ஏ.எம். றியாஸ் அகமட்
(சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்)
நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு நாளும் -
250,000
நபர்களால்; சனத்தொகை அதிகரிக்கிறது
116 சதுரமைல்; மழைக்காடுகள் அழிகின்றன
72 சதுரமைல்; வனாந்திரங்கள் உருவாகின்றன -
40-100 இனங்கள்; இழக்கப்படுகின்றன
-
2700 தொன்;
CFC வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகிறது –
15000000
தொன்; CO2 வளிமண்டலத்தில்
சேர்க்கப்படுகிறது
வெப்பநிலையும் சற்றுக் கூடுகிறது.
(David
Orr 1991)
(1) அறிமுகம்





(1) (2) காத்தான்குடி பேரீச்சை



ஓவ்வொரு முறையும் கடக்கும் போதும் செப்பமாக, நேர்த்தியாக நாட்டப்பட்டதருக்கள் நினைவுகளின் தடங்களில் ஏதாவது ஒன்றை ஒடவிட்டுக்கொண்டே இருக்கின்றன. சூழலியலாளனுக்கும், உயிர்க்காப்பாளனுக்கும், பசுமையாளனுக்கும், நகரஅபிவிருத்தி திட்டமிடலாளனுக்கும், நிலத்தோற்றவுருவவியலாளனுக்கும், கவிஞனுக்கும், அரசியல்வாதிக்கும், சமூகவியலாளனுக்கும் மேலும் இவைகளை ஆய்வு செய்யும் ஆய்வாளனுக்கும் இங்கு வேலையிருக்கிறது. இந்தத் தருக்கள் இவர்களுக்காக ஏதாவது ஒன்றை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கும்.
(2)
பீனிக்ஸ் மரங்கள்
”மரங்களில் இப்படியும்
ஒருவகை உண்டு.
அதன் இலை உதிர்வதில்லை.
அது முஸ்லிமுக்கு உவமையாகும்”
……………………………..
(புஹாரி – 61, முஸ்லிம் 5028)


பேரீச்சை மரம் பாமே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வித்திலைத் தாவரமாகும். மனிதருக்கு உணவு முதல் கட்டடத் தேவைகளுக்காகப் பாவிக்கப்படும் பேரீச்சை மரங்களானது வட ஆபிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு வரையும், பின்னர் இந்தியா பாக்கிஸ்தானிலிருந்து தென் மேற்கு ஆசியா வரை பரந்து காணப்படுகின்றது. பேரீச்சையானது முதன் முதலாக எங்கு தோன்றியது என்பது பற்றி ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலிருந்து முதன் முதலாக தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

பேரீச்சையானது பிரதான உணவாக மத்திய கிழக்கிலும், தென்னாசியாவின் சில பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வழக்கத்திலிருக்கின்றது. கி.மு. 4000 வருடங்களுக்கு முன்பிருந்தே புரதான மொசப்பத்தேமியா, புரதான எகிப்து போன்ற பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்டிருக்கின்றது. புராதன எகிப்தில் வைன் உற்பத்தி செய்ய பேரீச்சையை பயன்படுத்தியிருக்கிறார்கள். கிழக்கு அராபியப் பிரதேசங்களில் கி.மு. 6000 வருடங்களுக்கு முன்பும், மேற்கு பாக்கிஸ்தானின் மெகார் பிரதேசத்தில் கி.மு. 7000 வருடங்களுக்கு முன்பும் பேரீச்சை செய்கைபண்ணப்பட்டதற்கான அகழ்வாய்வு ஆதாரங்களும் காணப்படுகின்றன. தென்னாசியாவில், ஹரப்பா நாகரிகத்தை உள்ளடக்கியதாக கி.மு. 2000 தொடக்கம் 1900 வருடங்களுக்கு முன்னரும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. பிற்பட்ட காலங்களில் வர்த்தகர்களால் தென்னாசியா, தென் மேல் ஆசியா, வட ஆபிரிக்கா, ஸ்பைன், இத்தாலி, மெக்சிகோ, அமரிக்கா போன்ற நாடுகளுக்கு பரப்பப்பட்டன.
பேரீச்சையில் 12 இனங்களும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வர்க்கங்களும் காணப்படுகின்றன. பேரீச்சையானது ஈரில்ல தாவரமாகும். ஆண், பெண் மரம் என்ற வேறுபாடு காணப்படும். எனினும் ஆரம்பத்தில் இலகுவாக அடையாளம் காண்பது கடினம். ஏனெனில் ஒரு மரமானது தான் முதிர்வதற்கு முன் தனது பாலை மாற்றும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. விதைகளிலிருந்து இலகுவாக வளர்த்துவிட முடியும். அத்துடன் 50 சதவீதமான தாவரங்கள்தான் பெண் தாவரங்களாகவும், பழங்களைக் கொண்டவையாகவும் விருத்தியடையும். அத்துடன் தாவரங்கள் குட்டையாகவும், பழங்கள் சிறியவையாகவும் மணம், குணம், சுவை போன்ற பண்புகள் குறைந்தவையாகவும் காணப்படும். இதனை நிவர்த்திக்கு முகமாக வர்த்தக ரீதியான பண்ணைச் செய்கையில் பதியமுறை மூலம் பெற்ற வர்க்கங்கள் பாவிக்கப்படுகின்றன. இந்த தாவரங்கள் 2 தொடக்கம் 3 வருடங்களில் பழங்களைத் தந்துவிடுகின்றன. அத்துடன் உயிரியல் தொழில்நுட்ப மூலம் அதாவது இழைய வளர்ப்பு மூலம் பெற்ற வர்க்கங்கள் இதனை விடக் குறைந்த காலத்திலும் பழங்களைத் தருகின்றன.
பேரீச்சையானது இயற்கையாக காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை செய்யும் ஒரு தாவரமாகும். எனினும் வர்த்தக ரீதியான நவீன பண்ணைச் செய்கையில் மனிதர்களின் கைகளினால் செய்யப்படுகின்றது. காற்றின் மூலம் இயற்கையான மகரந்தச் சேர்க்கைக்கு சம எண்ணிக்கையான ஆண் தாவரங்களும் பெண் தாவரங்களும் காணப்பட வேண்டும். ஆனால் மற்ற முறையில் ஒரு ஆண் தாவரம் நுர்று பெண் தாவரங்களை மகரந்தச் சேர்க்கை செய்ய பாவிக்க முடியும். தொழிநுட்ப அறிவுள்ள வேலையாட்கள், ஏணிகளைப் பாவித்து மரத்தில் ஏறி, மகரந்த மணிகளை ஒரு இயந்திரம் மூலம் பெண் பூக்களின் மேல் பரவச் செய்வார்கள்.
பேரீச்சையை சிறப்பாக பயிரிட்டு அதில் பல விவசாயிகள் நமது அண்டை நாடான இந்;தியாவின் தமிழ்நாட்டில் வெற்றி கண்டிருக்கிறார்கள். அவ்வாறு வெற்றி கண்ட இரு தமிழ்நாட்டு விவசாயிகளின் சம்பவக் கற்கையைக் கவனிப்போம்.
சம்பவக் கற்கை-01
தமிழ்நாடு திண்டுக்கல் விவசாயி கே. திருப்பதியின் வெற்றியடைந்த கதையை அவர் சொல்லக் கேட்போம்.
பேரீச்சம் பழத்தை பாலைவனத்தில் மட்டுமல்ல நாட்டுப்பகுதியிலும் விளைவிக்க முடியும். அதுமட்டுமல்ல பழத்தை உண்ணுவதற்காக பதப்படுத்தும் வரை காத்திருக்கவும் தேவையில்லை. மரத்தில் இருந்தே அப்படியே பறித்து பேரீச்சம் பழத்தைச் சாப்பிட முடியும்.

திண்டுக்கல் நாகல் நகர், மெங்கிள்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் யாரோ தின்றுவிட்டுப் போட்ட பேரீச்சை விதையின் மூலம் தானாகவே 2 மரங்கள் வளர்ந்து இருப்பதைக் கண்ட உடன் நகர் பகுதிகளிலும் பேரீச்சை வளரும் என்பதற்கு இந்த மரங்கள் சாட்சியாக இருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக வளர்ந்த இரண்டு மரங்களும் ஆண் மரங்களாகப் போனதால் காய்ப்பு இல்லாமலும், பேரீச்சை மரம் குறித்த தகவல் பலருக்கும் தெரியாமல் போனது. நகர் பகுதிகளில் பேரீச்சை வளர்க்க முடியுமா என்பது குறித்து வேளாண் பல்கலைக் கழகத்தினரிடம் கேட்டபோது, பேரீச்சை வளர்வதற்கான வாய்ப்பு இல்லை என்றுதான் கூறினர். ஏற்கனவே திண்டுக்கல் பகுதியில் இரண்டு மரங்கள் வளர்ந்திருப்பதால் நாம் வளர்த்தாலும் மரம் வளரும் என்ற எண்ணம் உறுதியாக இருந்ததால் முள்ளிப்பாடியில் 12 ஏக்கர் பரப்பில் பேரீச்சை நடலாம் என முடிவு செய்தோம்.
பேரீச்சை மரம் வளர அடிப்படையாக என்ன தேவை என்பதை அறிய முயன்றபோது 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதும் பேரீச்சை வளர்க்க முடியும் என்பது தெரிந்தது. விதை மூலம் மரம் வளர்த்தால் ஆண், பெண் மரம் என்பது செடி வளரும் போது உடனே தெரியாது. ஏனெனில் மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே ஆண் மரமா, பெண் மரமா என்பது தெரியும். ஆதனால் விதை மூலம் மரம் வளர்க்கும் முடிவை தள்ளி வைத்து வேறு எந்த முறையில் மரம் வளர்ப்பது என்பது குறித்து விசாரித்தோம்.

இதில் பெண் மரக் கன்றுகளை மட்டுமே பெற்று அவற்றை நடவு செய்து வளர்க்க முடியும் என்பதால் விளைச்சல் இருப்பது உறுதியானது. இருந்தபோதிலும் மகரந்த சேர்க்கைக்கு ஆண் மரம் இல்லாம் எதுவும் செய்யமுடியாது என்பதால் ஆண் மரக்கன்றுகளையும் வாங்கி வந்து நட்டோம். மகரந்தசேர்க்கை இயற்கையான முறையில் நடைபெறாது. பொதுவாக ஜனவரி மாதத்தில் ஆண் மரம் பாளை விட்டு மகரந்தசேர்க்கைக்கு தயாராக இருந்தாலும் பெண் மரம் மார்ச் மாதத்தில்தான் சேர்க்கைக்கு தயாராகும். ஆண் மரத்தின் பாளைகளை உதிர்த்து அதை பொடியாக்கி மார்ச் மாதத்தில் பெண் மரம் பூ விடும் போது தயாராக உள்ள பொடியை அதன் மீது தூவி மகரந்தசேர்க்கையை நாம்தான் செயற்கையாக நடத்தவேண்டும்.
மரக்கன்றுகளை நட்ட மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே விளைச்சல் என்பது இருக்கும். இந்த காலத்தில் மரக்கன்றுகளுக்கு அடியில் உள்ள களையை எடுத்து ஒரு மரத்திற்கு சுமார் 100 லிட்டர் தண்ணீரை சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்க வேண்டும். இது முறையாக செய்யப்பட்டதனால் 3 ஆண்டுகளிலேயே நாங்கள் நட்டிருந்த 650 கன்றுகளில் 400 கன்றுகள் காய்க்கத் தொடங்கியது. ஒரு மரத்திற்கு சுமார் 20 கிலோ வீதம் 8 டன் பேரீச்சை பழம் கிடைத்தது.
மற்ற பேரீச்சைகளில் டாரின்’ என்ற பால் சத்து இருப்பதனால் அவற்றை அப்படியே சாப்பிட முடியாது. ஏனெனில் அப்படியே சாப்பிடும்போது தொண்டையைக் கட்டும், இதனால் அவற்றைப் பதப்படுத்திய பின்னர் தான் சாப்பிட முடியும். ஆனால் ‘பரி’ என்ற இந்த ரகத்திற்கு மட்டும் மரத்தில் இருக்கும் போதே பறித்து சாப்பிடும் தன்மை உள்ளது.
பறித்த பழத்தை ஏதும் செய்யாமல் அப்படியே வைத்திருந்து 1 வாரம் வரை சாப்பிடலாம். குளிர்பதன பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தினால் ஒரு வருடம் வரை சாப்பிடலாம். இந்த ‘பரி’ ரகம் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக பேரீச்சையைப் பண்ணைக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக திண்டுக்கல் நகரில்தான் பேரீச்சை பயிரிடப்பட்டுள்ளது. பேரீச்சைப் பண்ணையைப் பலரும் பார்த்து செல்வது மட்டுமின்றி இது குறித்து அறிந்த சினிமாக்காரர்கள் கூட இங்கு வந்து சூட்டிங்கை நடத்திச் சென்றுள்ளனர். பேரீச்சை எங்களது பண்ணையில் விளைந்தது மட்டும் எங்களுக்கு மகிழ்சியில்லை திண்டுக்கல்லில் பேரீச்சை என்பது தென்னகம் முழுவதும் பரவி வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
இது போல் பேரீச்சை பண்ணை அமைக்க யாராவது முயற்சி செய்தால் இது குறித்த தொழில் நுட்பத்தையும், வழிகாட்டுதலையும் சொல்லித் தர தயாராக இருப்பதாக திருப்பதி தெரிவித்திருக்கிறார்.
சம்பவக் கற்கை-02
தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம், முருகம் பாளையத்தில் வசிக்கும் முருகவேல் என்ற விவசாயி கதையைக் கேட்போம். தமிழ்நாட்டில்; பேரீச்சையை திசுவளர்ப்பு முறையில் வெற்றிகரமாக இரண்டாவது விவசாயியாக காணப்படுகின்றார். 2.5 ஏக்கரில் 200 திசுவளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009 பிப்ரவரியில் முருகவேல் நடவு செய்தார். இஸ்ரேல் தொழில்நுட்ப முறையில் வளர்த்தார். ஒரு பேரீச்சை மரம் பழங்களை கொடுக்க குறைந்தது மூன்றாண்டாகும். ஆனால் இவரது பண்ணையில் 28 மாதங்களிலேயே பழங்களை கொடுத்துள்ளது.
ஒரு ஏக்கரில் சுமார் 60 கன்றுகளை நடலாம். குறைந்தது எட்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 30 டிகிரி செல்சியஸ் வெப்பமே போதுமானது. வடிகால் வசதி உள்ள இடங்களில் மட்டுமே பேரீச்சை வளரும். பேரீச்சையில் டேனின் என்னும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் அதை அப்படியே சாப்பிட முடிவதில்லை. எனவே, பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. ஆனால் திசு வளர்ப்பு முறையில் உரு வாக்கப்படும் பர்ரி ரக பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டும்தான் இவை காய்க்கும்.
ஒரு கன்று நட ரூ.3,500 வரை செலவு செய்தேன். மரமாக வளர்வ தற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளேன். முதலாண்டில் ஒரு மரத்தில் 40 முதல் 50 கிலோ வரை பழங்கள் காய்க்கும். மரம் 75 ஆண்டுகளுக்கு மேல் வாழும். மரம் வளர வளர காய்க்கும் பழங்களின் எடை அதிகரிக்கும். இந்த பழங்கள் கிலோ 350 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. என்று அவரது அனுடிவத்தைப் பகிருகின்றார்.
பேரீச்சையின் காய்கள் நான்கு கட்டங்களில் கனிகின்றன. பேரீச்சையானது ஈராக், அராபிய பிரதேசங்களினதும், வடக்கு, மேற்கு ஆபிரிக்கா நாடுகளினதும் பாரம்பரிய பயிராக இருந்து வந்திருக்கின்றது.;.
ஒரு முதிர்ந்த தாவரம் 80 தொடக்கம் 120 கிலோ கிராம் (176 – 264 இறாத்தல்கள்) பழங்களை உற்பத்தி செய்யும். உலகிலே அதிக இனிப்பான பழங்கள் பலஸ்தீனிலே காசா பள்ளத்தாக்கிலே, தய்ர் அல் பலாஹ் என்ற இடத்தில் காணப்படுகின்றன. எகிப்து, ஈரான், சவுதி அரேபியா, எமிரேட் குடியரசு, பாக்கிஸ்தான், அல்ஜிரியா, ஈராக், சூடான், ஓமான், லிபியா போன்றன உலகின் முதல் பேரீச்சை அதிக விளைவிக்கும் 10 நாடுகள் ஆகும்.
100 கிராம் பேரீச்சம் பழத்தில், 282 கிலோ கலோரி சக்தி காணப்படுகின்றது. மேலும் (கிராம்களில்) காபோபைதரேற் (75.03), வெல்லங்கள் (63.35), நார்ச் சத்து (8), கொழுப்பு (0.39), புரதம் (2.45), நீர் (20.53), அத்துடன் பல்வேறு விற்றமின்களும், கனிப்பொருட்களும், மூலகங்களும், மனிதனுக்கு நன்மை செய்யும் பல்வேறு பதார்த்தங்களும் காணப்படுகின்றன.
பேரீச்சையிலிருந்து பல்வேறு பதார்த்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. கேக், புடிங், ஜேம், தேன், வினாகிரி, கள்ளு, சாராயம், பானம் போன்ற பல நூற்றுக் கணக்கான உணவுவகைகள் தயாரிக்கப்படுகின்றன.
ஏனைய பயன்களைப் பார்ப்போமானால், விதைகள் ஊறவைக்கப்பட்டு நன்றாக அரைக்கவைக்கப்பட்டு கால்நடைத் தீவனங்களாக பாவிக்கப்படுகின்றன. பெறப்படுகின்ற எண்ணெய், சவர்க்காரம் தயாரிக்கவும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. விதைகளிலிருந்து பெறப்படும் காபன் கரியை பொற்கொல்லர்கள் தங்கத்தை உருக்குவதற்கு பயன்படுத்துகிறார்கள். கோப்பித் தூள் போலவும் விதைகளை அரைத்துப் பெறப்படும் தூள் பாவிக்கப்படுகின்றது. துப்பரவாக்கும் தும்புக்கட்டு செய்யப்படுகின்றது. கடுமையான பாகாயுள்ள பழச்சாறு தோற்பொருட்களுக்கு பூசவும், நீhக்குழாய்களில் ஏற்படும் கசிவுகளை நிவர்த்திக்கவும் பயன்படுகின்றது. கூரை, பாய், தட்டு, பெட்டி, கூடை, விறகு, மிதவை, நடக்கும் ஊன்றுகோல்கள், கயிறு, தொப்பி, ஆடைகள், கட்டடங்கள், பாலங்கள், மீன்பிடி வள்ளங்கள், தேன்பூச்சி வளர்ப்பு பெட்டிகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும், நூற்றுக் கணக்கான மருத்துவ குணங்களுக்காகவும் பேரீச்சை மரங்கள் பாவிக்கப்படுகின்றது.
நிலத்தோற்றவுருவின் அழகைக் கூட்ட பேரீச்சையானது அலங்காரத் தாவரமாக, வீதியோரங்களிலும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும், சுப்பர் மார்கட்களிலும் நாட்டப்படுகின்றது. ஏனெனில் பேரீச்சைகளைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும், மற்றும் அவை மற்றைய உள்நாட்டு தாவரங்களை அழிக்காத தன்மையையும் கொண்டிருப்பதே காரணமாகும்.
( தொடரும் )
No comments:
Post a Comment