Saturday, April 18, 2020

அலைந்துழல்வுகளின் வடிந்தொழுகும் துயரங்களின் வாழ்வைச் சொல்லும் அத்தாங்கு.

-அம்ரிதா ஏயெம்


மீன்பிடி உபகரணங்களை பல்வேறு வகைகளில் பாகுபடுத்தி வகைப்படுத்தலாம். ஒரு பாகுபாடு அவற்றை எக்டிவ் கியர்ஸ் (மீன்பிடி உபகரணம் இயங்கும், மீன்கள் நகருவது குறைவு), பெசிவ் கியர்ஸ் (மீன்கள் நகரும், இயங்கும், மீன்பிடி உபரணம் நகராது) என வகைப்படுத்துவது. எக்டிவ் கியரில் அடங்கும் ஒரு வகை  மீன்பிடி உபகரணம்தான் அத்தாங்கு.

அத்தாங்கு ஆங்கிலத்தில் ஹேண்ட் நெற், லிப்ட் நெற் எனப் பலவகையான பெயர்களை பிரதேசம், மொழிசார்ந்து எடுத்துக்கொள்கின்றது. (அதற்கு வேறு பெயர்களும் இருக்கின்றன). அத்தாங்கின் பயன்பாடும் இடம், நீர்நிலைகள், தேவைகள் போன்றவற்றைக் கொண்டு வேறுபடுகின்றது. சிறிய இடங்கள், சதுப்பு நிலங்கள், பற்றைகள், கரைகள் போன்றவற்றிலுள்ள மீன்களை வடித்து பிடிப்பதற்கும், அதேவேளை நீர்நிலைகள், பெரிய மீன்பிடி வலைகளில் (உதாரணம் - கரைவலை) போன்றவற்றில் பிடிக்கப்பட்ட மீன்களை அள்ளிஎடுத்து, கூடைகளில் கொட்டுவதற்கும், இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுகின்றது. இதனைவிட மேலும் பல பயன்பாடுகளும் அத்தாங்கிற்கு இருக்கின்றன. மீனவனுக்கு மீன்கள் கூலியாக, பங்காக கொடுக்கப்படும்போது அந்த மீன்களை அத்தாங்கிற்குள் போட்டு, ஒரு முறுக்கிட்டு தங்களது வீட்டுக்கு தோளில் வைத்து காவிக்கொண்டும் செல்வார்கள்.

மெலிஞ்சி முத்தனின் அத்தாங்கை (2012ம் ஆண்டு, கருப்பு பிரதிகள் - உயிர்மெய் வெளியீடு, 88 பக்கங்கள்) படித்து முடித்தவுடன் பல நாட்களுக்கு எனது தோளிலும், மனத்திலும் அத்தாங்கின் பாரம் இருந்துகொண்டே இருந்தது. அத்தாங்கின் நினைவுகளின் பாரத்தின் சுமைகளுடனே தோளுக்கு பதிலாக மனத்தில் போட்டு அலைந்துகொண்டிருந்தேன். ஏன் என்னால் அந்தப் பாரங்களை இறக்கி வைக்க முடியவில்லை? உள்ளே பாரமாக அல்லது பாரங்களாக இருந்தது எது அல்லது எவை? நிறைவேறாக் காதல்களின் துயரங்களின் பாரங்களா? (மத்தேயு-ஆனாசியம்மாள், நத்தானியல்-மதுரா, அருட்தந்தை-எலிசா), அலைந்துழல்வு வாழ்வில் நிதம் யுத்தம் தின்றுகொண்டிருந்த வாழ்வின் உயிர்களின் இழப்புக்களின் பாரங்களா? (இந்த நாவலின் அதிக மனிதர்கள்), இடம் பெயர் வாழ்வின் நாடோடித் துயரங்களின் பாரங்களா?, அதற்குள்ளும் கடைசிவரை வீரியமாக இயங்கிய சாதிக் கட்டமைப்பின் பாரங்களா? மத நிறுவனச் சுரண்டல்களின் பாரங்களா? தொன்மை நிலங்களை இழந்துவந்த தொன்மைக்குடிகளின் வலிகளின் பாரங்களா?, கனவுகளையும். இலட்சியங்களையும் தொலைத்த மக்களின் பெருமூச்சுகளின் பாரங்களா?, மத்தள மக்களின் இரு பக்கத்து அடாவடி அடிகளின் பாரங்களா?, எதிர்காலத்தைப் பற்றிய சரியான கணிப்புக்களை கணிக்க முடியாது கொத்து, கொத்தாய் மக்களையும், நிலங்களையும் ஒரு நோக்கத்திற்காக இழப்புக் கொடுத்த மக்களின் மனங்களின் பாரங்களையா?, அது எந்தப் பாரம்?, அவைகளில் எந்தப் பாரம் அத்தாங்கிற்குள் இருந்தது?

**

யாழ்ப்பாணம் கருகம்பனை என்ற ஊரிலிருந்து சாதியின் காரணமாக உரிமை மறுக்கப்பட்டு, அங்கிருந்து இடம்பெயர்ந்து (இடம்பெயர்வு அப்போதே அங்கே தொடங்கிவிட்டது). கடற்கரையோர ஒரு கிராமத்தை உருவாக்கிய மூப்பர் அந்திராசிக்கும், அவரின் மனைவி சித்தாந்திரைக்கும் ஒரு மகன் மத்தேயு.

மத்தேயுவிற்கு ஆனாசியாள் என்ற பெண்ணுடன் கருகம்பனையில் ஒரு காதல் தொடர்பு இருந்தது. இந்தக் காதல் தொடர்பை விரும்பாத ஆனாசியாளின் பெற்றோர், அவளை வேறொருவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்தனர். அப்போது ஆனாசியாள் கருவுற்றிருந்தாள்.

அதன் பின்னர் மத்தேயுவிற்கு, சித்தாந்திரையின் அண்ணாவின் மகள் மாக்கிறேத்தை திருமணம் முடிக்கிறார்கள். மனைவியுடன் மத்தேயு அன்பாகவிருக்கிறார். ஆனால் மாக்கிறேத்துக்கு மத்தேயுமீது அவரின் பழைய காதலி ஆனாசியாள் காரணமாக சந்தேசகம். அதனை நிவர்த்திக்க அவர் நினைக்கிறார். முடியவில்லை. அவர்களுக்கு இரு பிள்ளைகள். மரியசீலன், மதுரா. பிள்ளைகள் இருவரும் சிறுவர்களாக இருக்கும்போது மாக்கிறேத் தற்கொலை செய்துகொள்கிறாள். அதன் பின்னர் மாக்கிறேத்தின் தங்கை மகிறம்மாளுடன் சேர்ந்து பிள்ளைகளை மத்தேயு வளர்த்து வருகிறார்.

யுத்தம் காரணமாக அவர்கள் ஊரில் இடப்பெயர்வு ஏற்படுகிறது. அவர்கள் நகர்ப் பகுதிகளிலும், உறவினர் வீடுகளிலும், பள்ளிக்கூடங்களிலும் தங்கி, கிளாலியில் பண்டிதர்க் குடியிருப்பு என்ற இடத்திற்கு குடியேறுகிறார்கள.; இங்கே இவர்களுக்கருகில், மத்தேயுவரின் மச்சான் சவுரிக்குட்டி. அவரின் மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகன் நத்தானியல்.
மத்தேயுவர் கஷ்டப்பட்டு உழைக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரின் மகள் மதுரா இயக்கத்துக்குப் போகிறாள். அவர் அவளை மீட்க அலைகிறார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. நத்தானியலுக்கு மச்சாள் மதுராவின்மீது ஒரு தலைக்காதலும் இருந்தது.

கிளாலிப் படகுத்துறையில் நீரேரியை கடக்க வரும் நகரத்து படகுப் பயணிகளின் பொருட்களை சுமக்கும் வேலைக்குப் போகிறான் மரியசீலன். பின் சில நாட்களில் அவனுக்கு கேடி றூட்டில் வியாபாரப் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலையும் கிடைக்கிறது. கிளாலிக் கடலில் நடந்த பயணிகளின் படுகொலை காரணமாக அந்த வேலையையும் தொடர்ச்சியாக செய்ய முடியாதவனாகிறான்.

இந்த நிலையில் நத்தானியலுக்கும், பிலிப்புப் பிள்ளையின் மகள் றஞ்சினிக்கும் திருமணம் முடிகிறது. இதே நாள் யுத்தமும் தொடங்குகிறது. இடப்பெயர்வும் தொடங்குகிறது. சந்தியாகுவின் மகள் எலிசாவின் கணவன் அங்கு இடம்பெற்ற குண்டுவீச்சில் இறந்து போகின்றான். இந்த வேளை மதுரா சண்டையில் அடிபட்டு, அவளின் காலின் ஒரு பகுதி துண்டாடப்படுகின்றது.

சண்டைகள் ஓய்வுக்கு வந்த பின்னர். பண்டிதர் குடியிருப்புக்கு மீண்டும் வருகிறார்கள். எலிசாவின் அப்பா பிலிப்பு பிள்ளை இறந்து போகின்றார். மதுராவும் இறந்து போகின்றாள். மரியசீலனும், நத்தானியலும் பதுங்கி முன்னேறும் குழிகளை அமைப்பதற்கு இயக்கத்தினால் அடாத்தாக ஏற்றிச் செல்லப்படுகிறார்கள். இராணுவத்தின் தாக்குதலில் அவர்கள் இருவரும் பின்னொரு நாளில் இறந்தும் போகிறார்கள். அந்தக் காலத்தில் சவுரிக்குட்டியோடு, எலிசாவும் ஓடிப் போகிறாள்.

1995, ஐப்பசியின் இறுதி நாட்களினல், கிளாலிக் கடலைத் தாண்டி நல்லூர் என்ற மறுகரையில் ஆல மரத்தடியில் மத்தேயுவர் இரத்தம் தேய்ந்த உடையுடன் தனியாளாய் மீதமாய்க் கிடக்கிறார்.

கடைசிக் காட்சி, கனடாவிற்கு விரிகிறது. பண்டிதர்க் குடியிருப்பில் மக்களுக்கு உதவி செய்த, அவர்களின் நலன்களில் அக்கறை எடுத்து, அரச உளவாளி என்ற வதந்தி பரவி காணமல் போன சனாதனனும், அவனின் மறைவுக்கு காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட இயக்க உளவாளி கிறகரியும், தற்போது துறவறத்தை கைவிட்டிருந்த முன்னாள் பாதிரியுடன் அவரின் வீட்டுக்கு வருகிறார்கள். ஒரு அறையின் கதவைத் திறந்து ஒருவரைக் காட்டுகிறார். அந்த வீட்டில் மத்தேயுவர் ஆடு புலி ஆட்டம் விளையாடிக்கொண்டிருக்கிறார்.
இந்த நாவல் ஆரம்ப காலத்தில் துறவறம் பூண்ட கத்தோலிக்க பாதிரி கதை சொல்லியாக அல்லது தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறுதல் போல் செல்கிறது. ஏன் இந்த நாவலை அவர் சொல்ல வேண்டும்? அவருக்கும் பண்டிதர் குடியிருப்புக்கும் மத்தேயுவிற்கும், ஆனாசியம்மாளுக்கும், எலிசாவிற்கும் என்ன தொடர்பு? என்பவைகளை இந்த நாவல் கூறுகிறது. இதுதான் அதன் சுருக்கம்.

**

துரத்தியடிக்கப்படுவதனால் ஏற்படும் ஊருடன் தொன்மம் நிறைந்த உணர்வுகளை அறுத்தலின் வலி. யாழ்ப்பாணம், நகர்ப்புறங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகளில் தங்குவதற்கு இடர்படல். உற்றார், உறவினர்கள் புறக்கணிப்புக்கள். அவற்றின் அவஸ்த்தைகள். மரண, காய, இழப்பு வலிகளின் அவஸ்த்தைகள். 20 வருடங்கள் பின்நோக்கிப் போனதன் மன இறுக்கம். போக்குவரத்து, நீர், குளிப்பு, விளையாட்டு போன்ற மற்றைய எல்லா அத்தியாவசியமானவைகளை நிறைவேற்றுவதற்கான அலைவுகள். அரச சார்பற்ற நிறுவனம், அதன் உத்தியோகத்தர்களின் அரசியல் போன்ற இடம்பெயர் வாழ்வின் அவலங்களை இந்த நாவல் எங்கும் காணமுடிகின்றது. உண்மையிலேயே  இந்த நாவலை அந்தக் காலகட்டத்தின் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக வாழ்ந்த ஒரு ஊரின் குறுக்குவெட்டுமுகத்; தோற்றம் எனலாம்.

இவ்வளவு அவஸ்த்தைக்குள்ளும் இந்தப் பண்டிதர்க் குடியிருப்பில் காதல் இருந்தது. அங்கு கல்யாணம் நடந்தது. இடம்பெயரும் இரவுகளில் முதலிரவும் இருந்தது. குண்டுவீச்சில் கணவனை இழந்த விதைவை கிணற்றுக்குள் தற்கொலைக்குப் பாய்ந்தபோது அவள் காப்பாற்றப்படுதலும் நடந்தது. அந்த நீரை அந்த ஊர் குடிக்க மறுத்த கதையும் இருந்தது. கிணற்றுக்குள் பாய்ந்த பாதிரியின் பழைய காதலியான எலிசாவின் மீது மீண்டும் பாதிரிக்கு காதல் துளிர்த்த கதையும் நடந்தது. அவள் சுவாமியின் சரக்கு என்ற கதையும் குடியிருப்பில் இருந்தது. புதிய ஆலயங்கள் கட்டுதலும் நடந்தது. விழிப்புணர்வுக் கூட்டங்களும் இருந்தது. முதியோர் கல்வியும் நடந்தது. மலேரியா, செப்ரிசிமியா, வட்டக்கடி, கக்ககூஸ் பத்தை போன்ற நோய்களும்; இருந்தன. அவைகளுக்கு நோய்;த்தடுப்பு மருந்து கொடுப்புகளும் நடந்தன. சனாதனன் காணமல் போதலும் நடந்தது. சண்டை முடிவில் வீரச் சாவடைந்த பண்டிதர்க் குடியிருப்பு உடல்கள் வருவதும் இருந்தன.  தாக்குதல் வெற்றிப் பேச்சுக்களும், அஞ்சலிக்கூட்டங்களும் நடந்தன. காட்டின் இருட்டுக்குள் தெய்வங்கள் நடமாடுதலும் நடந்தன. பெண்கள் அம்மன் உருவெடுத்தாடுதலும் இருந்தன. பாம்பு, பூச்சியிடமிரந்து பாதுகாப்புக்கு நேர்ச்சை வைப்பதும் நடந்தன. இளைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பண்டிதர் விளையாட்டுக் கழகம் ஒன்றைத் தொடங்கி அதனை, அந்தப் பிரதேசத்தின் சிறந்த விளையாட்டுக் கழகமாக ஆக்குதலும் நடந்தது. 

இந்தப் பண்டிதர்க் குடியிரப்பு வாழ்க்கையில் அவர்களுக்கு பல சண்டைகளும், யுத்தங்களையும் இருந்தன. பேரவலங்களும் நடந்தன. கிளாலிக் கடலில் 50 யிற்கு மேற்பட்ட பயணிகள் வெட்டிக் கொல்லப்படலும் இருந்தன. இயக்கத்தின் தாக்குதல்கள், எறிகணைகள், படைகளின் சினைப்பர் தாக்குதல்கள், இரு தரத்தாரினதம் கடற்படகுகளின் துரத்தல்கள், பலர் இறக்கக் காரணமான  விமானக்  குண்டு வீச்சுகள், தேவலாயத்தின் மீதான குண்டு வீச்சுக்கள் போன்றவைகளும் நடந்தன. பதுங்கு குழி வெட்ட பலாத்தகாரமாக பிடிபட்ட ஆட்கள் விமானக் குண்டு வீச்சில் இறந்ததும் இருந்தன.

அவர்களின் வாழ்க்கைகளை ஓட்டுவதற்கு, பனங்கொட்டுக்களை கீலமாக்கி விற்றலும் நடந்தது. தையற்கடை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதும் இருந்தது. வேறு ஊர்களில் மரக்கறி, பழங்கள் விற்றலும் நடந்தது. அவர்கள் கிளாலித் துறையில் பயணிகளின் பொதிகளைத் தூக்கும் கூலிகளாதலும் இருந்தன. பொருட்களை ஏற்றி இறக்குதலும் நடந்தன. தேங்காய்கள் புடுங்குதலும் நடந்தன.

இவ்வளவு அலைந்துழல்வுக்குள்ளும், இறுக்கங்களுக்குள்ளும்  கிறிஸ்த்தோபர் நாட்டுக்கூத்து, சந்தியோகுமையோர் அம்மானை போன்றவைகளோடு தொடர்புகளும் நடந்தன. நாடகங்களின் அரங்கேற்றங்களும் இருந்தன. ஓய்வு நேரங்களில் பசுவும், புலியும் விளையாட்டுகளும் நடந்தன.

**

இடம்பெயர்தல்களிலும், பண்டிதர்க்குடியிருப்பு வாழ்க்கைகளிலும் வருகின்ற இடங்களின், மனிதர்களின் பெயர்கள், காலங்கள் போன்றவற்றை எடுத்துவிட்டால், அதில் வருகின்ற வலிகளுக்கும், துன்பங்களுக்கும், மரணங்களுக்கும் நாடுகளும், பிரதேசங்களும், மொழிகளும், மதங்களும், இனங்களும், சாதிகளும் இருப்பதில்லை. இவை எல்லாவற்றிற்கும் பொதுவானவை. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னரான இலங்கையின் ஒரு மூலையின் யுத்தத்தின் பெயரால் பயணப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வாழ்வு, இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகும் உலகின் ஏதொவதொரு மூலையில் யுத்தங்களின் பெயரால், அல்லது வெறுப்புக்களின் பெயரால் இப்படித்தான் இருக்கவும் போகின்றது.
சம்பவக்கூறுகள், அதற்குரிய பெரும் பகுதிகளுடன் சேர்ந்து, ஆசிரியர் தான் வரித்துக்கொண்ட செப்பமான மொழியொன்றுடன், காலங்களின் துணைகொண்டு, அது கொண்ட பாத்திரங்களுடன் நாவலானது அதுவாகவே தனது இயற்கையான போக்கில் வளர்ந்து வந்திருக்கின்றது. பக்கங்கள் 25 தொடக்கம் 27 வரை வளர்ந்து செல்லும் மத்தேயு மீது சந்தேகப்பட்டு மாக்கிறத் தற்கொலை செய்யும் வரையான பகுதி மொழிச் சித்திரத்திற்கு சிறிய உதாரணம். அது அனுபவபூர்வமானதா? அறிவுபூர்வமானதா? உணர்வுபூர்வமானதா? என்று தெரியவில்லை. மொழியாட்சி வியக்கவைக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களும், கதைக்களன்களுமாய் அத்தாங்கு இருந்தாலும், தற்போது மனிதர்களும், நிலக்காட்சிகளும் மாறிப் போயிருந்தாலும், இந்தக் கால-நேர-வெளிகளின் ஏதாவது பயணத்தின் புள்ளியொன்றின் வாழ்க்கையில் பண்டிதர்குடியிரப்புக்களை சந்தித்துக்கொண்டே இருக்கப்போகிறது. இதுதான் புதியஉலக ஒழுங்கு. அதனைத்தான் அத்தாங்கு வடித்தெடுக்கிறது என நான் நினைக்கின்றேன். கலை, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம், ஜீவனோபாயம், தொழில், காலநிலை, வாழ்வியல், புவியியல், அரசியல் போன்ற விடயங்களை விரித்திருந்தால் இன்னும் பெரியளவான நாவலாக அமைந்து, பெரியளவான பதிவாக அமைய வாய்ப்பிருந்திருக்கும்.

மொத்தத்தில் அத்தாங்கு, உலகின் அலைந்துழல்வு வாழ்க்கைகளின் ஒரு பானைச் சோற்றின் ஒரு சோறு. வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...