Monday, July 18, 2016

மகள் - 01

ஒரு பெரும்பிரளய
நீளவால் நுனி நச்சுச்சாம
அதிகாலையின்
பொசு பொசுத்த பூனைக்குட்டியென
வந்துதித்த மகளே.
பின்னொரு நாளில்
உன் கால்கள் தொலைந்ததை
வடக்கிலும் கிழக்கிலும்
மேற்கிலும் தெற்கிலும்
மேலும் கீழும் தேடியலைந்தோம்.
நமது வீட்டின் சூரியக் கதிர்கள்
என்றும் படாத எனது கால்களுக்குள்
உனது கால்கள் ஒழிந்திருப்பதாக
கண்டனர்.
வீட்டு முன் பெருந்தெரு நேர்கோட்டின்
ஆர்ப்பரிக்கும் நீலக்கடலை
கண்களால் ஒருமுறையேனும் விழுங்கிட
தூரிகைப்புல் நுனி தேன்குடிக்கும்
தும்பியின் வாலுடன் பறந்திட
ததும்பிய குட்டையின் வாலாந்தவளையை
வாரியணைத்து நீந்திட
வலசை போகும் வண்ணத்துபூச்சிகளின்
வண்ணங்களில் குழைந்தெழுந்து நடனமாடிட
அயல் வேம்பின் குயிலொடு குரலிட
ஆடு விரட்டி குழை கொடுத்திட
மாடு துரத்தி பின் வாங்கிட
பள்ளிசெல்பவர்களுக்காவது ஒரு கையசைத்திட
பத்துநாள் பட்டினியோடு
பசியாக பரதேசிபோல்
உன் கால்களுக்காக
விழிமேல் வழிவைத்து பாத்திருப்பாய்.
மகளே
கோப்புகளுக்குள்ளும் நூல்களுக்கும்
கூடங்களுக்குள்ளும் கூட்டங்களுக்கும்
சிக்கிக்கொண்ட எனது கால்கள்
உனக்கு மட்டும் சொந்தமல்ல.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...