Monday, July 18, 2016

பஞ்சபூதம் ஒரு யதார்த்த மாயாதந்திர யதார்த்தவாத (Realistic magical realism) நேர்கோட்டு நேர்கோடற்ற (Linear non-linear) பிரதி.

பஞ்சபூதம் ஒரு யதார்த்த மாயாதந்திர யதார்த்தவாத (Realistic magical realism) நேர்கோட்டு நேர்கோடற்ற (Linear non-linear) பிரதி.

அம்ரிதா ஏயெம்.


1. நாவலின் தாவரவியல் பெயர் Syzygium. நாவல் மத்திய கோட்டு அமரிக்கா, அவுஸ்தரேலியாவை பூர்வீகமாகக் கொண்டு உலகெங்கும் பரவி 1100 இனங்களைக் கொண்டு காணப்படுகின்றது. பல்வேறு உயரங்களிலும் காணப்படும் நாவலானது 30 மீற்றர் உயரம் வரை வளர்ந்து 100 வருடம் வரை ஆயுளைக் கொண்டது. இதன் பழங்கள் கறுப்பு, சிவப்பு, கருஞ்சிவப்பு, இளம் சிவப்பு, கரும்பச்சை போன்ற பல்வேறு நிறங்களில் காணப்படும். நாவல் பெரிதும் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு. காபோஹைட்ரேட், புரதம், கொழுப்பு. விற்றமின்கள், கனியுப்புக்கள் போன்றவற்றை தாராளமாகக் கொண்டது. பழங்களின் அளவுக்கும் மரத்தின் அளவுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. பெரிய மரத்திற்கு பெரிய பழமும், சிறிய மரத்திற்கு சிறிய பழமும், பெரிய மரத்திற்கு சிறிய பழமும், சிறிய மரத்திற்கு பெரிய பழமும் காணப்படும். அதன் போசணையும் நாவலின் அளவில் தங்கயிருப்பதுமில்லை. இது இரண்டு நாவலிற்கும் பொருந்தும்.

2. நேரடியாக கதைசொல்லாமல், விதியின் குறுக்குவெட்டுப் பரப்பில் கதை நகர்த்தப்பட்டு அலைவு கொள்வதே நாவல் - (ஜோர்ஜ் லூயி போர்ஹெ).

3. “யாராலும் எனது பிரதியினை எட்ட முடிந்ததா? ஒரு சொல்லையேனும் எனது விலா எலும்பிலிருந்து பிடுங்க முடிந்ததா? இசைக் கலைஞனின் கொடூர இசைக்கு நான் ஆட்பட்டுக் கொண்டேனா? விரிந்த கடற்பரப்பில் இஸ்ஸத் மகாராஜாவின் சிறையில் நான் அடைக்கப்பட்டேனா? பாலைவனப் பறவைகள் என்னை என்ன செய்தன? முனியாண்டி என்னை எப்படி நினைத்தான்? ஏன் மூதாதையர்களின் பாடல்கள் என்ன மொழியினைக் கூறியது?; மண்வாசனை கொண்ட மந்திரவாதிகள் எங்கு சரணடைந்தனர்? காயம்பட்ட கழுகு என்ன வடிவில் கரைந்தது? முப்பெரும் சக்திகொண்ட வேடன் எங்கு விடைபெற்றான்? புலிகள் எந்த இடங்களில் மாய்ந்து போயின? அவைகளின் கூடாரங்கள் எப்படி தீயில் எரிந்து போயின? மேகங்கள் தங்கள் போராட்டங்களை எங்கு ஆரம்பித்தன? காற்றுகள் தங்கள் போர்வைகளை எங்கு தொலைத்தன? நெருப்புஜீவிகளின் தலைவன் எங்கு சென்றான்? வெள்ளை மரங்களின் நான், எது எனது பிரதி? வாசகனே எது எனது பாடநூல்? நான் கற்பிப்பது யாருக்கு? எனது எழுத்துக்களை யார் வாசிப்பது? யார் புரிந்து கொள்வது? கனவுகளின் நாயகனான உன்னைத் தவிர யாருமே புரிந்து கொள்ளமாட்டார்கள்”.
4. பெரும்பான்மையால் (வெள்ளை மரங்களால்) எனது தேசம் ஒன்றைப் பெறுவது இன்னும் தடுபட்டுக் கொண்டே இருக்கின்றது. எனது தேசம் பற்றிய விடுதலைக்கான கதையாடலை நிறத்திவிட்டால் பெரும்பான்மை என்னைக் கொன்றுவிடும். அதனால் உயிருக்கு பயந்தபவனாக எனது தேசம் பற்றி மூச்சுவிடப்படாத கதையினை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

5. தனது தேசத்தை மீட்க இசைக்கலைஞன் வருகிறான். அவனை அடக்க நினைத்தனர். அவன் தேசத்திற்குரிய தனது உரிமைகளையும், அபிலாசைகளையம், தராவிட்டால் இந்த தேசத்தில், இரத்த ஆறு ஓடுவதை தடுக்க முடியாது என்கிறான். இரத்த ஆறு ஓடாமலிருக்க கதைசொல்லியை (தேசமீட்பனை) அழித்து அந்த இனத்தின் வரலாற்றை மழுங்கடித்து, தம்மை உயர்த்திக் கொள்ளலாம் என்கிறான்.

6. அரசனின் அடாத்திலிருந்து தப்பிக் கொள்ள, தனது தேசம் பற்றிய கதையை கைவிட்டு, தனது இன்பத்திற்குரிய தேசம் வரலாறு இல்லாத தேசமான நிலைமையில் ஒரு கடற் பயணத்தை கதை சொல்லி மேற்கொள்கிறான். மன்னனும் இறந்து போகிறான். அதற்கு பின்னர் மன்னனுக்குரிய இரு இராணிகளினதும் கதை சொல்லிகள் தேசமீட்புக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.

7. ஹாரிஜ், ஜெஸ்மின், இஸ்ஸத் - இரு வேறு உப பிரதிகளாக பார்க்கப்படக்கூடிய பொருந்திவரக்கூடிய தன்மையினைக் கொண்டு காணப்படுகின்றன. இவைகளில் எந்தப் பிரதிகளை எடுத்தாலும், ஒரு சரியான மூச்சாகத்தான் இறுதி மூச்சுக்குள் நுழையக் கூடியவைகாளக இருக்கின்றன. எவ்வாறு அர்த்தம் கொடுத்தாலும் பிரதான பிரதிக்கு பாதிப்பு வரப்போவதில்லை.

8. கதைசொல்லி சார்ந்த இனத்தின் மறைந்த தலைவர், அவரை எதிர்த்த அவரின் இனத்தைச் சார்ந்த இடையின விடுதலைக்கு போராடிய மறைந்த உள்ளுர் போராளி, போன்றவர்களுக்கிடையில் நடந்த ஆரம்பகால இழுபறி நிலைமைகள் பூடகமாக சொல்லப்படுகின்றன. அந்த மகாராஜாவின் கையாலாகாத அமைச்சர்கள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே இந்த விடயங்களைச் சொல்வதற்காவது கதைசொல்லி எழுதுவதை நிறுத்தக்கூடாது என்கிறது பிரதி.

9. பாலைவனம் கொண்ட நாட்டிலிருந்து வந்த வெண்ணிற பறவைகள் (அறபிகள்), பரியாத பாசை (அறபு) பேசிக்கொண்டு பல நூறு வருடங்களுக்கு முன் இத் தேசத்திற்கு வந்திருக்கிறார்கள். அதை நிருபிப்பதற்கு ஆதாரத்தை சேகரித்திருந்தால், நமது சிற்றின தேசம் வளம் கொள்ளும், ஒரு கட்டத்தில் தேசமாகவும் மாறும். ஆனால் முனியாண்டியோ இந்த தனித்துவத்தை உணராமல் பொது மொழித் தனித்துவத்திற்குள் எங்களை நுழைக்க நினைக்கிறான்.

10. நாங்கள் இருந்த வளங் கொழிக்கும் தேசத்திலிருந்து முனியாண்டி பிரதிநிதித்துவம் செய்த ஆட்களால் தாக்கப்பட்டு துரத்தப்படுகிறோம். பின்னர் அவர்களுக்குப் பின்னர் பலம் பொருந்திய பாசிச மண்பித்துப் பிடித்த இராணுவ கழகம் ஒன்றினாலும் ஆண்டாண்டு காலமாக பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமியிலிருந்து அடித்து துரத்தப்படுகிறோம்.

11. எனது இனம் வெளியேற்றப்பட்ட வடக்கும் எனது வாழிட பூமி. மீண்டும் அங்கு குடியேறி அதனை வளங் கொள்ள செய்ய வேண்டும். கதைசொல்லியின் தேச விடுதலைக்கு உதவதயார் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு பெரிய இயக்கமான மண்வாசைன கொண்ட மந்திரவாதிகளால், அடுத்த கட்ட இயக்கத்தைச் சேர்ந்த முனியாண்டி கொல்லப்பட்டது துன்பியல் வரலாறாகும்.

12. விரட்டிவிடப்பட்ட என் இனத்தவர்களின் தற்காலிக தேசம்; அகதி முகாம்; இருக்கிறது. அவர்கள் விரட்டிவிடப்பட்ட அவர்களின் தேசத்தில் மீண்டும் குடியமர மந்திரவாதிகள் இடமளிக்கப் போவதுமில்லை. முனியாண்டி சிற்றினமாகவோ இருந்தாலும் இவன் இடையினத்திற்காக போராடியதால் அவனுக்கு சிற்றினத்தில் மதிப் பிருக்கவில்லை. சிற்றினத்தினதும், அரசினதும் உதவியுடன்தான் முனியாண்டி கொல்லப்படுகிறான்.

13. தரைப்படை, கடற்படை, விமானப்படை போன்ற படைகளைக் கொண்ட முப்பெரும் சக்தி கொண்ட வேடனான பெரிய இயக்கத் தலைவன் முன்னைநாள் பெண் ஜனாதிபதியை காயப்படுத்தி ஒரு கண்ணை இழக்க செய்கிறான். பின்னர் ஒற்றைக் காயப்பட்ட கழுகு மற்றைய இனத்தவர்களுடன் சேர்த்து என்னைச் சேர்ந்தவர்களுக்கும் வேடனை அழிக்க பயிற்சி தருகிறது.

14. வேடன் மீது கொண்ட பயம் காரணமாக சிற்றின கட்சிகள் எல்லோருமே வாய்மூடி மௌனியாக விருந்தார்கள். அதாவது மரங்களில் இருந்த இலைகள் கூட அசையாமல் இருந்தன. எப்படியும் அவன் அதாவது கதை சொல்லி கழுகின் உதவியுடன் வேடனை கொல்லத்துடிக்கிறான்.

15. வேடன் கழுகிற்கு சொந்தமான காடு, வானம், மலை போன்றவைகளை தனது அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர நினைக்கிறான். வேடன் மீது தாக்குதல் நடாத்த இருந்த (சிற்றியக்கங்கள்) வேடனின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி கண்டு அழிகின்றன. பாசிசம் கட்டவிழ்க்கப்பட்டு, பன்மைத்துவம் ஒருமைத்துவமாகிறது. வேடன் யாரையும் (கழுகுகள், புலிகள், பூக்காடுகள்) ஏற்றுக்கொள்ளவில்லை.

16. வேடனை புலிகள் கொன்ற போது, வேடன் ஏற்கனவே சிற்றினத்துக்கு கொடுத்த பிரச்சினைகளை புலிகள், சிற்றினத்திற்கும் இடையினத்திற்கும் கொடுக்கப்போவதாக கொக்கரிக்கின்றன.

17. வெள்ளை மேகங்கள் (பேரினம்), கறுத்த மேகம் (இடையினம்) சண்டையிட்டபோது, அரச இராணுவ இயந்திரத்தின் உதவியோடு வெள்ளைமேகங்கள் கறுத்த மேகங்களை அடக்கிவிட்டு கும்மாளம் போடுகின்றன.

18. புதிய சிற்றின அரசியலின் நம்பிக்கை தரும் ஒளி (விண்மீன்கள்) தோன்றுகிறது. அது தோன்றும் போதெல்லாம் அதன் வீரியத்தை வெள்ளை மேகங்கள் காயடிக்கின்றன.

19. பின்னர் அந்த சிற்றின தனித்துவ கட்சிகள் பெரும்பான்மை நீலக் கட்சிக்குள் இரண்டறக் கலக்கின்றன. அதற்குள் வேத புத்தக வாசகங்களுடன், மதத்தையும் கலந்து தங்களது வாக்கு வங்கிகளை தக்கவைத்துக் கொள்கின்றன.

20. இந்த சிற்றின கட்சிக் காற்றுகள் நேரத்துக்கு நேரம் நிலையில்லாமல் மாறுகின்றன. இந்தக் கட்சிகளின் வருகைகள் காரணமாக பெரிய சிற்றினக் கட்சி நிலைகுலைந்து வீழ்ச்சியடைந்து மரங்கள் வேர்களுடன் பிடுங்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. எனவே சிற்றின உணர்வை, சிறு கட்சிகள் உணர வேண்டியிருக்கிறது. தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நிவர்த்தித்து ஒற்றுமையாக வேண்டியிருக்கிறது.

21. இந்த சிற்றினக் கட்சிகள் கொள்கை இல்லாதவர்கள். நேரத்திற்கு நேரம் தங்களது நிறத்தை மாற்றக்கூடிய பச்சோந்திகள். ஆனால் தூய்மையான தங்களது அடிப்படை நிறத்திலே கொஞ்ச நேரமும் இருக்க முடியாதவர்கள்.

22. நாங்கள் சிற்றினம் பெரும்பான்மையால் துன்புறுத்தப்படுதையும், அவை ஓட ஓட விரட்டுவதையும், அரைந்துழல்வுகளைத் தந்ததையும், கதைசொல்லியின் பிரதிகள் கூறுவதையும், வாசகனான நீ அதனை கவனத்திற் கொள்ளாமையும் மீண்டும் (வெள்ளைமரம்) தனது வேலையை தொடங்க அப்போதும் நீயே கதைசொல்லியாகவே இருப்பதும், இந்த போரின் செயற்பாடு நிறுத்தப்பட்டால்தான் நாம் சுதந்திர மனிதர்களாக எங்கள் நிலங்களில் வசித்து வாழ்ந்து திரியலாம்.

23. எனவே வாசகனே உனது கனவின் வெள்ளை மரங்கள் உதிர்வதை நான் காண்கிறேன். அவை ஒரு சீரிய ஒளி பரந்து செல்லும் மின்மினிகள் மட்டுமே பிரகாசித்த, அடிவானின் சூரிய சலனத்தில் மதிப்பற்ற ஓசைகள் அதில் புகுந்து பல நிறச் சந்திரன்களாக வெடித்தன. அதனைப் பற்றிய புரிதலுக்கு நீ தயாராகி இருப்பதை உனது அமைதி உணர்த்துகிறது. இதுவே எனது பஞ்ச பூதத்தின் முற்றுப் பெறாவாழ்வு.

24. ஏ.எம். சாஜித்தின் பஞ்சபூதத்தை வாசிக்க கையிலெடுத்த போது மிகுந்த வாசக ஈர்ப்பு கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.. வேகமான முதலாவது வாசிப்பினை முடித்தபோது அதன் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின. இரண்டாவது வாசிப்பில் நொன்லீனியராக இருந்தது லீனியராகவும், மாயாதந்திர யதார்த்தமாக இருந்தது யதார்த்தமாகவும் புரியத் தொடங்கியது.

25. இலங்கைத் தீவின் இனத்துவ முரண்பாட்டை, பல நூறு வருட வரலாற்றை, தனக்கேயுரிய பாணியில் எழுத்துக்களை நிறங்களாக குழைத்து, பஞ்சபூதத்தை நிறந்தீட்டியிருக்கின்றார். இந்த பிரதி தரும் இன்பம் அலாதியானது. ஏனெனில் எம்மில் பலருக்கும் முடிச்சுக்களை அவிழ்ப்பதிலும், புதிர்களை விடுவிப்பதிலும் இருக்கிற இன்பம் அலாதியானதுதான்.

26. எழுத்தின் உட்பரப்பினதும், மொழியின் எல்லாச் சாத்தியங்களையும் தன்னால் இயன்றளவு சாத்தியப்படுத்த முனைந்திருக்கிறார். புற உலகில் கவனத்தை குவித்து, பல தளங்களில் இயங்கக்கூடிய சாத்தியத்தை உருவாக்குகிறார். இந்த எழுத்து கவிதைக் குணம் கொண்டு காணப்படுகின்றது. பிரதிகளினூடே தீட்டும் நிறங்கள், விநோதமான அற்புத ஓவியம் போல வசீகரிக்கச் செய்கிறது. இங்கே யதார்த்தமா? கற்பனையா? என்று புரியாத கலந்துணர்வாக்கமொன்றை அனுபவிக்க முடிகிறது.


27. இந்தப் பிரதி நேர்கோட்டு வாதிகளுக்கும், வன்மைகொண்ட யதார்த்தவாதிகளுக்கும் பிடிபடாத புரியாத எழுத்துக்கள். ஞாபகத்தின் அடித்தளத்தின் முடிவற்ற சுழல்வழியே பயணம் செய்ய முயன்ற இந்நாவலை இருநூறு பேரில் பன்னிரெண்டு பேர் புரிதலுக்குள்ளாக்கினாலே போதும். வாழ்த்துக்கள். சாஜித் அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...