருந்தன. உடனே கண்ணீர் நின்று. கன்னத்தில் வழிந்த நீர் மாயமாய் உலர்ந்து மறைந்தது. ஐயோ, மோசம் போனோமே என்று சோடியம் பென்டத்தோல் மனம் கத்தியது. பூச்சிகள் எங்கள் நாட்டு பயிர்ப்பெண்களை கற்பழித்தால் தினம் தினம் மழுங்கடிக்கப்பட்ட விதைப் பிள்ளைகளின் பிறப்புத்தான். அதைத் தொடர்ந்து நாட்டின் சுயத்தின் அழிவுக்கும் தொடக்கம்தான்.
இயல்பூக்கமாக மாடியிலிருந்து இறங்கி ஓடி வீதிக்கு வந்தேன். சுப்பர் கண்டக்டர் கார்கள் காந்த வீதியில் பறந்து கொண்டிருந்தன. மிகுந்த பிரயாசைப்பட்டு நிறையவைகளில் ஒன்றை நிறுத்தி, அருகிலிருந்த எனது நாட்டுத் தலை நகரிலுள்ள, எனது தலைமை அலுவலகத்திற்கு பத்து நிமிடத்திற்குள் சென்றுவிட்டேன்.
வழமையாக எனக்கு சலாம் போட்டு சல்யூட் அடிக்கும் வாயிற் காப்போன், நான் கூப்பிட்டும், விளங்காத மாதிரி நின்றான். இவன் கதவைத் திறப்பது மாதிரியும் இல்லை. எனவே நான் திறக்கிறேன். கதவு திறபடுகிறது. நான் உயரதிகாரி ஓடிக்கொண்டு போகிறேன், என்ற சலனமுமின்றி அவன் நின்றுகொண்டிருந்தான். நாட்டுக்கு வரவிருக்கம் ஆபத்தைவிட எனக்கு ஏற்படப்வரும் மரியாதைக் குறைவு ஒன்றும் பெரிய விடயமல்லவே?.
இப்போது தலைமைச் செயலக கூட்டம் நடைபெறும் வட்டமேசை மண்டபத்தை அடைந்து, கதவைத் திறந்து கொண்டு ஓடுகிறேன். நாட்டுக்கு நடக்கவிருக்கும் அழிவைச் சொல்லி கத்துகின்றேன். ஓருத்தரும் என்னைக் கவனித்த மாதிரியும் இல்லை. காதால் வாங்கி;க் கொண்ட மாதிரியும் இல்லை. இப்போது எல்லோரையும் நன்றாகக் பார்க்கிறேன். அங்கு எல்லா இராணுவ தரத்தார்களும் தொப்பி கழற்றி கண்ணை மூடி யாருக்கோ மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் முன்நோக்கிக் கொண்டிருந்த சுவரைப் பார்க்கிறேன்;.
அங்கு மாலையிட்டு மாட்டப்பட்ட புகைப்படத்திற்கு கீழ், தொண்ணூறாவது நாள் நினைவஞ்சலி. மேஜர் அம்ரிஷ் ஸாகர், மண்ணில,; விண்ணில்(நீரில்) என்று எழுதப்பட்டிருந்தது. என் பாதத்தை குனிந்து பார்க்கத் தொடங்குகின்றேன்.
No comments:
Post a Comment