Sunday, July 8, 2018

பசுமைத் திட்டங்கள் தோல்வியடையவதற்கான காரணங்கள்: அம்பாரை மாவட்ட கரையோர உயிரினகவச, பசுமைவலய திட்டங்களை முன்வைத்து.



-.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்

கரையோர உயிரினகவசம் (Bio-shield)) என்பது கரையோர சுற்றாடலில்சமுத்திரத்தினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளின் பௌதீக தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், மண் அரிப்பை தடுப்பதற்காகவும் இயற்கையாக அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வலயமாகும். உயிரியல் கவசமென்பது பொதுவாக கரையோரங்களில் கடற்கொந்தளிப்பு, பாரிய அலைகளின் தாக்கம். சுனாமி, சூறாவளி போன்றவற்றின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக நடப்படும் தாவரங்களாகும்

பசுமை வலயம் (Greenbelt) என்பது ஏதாவது நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தாவரங்கள் காணப்படும் பகுதியாகும். இது அனர்த்தங்களை தடுக்கும் மிகக் குறைந்த நுட்பங்களாக, மற்றைய முறைகளோடு ஒப்பிடப்படும்போது கருதப்படுகின்றன. இதன் மூலம் அழிவடைந்த அல்லது அழிக்கப்பட்ட அல்லது தரம் குறைந்த பிரதேசங்களில் கரையோர உயிரியல் பாதுகாப்பு தொகுதி மீளஉருவாக்கப்படுகின்றது. இவ்வாறு மீளநிலைப்படுத்துவதை ஆரம்பிப்பதன் மூலமாக மீண்டும் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் தொழிற்பாடுகளை முறையாகவும் பூரணமாகவும் மற்றும் நீண்டகால நிலைபேறானதன்மைக்கு ஏற்ற சூழல் தொகுதியை கட்டியெழுப்பக் கொள்ளலாம். இங்கு நடப்படும் இனங்கள் கண்டல்கள், முருகைக் கற்பாறைகள், மண்மேடுகளில் நடப்படும் தாவரங்கள், சவுக்கு மரங்கள் (கசூரினா), கரையோர வீட்டுத்தோட்டங்கள் என பலவகைகளில் காணப்பட்டு, அவை கரையொரங்களை பல்வேறு வழிகளில் பாதுகாக்கின்றன.

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் சுனாமிக்கு பின்னரே, கரையோரப்பாதுகாப்பின் அதீத முக்கியத்துவம், இயற்கையாக உணரப்பட்டது. இதன் காரணமாகவும், வேறுபல காரணங்கள் கருதியும், 2004ற்குப் பிறகு பசுமை வலயத்தையம் சூழலையும் மீள்கட்டியெழுப்பவும், கரையோர வலயங்கள், காடுகள், மரங்கள்;, குறிப்பாக கண்டற் காடுகள் போன்றவைகளைக் கட்டியெழுப்பவம் பல்வேற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதற்காக பல்வேறு நிதிவழங்கும் நிறுவனங்கள் நிதிகளை அள்ளி இறைத்தன. இந்தத் திட்டங்களினூடாக பல்வேறு அரச, தனியார் நிறுவனங்கள் கரையோர உயிரின கவசங்களையும், கரையோர பசுமை வலயத்தையம் கட்டியழுப்பியிருந்தும், எத்தனை திட்டங்கள் வெற்றி பெற்றன? எத்தனை நிறுவனங்கள் தங்களது நோக்கங்களையும், குறிக்கோள்களையும் அடைந்து கொண்டன? என்பது கேள்விக்குரிய ஒன்றே.

இந்தக் கட்டுரையானது அம்பாரை மாவட்டத்தின்  கரையோர வலயங்களின்பசுமை வலய மற்றம் பசுமைத் திட்டங்கள் தோல்வியடைந்தமைக்கான காரணங்களை சர்ச்சிக்கின்றது. அம்பாரை மாவட்டமானது பெரியநீலாவணையிலிருந்து பாணமைவரை 120 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது. தரவுகளைப் பெறுவதற்காக கட்டுரையாசிரியர் தனியே இந்தத் தூரத்தை நடந்து கடக்க வேண்டியிருந்தது.

இந்தத் திட்டங்களின் தோல்விகளுக்கு பல காரணங்கள் அடையாளம் காணப்பட்டன. விளங்குவதற்கு வசதி கருதி தோல்விக்கான காரணங்கள் மூன்றுவகையான பிரிக்கப்பட்டன. அவையானவன: i) மரங்களின் நடுகைக்கு முன், ii) மரங்களின் நடுகையின்போது, iii) மரங்களின் நடுகைக்கு பின் உள்ள காரணிகள்.

i)             நடுகைக்குமுன் உள்ள காரணிகள்:
1)            மக்களிடமும் சமூகத்திடமும் ஈடுபாடு இன்மை:
இது கரையோரத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவதானித்த மிக முக்கியமான பிரச்சினையாகும். இதற்காக பசுமை வலயம், உயிரினக் கவசம் பற்றிய பொருத்தமான விழிப்புணர்வு மக்களுக்கும் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் நடப்படும் மரங்கள் மக்களுக்கு நேரடி, நேரடியற்ற பயன்களான உணவு, மருந்து, விறகு போன்றவைகளைக் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எந்த மரங்கள் நடப்பட வேண்டும் என்பதை தெரிவுசெய்யும் செயற்பாடு சுற்றயல் மக்களின் பங்கேற்புடன் செய்யப்படவேண்டும். அரச, தனியார் காணிகளில் இந்தத் திட்டங்கள் அமுல் நடத்தப்படும்போது சமூகத்தின் ஆதரவு என்பது அதன் வெற்றிக்கு அவசியமானதாகும். திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் சமூகத்துடனான கலந்துரையாடலினூடாகவே செய்யப்பட வேண்டும்.

2)            அரச, தனியார் கொள்கைகளும் நிதிமூலங்களும்:
கருத்திட்டங்களை முன்னெடுப்பதில் இதுவும் ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்படுகின்றது. அரச, தனியார் கொள்கைகள் நடைமுறைப்படுத்தல்களின்போது கால்நடைகளை மேயவிடுதல், சட்டவிரோத அறுவடை (மரம் தறித்தல், காய், பழம், பூ, இலை, பட்டை பிடுங்குதல்), காணிகளை அபகரித்தல போன்ற மனிதனால் உருவாகம் பாதிப்புக்களை பசமைத்திட்டங்கள் தடுக்க தவறிவிடுகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்த மதிப்பீடு செய்தலும், பாரமரிப்பும் முக்கியமாகும். இதற்கு தடையறாத நிதிமூலங்கள் முக்கியமானதாகும். அத்துடன் பசுமைத் திட்டங்களின் நிலைபேறான தன்மைக்கும் அவசியமானதாகும்.

3)            குறுகிய காலத்திட்டங்கள்:
ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட பெரும்பாலான பசுமைத்திட்டங்கள்குறுகியகாலத் திட்டங்களாகவே இருந்தன. அதன் காரணமாகவே எதிர்பார்த்த விளைவை அடைவதில் பல தடைகள் உள்ளன. பெரும்பாலான திட்டங்களில் நடுகையும், அதன் பிறகு பிறகு நீர்ப்பாய்ச்சுதலும் சில நாட்களுக்கே செய்யப்பட்டுள்ளன. இவ்வகையான எல்லாத் திட்டங்களும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இதனைத் தடுக்க சம்பந்தப்பட்டட அரச, தனியார் நிறுவனங்கள் இவ்வகையான குறுகிய காலத் திட்டங்களுக்கான அனுமதியை தவிர்க்க வேண்டும்.

ii)            நடுகையின்போது உள்ள காரணிகள்:
1)            நடுகைக்காக தெரிவு செய்யப்பட்ட இடமும் கடலில் இருந்தான அதன் தூரமும்:
கடற்கரையில் நடப்படுவதற்கு பொருத்தமில்லாத உவரைச் சகிக்க முடியாத தாவரங்கள்,  கடல்நீர் பெருக்கெடுப்பின் காரணமாகவும், கடலுக்க மிக அருகில் நடப்பட்டதன் காரணமாகவும் பாதிக்கப்பட்டுக் காணப்பட்டன. அத்துடன் பொருத்தமான மரங்கள், கடலிருந்தான நடுகைக்கான தூரம் போன்றவை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக அங்குள்ள சமூகம், மீனவர்களின் பாரம்பரிய அறிவு போன்றவை பயன்படுத்தப்பட வேண்டும்.

2)            நடுகைக் காலம்:

பெரும்பாலான திட்டங்களின் மர நடுகைக் காலம் மழைக்காலத்தை சேர்த்து செய்யப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், திட்டங்களிற்கான அனுமதியும், நிதியும் கருத்திட்டத்தைச் சமர்ப்பித்து நீண்ட நாட்களுக்குப் பின்னரே கிடைக்கின்றமையாகும். மரநடுகையானது மழைக்காலத்ததுடன் சேர்த்துச்செய்யப்படும்போது ஆரம்ப கட்ட நீர்ப்பாய்ச்சல், பராமரிப்பு போன்றவைகளிற்காக ஏற்படும் பெருமளவான செலவையும், நேரத்தையும் தவிர்த்து சேமிக்கலாம். இந்த வகையான பிரச்சினைகளை நிவர்த்திக்க மரநடுகை மழைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதேவேளை அரச, தனியார்; நிதிவழங்கும் நிறுவனங்கள் கருத்திட்டங்களிற்கான அனுமதிக்கான தாமதத்தை குறைக்க வேண்டும்.

iii)          நடுகைக்குப் பின்னுள்ள காரணிகள்:
1)            மதிப்பீடும் பராமரிப்பும்:
பெருமளவான குறுகிய, நீண்டகால பசுமைத் திட்டங்களில் இந்தக் குறைபாடு காணப்படுகின்றது. உதாரணமாக மரம் நடுகை செய்யப்பட்ட இடங்களைச் சுற்றி வேலி இன்மை, நீர்ப் பாய்ச்சுதல் மிகக்குறைந்த காலப்பகுதிக்கு செய்யப்படுதல், ஒழுங்கான நீர்ப்பாய்ச்சலின்மை, பாய்ச்சப்படும் நீரின் பண்பறி குணங்கள் (பீஎச், உவர்த்தன்மை போன்றன) ஒழுங்காக பரிசோதிக்கப்படாமை போன்ற காரணிகளால் நடப்பட்ட பல்லாயிரக்கணக்கான தாவரங்களும், மரங்களும் ஓரிரு வாரங்களில் முற்றாக அழிந்து போனதையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

2)            மண்அகழ்வு:
சட்டவிரோத மண்அகழ்வும் முக்கியமான ஒருபிரச்சினையாகும். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலப்பகதியில் ஒரு இடத்தில் ஒரே நாளில ஒரே நேரத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களும், மண்அகழும் கனரக வாகனங்களும் மண் அகழ்வதில் ஈடுபட்டதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. சில இடங்களில் இயற்கையாக உருவான மண்மலைகளிலிருந்துகூட  மண் அகழப்படுவதை அவதானிக்கக்கிடைத்தது. இதற்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் (பொலிஸ், கரையோரம் பேணல் திணைக்களம்) பொருத்தமான, பாரபட்சமற்ற நடவடிக்கைகளை எடுத்து, இந்த சட்டவிதோர நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

3)            உல்லாசப் பிரயாணிகள், வருகைதருவோர் மற்றும் விலங்குகளினால் பாதிக்கப்படுதல்:
இதற்குப் பிரதான காரணம்விழிப்புணர்வின்மையும், ஓழுங்கான சுற்றுவேலிகள் அமைக்கப்படாமையுமாகும். பெரும்பாலான திட்டங்களில் பழுதடைந்த, வீழ்ந்த சுற்று வேலிகள் இன்னும் திருத்தப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தில் ஆயிரக்காணக்கனா சவுக்கு மரங்கள் பிரயாணிகளால் முற்றாகவே அழிக்கப்பட்டதும் அவதானிக்கப்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்க உரிய காலப் பகதிகளில் மதிப்பீடுகளும் பரிசோதனையும் செய்யப்பட்டு, சுற்று வேலிகள் போன்றன உடனுக்குடன் புனரமைப்புச் செய்யப்படவேண்டும்.

முடிவுரை:
இந்த ஆய்வானது, பசுமை வலய, உயிரினக்கவச மீள்நிலைப்படுத்தல் திட்டங்களின்  தீர்மானமெடுக்கம் செயற்பாடுகளின்போது உள்ளுர்ச் நமூகங்களினதும் மக்களினதும் துடிப்பான பங்புபற்றுகை அவசியமாகும். அத்துடன் நடுகைக்கு முன், பின் காலங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இவைகள் எதிர்காலத்தில் கருத்திற்கொள்ளப்பட்டு, திட்டமிடல் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தத் திட்டங்களை தோல்வியடையச் செய்யும் கட்டுரையில் கூறப்பட்ட காரணிகளை களைவதன்மூலம், காலத்தையும் நேரத்தையும் நிதியையும், மனித, பௌதீக வளங்களையும சேமித்து, இத்திட்டங்களினால் ஆரோக்கியமான, நிலைபேறான, அனர்த்தங்களினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களை அழிவளவாக்கம் சூழற்றொகுதிய உருவாக்குவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.
உசாத்துணை:
( Riyas Ahamed, A.M. (2017). Coastal Bio-Shields in Ampara District, Sri Lanka: Evaluation of Greenbelt Plantation. Trends in Biosciences, 10(19), 3369-3374.).







No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...