Sunday, May 31, 2020

புவி வெப்பமடைதல் - ஒரு பார்வை


.எம். றியாஸ் அகமட், சிரேஸ் விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்.


அறிமுகம்:

காலநிலை
மாற்றம் என்ற பதம் சிக்கற் தன்மையானதுஇது விஞ்ஞானத்துடனும், அரசியலுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது. அமெரிக்க தத்துவவியலாளர் நோம் சொம்ஸ்கி கூறியதுபோல உலகம் இரண்டு மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. ஒன்று அணு ஆயுதம் மற்றது புவி வெப்பமடைதல். முதலாவது எங்கள் கண்முன்னே தெரிகிறது. மற்றொன்று எங்களுக்க முன்னே உருவாகி வருகின்றது. இரு நிகழ்வுகளுமே பூமியிலிருந்து மனித குலத்தை முற்றாக துடைத்தெறியும் வல்லமை வாய்ந்தன.

பூமியின் மேற்புற பகுதியியின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் சீரான அதிகரிப்பு புவிவெப்பமடைதல் எனப்படும். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து வளிமண்டலத்தின் சாசரி வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதும், தொடர்ச்சியாக அதிகரித்துவருவதுமான நிகழ்வையே இது குறிக்கின்றது. இதற்கு பிரதான காரணங்களாக பெற்றோலிய பொருட்களின் தகனம், காடழிப்பு போன்ற மனித செயற்பாடுகளே என காலநிலை மாற்றத்திற்கான அரசுக்களின் குழு அடையாளப்படுத்தியுள்ளது (IPCC). கைத்தொழிற் புரட்சி தொடக்கம் 1950ம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியக் கதிர்வீச்சு, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளே புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என இந்த அமைப்பு கூறியுள்ளது. கைத்தொழிற் பரட்சிக்குப் பின்னர் (1850ம் ஆண்டுக்கு) புவியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 10 பாகை செல்சியசினாலும், காபனீரொட்சைட்டின் செறிவு 28 சதவீதத்தாலும் அதிகரித்திருப்பதாக ஆய்வுக்ள் கூறுகின்றன.

காபனீரொட்சைட்டு, மீதேன், நைதரசனீரொட்சைட்டு, நீராவி போன்ற பச்சை வீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கதிகமாகச் சேர்ந்து கொள்வதனால் வளிமண்டலத்தினுள் நுழையும் வெப்பக்கதிர்களை அவை உறிஞ்சும். இதனால், வெப்பக் கதிர்கள் மீண்டும் தெறிப்படையாது வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும். பூகோள வெப்பமுறுதலின் பெறுபேறுகளாக வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கின்றமையால் அவை பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

பாதிப்புக்கள்:
ஆட்டிக் அந்தாட்டிக் பிரதேசங்களிலுள்ள பனிப்பாறைகள் உருகல், கடல் மட்டம் உயருதல், இதனால் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள், வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ், 2.0 பாகை செல்சியஸ் அளவில் உயர்ந்தால் முறையே 69 மில்லியன், 79 மில்லியன் மக்களும் பாதிக்கப்படுவார்கள், இன்னும் 500 வருடங்களில் கடல் மட்டம் 7–13 மீட்டர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடந்தால் உலகின் பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக மாலை தீவுகள், ஒல்லாந்து ஆகிய நாடுகள் கடலினுள் முற்றாக அமிழ்ந்து விடக்கூடிய அபாயம் காணப்படுகின்றது, கரையோரப் பிரதேசங்கள் நீரில் அமிழ்தல், காடுகளும், பயிர்களும் பல வகையான பீடைகளினால் தாக்குப்படுதல்வெப்பக் காற்று, முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதி, காடுகள், புன்னிலங்கள் போன்ற வாழிடங்கள் அழிக்கப்பட்டு, அதன் பல தாவர, விலங்குப் பன்வகைமையும் அழிக்கப்படுதல், ஒவ்வாமை, ஆஸ்த்மா, தொற்று நோய்கள் போன்றவை ஏற்படல், சமுத்திரங்களின் வெப்பநிலை அதிகரிப்பால் மீன் போன்ற உயிரினங்கள் குளிரான பிரதேசங்களை நோக்கி இடம்பெயருவதால் மீன்பிடித்துறையில் வீழ்ச்சி, வெப்ப மண்டலத்திற்குரிய அதிக புயல்கள் உருவாதல், அதிக வறட்சி, பலத்த மழைவீழ்ச்சி, வெள்ளம், மண்ணரிப்பு, நிலச்சரிவு, நதிகளின் நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படல், நீர்ச் சூழற்றொகுதியின் நீரின் அளவு குறைக்கப்படல், அதிகரித்த வெப்ப அலை வீச்சு, பாலைவனமாதல் அதிகரித்தல், அதிக பனிப்பொழிவு, அதிகரித்த காபனீரொட்சைட்டு கடலில் கரைந்து, கடல் அமிலமாகி, அவை உயிரினங்களைப் பாதித்தல்போன்ற அனேக பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

புவி வெப்பமடைதல் உருவாக்கும் சமூக பொருளாதார இழப்புகளும் கணக்கிட முடியாதன. வெள்ளம், சூறாவளி போன்ற  பேரழிவுகளால் உண்டாகும் செலவுகளை நாம் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திற்கும் இரட்டிப்பாக கணக்கிட வேண்டும். ஏனென்றால் கட்டிடங்கள் அதிக அளவுகளை, மாற்றங்களை சந்திப்பதுடன் அவற்றை கட்ட பணமும் அதிக செலவாகும்",
இவை நேரடியாக உணவு, போக்குவரத்து, சுகாதாரம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளைப் பாதிக்கும். அழிவுகளும், சேதங்களும் கூடும்போது இன்சூரன்ஸ், வங்கிகள் திவாலாகும் தன்மை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

காலநிலை மாற்றம் சம்பந்தமான விஞ்ஞான ஆய்வுகளின் உதவியுடன், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் காலநிலை நிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் அபாயங்களையும், அதனை நிவர்த்திப்பதற்கான வழிகளையும் முன்மொழியும் நோக்குடன் (The Intergovernmental Panel on Climate Change (IPCC)) காலநிலை மாற்றத்திற்கான அரசுக்களின் குழு என்ற அமைப்பு 1988 ஆம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்போது வரை ஐந்து முழு அறிக்கைகளையும் அவ்வப்போது சில சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் அனைத்து உலக நாடுகளும் கலந்துகொண்டு உலகவெப்பத்தை 2  பாகை செல்சியசிற்கு அதிகமாகாமல் 1.5  பாகை செல்சியஸ் என்கிற அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அதே மாநாட்டில், ஐபிசிசி அமைப்பு 2018 ஆம் ஆண்டு 1.5  பாகை செல்சியஸ் என்பதைப் பற்றி ஓர் அறிக்கை அளிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தனர். இதன் அடிப்படையிலேயே இந்தச் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

2015ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானபோது நிகரகுவா, சிரியா ஆகிய நாடுகள் மட்டுமே அதில் அதிகாரபூர்வமாக இணைந்து கொள்ளாமல் இருந்தன. பின்னர் அவை அந்த அமைப்பில் சேர்ந்துகொண்டன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் றம்ப் பதவியேற்றவுடன் 2017ம் ஆண்டு ஜீன் மாதம் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. தற்பொது அமெரிக்க நாடு மட்டுமே இந்த அமைப்பில் சேராமல் தனித்து நிற்கின்றது.

புவி வெப்பமடைதல் கைத்தொழிற்புரட்சி தொடங்கிய 1870 களிலிருந்து தற்போது வரை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தும் 2030 களில் புவியின் வெப்பம் 1.5 பாகை செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த முடியாமல் 2.0 செல்சியஸ் அளவிற்கு அப்பால் சென்றுவிடும் என்று கருதப்படுகின்றது. தற்போதைய சனத்தொகையில் 11 சதவீதம் கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே 41 சதவீத காபனீரோட்சைட்டை வெளிவிடுகின்றன. 6 சதவீதம் சனத்தொகை கொண்ட ஜப்பான் உட்பட மற்றைய நாடுகள் 17 சதவீதமும், சீனா 15 சதவீதமும் வெளிவிடுகின்றன. ஆனால் 64 சதவீத சனத்தொகையைக் கொண்ட இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகள் 27 சதவீத அளவிலான காபனீரொட்சைட்டேயே வெளிவிடுகின்றன. உலகில் அதிக காபனீரொட்சைட்டு வாயுவை வெளிவிடுவதன் காரணமாக அதிக பங்கை வகித்திருக்க வேண்டிய அமெரிக்கா, காபனீரொட்சைட்டின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக இருப்பது வரலாற்றுத் தவறும், சோகமும் ஆகும்.

2015ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில அனைத்து உலக நாடுகளும் கலந்து கொண்டு உலக வெப்பத்தை 2 பாகை செல்சியசிற்கு அதிகரிக்கவிடாமல், 1.5 செல்சியஸ் அளவிவில் வைத்திருக்க வேண்டும் எனத் தீர்மானத்திற்கு உடன்பட்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த பாரிஸ் உடன்படிக்கையை பின்பற்றுவதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவையான:
பூமியில் சில அதிக வெப்ப நாட்களைத் தவிர்க்கலாம். வரையறுக்கப்பட்டட கடல் மட்ட உயர்வு (1.5 பாகை செல்சியசால்; வெப்பம் அதிகரித்தால் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 0.26 – 0.77 மீற்றர் உயரும். 2.0 பாகை செல்சியஸால்; வெப்பநிலை அதிரித்தால் கடல் மட்டம் மேலும் 0.1 மீற்றரினால் அதிகரிக்கும்), இரண்டு மடங்கு, தாவரங்களும், விலங்குகளும் பாதுகாக்கப்படும், நீருக்கான அழுத்தம் (நீர்ப் பற்றாக்குறை காரணமாக ஏற்படும்) குறையும், நோய் வீதம், மரண வீதம் குறையும், அத்துடன் உயிர்கொல்லி நோய்களான மலேரியா, டெங்கு போன்றவற்றின் தாக்கமும் குறையும், உலகின் பல பகுதிகளில் பயிர் உற்பத்தி, தானிய உற்பத்தி அதிகரிக்கும், கால்நடைகள் நீர், ஊட்டச்சத்து குறைபாடு , நோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
ஓவ்வொருவரும் தாம் வெளிவிடும் காபனைக் கட்டுப்படுத்துவதிலேயே அல்லது சம்பந்தப்பட்ட பாவனைகளை குறைப்பதன் மூலமே ஓரளவு காபனீரொட்சைட்டு வெளிவிடலைக் கட்டுப்படுத்துவதன் பூமி வெப்பநிலை அதிகரிப்பை குறைப்பதற்கு முயற்சிக்கலாம். காபனை உறிஞ்சுவதற்கான செயற்திட்டங்களை உருவாக்கலாம். பச்சை வீட்டு விளைவைக் கட்டுப்படுத்துவதன் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய பரிகார நடவடிக்கைகளாக பச்சை வீட்டு வாயுக்களினது விடுவிப்பைக் கட்டுப்படுத்துதல், சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளல், காடுகளைப் பாதுகாத்தல், வளர்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இலங்கைக்கான பாதிப்பு: புவி வெப்பம் அதிகரிப்பால் இலங்கை பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. இங்கு முறையான ஆய்வுகள் செய்யப்படாததனால், இலங்கை முகங்கொடுக்கவிருக்கும் பாதிப்புக்களை இந்தியாவில் நடைபெற்ற ஆய்வுகளை கொண்டே உய்த்துணர முடியும். ஏனெனில் வளிமண்டலத்திற்கு அரசியல் எல்லைகள் கிடையாது. பம்பாய், சென்னை, கேரள, கர்நாடக வெள்ளம், உத்தரகாண்ட் காட்டுத்தீ, வடகிழக்கு மாநிலங்களின் அனல்காற்றுக்கள் போன்ற பல நிகழ்வுகள் புவி வெப்பமுறலினால் எங்களது அயல்நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தங்களாக இருக்கின்றன. மேலும் 600 மில்லியன் இந்தியர்கள் எதிர்காலத்தில் பாதிப்பை எதிர்கொள்வர் என்றும் கூறப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்பது திண்ணமாகும்.

புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்சினை கிடையாது. உலக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு பாரிய பிரச்சினையாகும். இருந்தும் பச்சைவீட்டு வாயுக்களை அதிகமாக வெளியிடும் அபிவிருத்தியடைந்த நாடுகள் இதில் பாரிய பங்காற்ற வேண்டும். இதற்கு அங்கு இது சம்பந்தமான தெளிவுள்ள தலைமை வேண்டும். ஆனால் வரலாற்றில் இதனைக் காண்பது அரிது. புவி வெப்பமடைதல் என்பது கப்பலின் மேற்தளத்திலுள்ள வளர்முக நாடுகளுக்கு கப்பலின் அடிப் பகுதியில் உருவான ஓட்டை. ஒரு நாள் இந்தக் கப்பலே எல்லோருடனம் சேர்ந்து மூழ்கும் என்ற புரிதலைத் தடுக்கும்அதீத இலாபத்தை மையமாகக் கொண்ட உற்பத்திஎன்ற திரை விலக்கப்பட்டாலேயே அந்தக் கப்பல் மூழ்குவதை தவிர்க்க முடியும்.


Saturday, May 30, 2020

சிறுவர் விதைப் பந்துகள் - ஓமந்தை, பாலமோட்டை, மாதர்பனிக்க மகிழன்குளத்தில்


நேற்றும் (19.10.2019) ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாகவே இருந்தது. சிறுவர்களின் 5000 பனைவிதைப்பு, விதைப்பந்துகள் கலந்துரையாடல், செய்முறை, ”வெளி” (இம்முறை பனை விழிப்புணர்வு) சஞ்சிகை அறிமுகம், வனங்களைத் தரிசித்தல், எங்களது நுாற்களைக் கையளித்தல், நந்திக்கடல் பேசுகிறது நுால் அறிமுகத்தில் கலந்து கொள்ளல் (வவுனியா பொதுநுாலக மண்டபத்தில்) என்று ஆசீர்வதிக்கப்பட்ட நாளாகவே இருந்தது.
வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பாகும். எந்தவித பொருளாதார எதிர்பார்ப்புக்களுமில்லாது தங்களுடைய முழுச்செலவிலேயே இயங்கும் ஒரு அமைப்பாகும். தற்போது அவர்கள் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைப்பதை செய்து வருகின்றார்கள். கிட்டத்தட்ட அதன் அரைவாசிக் கட்டத்தை நிறைவுசெய்யும் தறுவாயில் இருக்கின்றார்கள். விதைகளைக் கண்டுபிடிப்பது, அவைகளைச் சேகரிப்பது, பொறுப்பானவர்களை சந்திப்பது, அவர்களை உறுதுணையாக்குவது, அனுமதி பெறுவது, இடங்களை அடையாளம் காண்பது, விழாக்களை ஒழுங்கமைப்பது, மக்களை கூட்டுவது, விதைப்பது, பரிபாலனம் செய்வது என மிகப் பெரிய விசயங்களை அனாயாசமாக செய்து கொண்டே செல்கின்றார்கள். இதற்கு வரலாறு கடமைப்பட்டிருக்கின்றது. வரலாறு அவர்களை நிச்சயமாக உள்வாங்கும்.
இந்த அமைப்பு ஓமந்தை, பாலமோட்டை, மாதர்பனிக்க மகிழன்குளத்தில், பொதுநோக்கு மண்டபத்தில், விதைப்பந்து கலந்துரையாடல், செயன்முறை நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார்கள். அதற்கு முன் பனைவிதைப்பு நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாது அந்த வீரச் சிறுவர்கள் பனைகளை மும்முரமாக விதைத்துவிட்டு, விதைப்பந்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் மழையில் நனைந்து ஈரமாக இருந்தார்கள். அதனை ஒருத்தரும் பொருட்படுத்தாது விதைப்பந்து தொடங்கியது. கலகலப்பான அறிமுகம், ஆரம்பம், கேள்விகள், பதில்கள் போன்றவற்றை தொடர்ந்து விதைப்பந்துகள் செய்துகாட்டப்பட்டது. சிறுவர்கள் தங்களது களைப்பையும் பொருட்படுத்தாது பெரு விருப்புடன் செய்தார்கள். தொடர்ச்சியான இவ்வாறான சுற்றுச்சூழல் ஆர்வச் செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதாக வாக்குறுதியளித்தார்கள். காடுகளால் சுற்றியுள்ள அவர்களது பிரதேசங்களில், தற்போது காடுகள் அழிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தி, அந்த இடங்களில் முன்னெடுக்குமாறு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினோம். பனைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அம்சங்களை இம்முறை தாங்கிவந்துள்ள ”வெளி” சஞ்சிகையும் அறிமுகம் செய்யப்பட்டது. அமைப்பினரின் எதிர்கால முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தப் பிரதேசங்களிலிருள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கள், பாடசாலைகள் போன்றவற்றிற்காக எங்களால் நுாற்றுக்கு மேற்பட்ட நுால்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன. (இந்த நுாற்களை முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. நசீர் அகமட் அன்பளிப்பு செய்திருந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்).
மாயவன் மீடியாவின் என்னுடனான விரிவான நேர்காணலின் ஒளிப்பதிவும் இடம்பெற்றது. பனைவிதைப்பில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பனங் கூழும், மற்றும் பனை தின்பண்டங்களும் வழங்பட்டன. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஏதோ ஒருவகையில் மழை எங்களை நனைத்து குளிர்வித்துக் கொண்டே இருந்தது. நிகழ்ச்சி முடியும்போதே தெரிந்தது. குளிர்ந்தது எங்கள் மனமும்தான்.
இந்த ஆசீர்வதிக்ப்பட்ட நாளை ஒழுங்கு செய்து தந்த சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு, அதன் செயற்பாட்டாளர் அருள்ஆனந் அவர்களுக்கு ஒரு கடலளவு அன்பும். நன்றியும்.
(நன்றியும், அன்பும் - புகைப்படங்கள் - மாயவன் மீடியா





மகளுக்கு ஒரு பாடசாலை கிடைத்திருக்கிறது. மகள் பாடசாலை செல்கிறார்.


ஒரு ஆசிரியனாக என்னைப் பற்றிய ஒரு சுயமதிப்பீடு எனக்குண்டு. ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு எனக்குத் தெரிந்தவற்றை சொல்லிக் கொடுப்பதுண்டு. எனது பழைய மாணவர்களுடன் இன்றும் தனி முகநூல் பக்கம் ஒன்றுடன் தொடர்பில் இருக்கிறேன். நிறைய மாணவர்களிடத்தில் அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தியதில் ஒரு வேளை எனக்கு சில பங்குகள் இருக்கலாம் என நிறைக்கிறேன். நிறையப் பேர் ஒரு தந்தைமையைத்தான் என்னில் பார்த்ததாகச் சொன்னார்கள். மாணவர்களுடன் கண்டிப்பாக இருந்தாலும், மிகுந்த நண்பத்துவமாக நிறைய நேரங்களில் இருந்திருக்கின்றேன். அவ்வாறு இருக்கவும் முயற்சித்திருக்கிறேன். இலங்கையைப் பொறத்தவரை வரவுக்கான ஒப்பத்தையும், வருகையையும் யாராலுமே கேள்விக்குட்படுத்த முடியாததான தோற்றமளிக்கும் அரச பணிகள் இருக்குமானால் அதில் முதனிலைப்படுத்த வேண்டிய மிகச் சிலவற்றில் பல்கலைக்கழக ஆசிரியத்துவமும் ஒன்றாகும் என நினைக்கிறேன். இருந்தும் ஐந்து நாட்களும் செல்கிறேன். மீதமுள்ள இரு நாட்களும் பெரும்பாலும் மாணவர்களுடனே களப் பயணங்களில் இருக்கிறேன். ஆசிரியத்தை பொருளாதார நலன்சார்ந்து நோக்கிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானதாகும். ஆசிரியத்தை சம்பளம் தரும் தொழிலாக பார்த்ததில்லை. மாறாக, நிறைய தியாகங்களுக்க மத்தியில் விருப்பத்துடன் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையாகவே பார்க்கிறேன். இவ்வாறு கற்றல்கள், கற்பித்தல்கள் போன்றவற்றுடன் நானும், நான் சார்ந்தவைகளும் இருக்கையில், மனதின் ஒரு மூலையில் எப்போதும் ஒரு வலி இருந்துகொண்டே இருந்தது.
“நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியான எனது மகளுக்கு கற்பதற்கு ஒரு பாடசாலை இல்லையே”
*
கவிஞர் Sri N Vatsa எனது மகள் சம்பந்தப்பட்ட எனது கவிதை ஒன்றை மொழிமாற்றம் செய்திருப்பார். அதிலே கடைசி வரிகளில்
…..
To swallow the ocean roaring in a straight line like a wide street in front of the house once at least with your eyes;
Fly along with the tail of the dragonfly that sips the nectar off the tips of brushy grass;
Hug and swim with the tadpole from the overflowing pond;
Roll through the colours of roaming butterflies and dance;
Imitate the call of the koel on the neighbour's neem tree;
Herd the goats and feed green leaves;
Retreat when chased by a cow;
Wave out a hand to those going to school;
Like a homeless vagrant hungry for ten days,
You would have had your eyes on the way for your legs.
………
வீட்டு முன் பெருந்தெரு நேர்கோட்டின்
ஆர்ப்பரிக்கும் நீலக்கடலை
கண்களால் ஒருமுறையேனும் விழுங்கிட
தூரிகைப்புல் நுனி தேன்குடிக்கும்
தும்பியின் வாலுடன் பறந்திட
ததும்பிய குட்டையின் வாலாந்தவளையை
வாரியணைத்து நீந்திட
வலசை போகும் வண்ணத்துபூச்சிகளின்
வண்ணங்களில் குழைந்தெழுந்து நடனமாடிட
அயல் வேம்பின் குயிலொடு குரலிட
ஆடு விரட்டி குழை கொடுத்திட
மாடு துரத்தி பின் வாங்கிட
பள்ளிசெல்பவர்களுக்காவது ஒரு கையசைத்திட
பத்துநாள் பட்டினியோடு
பசியாக பரதேசிபோல்
உன் கால்களுக்காக
விழிமேல் வழிவைத்து பாத்திருப்பாய்.
அவ்வாறான ஒரு மாலை வேளையில், எனது வீட்டு முன்னாலுள்ள வீதியில் மகளை சக்கர நாற்காலியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, கல்முனை கல்வி வலய விசேட தேவை கல்விக்கு பொறுப்பான கல்வி அதிகாரி ரீ.எல். ஹபீபுல்லாஹ் மோட்டார் சைக்கிளில் எங்களைக் கண்டு, கடந்து செல்கிறார். சிறிது தூரம் சென்று சைக்கிளை திருப்பி வருகிறார். பிள்ளைக்கு என்ன என்று கேட்கிறார். சொல்கிறேன். பாடசாலை செல்கிறாரா என்று கேட்கிறார். மகளுக்குரிய பாடசாலைகள் இங்கு இல்லை. அதனால் இரு ஆசிரியைகளை வைத்து கற்பித்து வருகிறோம் என்கிறேன். எங்கள் வீதியில் இருக்கும் பாடசாலையில் (கமு-அல்மதீனா வித்தியாலயத்தில்) விசேட தேவையுடைய மாணவர்களுக்குரிய பிரிவை தொடங்கியுள்ளோம். மகளை அங்கு அனுப்புங்கள் என்கிறார். வீட்டிற்கு வந்து என்னிடமும், மனைவியிடமும் கதைக்கிறார். நம்பிக்கை தருகிறார். அடுத்த நாள் விசேட கல்விக்குரிய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் முகம்மட் சியாமுடன் வீட்டுக்கு வந்து இருவரும் மீண்டும் நம்பிக்கை தருகிறார்கள். மகளை அந்தப் பாடசாலைக்கு அனுப்பச் சொல்கிறார்கள். அரைகுறை மனதோடு (ஏனெனில் மகளின் எல்லாவற்றிற்கும் ஒருவர் முழுநேரமாக வகுப்பறையில் துணையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது அது பாடசாலையில் நிறைய நிருவாகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற பயம் இருந்தது), ஒரு திங்கட்கிழமை (29.07.2019) பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர், அப்பாடசாலையில் கடமைபுரியும் கவிஞர் ஜெமில் போன்றவர்களைச் சந்திக்கின்றேன். அவர்களும் ஆறுதலான நம்பிக்கைதரும் வார்த்தைகளைத் தருகிறார்கள். மகளுடன் அவரின் தாய் குறிப்பிட்டகாலம் பாடசாலை வகுப்பறையில் முழுநேரமும் இருக்கலாம் என்ற சலுகை வார்த்தையொன்றை அதிபர் தருகின்றார். புதன்கிழமை ஒரு விடுமுறை. அதனால் வியாழன் (01.08.2019) மகளை கூட்டிவருவதாக கூறுகிறேன். தன்னலமற்ற ஆசிரியம் ஒன்றின் தத்தைக்கு இளைப்பாற அதன் பத்தரை வயதில் கிளையொன்று கிடைத்துவிட்டது. மகள் பாடசாலை செல்லப் போவதாக நினைக்கையில் மனம் மிகுந்த மனவெழுச்சியில் திளைக்கிறது. மனம் கண்ணீரால் பேசத் தொடங்குகிறது. விட்டு விடுதலையாகி தனிமைச் சிறையிலிருந்து, சுதந்திர பறத்தலுக்கு ஒரு வெளி கிடைத்ததாக, அந்த நாள், வியாழன் எப்போது வரும் என்று மகள் கொண்டாடத் தொடங்கியது.
*
புதன் போகிறது. வியாழன் வருகிறது. மகள் பாடசாலை போகவில்லை. பாடசாலையில் மகளை எதிர்பார்த்து கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர், அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் காத்திருக்கிறார்கள். வகுப்பறைக்கு சக்கர நாற்காலியில் செல்வதற்கு வசதியாக படியை நிரப்பி புது வழி செய்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்;. மகள் போகவில்லை. கல்வி அதிகாரியும், பிரிவு பொறுப்பாசிரியரும் வீட்டுக்கே தேடி வருகிறார்கள்;. அவர்களுக்கு மகள் செவ்வாய்க்கிழமை “பெரிய மனுசியான” கதையைச் சொல்கிறோம். அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அது அந்தத் தவணையின் பரீட்சைக்கு முன்னான கடைசி வாரம். அடுத்த தவணை ஆரம்பத்தில் பிள்ளையை கூட்டி வருமாறு கூறுகிறார்கள்.
*
நானும், மனைவியும் முதல் நாள் (11.09.2019) பாடசாலைக்கு கூட்டிச் சென்றோம். மகளை வரவேற்க எல்லோரும் காத்திருந்தார்கள். அழுதே விட்டேன். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் தன்னை ஒரு பாடசாலையில் சேர்க்க வேண்டும் என்று மகள் அழுதபோது, பதில்கள் தெரியாமல் அழுந்தியிருந்த எனக்கு, மகளுக்கு பாடசாலை கிடைத்தபோது அழுதேவிட்டேன்.
*
பின்னர் மெல்ல மெல்ல அற்புதங்கள் நிகழத் தொடங்கின. எப்போதும், எதற்கும் மகளுக்கு வகுப்பறையில் மேலதிக துணை தேவைப்படும் என்று நினைத்த எங்களுக்கு, முதல் இரு நாட்கள் முழுவதும், அடுத்த இரு நாள் ஒவ்வொரு மணித்தியாலமும் தாயின் துணை தேவைப்பட்டது. ஐந்தாவது நாள் மகளே ஒருத்தரும் தேவையில்லை என்றார். அதற்குப் பிறகு பாடசாலக்கு கூட்டிச் செல்வதற்கும், கூட்டிவருவதற்குமே அந்த நேரங்களில் மற்றவர்கள் தேவைப்பட்டனர். அந்த வகுப்பறையில் ஒரு ஆசிரியை, இரு பயிலுனர் ஆசிரியைகள், பத்து மாணவர்கள். மகளுக்கு மட்டும்தான் மாணவர்களில் நடக்கமுடியாது.
இலங்கைபோன்ற நாடுகளில் விசேடதேவையுடையவர்களின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் சமூகவெளிகளில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கல்வியில்; போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம். மகள் செல்கின்ற பாடசாலை அறுநூறுக்கு மேற்பட்ட சாதாரண மாணவர்கள் கற்கும், சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலை. அவர்களிருக்கின்ற வசதியை வைத்து, விசேட தேவையுடைய மாணவர்களுக்குரிய ஒரு வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார்கள். அது சிறியதாயும், வசதிகள் குறைந்ததாகவும் காணப்படுகிறது. அவர்களுக்குரிய நிரந்தர கட்டடமொன்றை உருவாக்க வேண்டும். அங்கு வசதிகள் நிறைந்த வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். வெளிநாட்டிலுள்ள நண்பர்களும், உள்நாட்டிலுள்ள நண்பர்களும் உதவுவதாக வாக்களித்துள்ளனர். இங்கு மட்டுமல்ல இன, மதம், பிரதேசம் கடந்து ஒவ்வொரு கல்வி வலயத்திலும் இவ்வாறான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு கை தட்டி ஓசை எழுப்ப முடியாது. அது எல்லோரினதும் ஒத்துழைப்பினாலும், கூட்டு முயற்சியினாலுமே சாத்தியப்படும்.
*
வகுப்பறையில் மகளுக்கு தாய் தேவைப்படவில்லை. ஆசிரியைகளும், சக மாணவர்களும் மகளுக்கு தாய்களாகிப் போயிருந்தார்கள். அதிர்ந்துவிட்டேன். ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் பரிசுதான். அந்தப் பரிசின் உள்ளடக்கங்கள வெவ்வேறு நேரங்களில் திறந்து கொள்ளும். வாழ்க்கையின் போக்கை யாராலும் எப்போதுமே அனுமானிக்கவும், புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. அதன் எந்த முடிச்சுகள் அற்புதக் கணங்களை வைத்திருக்கும் என்றோ, எந்தக் கணத்தில் அற்புத முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் என்றோ யாராலும் எப்போதுமே அனுமானிக்கவும், புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. அது எழுதிச் செல்கிறது. அதனைத் தொடர்கிறோம்.










கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...