Friday, June 9, 2017

பிரச்சினைகளையும் அனர்த்தங்களையும் தவிர்க்க, திண்மக்கழிவு முகாமைத்துவம் வாழ்வியலுடன் இணைந்த கலாச்சாரமாகி: இரண்டு சம்பவக் கற்கைகளை முன்வைத்து.



.எம். றியாஸ் அகமட்
(சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை)


சனத்தொகைப் பெருக்கம், அதன் காரணமாக ஏற்பட்ட கைத்தொழில் மயமாக்கம், நகரமயமாதல், வணிகமய விவசாயம். தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கைத்தொழில் வளர்ச்சி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொலைத் தொடர்புகள், ஆயுத உற்பத்தி போன்றவைகளின் காரணமாக இந்தப் பூமியானது பாரிய சவால்களை எதிர் நோக்கியுள்ளது. இதன் காரணமாக அமிலமழை, பூகோள வெப்பமாதல், ஓசோன்படை வறிதாக்கல், ஒளி இரசாயன தூமம், உயிர்ச் செறிவடைதல், நற்போசணையாக்கம், கதிர்வீசல் மட்டம் உயர்வு, வாழிடங்கள் அழிதல், பாலைவனமாதல், தாவரங்களின் விளைச்சல் குறைதல், இயற்கைச் சூழல் அழிவடைதல், சுகாதார சீர்கேடுகள், உயிர்ப்பல்வகைமை இழப்பு, அந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் தோன்றுதல் போன்ற பிரச்சினைகள்; தோன்றி இந்த பூமியின் நித்திய நிலவுகைக்கு சவால்விடுபவைகளாக உள்ளன.

இவைகளை நிவர்த்திக்கவும், புவியின் நிலைபேறான தன்மைக்கும் உதவக்கூடிய சில விடயங்களை குறிப்பிடச் சொன்னால், நான் முதல் இரு விடயங்களாக குறிப்பிடுவது, முதலாவது மரம் வளர்த்தல், இரண்டாவது திண்மக்கழிவு முகாமைத்துவம். காலப் பொருத்தம் கருதி திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் சிறிது கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன்.

வெளியீட்டின் மூலம் அல்லது ஒரு உற்பத்திமுறையின் அல்லது ஒரு நிகழ்ச்சியின் பின் பெறப்படும் பொருட்களை பொதுவாக கழிவுகள் எனலாம். இவை பொதுவாக பயனற்ற பொருட்களாகவே கருதப்படுகின்றன. உண்மையில் கழிவுகள் பிரயோசனமற்ற பொருட்கள் அல்ல. தற்போதைய நவீன நோக்கில் கழிவுகள் எனப்படுவது, பெறுமதியான பொருட்கள் பொருத்தமற்ற இடங்களில் காணப்படுவது என வரையறுக்கலாம். இரும்பு, செம்பு, பிளாஸ்ரிக், கண்ணாடி, கடதாசி, காட்போட், துணி, விபத்தில் அப்போதுதான் இறந்த ஆடு, மாடு, கோழி போன்றவைகள் காணப்படும் இடத்தைப் பொறுத்து அதன் பெறுமதிகள் வேறுபடும். எனவே திண்மக் கழிவானது நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, தொழிற்சாலைக்கு தொழிற்சாலை வேறுபடும். ஒரு இடத்தில் கழிவாக கருதப்படுபவை இன்னொரு இடத்தில் பொருளாதார முக்கியத்துவமிக்கவையாக கருதப்படும்.

கழிவுப் பொருட்களை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றுதல், மீள்சுழற்சிக்கு உட்படுத்தல், அல்லது நீக்குதல் மற்றும் கழிவுப் பொருட்களைக் கண்காணித்தல் போன்றவைகளைக் கொண்ட செயற்பாடு என திண்மக்கழிவு முகாமைத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தலாம். இதன் காரணமாக தாவர, விலங்கு, மனித, சுற்றுச்சூழல் நலன்களைப் பேணுவதோடு சூழலின் அழகிய தன்மையையும் பாதுகாக்கலாம் என்று கருதப்படுகின்றது.

திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக எனது இரண்டு சம்பவக் கற்கைகளை அல்லது ஆய்வவதானங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

முதலாவது எனது மாணவர்களுடன் (500க்கு மேற்பட்ட) நான் செய்த ஆய்வுகள். தங்களது பல்கலைக்கழக விடுமுறைக் காலங்களில், இலங்கையின் பல பகுதிகளிலும், தங்களது வீடுகளில்மாதம் ஒன்றுக்கான வீட்டில் வெளியேற்றப்படும் திண்மக் கழிவுகளை இழிவளவாக்குவதற்கு எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம்?” என்று செய்து பார்த்த ஆய்வவதானங்கள் இதற்குள் அடங்கும்;.

மாணவர்கள் தங்களது வீட்டில் வெளியேற்றப்படும் திண்மக்கழிவுகளை சேகரித்தார்கள். அதனை தரம் பிரித்தார்கள். இடமாற்றம் செய்தார்கள். பின்னர் பாதுகாப்ப்h முறையில் அவைகளை அகற்றினார்கள். அதாவது சேகரித்த கழிவுகளை உக்கக்கூடியது, உக்கமுடியாதது எனப் பிரித்து. உக்கக்கூடியவைகளை சேதனப் பசளையாக்கலுக்கு உட்படுத்தினார்கள். உக்கமுடியாதவைகளை மீள்சுழற்சிக்குட்படுத்தக் கூடியவை, மீள்சுழற்சிக்குஉட்படுத்த முயாதவை எனப் பிரித்து, முதலாவது  போக இரண்டாவது எஞ்சின. அவைகளில் கற்கள் போன்றவைகளை பாவித்துவிட்டு, மிகுதியானவற்றை பாதுகாப்பாக அகற்றினார்கள். கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் தங்களது வீடுகளில் உருவான அன்றைய மாதத்தின் திண்மக்கழிவுகளை மிகமிக குறைந்த அளவுக்கு இழிவளவாக்கினார்கள்.

பௌதிக கூறுகள்
(Physical Composition in Wet Base)                                       சதவீதம் (%)

சமையலறைக் கழிவுகள் (Kitchen Waste)                               61.0
கடதாசி (Paper)                                                                             10.4
உடுதுணிகள் (Textile)                                                                    2.15
மென்ரக பிளாஸ்ரிக் ; (Soft Plastic)                                             1.8
கண்ணாடிப் பொருட்கள்  (Glass)                                                4.5
பீங்கான் பொருட்கள் (Ceramic)                                                   2.15
உக்கக்கூடியவை (Other Compostables)                                     8.5
மற்றையவை (Others)                                                                  9.5
மொத்தம் (Total)                                                                          100  
உக்கக்கூடியவைகள் (Compostables)                                       79.9
மீள்சுழற்சிக்குரிய அசேதனப்பொருட்கள்
 (In-Organic Recyclables)                                                                        21.0
                 
சம்பவக் கற்கை ஒன்றில், அந்தக் குடும்பத்தின் வீட்டிலிருந்து வெளியாக்கப்படும்

ஒரு மாதத்திற்கான திண்மக்கழிவின் பௌதீகக் கூறுகளின் சதவீதம்.

இரண்டாவது கிழக்கில் பேரீச்சை மரங்கள் இருக்கும் நகரசபையின் பத்து வருடங்களுக்கு முந்திய திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்பந்தமான ஆய்வவதானமும் சம்பவக் கற்கையும். மிகவும் சனச்செறிவும், கைத்தொழில் முயற்சியும் அதிகமுள்ள இந்த பிரதேசத்திலிருந்து ஒவ்வொரு நாளும் வீடுகளிலிருந்து (26.7 தொன்), சந்தைகளிலிருந்து வாரநாட்களில் (2.19 தொன்), வார இறுதி நாட்களில் (2.14 தொன்), பாடசாலைகளிலிருந்து (0.5 தொன்), வியாபாரநிலையங்களிலிருந்து (1.0 தொன்), மொத்தமாக 34 தொன் திண்மக் கழிவுகள் (குப்பைகள்) உருவாவதாக கணிப்பிடப்பட்டன. இவற்றில்  20 தொன் (58.8%) சேகரிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன. 0.7  தொன் (2%) எரிக்கப்பட்டும் சேதனப் பசளையாக்கலுக்காகவும் பாவிக்கப்பட்டன. 0.5 தொன் (1.5%) மீள்சுழற்சிக்கும் உட்படுத்தப்பட்டு, 12.8 தொன் (37.6%) திண்மக்கழிவுகள் அல்லது குப்பைகள் சட்டவிரோதமாகவும் கொட்டப்பட்டதாகக் கணிக்கப்பட்டன.


பௌதிக கூறுகள்
(Physical Composition in Wet Base)                                     சதவீதம் (%)

சமையலறைக் கழிவுகள் (Kitchen Waste)                             46.4
கடதாசி (Paper)                                                                             8.3
உடுதுணிகள் (Textile)                                                                  4.1
மென்ரக பிளாஸ்ரிக் ; (Soft Plastic)                                           6.6
கண்ணாடிப் பொருட்கள்  (Glass)                                              1.7
பீங்கான் பொருட்கள் (Ceramic)                                                 4.6
உக்கக்கூடியவை (Other Compostables)                                  23.5
மற்றையவை (Others)                                                                 4.6
மொத்தம் (Total)                                                                         100  
உக்கக்கூடியவைகள் (Compostables)                                     69.9
மீள்சுழற்சிக்குரிய அசேதனப்பொருட்கள்
 (In-Organic Recyclables)                                                                      16.6

சம்பவக் கற்கை இரண்டில், அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியாக்கப்படும் ஒரு நாளைக்கான பௌதீகக் கூறுகளின் சதவீதம்

எனவே இந்தத் திண்மக்கழிவுகளால் உருவாகும் பிரச்சினைகளை குறைப்பதற்கு இந்த நகர சபைக்கு தெளிவான திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. கழிவுகள் சேகரித்ததிலிருந்து, தரம்பிரித்தல், சேதனப் பசளையாக்கல், மீள்சுழற்சிக்குட்படுத்தல், பாதுகாப்பாக அகற்றல் வரையான செயற்பாடுகளை இத்திட்டம்; கொண்டிருந்தது. இத்திட்டத்திற்காக 18 கிராமசேவர்கள் பிரிவிலிருந்து 2700 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சேதனப் பசளைத் தொட்டிககள் கொடுக்கப்பட்டன. ஓவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் ;வவொரு நிலையான குப்பை சேகரிக்கும் ரெக்டர் பெட்டிகள் வைக்கப்பட்டன. மீள்சுழற்சிக்கான பொருட்களை வாங்குவதற்காக 10 சைக்கிள் கொள்வனவாளர்களும், ஒழுங்கு செய்யப்பட்டனர். மீள்சுழற்சிக்கான நிலையமும் அமைக்கப்பட்டு, குப்பை கொட்டுமிடத்தை விருத்திசெய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறப்பான திண்மக்கழிவு முகாமைத்துவம் செயற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு சர்வதேச நிறுவனம் ஒன்று நிதியுதவியும் வழங்கியிருந்தது. இது மக்களினதும், நிருவாக உத்தியோகத்தர்களினதும், ஊழியர்களினதும், அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பு காரணமாக மிகவும் வெற்றிகரமான திட்டமாக காட்சியளித்தது. மக்கள் தாங்கள் உருவாக்கிய சேதனப் பசளையை விற்பனை செய்யும் ஒரு பொறிமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும், அதற்குப் பிறகு வந்த தேர்தல், ஆட்சி மாற்றம் போன்றவை இத்திட்டத்தை தோல்விக்குள்ளாக்கியது எனலாம்.

திண்மக் கழிவின் அளவும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளின் அளவும்சனத்தொகை அதிகரிப்புடன் சம்பந்தப்பட்டது. அத்துடன் குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கையும், குடும்பத்தின் வருமானமும் அதிகரிக்க வெளியேற்றப்படும் திண்மக்கழிவுகளின் அளவும் அதிகரிக்கும். இது உலகின் பல நாடுகளுக்குப் பொதுவான தன்மையானதாகும். இயற்கையாக திண்மக்கழிவுகள் பிரிந்தழிந்தாலும், அதற்கு மிக நீண்ட காலம் எடுத்தாலும், அதனைவிட வேகமாக கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கும். திண்மக்கழிவுகளாக ரிஸ்யு பைகளுக்கு சுமார் 500 வருடங்களும், பிளாஸ்ரிக் பிரிந்தழிவதற்கு 500 தொடக்கம் 1000 வருடங்களும், கண்ணாடிக்கு ஒரு மில்லியன் வருடங்களும் எடுக்கின்றன. சாதாரணமாக சனத்தொகை உள்ள நகரங்களில் 10000 தொன்னுக்கு அதிகமான குப்பைகள் சேருகின்றன. இதனை கொழும்பு போன்ற பெருநகரங்களுடன்; ஒப்பிடும்போது இதன் அளவு இன்னும் பல்மடங்கு அதிகமாகும். பிரிந்தழிய முடியாத பொருள்களான பொலிதீன், பிளாத்திக்கு, மின்கலங்கள், இலத்திரனியல் சாதனங்கள். மின்குமிழ்கள், வர்ணம் பதிக்கப்பட்ட கடதாசிகள் ஆகியன தொடர்ச்சியாக சேரும். இவற்றைப் புதைத்தாலும் மண்ணில் நஞ்சுப் பொருட்களும், பாரமான உலோகங்களும் சேர்க்கப்படும். இக்கழிவுகளை வௌ;வேறாக சேகரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கு உதவுவது சமூகத்தின் கடமையாகும்.  

திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தின்போது 4R அடிப்படை அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

1)            Reuse (மீள்பாவனை) – பிரிகையடையாத பதார்த்தங்களினால் ஆக்கப்பட்டுள்ள பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தல். உதாரணம்: பொலிதீன்
2)            Reduce (குறைத்தல்) – தேவையில்லாமல் இவைகளைப் பாவிப்பதை தவிர்த்தல். உதாரணம:; வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர்க்கொல்லி, விற்றமின்கள், மருந்துகள் போன்றவற்றை பாவிப்பதை தவிர்த்தல்
3)            Replace (மாற்றீடு) - சூழலுக்கு தீங்கிளைக்கும் பொருட்களுக்குப் பதிலாக நன்மை பயக்கும் பொருட்களை பயன்படுத்தல். எதாரணம்: இரசாயனப் பசளைகளுக்குப் பதிலாக சேதனப் பசளைகளை பாவித்தல்
4)            Recycle (மீள்சுழற்சி) – மீள்சுழற்சிக்கு உட்படுத்தி பயன்பாட்டுக்குரியதாக மாற்றிக் கொள்ளல்.

மேலே கூறிய இரண்டு சம்பவக் கற்கைகளும், திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தில் ஒரு தனிமனிதனதும், ஒரு கிராமத்தின் பங்கு பற்றிய முக்கியமான சில விடயங்களை உணர்த்தி நிற்கின்றன. முதலாவது கற்கை ஒரு தனிமனிதனது விழிப்புணர்வானது. குடும்பத்தை ஆட்கொள்ளும் என்பதனையும்;. இரண்டாவது கற்கை குடும்பத்தினது விழிப்புணர்வு கிராமத்;தையும், சமூகத்தையும் ஆட்கொள்ளும் என்பதையும் உணர்த்தி நிற்கின்றன.;


எவ்வளவு திட்டங்கள், பொருளாதார வசதிகள் இருந்தபோதும், வறுமை, நிலவுடமைப் பிரச்சினைகள், முறையற்ற நிருவாகம், உள்ளுராட்சி நிறுவனங்களின் அரசியல் ஸ்திரப்பாடின்மை, சுகாதாரப் பிரச்சினைகளின் அறிவின்மை, கவனமற்ற கழிவகற்றல், ஊழல், யுத்தம் போன்றவையும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் பிரச்சினையின் சிக்கல்களை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன. திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான 4R அடிப்படை அறிவானதுஒவ்வொரு மக்களினதும், நிருவாகிகளினதும், உத்தியோகத்தர்களினதும், அரசியல்வாதிகளினதும், பெரும் முதலாளித்துவவாதிகளினதும் வாழ்வியலுடன் ஒரு தவிர்க்க முடியாத கலாச்சாரமாக வளர்த்தெடுக்கப்பட்டால்தான், (அதுவும் மிகச் சிறிய வயதிலிருந்தே) கழிவுகளினால் உருவாகும் பிரச்சினைகளிலிருந்தும், அனர்த்தங்களிலிருந்தும் எம்மைப்  பாதுகாத்து ஒரு தூய்மையான ஆரோக்கியமான புதிய தேசத்தை வருங்கால சந்ததிகளுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பதில் உண்மைகள் இல்லாமல் இல்லை.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...