Tuesday, July 19, 2016

ஜமீலுடைய (தாளில் பறக்கும் தும்பி), குர்சிதுடைய (விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு) பிரதிகளின் உளவியல் அணுகுமுறையின் ஒத்துணர்வு (Empathy) களை முன்வைத்து.



ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை.

உள்ளத்தின் கோலங்களையும், கோணங்களையும் அதன் காரணமாக ஏற்படுகின்ற விளைவுகளையும் ஆராய்கின்ற விஞ்ஞானமே உளவியல் எனப்படும். இது பொது, ஒப்பு, பிறழ்வு, உடற்றொழிலியல், சமூக, கல்வி, பணிசெய்யும் இட உளவியல் என்று பல வகைப்படும். 

இலக்கியம் ஒரு படைப்பாளியின் கைதேர்ந்த செய்திறனால் மட்டுமல்ல பிரத்தியேகமான ஒரு மனவெழுச்சியினாலும் உருவாவதாகும். ஒருமனத்தின் வழியாக இன்னொரு மனத்துடன் அது பேசுகின்றது. மனித வாழ்வின் அனுபவங்களையும், அவற்றிற்கு அடிப்படையாக உள்ள மனத்தையும், ஆழமாகவும், அழகாகவும், சித்திரிக்க முயல்கின்றது. இலக்கியம் உள்ளம் சம்பந்தப்பட்டதாகையால் உளவியல் அதில் அக்கறை கொள்கின்றது. ஏனெனில் மனித உள்ளத்தின் உணர்வே எல்லா அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் மூல காரணமாக அமைகிறது. எனவே உள்ளத்தை ஆராய்கிற உளவியல் இலக்கியத்தையும் ஆராய வேண்டும்.

உளவியல் திறனாய்வுக் கொள்கை, இலக்கியத்தின் மனநிலை தொடர்பான பல அம்சங்களிலும், தனது கவனத்தை செலத்துகின்றது. இலக்கியத்தின் அல்லது படைப்பின் புரியாத இடங்களைப் புரிந்து கொள்ளவும், முக்கியமான உட்பொருட்களை குறிப்பிட்ட கோணத்தில் விளங்கிக் கொள்ளவும், பெரிதும் உதவுகின்ற இவ் உளவியல்நெறி, இலக்கிய கோட்பாட்டிலும், திறனாய்வுக் கோட்பாட்டிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த அடிப்படையில் ஜெமிலீன் தாளில் பறக்கும் தும்பி (xi + 69 பக்கங்கள், புதுப்புனைவு பதிப்பகம், மருதமுனை), ஏ.எம். குர்சித்தின் (விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு (xvi + 80  பக்கங்கள், புதுப்புனைவு பதிப்பகம், மருதமுனை) உளவியல்முறைகொண்டு திறனாயலாமென நினைக்கின்றேன்.

எளிதில் நொறுக்கப்படக்கூடிய விளிம்புநிலையில் உள்ள பெண்கள், சிறுவர்கள் தேவைகள், பிரச்சினைகள் பற்றி யாரும் பேசுவதுமில்லை, பெரிதாக கவனமெடுப்பதுமில்லை, அதிலும் சிறுவர்கள் பற்றி எளிதில் பாடுவதுமில்லை. பாடுபொருளாக கொள்வதுமில்லை. கவிஞர் ஜெமில் நீண்ட காலமாக சிறுவர்கள் தொடர்பில் தனித்து கவனம் செலுத்துபவராக கவனத்திற்கொள்ளப்படுபவராக இருந்து வருகின்றார்.

தாளில் பறக்கும் தும்பியில் சிறுவர்களின் விருப்பு, வெறுப்பு, முறையிடுதல், குதூகலிப்பு, துயருறுதல், கனவுலகம், கழிவிரக்கம், காருண்யம், கற்பனை உத்திகள், வகுப்பறை செயலுர்க்கங்கள், வெளிநடத்தைப் பிறழ்வுகள்,  உளவியல் சிக்கல், நுணுக்குமான பார்வை அல்லது அவதானம், பிரிவின் நீட்சி, ஏங்கித் தவிப்புறுதல், குழi;நதைக்கும் இயற்கைக்கமான நெருங்கிய உறவு, ஆசை, பாசம், கோபம், கவலை, ஏக்கம், அவதானம், கற்பனை, வகுப்பறை, வெளி நடத்தைகள், காவோலை குருத்தோலை நடத்தைகள், துஸ்பிரயோகம், உளவியற் பிரச்சினைகள், குழந்தைகளுக்கும் இயற்கைக்குமான உறவு, பிரிவு போன்றவைகள் போன்றவை பாடுபொருள்களாக உள்ளன.

ஏ.எம். குர்சித்தின் விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகோ, யாருடைய ஒப்பனையும் பாவனையுமில்லாத தனக்கேயுரிய தனி மொழியொன்றுடன் வலம்வருகிறது. இவரது கவிதைகள் பாவஒப்புக்கோடலாய் பெண்ணுணர்வுகளை உள்வாங்கி வலிகளாய் வெளிப்படுகின்றன. குரல்வளை நெரிபட்டுக்கொண்டிருப்பவர்களின் குரல்களாயும் கேட்கின்றன. மேலும் எதிரே நடப்பவற்றுக்கு ஏதும் செய்யவொண்ணா பெருமூச்சுகளாயும் வெளிவருகின்றன. 


உணர்வுகளிலும், உற்சாகத்திலும் அனுபவங்களை உள்வாங்கிப் புலப்படுத்துவதில் ஏனைய படைப்பாளிகளிலிருந்து கவிஞர்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்றும், கவிதை ஒரு வித்தியாசமான மனவெழுச்சியினால் உருவாக்கப்படுகின்றது என்றும் கருதப்படுகின்றது. கலைப்படைப்பின் உள் அமிழ்ந்த பொருள்களையும், ஒரு மனிதன் என்ற முறையில் படைப்பாளியின் மனவுணர்வுகளையும் விளக்க முடியுமென்கின்றார் பிராய்ட்.


பிறருடைய மனவுணர்வோடு தன்னுடைய மனநிலையானது உணர்வு அடிப்படையில் ஒத்துப் போதலை ஒத்துணர்வு குறிப்பிடுகின்றது. அத்தகைய சூழ்நிலைகளில் உள்ள ஒருவரைக் காணும்போது, படைப்பாளர்களே அச் சூழ்நிலைகளில் தங்களை ஏற்றிக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் பெறக்கூடிய அல்லது அப்படிப் பெறுகிறார்கள் என்று எண்ணக்கூடிய உணர்வுநிலைளை வாசகர்களும் பெறுகிறார்கள். இவ்வாறு பிறருடைய உணர்வுகளிலும், ஒருமித்து அவர்களுடன் தன்னை, தனது உணர்வுகளை ஒரு சேர இனங்காண்பதே ஒத்துணர்வாகும் (emphathy). இன்னொரு வகையில் சொல்லப் போனால் இன்னொருவரது இடத்தில் இருந்து கொண்டு அதே வலியை, அதே உணர்வை புரிந்துகொள்ளும் பண்பு என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.

படைப்பாளனுக்கும், அனுபவவாளனுக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது. மேலும் படைப்பாளனுடைய மொத்த மனநிலை, கடந்த கால அனுபவங்கள், விருப்பங்கள், சூழ்நிலைகள், இந்த அறவியல் ஒத்துணர்வு முற்றிலும் விடுபடுவதில்லை. இவ்வாறான அழகியல் ஒத்துணர்வின்போது படைப்பாளன் முதலாம் நிலை அனுபவஸ்த்தர்களில் தங்களை மறந்து ஒன்றிப் போய்விடுகிறார்கள். இத்தகைய அழகியல் ஒத்துணர்வின் அடிப்படையிலேயே கலை இலக்கியம் பிறப்பெடுக்கிறது என்று கருதப்படுகிறது. மேலும் வாசகனை பிரதிகளின் மேல் அல்லது படைப்புக்களின் மேல் கவரச் செய்ய இந்த அழகியல் ஒத்துணர்வு காரணமாக இருக்கிறது. மேலும் உளவியலாளர்கள், திறனாய்வாளர்கள், வாசகனுக்கும், இலக்கியத்திற்குமுள்ள உறவை அக்கறையுடன் நோக்குகிறார்கள். வாசகனின் படைப்பு சார்ந்த ஆர்வ நிலைக்கு, குறிப்பிட்ட படைப்போடு, அல்லது இலக்கியத்தோடு ஓரளவாவது உள்ள ஒத்துணர்வே காரணமாகுமெனலாம்.

ஜமீலுடைய பிரதியிலும், குர்சித்துடைய பிரதியிலும் ஒத்துணர்வுகளே அதிகம் காணப்படுகின்றன. மற்றவர்களின் பிரச்சினைகளை, வலிகளை, துன்பங்களை அவர்களிடத்தில் இருந்துகொண்டு அதே பிரச்சினைகளை, வலிகளை, துன்பங்களை புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களுடைய உளப் பண்பைக் காட்டி நிற்கின்றது.

நனவிலி மனத்தின் ஒரு வெளிப்பாட்டு முறையாக படைப்பு வழிமுறைகளைக் கருதலாம். ஜமீலுடையதும் மற்றைய பிள்ளைகளினதும் பிள்ளைப் பருவத்தின் குழந்தைத் தனமான விளயாட்டுக்கள், வயது ஏறிய பிறகு விநோதப்படுத்தலில் ஈடுபட்டு, சாதாரணமான சங்கதியை, செய்தியை, செயலை, சாதாரணமாக இயல்பாகப் பார்க்காமல் ஓர் அற்புதமான, மாயமான, ஆற்றலாகவும், பொருளாகவும், ஓர் கனவுத் தோற்றத்தின் தன்மையோடு ஜமீல் பார்க்கிறார். அவருடையதும், மற்றையவர்களினதும் பிள்ளைப் பராயத்து ஏக்கங்களும், ஏமாற்றங்களும், ஓரங்கட்டல்களும் உள்ளார்ந்த காரணங்களாக இருக்க முடியும். இன்னும் இவரது விளிம்போர பிரம்மைகள், பயம், விரக்தி இருண்மை முதலானவற்றை அவருடைய சுயவாழ்க்கையின் பிரத்தியேக நிலைகளாகப் பார்க்கலாம். 

பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் கோர்வைகளைக் கொண்ட பெண்நிலைச் சிந்தனைகளை குர்சித் உள்வாங்கி வெளிப்படுத்தி நிற்கிறார். எந்நதளவுக்கு பெண்களின் பிரச்சினைகளை ஆண் பெண்ணாக உருமாறி வெளிப்படுத்த முடியும் என்பதில் பல்வேறு கருத்துநிலைகள் காணப்படுகின்றன. அவரது பிரதி ஏற்படுத்தும் நேர்மை, அதில் சந்தேகம் கொள்வதை பெரும்பாலும் குறைக்கிறது. இங்கு ஒத்துணர்வு ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றே கருதுகின்றேன். ஆண்கள் செய்த பாவங்களுக்காய் பெண்ணாக மாறி பாவ ஒப்புக்கோடலாய் மாறிய ஒத்துணர்வுக் கவிதைகளுக்கும் அவரின் படைப்பின் உளவியலுக்கும் இடையே சிறிய கடக்கக்கூடிய இடைவெளிதான் காணப்படுகின்றது. இதே போன்ற இடைவெளிதான் சமூக அன்றாட நிகழ்வுகளில் சிறுவர்களின் பிரச்சினைகளைகளை தனது கவிதைகளில் கொண்டு வந்த ஜமீலிடமும் காணப்படுகின்றதென்றால் அது மிகையல்ல.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...